இன்று காலை சிதம்பரத்தில் கடலூர் சீனு அவர்களைச் சந்தித்தேன். கால்பந்து ஆடும் சிறுவனின் ‘’விசா’’ நடைமுறைகளுக்கு அவனது குடும்பத்தில் யாராவது ஒருவரின் வங்கிக் கணக்கில் ஒரு பெரும் தொகை குறைந்தபட்சம் 3 மாதங்களுக்காகவாவது ‘’டெபாசிட்’’ ஆகியிருக்க வேண்டும். அது ஒரு வழக்கமான நடைமுறை. எனது நண்பர்கள் அனைவரிடமும் உதவி கேட்டிருக்கிறேன். உதவி கேட்பது அடிப்படை விஷயம். அது நிகழ்ந்தது என்றால் தான் உதவி கிடைப்பது அடுத்து நடக்கும். எத்தனை பேரிடம் உதவி கேட்க முடியுமோ அத்தனை பேரிடமும் கேட்டிருக்கிறேன். நான்கு பேர் உதவி செய்ய முன்வந்தால் கூட எளிதாக இருக்கும். 10 பேர் உதவ முன்வந்தால் மிக எளிதாக இருக்கும். கடலூர் சீனு கடந்த 3 வாரங்களாக நீண்ட தூரப் பயணங்களில் இருந்தார். அவ்வப்போது குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினேன். கடலூர் சீனுவைப் போல் உணர்வு நுட்பம் கொண்ட இன்னொருவரைப் பார்க்க முடியாது. நாங்கள் சந்தித்துக் கொண்டால் எங்களுக்குள் பேசிக் கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது. பெரும்பாலும் பேசிக் கொள்ளவும் மாட்டோம். எங்களைச் சுற்றி இருக்கும் சூழலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். எனக்கும் அவருக்கும் பல விஷயங்களில் ஒரே விதமான சிந்தனை இருக்கும். மாறுபாடு இருக்கும் விஷயங்கள் மிகச் சில. மாறுபடும் விஷயத்தில் அவர் பார்வை என்ன கோணம் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.
கால்பந்து ஆடும் சிறுவன் கல்லூரி சேர்க்கை விஷயத்தில் சீனு பெருமளவு உதவக் கூடிய நபர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் பேசியிருக்கிறார். மிக நல்ல விஷயம் அது. மிக நல்ல உதவியும் கூட. அடுத்த 3 மாதங்களுக்கு பணம் வங்கிக் கணக்கில் இருக்க வேண்டும். கடலூர் சீனு ஒருவரே ஏற்பாடு செய்வதை விட மேலும் சிலரும் இந்த உதவியில் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என நான் எண்ணுகிறேன். கூட்டுப் பொறுப்பு ஏற்றுக் கொண்டால் பெரிய பாரம் இருக்காது. நாங்கள் உள்ளது உள்ளபடி நிலைமையை பேசிக் கொண்டோம். நாங்கள் சந்தித்து பேசிக் கொண்ட இடம் சிதம்பரம் நடராஜர் ஆலயம். நாங்கள் சிதம்பரத்தில் எப்போது சந்தித்தாலும் நடராஜர் ஆலயத்தில் தான் சந்திப்போம். கோவிந்தராஜப் பெருமாளும் அங்கே இருப்பார் என்பது மேலும் சிறப்பு. எங்கள் இருவருக்குமே சிதம்பரம் கோவிலில் இருப்பது பிடிக்கும். பல மாவட்டக்காரர்களும் பல மாநிலக்காரர்களும் சிதம்பரம் ஆலயத்துக்கு வருவார்கள் என்பதால் சிதம்பரம் எப்போதுமே சிறப்பு மிக்க ஓர் ஆலயம். பெருமாளிடமும் நடராஜரிடமும் சிறுவனுக்காக வேண்டிக் கொண்டோம். நடராஜர் ஆலயத்தில் 3 மணி நேரம் இருந்தோம். நேரம் 12.30 ஆகி விட்டதால் தில்லை காளியம்மன் கோவில் செல்ல முடியவில்லை. அவர் கடலூரிக்கும் நான் ஊருக்கும் புறப்பட்டோம். ஊர் வந்து ‘’வீடடைந்தேன்’’ என குறுஞ்செய்தி அனுப்பினேன். சீனு ‘’குடிகாட்டைக் கடக்கிறேன்’’ எனப் பதில் அனுப்பினார். இன்று மாலை கதிராமங்கலம் வனதுர்க்கையை வணங்கினேன்.
கடலூர் சீனு உடனிருப்பது கால்பந்து ஆடும் சிறுவனின் விஷயத்தில் எனக்கு பெரும் துணையாக உள்ளது.