Friday, 4 January 2019

அப்பால்

மலைகளில் உறைந்திருக்கும் அமைதியைப் போல்
கிராமத்துச் சாலைகளின் தனிமையைப் போல்
துடிப்பான சிறுவனின் உற்சாகமான சிரிப்பைப் போல்
குளக்கரை மலர்களின் தனித்துவம் போல்
சிற்கு விரித்து எழும் பறவைகள்
வானில் உணரும் சுதந்திரம் போல்
ஒரு வீட்டுப் பிராணியின் ஆசுவாசம் போல்
இருளில் சுடரும் ஓர் அகல் தீபத்தின் எளிமையைப் போல்
கார் மேகத்தின் கருணையைப் போல்
நிலவின் வடிவைப் போல்

உன்னை
எப்படியாவது
வகுத்து விட முடியுமா
என யோசித்துப் பார்க்கிறேன்

கரையில்
அலை தீண்டிய
பரப்புக்கு
அப்பால்
மணலில்
மிதந்து கொண்டிருந்தது
அலை நுரை 

பெயர்ச்சி

உன் உலோகக் கடிகாரத்தின்
முட்கள்
கொள்ளும்
சீர் இயக்கம்
உன் நாடிகளின்
ஒத்திசைவால்
உருவானதா
அல்லது
உன் அசைவுகளின்
ஒத்திசைவால்
உருவானதா

Thursday, 3 January 2019

சூஃபி

மண்ணில் உறங்கிக் கொண்டிருக்கிறாய்
ஓர் அற்புதக் கணத்தில்
பேதம் உணராதிருந்த போது
உனது எரியும் நினைவுகள்
பனிமலையாய் உருகிக் கொண்டிருந்தன
நீரெனக் கனிந்து
ஒவ்வொரு கணமும்
நீ
மலரத் துவங்கினாய்
உன் நிலத்தில்
அரற்றும் அழுகுரல்கள் கேட்கின்றன
துயரின் கண்ணீர் சமர்ப்பணமாகிறது
வலியின் வேதனை முனகல்கள் எழுகின்றன
நம்பிக்கை கோரும் பிராத்தனைகள்
உச்சரிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன
நீ ஆற்றுப்படுத்தும் போது
நீண்ட பாலைகளின் காற்றில்
சிறுதுளியாய்
ரோஜா மணம் வீசுகிறது
அதில் கரைகிறது
மானுடப் பெருவெளி

எம் பாவாய்

உன் பார்வை
கருணை
என நான் அர்த்தப்படுத்தியிருந்தவற்றில்
மேலும் சிலவற்றை
சேர்த்தது
சிலவற்றை
முற்றிலும் மாற்றியமைத்தது

சீரான
உன் மூச்சில்
எப்போதாவது
உன் தோள்கள்
இலேசாக
அசையும் போது
ததும்பும்
அமுத கலசத்தின்
ஒரு சித்திரத்தை
மனம்
தீட்டிக் கொள்கிறது

புன்னகைக்கும்
உன் முகம் காட்டும்
உணர்வுகளில்
விதவிதமாய் பிறக்கின்றன
புதிய பிரபஞ்சங்கள்

உன்
சொல் தீ யில்
சாம்பலாகிறது
நான்
என்னும்
பாரம்

வருகை

உனக்கான
காத்திருப்பு
யுகயுகமாய் நீண்டது
உனக்காகக்
காத்திருக்கும் பொழுதில்
உணர்வை
ஓர் இனிய சொல்லாக்கும்
சாத்தியத்தை
முதன் முதலில்
கண்டடைந்தேன்
அதுவே பின்னர் நீதி என்றானது
தூ வெண் மதி என
நீதியின் ஒளி
ஆதுரம் தந்தது
உனக்காகக்
காத்திருக்கும் பொழுதில்
கைகள் அளையும்
மண்ணையும் கல்லையும்
நானாவித வடிவங்களாக்கினேன்
நிலம் தொடாத
எப்போதும்
நீரில் மிதக்கும்
கப்பல்கள்
புவியைச் சுற்றி வருகின்றன
விமானங்கள்
அதிலிருந்து வானில் எழுந்து
நிலத்தில் அமைகின்றன
இன்று காத்திருந்த
இருபத்து மூன்று
நிமிடங்களின்
ஒவ்வொரு கணத்திலும்
கனக்கின்றன
அந்தர யுகங்கள்
சீக்கிரம்
உன் சம்ஹாரங்களை
முடித்து விட்டு
வா

Wednesday, 2 January 2019

ஒரு நல்ல காலைப்பொழுதில்

ஒரு நல்ல காலைப்பொழுதில்
பல நிகழ்ச்சிகளை
மனத்தில் ஓட்டிக் கொண்டிருந்தோம்
இனிமையான நினைவுகளின் அடர்த்தி
நினைக்கும் தோறும்
இன்னும் இன்னும் குறைவது
வியப்பளித்தவாறு இருந்தது

வெளிக்காட்டிக் கொள்ளாத காயங்களும்
சொல்லாக்காத துயரங்களும்
மண்ணில் விழாத நீராக
விழிகளில் தேங்கின

பேசிக் கொள்ளாமல்
தூரத்தில் இருந்தாலும்
ஒவ்வொரு எண்ணத்துக்கும்
ஒவ்வொரு செயலுக்கும்
நம்மைப் போலவே
எதிர்வினையாற்றும்
இருப்பை
என்ன செய்ய முடியும்
என்று யோசித்த போது
ஓர் இறுக்கமான சங்கிலியின்
பலமான ஒரு கண்ணி
விடுபட்டது

சில சமயம்
விடுபடல்கள் கூட
ஒரு காலைப்பொழுதை
ஒரு நல்ல காலைப் பொழுதாய்
உணரச் செய்கின்றன

ஒரு பயணம் நிகழும்

கிளம்பியிருக்கும்
ஒவ்வொரு பேருந்தையும்
தவிர்த்து விட்டு
சற்று தள்ளி நின்று
கவனத்தை அங்கேயே வைத்திருக்கும்
கணவன்
அருகில் வந்து
ஓரிரு வார்த்தைகள்
பேசும் போதெல்லாம்
கண்ணீர் மல்கும் தாயின்
அருகாமையில்
இருக்கும் சிறுவன்
சூட்கேஸ்களில் அமர்ந்து
எழுந்து
மெலிதாக எழும் அழுகுரல்
உண்டாக்கும்
அதிர்வுகளுக்கு
அப்பால்
பேருந்துப் பயணத்தில்
முகத்தில் மோதப் போகும்
காற்றையும்
நில்லாமல் ஓடும் மரங்களையும்
கற்பனை செய்கிறான்

அந்த கணவன்
எதற்காகக் காத்திருக்கிறான்?
உறுதியளிக்கப்பட்ட கடனுக்காகவா?
வந்து சேர வேண்டிய தொகைக்காகவா?
குடும்ப பிரச்சனையா?
நெருங்கியவர்கள் மரணமா?

சட்டென முடிவெடுத்து
மூவரும்
ஒரு பேருந்தில்
ஏறி அமர்கின்றனர்

துயரங்களிலிருந்து
துயரமின்மைக்கும்
ஒரு பயணம் நிகழும்

உனக்கான பரிசுப்பொருளைத் தேர்ந்தெடுக்கும் போது

உனக்கான பரிசுப்பொருளைத் தேர்ந்தெடுக்கும் போது
அது
என்னைப்
பற்றியதாகவோ
பரிசுப்பொருளைப்
பற்றியதாகவோ
இல்லாமல்
உன்னைப்
பற்றியதாக
இருக்க வேண்டியிருக்கிறது

உன்னைப் புன்னகைக்கச் செய்யக் கூடிய
உன்
தோற்ற எண்ண நகர்வுகளுக்கு
ஒத்திசையக் கூடிய
எளிய
இனிய
ஒரு பரிசுப்பொருளை
எப்போதும்
தேடிக் கொண்டிருக்கிறேன்

தயக்கத்துடன்
என்
இக்கட்டை
உன்னிடம்
சொன்னேன்

விழுந்து விழுந்து
சிரித்து
உன் தவிப்பை
பரிசுப்பொருளாய்
ஏற்றுக் கொள்கிறேன்
என்றாய்

அது
ஒத்திசைவு கொண்ட
இனிய
எளிய
ஒன்றா
என
எனக்குத் தெரியவில்லை

ஆனால்
கணந்தோறும்
அதனை
உனக்கு
அளித்துக் கொண்டிருக்கிறேன்

Tuesday, 1 January 2019

விளி

இன்று

தாள்கரம்
வான் நோக்கி உயர்த்தியிருக்கும்
பயிரின்
நுனி விரலில்
அருமணியென ஒளிவிடும்
அதிகாலைப் பனிக்கு

புகை அசையும்
கிராமத்துச் சாலையின்
ஓரத்தில் இருக்கும்
சிற்றோடையில்
தூய்மை கொண்டு
வீற்றிருக்கும்
அல்லி மலருக்கு

காலையின்
முதல் நடைப்பயிற்சியாளன்
நடக்கத் துவங்கும் போது
வழக்கமாகக்
கூவும்
கோழிக்கு

தூரத்தில் கேட்கும்
ஆலயமணிக்கு

சொல்வதற்கென

நம்மிடம் சொல்வதற்கென

இருப்பது தான் என்ன?

ஒருநாள்

ஒருநாள்
உன்னை இயல்பாக ஏற்கலாம்

உன் மீதான ஊசி நுனியளவு வெறுப்பு இல்லாமல்
அநாதி காலமாய் நீ  அவ்வப்போது சிந்தும் கண்ணீர் அன்றில்லாமல்
எள்ளளவு வஞ்சமும் இன்றி
ஐயங்கள் அல்லது ஐயம் ஏதும் அற்று
வன்முறையின் களிம்பு இல்லாத

ஒருநாள்

ஒருநாள்
உன்னை இயல்பாக ஏற்கலாம்