Tuesday, 8 December 2020

ஆசான் சொல் - 10

செய்க பொருளைச் செறுநர் செருக்கருக்கும்
எஃகதனிற் கூரியது இல் (759)

ஒருவரைப் பகை சூழ்ந்திருக்கிறது. அப்பகையை வெல்ல வழி என்ன? நேரடியாக மோதுவதா? மோதலாம். பகைவர் சூழ்ச்சியை தன் வழிமுறையாகக் கொண்டார்கள் எனில் என்ன செய்வது? பொறாமையால் உடனிருப்பவர்கள் மனம் திரிந்து பகை கொண்டால் என்ன செய்வது? 

திருவள்ளுவர் ஒரு வழிமுறையைக் கூறுகிறார். ஒரு கட்டளையை இடுகின்றார். ‘’செய்க பொருளை’’. பொருளியல் வளர்ச்சி அடைதல் என்கிறார். பொருளியல் வளர்ச்சியே நம் பகைவரின் எண்ணங்களைத் தவிடு பொடியாக்கும் கூரிய ஆயுதம் என்கிறார். 

எஃகு போன்ற வலிமையான கூரிய ஆயுதம் என்கிறார்.

Monday, 7 December 2020

நினைவு

துல்லியமான
அத்தனை வெளிப்படையான
பளீரிடும்
அடர்த்தி மிக்க நீல வானத்தைப் பார்க்கும் போது

மெல்ல ஓசையெழும்
லேசாக நுரைக்கும்
சின்ன அலைகள் வந்து செல்லும்
கடற்கரையைக் காணும் போது

ஏரி ஒன்று
நீர் நிறைந்திருக்கும் போது

வெள்ளமென காட்டாறு 
பாயும் போது

ஒரு சிட்டுக்குருவியை

ஒரு கிருஷ்ணப்பருந்தை

காணும் போது

உன்னை
நினைத்துக் கொள்கிறேன்

ஒரு பெயராக
ஒரு சொல்லாக
ஒரு உணர்வாக 

Sunday, 6 December 2020

உயிர்ச்சுடர்

பிரிவின்
துயரம் கொள்ளாதே
இழப்பென எதையும் எண்ணாதே
காலத்தின் பெரும் பரப்பில்
உருவிழக்கின்றன
நினைவுகள்
அணு அளவே உள்ளது உயிர்
உயிர்ச்சுடர்
ஒளிர்கிறது
முடிவின்மையில்

இனிமை

நாற்புறமும் சுவர்கள் சூழ்ந்த
அறைக்குள்
அமர்ந்திருக்கிறாய்
உன் பாதங்களை
தரை எவ்விதம் ஏந்திக் கொள்கிறது
உனது அமைதிக்கு
சாமானியத்தின் 
எந்த ஊறும் வந்து விடக்கூடாது
என
எப்போதும் எண்ணியவாறிருக்கிறேன்
எதுவும் சொல்லாதே
எதையும் சொல்லாக்காதே
கனிகள் இனிக்கவே செய்கின்றன
எப்போதும்

Thursday, 3 December 2020

ஆசான் சொல் - 9

உடைய ரெனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று (591)

ஊக்கம் என்பது ஒரு நற்குணம்; ஓர் அருங்குணம். ஊக்கத்தைத் தம் இயல்பாகக் கொண்டவர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொள்வார்கள். வியக்கும் விதத்தில் திட்டமிடுவார்கள். துல்லியமாகச் செயலாற்றுவார்கள். எந்த சூழலையும் தமக்கு உகந்த விதத்தில் மாற்றியமைப்பார்கள். 

இத்தகைய ஊக்கத்தைத் தம் இயல்பாகக் கொண்டவர்களே சிறப்புடையவராவர். ஊக்கமே சிறப்பும் செல்வமும் ஆகும் என்கிறார் திருவள்ளுவர். 

Wednesday, 2 December 2020

மழை அந்தி

இந்த
மழைநேர மாலை அந்தி
எவ்வளவு துல்லியமாய்
எவ்வளவு மேன்மையாய்
எவ்வளவு பக்குவமாய்
அடர்த்தி கொள்கிறது
உன்னைப் போல 

உணர்வு

மௌனத்தை
உவகையை
பொங்கும் உளத்தை
காற்றின்
நீரின்
வெயிலின்
மென்மையை
உயிரின் நுண்மையை 
இறைமையை
உணரும் போதெல்லாம்
உன்னை
மேலும்
மேலும்
உணர்கிறேன்

மழைப்பொழுது

அன்பே
இந்த மழை பொழிந்து கொண்டிருக்கும்
இந்த பொழுதில்
காற்றின் நீர்மை சூழ்கிறது
உளமெங்கும்
புறமெங்கும்
ஒரு மழைத்துளியைப் போல சிதறி
நிலத்தைப் போல அமைதி காத்து
சிறு ஓடையென பெருகி ஓடி
மழை ஓய்ந்து உருவாகும் மௌனத்தில்
நிலை பெறுகிறது
உயிர்
வாழ்வு
உனது நினைவுகள் 

அடர்த்தியும் செறிவும்

’’காவிரி போற்றுதும்’’ தொடர்பாக நான் பலரைத் தொடர்பு கொண்ட போது, சில விஷயங்களை அவதானிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாட்டில் வாழும் பலர் - 90 விழுக்காட்டுக்கும் மேலாக - கிராமப்புற பின்னணி கொண்டவர்கள். குறைந்தபட்சம் ஒரு தலைமுறைக்கு முன்னால் கிராமங்களிலிருந்து நகரங்களிலோ மாநகரங்களிலோ குடியேறியிருப்பார்கள். எனவே, அனைவருக்கும் விவசாயம் குறித்து கிராமங்கள் குறித்து ஒரு அபிப்ராயம் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் கிராமத்தின் பொருளியல் குறித்து ஒரு சித்திரம் இருக்கிறது. எனினும் விவசாயியின் வாழ்க்கை செழிப்படைய நிகழ வேண்டியது என்ன என்ற புரிதல் சமூகத்துக்கு மிகவும் குறைவே. இந்த புரிதல் குறைபாடு கிராமத்துக்கு வெளியே இருப்பவர்களுக்கு மட்டும் அல்ல; கிராமத்தில் இருப்பவர்களுக்கும் குறைவு என்பது ஒரு பெரு வியப்பு. 

ஒரு கிராமம் முன்னேற்றம் அடைய, அந்த கிராமம் பொருளியல் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். பொருளியல் வளர்ச்சியே கிராம முன்னேற்றத்தின் அளவுகோல். ஒரு தமிழக வருவாய் கிராமம் என்பது மிகச் சிறு அலகு. 1000 ஏக்கர் நிலம் என்பது அதன் மொத்த பரப்பளவு. சராசரியாக 450 குடும்பங்கள் இருக்கும். மக்கள் தொகை 1600 என இருக்கும். அவ்வாறான கிராமத்தில் ஒரு பொருளியல் மாற்றம் நிகழுமெனில், மிகக் குறைவான அந்நிலப்பரப்பில் இருக்கும் எல்லா குடும்பங்களுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பயன் தரும். 

விவசாயிகளின் நலன்களுக்கான நடவடிக்கை என்பது அவர்கள் வருமானத்தை பலவிதங்களில் அதிகரிப்பதற்கான நடவடிக்கையே. 

தொழில்நுட்பம் மூலம் பல்வேறு தரவுகள் தொகுக்கப்பட்டு விவசாயிகளின் பொருளியல் நலனுக்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட வேண்டும். தமிழ்நாட்டின் கிராமங்கள் மாற்று எரிசக்தி திட்டங்களில் முனைப்பு காண்பித்தால் இப்போது பயன்படுத்தப்படும் மின்சாரம் மிக அதிக அளவில் மிச்சமாகும். அது மிகப் பெரிய வாய்ப்பு. விவசாயிகளின் விழிப்புணர்வு என்பது ஒரு மாநிலத்தின் பொருளியலையே மாற்றி அமைக்கக் கூடியது. 

கிராமங்களில் பலவிதமான முயற்சிகள் நிகழுமாயின் அந்த பணிகளை ஆற்ற தேவையான மனித உழைப்புக்கு நியாயமான ஊதியம் கிடைக்கும். 

இப்போது ஒரு கிராமத்தில் விவசாயிகள் ஈட்டும் வருவாய் ஆகக் குறைவானது; இந்த வருவாயில் அவர்கள் திருப்தி அடைந்து விடுகின்றனர். அதற்கு பல சமூக, பொருளியல் காரணங்கள். 

விவசாயம் சார்ந்து - உணவுப் பொருட்கள் சார்ந்து இப்போது இருப்பதை விட மேலும் கூடுதல் வருவாயைப் பெருக்குவதற்கான முயற்சியே கிராம முன்னேற்றத்துக்கான முதன்மையான செயல். 

Tuesday, 1 December 2020

நமது முக்கியத்துவம்

’’காவிரி போற்றுதும்’’ பணி துவங்கியதிலிருந்தே நாம் பலவிதமான ஆதரவையும் பலவிதமான எதிர்வினைகளையும் பெற்றவாறே இருக்கிறோம்.  ஒரு பொது காரியம் நிகழும் போது எதிர்வினைகளும் செயல் வழிமுறை குறித்து ஐயங்களும் உருவாவது இயல்பானது. நம் பணியை - நம் செயல்முறையை - நம் வழிமுறையை விளக்கிக் கூறுவதற்கான ஒரு வாய்ப்பாக எண்ணி அவற்றைக் குறித்து விரிவாக முன்வைக்கலாம் என எண்ணுகிறேன். 

1. மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு ஏன் குறைந்தபட்ச கட்டணம் கூட இல்லாமல் வழங்கப்பட வேண்டும்?

’’காவிரி போற்றுதும்’’ ஒரு கிராமத்தில் மரக்கன்றுகள் வழங்குவதில் - மரக்கன்றுகள் நடுவதில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன. (அ) மரக்கன்றுகள் (ஆ) விவசாயிகள் (இ) தன்னார்வலர்கள். 

ஒரு சிறு கன்று, நட்டு நீர் ஊற்றப்படுமானால் வேர் பிடித்து துளிர் விட்டு கிளை பரப்பி பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் பலவிதத்தில் பயன் தருகிறது. அது வாழ்வின் மாபெரும் அற்புதங்களில் ஒன்று. இயற்கைக்கும் மானுடர்க்குமான உறவில் எப்போதும் இயற்கையே கொடுக்கும் இடத்தில் இருக்கிறது; மானுட சமூகம் பெற்றுக் கொள்ளும் இடத்தில் மட்டுமே இருக்கிறது. நமது எல்லா முயற்சிகளும் நன்றி காட்டுதலே. 

வழங்கப்படும் மரக்கன்றுகளை விவசாயிகளே தங்கள் நிலத்தில் வளர்க்கின்றனர். அதற்காக முயற்சி மேற்கொள்கின்றனர். அவர்கள் நாட்கணக்காக அளிக்கும் கவனம் மதிப்பு மிக்கது. அவர்கள் மரம் வளர்ப்பதில் காட்டும் ஆர்வத்துக்கும் அக்கறைக்கும் மதிப்பளிக்கும் விதமாகவே மரக்கன்றுகள் கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகின்றன. 

புவிக்கும் விவசாயிகளுக்கும் நம் நாட்டின் அடிப்படை அலகுகளான கிராமங்களுக்கும் பணி புரிய தன்னார்வலர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ‘’காவிரி போற்றுதும்’’ தன்னார்வலர்கள் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்புக்காக கிராம மக்களுக்கும் விவசாயிகளுக்கும் நன்றிக்கடன் செலுத்தும் நிலையிலேயே இருக்கின்றனர்.

2. மரக்கன்றுகள் அனைத்தையும் விவசாயிகள் வளர்த்து விடுவார்களா? 

‘’காவிரி போற்றுதும்’’ ஒரு கிராமத்தில் மரக்கன்றுகளை வழங்கும் முன் அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் நேராகச் சென்று அவர்களை சந்திக்கிறது. அவர்கள் புரியும் விவசாயத் தொழிலுக்கான மரியாதையாக அதனை எண்ணுகிறோம். ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் குறைந்தபட்சம் 15 நிமிடம் உரையாடுகிறோம். விவசாயியின் தோட்டத்தின் பரப்பு எவ்வளவு, மரக்கன்றுகள் வளர போதுமான சூரிய வெளிச்சம் இருக்கிறதா, தண்ணீர் வசதி எப்படி உள்ளது, ஆடு மாடு தொந்தரவு இல்லாமல் இருக்குமா, வயல் வரப்புகளில் தேக்கு மரம் நட்டுக் கொள்கிறீர்களா எனக் கேட்கிறோம். அவர்களுடன் உரையாடுகிறோம். அவர்கள் மனம் திறந்து பேசுகிறார்கள். நமது உணர்வை அவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்கிறார்கள். நமக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். அவர்களிடம் ‘’தன்னார்வலர்களாகிய நாங்கள் தான் நன்றி தெரிவிக்கும் இடத்தில் இருக்கிறோம் ; மரக்கன்றுகளை விருட்சமாக்கும் மகத்தான பொறுப்பை நீங்களே ஏற்கிறீர்கள். விவசாயிகளே நன்றிக்குரியவர்கள் ‘’ என சொல்கிறோம். அந்த சந்திப்பின் போது பரஸ்பர நல்லெண்ணமும் பரஸ்பர புரிதலும் உருவாகிறது. இது ஒரு நல்ல தொடக்கமாக அமைகிறது. 

மரக்கன்றுகள் நடுவதற்கு முன்னர், இரண்டடிக்கு இரண்டடி குழி எடுக்கச் சொல்கிறோம். ஒரு மரக்கன்றுக்கும் இன்னொரு மரக்கன்றுக்கும் இடையே பத்து அடி தூரம் இடைவெளி விடச் சொல்கிறோம். மாட்டுச் சாணம் ஆட்டுச் சாணம் ஆகிய இயற்கை உரத்தை பாதி அளவும் குழி எடுத்த மண்ணில் பாதி அளவும் கலந்து அந்த குழியை நிரப்பி மூன்று நாள் வைத்திருக்கச் சொல்கிறோம். அதன் பின்னரே மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. அவர்கள் நடுகிறார்கள். 

மரக்கன்றுகள் நட்ட பின்னரும் தொடர்ந்து விவசாயிகளின் வயல்களில் கொல்லைகளில் கன்றுகள் எவ்வாறு வளர்ந்துள்ளன என நேரடியாகப் பார்வையிடுகிறோம். 

இத்தனை முயற்சி மேற்கொள்ளப்படுவதால் மரக்கன்றுகள் வளரும் சாத்தியக்கூறு மிக மிக அதிகமாகிறது. 

3. கிராம மக்களிடமிருந்து எவ்விதமான ஆதரவு பெறப்படுகிறது? 

‘’காவிரி போற்றுதும்’’ ஒரு கிராமத்தில் நடச் சாத்தியம் உள்ள அதிகபட்ச எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு விருட்சமாக்குவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பணியில் மிகப் பெரிய பகுதியை ஆற்றுவது அக்கிராமத்தின் விவசாயிகளே. அதுவே கிராமத்துக்குச் செய்யப்படும் பெரும் பணி. அதைத் தவிர வேறு செயல் அவர்களிடமிருந்து ‘’காவிரி போற்றுதும்’’ எதிர்பார்ப்பதில்லை ; அவர்கள் தங்கள் தோட்டங்களிலும் வயல்களிலும் நட்ட மரங்களிலிருந்து பயன் பெறுவார்கள் எனில் ‘’காவிரி போற்றுதும்’’ மிகவும் மகிழும். 

4. பொது இடங்களில் என்ன செயல் மேற்கொள்ளப்படுகிறது?

ஊரின் ஆலய வழிபாட்டுக்குப் பயன்படும் மலர்ச்செடிகளை வழங்க இயலுமா என்று அந்த ஊரின் பெண்கள் கேட்டுக் கொண்டனர். ஒவ்வொரு வீட்டின் வாசலில் வைத்துக் கொள்ளுமாறு ஆடு மாடு மேயாத - சிவன், முருகன், துர்க்கை பூசனைக்கு உகந்த - அரளி மலர்ச்செடிகளை வழங்கினோம். அவை நல்ல முறையில் வளர்ந்து வருகின்றன. சில மாதங்களில், அந்த ஊரின் வீதிகள் மலர்ச்சோலைகளாக இருக்கும். 

ஆல், அரசு, வன்னி, கொன்றை, இலுப்பை ஆகிய மரங்களை கிராமத்தில் வாய்ப்புள்ள இடங்களில் ‘’காவிரி போற்றுதும்’’ நடுகிறது. 

5. கிராமத்தில் எல்லாருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறதா?

கிராமத்தில் நிலம் உள்ளவர்கள் இருப்பார்கள். நிலம் இல்லாதவர்கள் இருப்பார்கள். நிலக்கிழார்கள் இருப்பார்கள். விவசாயத் தொழிலாளர்கள் இருப்பார்கள். மாடி வீட்டில் குடியிருப்பவர்கள் உண்டு. குடிசையில் வசிப்பவர்களும் உண்டு. இந்த பாகுபாடு ஏதும் இன்றியே ‘’காவிரி போற்றுதும்’’ கிராம மக்களை அணுகுகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் கேட்கும் எண்ணிக்கையில் மரக்கன்றுகளை வழங்குகிறது. 

6. ஒரு விவசாயி ஐந்நூறு மரக்கன்றுகள் கேட்டால் வழங்குவீர்களா?

வழங்குவோம். அதற்கு மேலும் தேவைப்பட்டாலும் வழங்குவோம். அதிகபட்ச எண்ணிக்கையில் மரக்கன்றுகளைப் பெற்றுக் கொண்டு வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் விவசாயி தன் குடும்பத்துக்கும், ஊருக்கும், சுற்றுச்சூழலுக்கும், நாட்டுக்கும் பெரும் நன்மை செய்பவர். அவருடைய நல்முயற்சிக்கு ‘’காவிரி போற்றுதும்’’ உறுதுணையாய் நிற்கும். 

7. கிராமத்தில் வேறு பணிகள் ஏதும் செய்ய முடியுமா?

‘’காவிரி போற்றுதும்’’ தன் செயல்முறை மூலம் ஒரு ஊரை இணைத்துள்ளது. அந்த ஊரின் ஒவ்வொரு குடும்பமும் ‘’காவிரி போற்றுதும்’’ உடன் நேரடித் தொடர்பில் உள்ளார்கள். அதன் மூலம் கிராமத்துக்கும் கிராம மக்களுக்கும் ஆக்கபூர்வமாக என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்ய முயலும்.