Sunday, 7 April 2019

பெயர்ப் பட்டியல்

பட்டியலில் பெயர்கள் பரவியிருக்கின்றன
வரிசை எண்ணுடன்
வித வித நோக்கங்களில்
கண்ணாடிக் கதவு போட்ட
அறிவிப்புப் பலகையில்
ஒட்டப்பட்டுள்ள
ரயில் முன்பதிவு பட்டியல்
அரசு பராமரிக்கும் திருக்கோயில்களின்
குத்தகை பாக்கி பட்டியல்
சம்பள பட்டியல்
பதவி உயர்வு பட்டியல்
போதிய வருகையில்லாமல்
பரீட்சை எழுத அனுமதிக்கப்படாதவர் பட்டியல்
மனிதர்கள்
சூழ்நிலை பொறுத்து
சாத்தியம் பொறுத்து
குழுவாய் இணைகிறார்கள்
குழுவிலிருந்து பிரிகிறார்கள்
பட்டியல் பெயர்கள் ஒன்றாகவே இருக்கின்றன
பிரியாமலும்
இணையாமலும்

கோலக் காலை

விடிவெள்ளிக்குக் கீழே
கண் விழிக்கத் துவங்கியிருக்கும் சிற்றூரில்
நீண்டிருக்கும் மண் சாலையில்
தினமும் நடக்கிறான்
காலை நடையாளன்
வாசலில் சாணமிட்ட குடிசை வீடுகளில்
கூரைக்கும் சாலைக்கும்
பறந்து பார்க்கின்றன
செந்நிற சேவல்கள்
நிற்க நேரம் இல்லாத
பெரிய வேலையற்ற இன்னொரு நாளைக்குள்
மெதுவாக வருகின்றன
சாலைக் குக்கல்கள்
புதிதாகக் கோலம் பயிலும்
சிறுமி
மாப்புள்ளிகளை வளையமிட்டு
உருவாக்கிக் கொண்டிருக்கிறாள்
ஒரு பொழுதை

Friday, 5 April 2019

இறுதிக்குப் பின் யாத்திரை

தணிந்த
சிதை நெருப்பின்
சாம்பல் குவியலின்
வெண்ணிறப்  பொடி
மானசீகமாக
உரு தருகிறது
இல்லாத உடலுக்கு

இறுதி யாத்திரைக்குப் பின்
இன்னும் ஒரு வாய்ப்பளித்து
சமுத்திரம் வரை செல்கிறது
முற்றிலும் கரைந்து போக

முற்றிலும் கரைதலில்
ஒரு ஆசுவாசம்
இருக்கத்தானே செய்கிறது

Thursday, 4 April 2019

கோடை மாலை

கோடை மாலையில்
நிழற்சாலையில்
கூடியிருக்கும் சந்தையில்
காய்கறி வாங்கி
வீடு திரும்பும் முகங்களில்
நிரவியிருக்கிறது
ஒரு விடுபடல்

நிலக்காற்று
கடல் மேல் அடையும்
குளிர்ச்சி

தரங்கம் பாடி

கடற்கரையில்
சவுக்குத் தோப்புக்கருகில்
மணல்மேட்டின் மேல்
அமர்ந்து
அலைகளின் சங்கீதம்
கேட்கிறான்
அலையும்
ஒற்றைப் பயணி

அந்தி வானின்
விண்மீன்கள்
அசைந்து கொடுத்து
ஒத்திசைகிறது
அலைகடல் நகர்வுக்கு

Tuesday, 2 April 2019

மண் விண் அமுது

எல்லா இலைகளும் உதிர்ந்து
நீர்மையற்ற பரப்பில்
நின்று இருக்கும் மரம்
இடைவிடாது
வேர்களால்
துழாவுகிறது
ஆழங்களில் உறையும் உயிர்ப்பை

மழலைக் கிளைகள்
தீண்ட
நீட்டுகின்றன
முடிவற்ற
அமிர்த வான் நோக்கி 

Monday, 1 April 2019

பிரியத்துக்குரியவர்களிடம்
இன்னும் முழுமையாக வெளிக்காட்டாத உணர்வுகள்
இன்னும் உச்சரிக்கப்படாமல் மனதில் பாதுகாத்திருக்கும் சொற்கள்
இன்னும் அளிக்காத வாக்குகள்
இன்னும் சிந்தாத கண்ணீர்
இன்னும் இன்னும் வளர்ந்து கொண்டேயிருக்கும் நம்பிக்கை
இன்னும் இன்னதென்று வடிவப்படுத்த முடியாத அன்பு

ஓயாப் பெருங்கடலுக்கும்
அந்திச் சூரியனுக்கும்
இடையே
வித விதமான
மேகங்கள்
மிதக்கின்றன
சைத்ரிகனின் கரம்
ஒரு வெள்ளைக் காகிதத்தில்
ஒரு சூரியனை
ஒரு சந்திரனை
சிறு சிறு மலைக் குன்றுகளை
ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நதியை
அதில் அலையும் மீன்களை
அந்தரத்தில் நிற்கும் கொத்திப் பறவைகளை
சிறு குழந்தைகளுடன் நின்றிருக்கும்
வாலைக் குழைக்கும் நாயை
ஒரு சிறு கீற்று வீட்டை
அதனுள் புகையும் அடுப்பங்கரையை
சில கணங்களில்
உருவாக்கி விடுவதைப் போல
நீ
ஒரு மாய உலகத்தை
உருவாக்கினாய்
பின்னர்
அதிலிருந்து எப்படி வெளியே வருவது
என்பதைப் பற்றி
நாம் யோசிக்கவேயில்லை

நில் கவனி செல்

ஒரு நெடுஞ்சாலையில்
கிளையில் பறவைகள் நிற்கும்
நிழலில் பிராணிகள் நிற்கும்
மண்ணில் ஆல் நிற்கும்
பேருந்து நிறுத்தம்
இல்லாத இடத்தில்
நின்று கொண்டிருக்கிறது
மூன்று எலுமிச்சைகள்
செருகப்பட்ட சூலம்
நடத்துனர்களும்
வாகன ஓட்டுனர்களும்
சிரத்தையாய்
முன்நின்று
வேண்டிக் கொள்கின்றனர்
வழித்துணையாய் உடன்வர
மரத்தின் மேல்
கவிந்து நின்றிருந்தது
வெண்மேகம்

ஏன் மறக்க வேண்டும்

ஏன் மறக்க வேண்டும்
சில பொழுதுகள் ஆயினும்
சில நாட்கள் ஆயினும்
சில மாதங்கள் ஆயினும்
நான்
என்பதில்
முழு உலகமும்
இணைந்த
மாசற்ற
தூய
நேரடியான
செயல்பாட்டை
ஏன் மறக்க வேண்டும்