மயிலாடுதுறை வந்திருக்கிறார் - மறுநாள் திருச்சி - சென்னை பகல் விரைவு ரயிலில் வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்படுகிறார் என்பதை அறிந்தேன். சென்னை செல்லும் பகல் விரைவு ரயில் வழக்கமாக மயிலாடுதுறைக்கு வந்து சேர வேண்டிய நேரத்துக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வரும். எதிர் திசையிலிருந்து வரும் ரயில்களுக்கு வழி விட இதனை எல்லா நிலையங்களிலும் நிறுத்தி விடுவார்கள் என்பது காரணம்.
நான் மறுநாள் வைத்தீஸ்வரன் கோவில் செல்ல மோட்டார்சைக்கிளில் கிளம்ப ஆயத்தமானேன். வீட்டிலிருந்து 15 கி.மீ தூரம். 15 நிமிடத்தில் சென்று விடலாம் என்பதால் காலை 9.40க்கு தயாராகிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் என்னுடைய நண்பர் என்னைப் பார்க்க வந்து விட்டார். அவரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டேன்.
வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையத்தை நெருங்கும் போது நண்பர் என்னிடம் கேட்டார் : ‘’பிரபு! காலை 11.15க்கு ரயிலின் அட்டவணை நேரம். மணி இப்போது சரியாக 10. பொதுவாக அட்டவணை நேரத்துக்கு 15 நிமிடம் முன்பு அவர் வருவார் என்றால் 11 மணிக்குத்தான் வருவார். நீங்கள் எப்படி 10 மணிக்கு வருவார் என கணிக்கிறீர்கள். நாம் ஒரு மணி நேரம் காத்திருக்க நேரிடும்’’
நான் பதில் சொன்னேன்; ‘’நீங்கள் நினைப்பது போல் இல்லை. அவர் சென்னைவாசி. சென்னைவாசிகள் பொதுவாக ரயில் நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாகவே ரயில் நிலையத்துக்கு வந்து விடுவார்கள்.’’
நண்பர் கேள்வி கேட்டு நான் பதில் சொல்லி முடித்த அடுத்த வினாடி ஒரு வாடகை வாகனம் ரயில் நிலைய வாயிலுக்கு வந்தது. ஞானக்கூத்தன் குடும்பத்துடன் வந்து இறங்கினார். நண்பருக்கு ஒரே ஆச்சர்யம். நடைமேடை பெஞ்சுகளில் அவர்கள் அமர்ந்தனர். ஓரிரு நிமிடங்களுக்குப் பின், அவரிடம் சென்று வணக்கம் தெரிவித்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன். கோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் அவருக்கு ‘’விஷ்ணுபுரம்’’ விருது வழங்கப்பட்ட விழாவில் நான் பங்கேற்ற விபரத்தை அவரிடம் கூறினேன். அவர் மிகவும் மகிழ்ந்தார். பின்னர் அவரது கவிதைகள் குறித்து பேசலானோம். எனக்கு அவருடைய ‘’வெள்ளத் தனைய மலர்நீட்டம்’’ கவிதை மிகவும் பிடிக்கும் என்றேன். எங்கள் பேச்சு திருக்குறள் நோக்கி சென்றது. பல திருக்குறள்களை நாங்கள் நினைவுபடுத்தி பேசிக் கொண்டோம். அவர் சிலப்பதிகாரத்தின் மேல் தீவிர ஈடுபாடு கொண்டவர். நானும் சிலம்பை அறிவேன் என்பதால் சிலப்பதிகாரம் குறித்தும் பேசினோம். ம.பொ.சி குறித்து நிறைய விஷயங்களைக் கூறினார் ஞானக்கூத்தன். ஒரு சிலர் மட்டுமே இருந்த ரயில் நிலைய நடைமேடையில் நாங்கள் ஆர்வத்துடன் ஒரு கற்பனை உலகில் இலக்கியம் பேசிக் கொண்டிருந்தோம். அவரது மகன் எங்களை புகைப்படம் எடுக்க விரும்பினார். காமிராவை நாங்கள் நோக்கியிருப்பதை விட நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போது எடுக்குமாறு கேட்டுக் கொண்டு உரையாடலை உற்சாகமாகத் தொடர்ந்தோம். நான் அவரது ‘’பென்சில் படங்கள்’’ கவிதைத் தொகுப்பைக் கொண்டு சென்றிருந்தேன். அதிலிருந்து நான் மிகவும் விரும்பும் அவரது சில கவிதைகளை வாசித்துக் காண்பித்தேன். நவீன கவிதை, சங்கப்பாடல்கள், உலக கவிதைகள், தமிழ், தமிழ் வரலாறு என பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. கிட்டத்தட்ட 2.5 மணி நேரம். ரயிலின் வருகைக்கான அறிவிப்பு ஒலித்தது. நாங்கள் பிரியும் நேரம் நெருங்கியது.
ஞானக்கூத்தன் என்னிடம் கேட்டார் : ‘’பிரபு! நீங்கள் எழுதுவிங்களா?”
அப்போது நான் எதுவும் எழுதியிருக்கவில்லை. எனவே பதறியடித்து மறுத்தேன். ‘’இல்லை சார்! நான் வாசகன் மட்டும் தான்’’.
ஞானக்கூத்தன் சொன்னார் : ‘’நீங்கள் எழுதலாம்’’
நான் ‘’பென்சில் படங்கள்’’ புத்தகத்தில் அவரைக் கையெழுத்திடச் சொல்லி பெற்றுக் கொண்டேன்.