Saturday, 4 May 2019

சில கணங்கள்

நீ
என்னிடம் பேசிக் கொண்டிருந்தாய்
உன் மீது பிரியமாய் இருந்தவர்களை
உன் மீது பெரும் நம்பிக்கை வைத்தவர்களை
உன்னை எப்போதும் மனமுவந்து பாராட்டியவர்களை
உன்னை வாழ்த்துபவர்களை
குதூகலம் தந்த அலைகடல் கரைகளை
மலைப்பிரதேசங்களின் குளிரை
மனிதர்கள் பொங்கும் நகரங்களை
காண விரும்பும் புதிய நிலப்பரப்புகளை
மலர்கள் பூத்திருக்கும் நீண்ட புல்வெளிகள் கொண்ட பூங்காக்களை

இவற்றைப் பற்றி
கூறியபோது
நீ
சில கணங்கள்
துக்கம் கொண்டு
மீண்டது
ஏன் என்பதை
நான்
யோசித்து யோசித்துப்
பார்த்தேன்

சொல்லாதல்

நீ
ஒரு காட்சியாக
உள்நுழைந்தாய்
ஓர் இனிய காட்சியாக
உனது கண்கள்
உனது மென்மையை
வெளிப்படுத்திக் கொண்டிருந்தன
கருணையின் நீர்மையால்
ஈரம் கொண்டிருந்தன
இந்த உலகைப் பார்க்கும்
உனது கண்கள்
பிரியமானவை
உனது சொற்கள்
உனது சொற்களுக்கு இடையே
ஏற்படும்
இடைவெளிகளும் தயக்கங்களும்
மேலும்
பிரியம் கொண்டிருந்தன
உனது கனவுகளின் பிரதேசம்
வெள்ளிப் பனிமலைகளும்
அலைகடல் ஆழங்களும்
உனது காட்சியை
சொற்களாக்குகையில்
என்னைச் சூழ்கின்றன கார்மேகங்கள்
தென்றல் தீண்டிச் செல்கிறது
உடனிருக்கிறது அருவிச்சாரல்
அனல் நீக்கும் குளிர் நிறைகிறது
எங்கும்

Friday, 3 May 2019

ஊற்று

வீட்டு மாடியில்
கோடை இரவில்
நட்சத்திரங்களுக்குக்  கீழே
தென்றல் உலவுகையில்
வானம் பார்த்து
படுத்திருக்கிறேன்
பொங்கும் ஊற்றென
தென்னை மட்டைகள்
மண்ணிலிருந்து விண் நோக்கி
பொங்கும் ஊற்றுகள்
அருவியென
சில
வழியவும் செய்கின்றன
மாடித் தரை தொட்டு

உன்னிடமிருந்து

உன்னிடமிருந்து
எவ்வளவோ பெற்றுக் கொண்டேன்
ஒரு விஷயத்தை
மேன்மையாகப் புரிந்து கொள்ளும்
வழிமுறைகள் மட்டுமே
உன்னிடம் இருந்தன
யாருடைய துக்கத்துக்காகவும்
நீ துயரப்பட்டாய்
பிறருக்காக சிந்துவதற்கு
எப்போதும்
உன்னிடம் கண்ணீர் இருந்தது
பிழைகளைத்
தவறுகளை
இயல்பாக மன்னித்தாய்
நீ நினைக்கப்படும் போதெல்லாம்
அங்கே நிறைகிறது
உன் நேசத்தின் நறுமணங்கள்
உன் அகம்
அன்பால்
ஒட்டுமொத்தமாக
இந்த உலகை
ஒரு குழந்தையாக
மாற்றுகிறது

வான் தெய்வங்களின்
நிஷ்டையை
அவ்வப்போது
கலைத்தது
புவியில்
உன் இருப்பு
...

பசுமை

வெம்மைப் புகை எழும்
புழுதியாலான பிரதேசத்தில்
மண் உறையும்
புல் வேராய்
நீ
காத்திருக்கிறாய்
ஒரு சிறு மழை
பொழிந்து
பசும் உயிராய்
அந்நிலம்  முழுதும்
உன் அன்பால்
அணைத்துக் கொள்ள

Thursday, 2 May 2019

கடவுள் காணும் காட்சி

லட்சம் பேர் திரண்டிருக்கும்
அம்மைதானத்தில்
அந்த இளைஞன் முகம்
சிறுவனைப் போல
நாணிச் சிவந்திருந்தது

கால்பந்துக்கும்
அவனுக்கும்
மெல்லிய
நுட்பமான
ரகசிய
புரிதல்
இருந்தது

அணைக்கையில்
பூரணமாய்
ஒப்புக் கொடுத்திருக்கும்
காதலியைப் போல
கால்பந்து
அவனிடம்
நடந்து கொண்டது

அவனும்
கால்பந்தும்
பரிபாஷையில்
உரையாடிக் கொண்டிருந்தனர்
ஒருங்கிணைக்கப்பட்டிருந்தனர்

அவன் கண்கள்
அக்கால்பந்தின்
மேலேயே
இருந்தது

அவனுக்கு
நான்கடி முன்னால்
உருண்டு கொண்டிருந்த
கால்பந்து
அவன் கால் தொடும் முன்னாலேயே
அவன் மனம் நினைத்த திசைக்கு
திரும்பியது

அவனும்
பந்தும்
கால்பந்தாட்டத்துக்குள்
ஒரு
தனி விளையாடலை
ஆடிக் கொண்டிருந்தனர்
ஒரு தனி உலகை
உருவாக்கிக் கொண்டு
அதில் உலவிக் கொண்டிருந்தனர்
காதலர்களைப் போல

அவனால்
goal விழும் போதெல்லாம்
ஒவ்வொரு முறையும்
கடவுள் பார்த்தார்
தன் வேலைகளை
ஒதுக்கி வைத்து விட்டு


இருந்து விட்டு போகிறேன்

இந்த நகரில்

ஓர் அன்னையிடமிருந்து
அவள் குழந்தையை
சற்று நேரம் வைத்திருந்து
திருப்பித் தருபவனாக

ரயில் கடக்கையில்
உற்சாகமாய் கையசைக்கும்
மைதானத்துச் சிறுவர்களைப் பார்த்து
புன்னகைத்துக் கையசைப்பவனாக

தினமும் காலைப் பொழுதில்
வீட்டு வாசலுக்கு வரும்
குருவிகளுக்கு
தானியம் அளித்து
மகிழ்ந்து பார்த்திருப்பவனாக

பெருஞ்சுமை சுமந்து
சோர்ந்திருப்பவர்களுக்கு
சில கணங்கள்
ஆசுவாசம் அளிப்பவனாக

முடிவற்ற
தீராக்காதலை
தூய சொற்களில்
தெரிவித்துக் கொண்டேயிருப்பவனாக

அன்பின் பாலம்
உருவாக்கப்படும் போதெல்லாம்
அணில் போல
பிரியத்தின்
கைமணலை இடுபவனாக

இருந்து விட்டு போகிறேன்

புரிதல்

உன்னைப் புரிந்து கொள்வது
என்பது
மிக எளிதான ஒன்று
உனது மனம்
மேன்மைகளால்
குதூகலங்களால்
அன்பின் ஒளியால்
புத்தம் புது உணர்வுகளால்
உலகின்
எப்போதுமிருக்கும் அற்புதம்
உணரும் தன்மையால்
பிரியத்தால் இறைமை கொள்ளும் இயல்பால்
ஆனதாக
இருக்கிறது

என்னால்
உனது கண்ணீரைப்
புரிந்து கொள்ளவே முடியவில்லை

Wednesday, 1 May 2019

நீர்மை

பள்ளி விட்டதும்
ஹோ என ஒலி எழுப்பி
திறந்திருக்கும் பெரிய gateன் வழியே
வெளியே பாயும்
குழந்தைகள் கூட்டம் போல்
இன்று இரவு 9.16க்கு
வந்தது
மழை
தார்ச்சாலையில் படும் சத்தம்
மண்பரப்பில் கொட்டும் சத்தம்
கார் பார்க்கிங் ஷீட் மேல் கேட்கும்
டமார சத்தம்
என
ஜூகல் பந்தி கச்சேரி
கரண்ட் கட் ஆனது
வீட்டுக் கூடத்தின் காற்றில்
நிரம்பியது நீர் ஈரம்
சிறு மழை கூட
இந்த வாழ்க்கை மேல்
சட்டென
கூடுதல் நம்பிக்கையை
அளித்து விடுகிறது

ஆழம்

மௌனம் அடர்ந்திருக்கும்
மலைகளின்
குளிர்க் காலைப் பொழுதுகளைப் பற்றி
கேட்டுக் கொண்டிருந்த போது
புல்நுனி பனிநீரின் தூய்மை
உன் முகத்தில்
நிறைந்தது

முற்பகலில் கடந்து சென்ற
வனாந்தரங்களின் நிழல்
குறித்து சொன்ன போது
அடர்ந்த இலைகளால்
கூரையிடப்பட்ட
ஈரப்பசுமை
உன் சொற்களில்
வெளிப்பட்டது

பிற்பகலில்
ஒரு சிறு சாலையில்
கிளை பிரிந்து சென்ற
மண்பாதையின்
முடிவில்
இருந்த சிற்றாலயத்தின்
கருங்கல் படிக்கட்டுகளில்
அமர்ந்து கண்ட
தடாகத்தைக் காட்சிப்படுத்திய போது
நீ
கணந்தோறும் மலரும்
மலரானாய்

மாலையில்
ஒரு சிறு குன்றின்
பாறை
ஒன்றின் மீதமர்ந்து
கண்ட
முதல் நட்சத்திரம் குறித்து
கேட்ட போது
நீ புன்னகைத்தாய்
விண்மீன் போல

அந்த மாநகரின் இரவில்
அன்னையின் தோள்களைக்
கட்டிக் கொண்டு
வெட்கத்தால் முகம் நாணும்
குழந்தையைப் பற்றி
உன்னிடம் சொன்ன போது
நீ ஆனாய்
ஒரு பிள்ளையாக
ஓர் அன்னையாக