Wednesday, 21 March 2018

மீண்டும்




ஒரு பெரிய முயற்சிக்குப் பிறகு
ஒரு பெரிய நம்பிக்கை இல்லாமல் போன பிறகு
ஓர் எதிர்பார்ப்பு நிறைவேறாத பிறகு
தவிர்க்க நினைத்த கசப்பு வீரியத்துடன் எதிர்ப்பட்ட பிறகு
எந்த விளக்கமும் சொல்ல முடியாத பிறகு
தோல்வி தரும் அசௌகர்யங்கள் அன்றாடம் ஆன பிறகு

நாம்
இந்த உலகின்
முடிவற்ற
தீராத பாடங்களிடமிருந்து
மீண்டும்
கற்கத் தொடங்குகிறோம்

20/03/2018
23.10

யாரோ ஒருத்தி

யாரோ ஒருத்தி
எப்போதோ அளிக்கப்பட்ட சொல்லுக்காக
இன்னும் காத்துக் கொண்டிருக்கிறாள்

யாரோ ஒருத்தி
ஐயங்களின் மேகங்களை மிச்சமில்லாமல் அகற்றி
முழுமையாக நம்புகிறாள்

யாரோ ஒருத்தி
உறவின் இனிமையான பொழுதுகளை
உவகையுடன் எண்ணிப் பார்க்கிறாள்

யாரோ ஒருத்தி
மனதில் ஓயாமல் உழலும்
கசந்த அவமானத்தால் அவதிப்படுகிறாள்

யாரோ ஒருத்தி
கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறாள்

யாரோ ஒருத்தி
பாடும் பாடலில்
தூங்குகிறது
ஒரு குழந்தை

Tuesday, 20 March 2018

எப்போதாவது

டைரிக் குறிப்புகளில் இருக்கின்றன
தன்மை
முன்னிலை
எவரிடமோ சொல்லாமல் போன சொற்கள்
வெளிப்படுத்த இயலாத பிரியங்கள்
விழைவுகள்
செலவுக் கணக்குகள்
மறக்க முடியாத நாட்கள்
மனம் கசந்து வெளிப்பட்ட கண்ணீர்
குறிப்பாய் இருக்கும் அவமானங்கள்

எப்போதாவது
இடம் பெற்று விடுகின்றன
சில கவிதைகள்

14.03.2018
06.45

மழைப்பொழுது

தொலைதூரப் பயணியின் ஆசுவாசத்தோடு
விண்ணிலிருந்து
இறங்கிக் கொண்டிருக்கிறது
மழை நீர்
மாடிப் பரப்பில் கொட்டிக் கொண்டு
கொக்குகளின் ஒற்றைக் கால்களைப் போல ஊன்றி
கொட்டகைகளின் உலோகத் தகடுகளில் ஒலியெழுப்பி
ஊடுறுவவே இல்லாத தார்ச்சாலையில் ஓடி வழிந்து கொண்டு
மேய்ச்சல் மாடுகள் புரியாமல் பார்க்கின்றன
மரக்கிளைகளில் ஒடுங்கிக் கொள்கின்றன பறவைகள்
நின்ற பின்னும் காற்றில் நிரம்பியிருக்கிறது ஈரத்தின் நீர்மை
துலக்கமாகின்றன பகல் காட்சிகள்
எங்கும் தென்படுகின்றன தூய்மையின் சுவடுகள்
செருப்புக் கால்கள் நிறையும் வரை

Monday, 19 March 2018

மழை நீராடல்

மழைக் குளியல் போட்டேன்
மாடியில்
நனைத்து நீராட்டியது
மழையின் ஆதுரத் துளிகள்
மௌனமாய் நீராடின
விருட்சங்களும்
வீட்டுக் கூரைகளும்
வீதிகளும்
உடன் குளித்த கடல் மட்டும்
அலையாட்டம் போட்டது

அலைத்தீவு

கருக்கிருட்டில்
படகுக்காய்
காத்திருந்தோம்
அருகாமைத் தீவு செல்ல

இருள் முறியா
கணம்
ஒன்றில்
துவங்கியது
எம் பயணம்

யாம் முதலில் பெற்றது
உப்புநீர்க் காற்று
பயணத் தள்ளாட்டம்
விடியலின் சிவப்புச் சூர்யோதயம்
எலுமிச்சையின் வாசம்

பெருநகரின் மனிதத்திரளாய்
சூழ்ந்திருந்தது நீர்
அன்னிய அசௌகர்யத்தால்
எம்பிப் பார்த்தன மீன்கள்

உச்சி வெயில் நின்றிருந்த
கடல் உணவுகள் உப்பிட்டு காயவைக்கப்பட்டிருந்த
வலைகள் உலர்ந்து கொண்டிருந்த
தீவில்
அப்பொழுது
யாரும் இல்லை

Sunday, 18 March 2018

நித்தம்

தட்டித் திறக்காத கதவுகள்
சொல்லிக் கேட்காத மனிதர்கள்
கைவிட்டுப் போன வாய்ப்புகள்
இழந்த காதல்கள்
பிரிந்த நட்புகள்
நினைவில் அழிந்து போன நாட்கள்
மீளா சாதாரணத்துவத்தின்
கேடயம் ஏந்தி
சமருக்குச் செல்கிறேன்
வாள் இல்லாமல்
தினமும்

அகக் காட்சி

அனல் பரவும்
கோடை மாதத்தில்
பெரு மரத்தின்
நிழலில்
ஓய்வெடுத்துக்
கொண்டிருந்தார்
ஐயனார்
உடன்
ஒரு பிறழ் மனதினனும்
ஒரு வழிப்போக்கனும்
ஒரு லோடு லாரியும்

பிளந்து வெளியேறிய
பாறைகள்
குவிந்து கிடக்கும் நிலத்தில்
தென்பட்ட
எங்கோ இருக்கும் பச்சையை
நோக்கிப்
பயணப்பட்டன
உள்ளூர் ஆடுகள்
இடையன் பார்த்துக் கொண்டிருக்க

வண்டிக்காரன்
எண்ணப்படி நடக்கின்றன
மாடுகள்
புல் மேய்ந்து
விட்டு
புல் சுமந்து கொண்டு

இயந்திரம்
உரித்து விட்டு
விசிறி எறிகிறது
சோள சக்கைகளை

வேகமாக நடப்பவனைப் போல
பார்வையில் கடந்து செல்கின்றன
கண்டெய்னர் லாரிகள்

வண்ணமான சினிமா போஸ்டர்
உலர்ந்து
பார்க்கிறது
போவோரையும் வருவோரையும்

இயக்கமற்ற இரவில்
தீண்டிச் செல்கிறது
மென் காற்று

Saturday, 17 March 2018

நீர் வேட்டை

வரலாற்று நதியின்
கரை நகரில்
நிகழத் துவங்கியது
நீர் வேட்டை

ஆழ்ந்து
ஆழ்ந்து
எலிகள் போல்
துளைகளிட்டனர்
நகர் மாந்தர்

மணலின்
ஊற்று முகங்களுக்கு
தேடி சலித்தன
விழிகள்

வெவ்வேறு நிறங்களில்
மண்
வெளியே
குமிந்து
கொண்டிருந்தது

வேட்கை
கொண்ட
மக்கள்
தொலை ஆழங்களை
வசப்படுத்த
ஆயத்தமாயினர்

திசைகளை ஆடையாய்க் கொண்ட
கடந்து போகும் துறவி
சிரித்துக் கொண்டே சொன்னான்
எளிமையாய் இருங்கள்
கருணையை வேட்டையாடிப் பெற்றிட முடியாது

சாலையில்

நான் சென்று கொண்டிருந்த சாலையில்
வாகனம் சுமந்த வாகனங்கள் சென்றன
வாகனம் இயக்கும் மனிதர்கள் சென்றார்கள்
வாகனம் இயக்கா மனிதர்கள் சென்றார்கள்
பிராணிகள் சுமக்கும் சரக்குகள் சென்றன
என்னைப் பார்த்து
கண் சிமிட்டியவாறு
முள்ளங்கி கேரட் முட்டைகோஸ்
காய்கறிகளும் சென்றன