Sunday, 15 August 2021

கொடியேற்றம்


இரண்டு மாதங்களுக்கு முன்னால், மயிலாடுதுறைக்கு அருகில் இருந்த ஒரு கிராமத்தில் கோவிட் தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டேன். கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் நன்மைகளை எடுத்துக் கூறிய துண்டுப் பிரசுரங்களைத் தயாரித்து எடுத்துக் கொண்டேன். அந்த கிராமத்தில் எனது நண்பரின் நண்பர் ஒருவர் எனக்கு நல்ல பரிச்சயம் உள்ளவர். அவரைச் சந்தித்தேன். அவர் அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவரிடம் அழைத்துச் சென்று எனது நோக்கங்களை எடுத்துக் கூறினார். 

கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் ஒருமுறையாவது நேரில் சென்று தடுப்பூசியின் அவசியம் குறித்து எடுத்துச் சொல்வது என்பதும் எல்லா வீடுகளையும் தொடர்பு கொண்ட பின் மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் ஒரு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்வது என்பதும் திட்டங்கள். நண்பர், நான் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் மூவரும் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து தடுப்பூசியின் அவசியம் குறித்து எடுத்துச் சொன்னோம். 

ஊராட்சித் தலைவர் துண்டுப் பிரசுர வினியோகத்தைத் துவங்கும் முன், அந்த ஊரின் மாரியம்மன் கோவிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். பணி எண்ணியவை எண்ணியவாறு நடக்க அம்மனிடம் வேண்டிக் கொண்டார். நாங்களும் வேண்டிக் கொண்டோம். 

அந்த கிராமத்தினை முழுமையாக தடுப்பூசி இடப்பட்ட கிராமமாக ஆக்க வேண்டும் என்பது எனது விருப்பம். எனது விருப்பத்தினை மாவட்ட ஆட்சியருக்கு எழுதினேன். எல்லா வீடுகளும் தொடர்பு கொள்ளப்படுவதால் கிராமத்து மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் ; ஆகவே அந்த ஊருக்கு 2000 தடுப்பூசிகள் வழங்குமாறு கேட்டுக் கொண்டேன். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நான்கு முறை சென்று அந்த கிராமம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று கேட்டேன். சுகாதாரத்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு சொன்னார்கள். அவர்களை தினமும் ஒருமுறை என இரண்டு வாரத்துக்கு சந்தித்தேன். 

பின்னர் அந்த கிராமத்தில் சுகாதாரத் துறை ஒரு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்தது. அதில் 330 டோஸ்கள் மட்டுமே வழங்கப்பட்டன. அது நான்கு மணி நேரத்தில் நிறைவு பெற்றது. அடுத்த நாளில் 40 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அவர்களை ஒரு வேன் மூலம் அழைத்து வந்து மீண்டும் ஊரில் கொண்டு போய் விட்டேன். 370 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் ஏற்பட்ட ஆர்வத்திலும் விழிப்புணர்விலும் மேலும் 100 - 120 பேர் மயிலாடுதுறைக்கு வந்து அடுத்த சில நாட்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

அந்த கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் வீட்டின் முன்னால் வைத்து பராமரிக்கக்கூடிய மலர்ச்செடியான ‘’அலரி’’யை 500 கன்றுகள் வழங்கினேன். ‘’அலரி’’யை ஆடு மாடு மேயாது என்பதால் வளர்ப்பதும் பராமரிப்பதும் எளிது. இந்த விபரத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன். 

2000 பேர் வரை முயற்சி செய்து 500 வரை மட்டுமே இலக்கு எட்டப்பட்டுள்ளதே ; இந்த கிராமத்துக்கு கூடுதல் கவனம் கொடுத்து சற்று அதிகமான டோஸ்கள் ஒதுக்கப்பட்டால் முழுமையை எட்டி விடலாமே என்ற எண்ணமும் விருப்பமும் எனக்கு. இருப்பினும் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வது தான் விவேகம் என்ற நிலை. அமைதி காத்தேன். அந்த கிராமத்தில் வேறு சில பணிகளில் உதவுமாறு ஆலோசனை சொல்லுமாறு உடன் இருக்குமாறு அந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களும் நண்பர்களும் கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறே செய்தேன். 

சில நாட்களில் மேலும் ஒரு முகாம் ஏற்பாடானது. அது மாற்றுத் திறனாளிகளுக்கானது. அதில் அந்த கிராமத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் சில நாட்களில் அந்த கிராமத்துக்கு உட்பட்ட குக்கிராமம் ஒன்றில் முகாம் ஏற்பாடானது. அதில் 200 பேர் வரை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மெல்ல மெல்ல கிட்டத்தட்ட ஊரில் பாதிபேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

நான் மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது அங்கு செல்வேன். அப்போது என்னைப் பார்ப்பவர்கள் தடுப்பூசி எங்கே போடப்படுகிறது என்ற விபரம் கேட்பார்கள். எனக்குத் தெரிந்த விபரத்தை கூறுவேன். அந்த கிராம மக்கள் பலர் என்னை ஒரு சர்க்கார் ஆசாமி என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

நேற்று மாலை 5 மணி அளவில் மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கும் கிராமம் ஒன்றிலிருந்து இளைஞர்கள் அழைத்து இன்று ஏற்பாடாகி உள்ள சுதந்திர தின விழாவில் நான் உரையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். காலை 8 மணிக்கு விழா என்று சொன்னார்கள். நான் சரி என ஒத்துக் கொண்டேன். 

இரவு 10 மணிக்கு தடுப்பூசிக்காக பணி புரிந்த கிராமத்திலிருந்து அந்த ஊரின் ஊராட்சித் தலைவர் பேசினார். இந்த நேரத்தில் அழைக்கிறாரே என்ன விஷயமாயிருக்கும் என எண்ணியவாறு அலைபேசியை எடுத்தேன். 

அந்த கிராமம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் தடுப்பூசி விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி செலுத்துக் கொள்வதில் முதன்மை பெற்றுள்ளதாகவும் அதனால் மாவட்ட ஆட்சியரின் பரிசுக்குத் தகுதி பெற்றுள்ளதாகவும் இன்று நடைபெறும் விழாவில் பரிசளிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் சற்று முன் அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்கள் என்று கூறினார். மிகுந்த நெகிழ்வுடன் நன்றி தெரிவித்தார். தடுப்பூசி விழிப்புணர்வு செயல்பாடுகளுக்காக ராஷ்ட்ரபதி அளிக்கும் விருதுக்கும் அந்த கிராமம் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறினார். மிகுந்த நெகிழ்வுடன் என்னிடம் நன்றியைத் தெரிவித்தார். 

இந்த மாத இறுதிக்குள் அந்த கிராமம் முழுமையையும் தடுப்பூசி இடப்பட்ட கிராமமாகச் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 
விழாவுக்கு நான் வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். இன்னொரு கிராமத்தில் சுதந்திர தின உரை ஆற்ற இருப்பதைத் தெரிவித்தேன். இன்று மாலை கிராமத்தில் நேரில் வந்து சந்திப்பதாகக் கூறினேன். 

இன்று காலை அந்த இன்னொரு கிராமத்துக்கு உரை ஆற்றச் சென்றேன். காலை 8 மணிக்கு அங்கே சென்று விட்டேன். அங்கே சென்றதும் அங்கே உள்ள மக்களும் நண்பர்களும் இளைஞர்களும் தேசியக் கொடியை நான் ஏற்ற வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். 

பகவான் புத்தரின் அறவாழி பொறிக்கப்பட்ட மூவர்ணக் கொடி எத்தனையோ தியாகிகளின் குருதியாலும் வியர்வையாலும் இன்று விண்ணில் பறக்கிறது. தாயின் மணிக்கொடி என்றான் பாரதி. தாயின் மணிக்கொடி பாரீர் என்றான் பாரதி. 

கொடியேற்றி ஒரு சிற்றுரை ஆற்றினேன். 

’’நாம் நம்மைப் புரிந்து கொள்ள தமிழ்நாட்டின் வரலாற்றை பிரிட்டிஷ் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட கொடும் பஞ்சங்களிலிருந்து ஆரம்பிப்பதே சரியான துவக்கமாக இருக்கும். ஈவிரக்கமற்ற பிரிட்டிஷ் அரசாங்கம் செங்கல்பட்டு , வடார்க்காடு, தென்னாற்காடு பகுதிகளில் மக்கள் லட்சக்கணக்கில் உணவின்றி செத்துக் கொண்டிருந்த போது சென்னைத் துறைமுகத்திலிருந்தே உணவு தானியங்களை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் அந்த பஞ்சத்தில் மடிந்தனர். பல குடும்பங்களின் பல கிராமங்களின் வாழ்க்கை அழிந்து போனது. இதைப் போல பல பஞ்சங்கள் இந்தியாவெங்கும் பிரிட்டிஷ் ஆட்சியில் அவ்வப்போது உருவாயின. இந்தியாவின் ஆன்மீக இயக்கங்கள் அதன் பின் தோன்றி பசியால் வாடும் மக்களுக்கு உணவளித்தன. பஞ்சத்தை எதிர்கொண்டதிலிருந்து சராசரி தமிழ் அகம் அரசாங்கத்தை அஞ்சத் துவங்கியது. அதன் மற்றொரு பக்கமாக தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் மக்களை துச்சமாக நடத்துவதையும் அச்சுறுத்துவதையும் தம் இயல்பாகக் கொண்டுள்ளனர். அரசாங்கத்தின் உறுப்பாக இருக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களின் சேவகர்கள். இந்திய சுதந்திரம் அதனை சாத்தியமாக்கியிருக்கிறது. இந்நிலையை உருவாக்க எத்தனையோ தியாகிகள் தங்கள் உதிரம் சிந்தி உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். நாம் அதனை என்றும் நம் நினைவில் இருத்த வேண்டும்.  இந்தியாவில் கிராமமே பொருளியல் - சமூக நுண் அலகு. கிராம மக்களின் விழிப்புணர்வும் ஒற்றுமையும் தன்னிறைவுமே நாம் சென்றடைய வேண்டிய இலக்கு. நாம் அதனை சாத்தியமாக்க வேண்டும். 

‘’யாதும் ஊரே; யாவரும் கேளிர்’’ என்பது தமிழ் மரபு. நான் உங்கள் ஊரைச் சேர்ந்தவன் அல்ல. எனினும் உங்கள் அன்பால் என்னை உங்களில் ஒருவனாக உணரச் செய்துள்ளீர்கள். உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். உங்கள் அன்புக்கு நான் தகுதியுடையவனா என்பது எனக்குத் தெரியவில்லை. தகுதியுடையவனாக இருக்க முயற்சி செய்கிறேன். ஜெய்ஹிந்த்’’ என்று உரையாற்றினேன். 

நிகழ்வில் 30 பேர் பங்கெடுத்தனர். 

 

Saturday, 14 August 2021

75 நாட்கள் / 75 நிமிடங்கள்


இந்திய சுதந்திரத்தின் பவள விழாவைக் கொண்டாடும் விதமாக ஒரு தன்னார்வ வாசிப்பு நிகழ்வை உருவாக்கியிருக்கிறேன். அதில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக் கொள்ள உள்ளேன். அதற்கான விதிமுறைகளையும் உருவாக்கியுள்ளேன். 

1. இந்நிகழ்வு 15.08.2021 தொடங்கி 31.10.2021 வரை நடைபெறும். இந்திய சுதந்திர தினம் தொடங்கி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான தேசிய ஒருமைப்பாட்டு தினம் வரை. 78 நாட்கள். 

2. இந்திய சுதந்திரத்தின் பவள விழா ஆண்டைக் குறிக்கும் விதத்தில் ஒவ்வொரு நாளும் 75 நிமிடங்கள் புத்தக வாசிப்பை மேற்கொள்ள வேண்டும். 

3. அந்த 75 நிமிடங்கள் ஒரே அமர்வாக இருக்க வேண்டும்.

4. அதன் பின்னர் ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்களும் வாசிக்கலாம். அதில் பகுதி அமர்வுகள் இருக்கலாம்.  ( உதாரணம் ; ஒருவர் ஒருநாள் காலை 6 மணிக்கு வாசிக்கத் துவங்குகிறார் எனில் காலை 7.15 வரை தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும். அதன் பின்னர் மாலை 6.30 க்கு வாசிக்கிறார் எனில் மாலை 7 மணி வரை அரைமணி நேரம் ஒரு அமர்வாக வாசித்து விட்டு பின்னர் 7.30 - 8 அடுத்த அமர்வாக வாசிக்கலாம். )

5. 75 நிமிட வாசிப்பு 78 நாட்களில் ஒருநாள் கூட விடுபடக் கூடாது. இந்த விதிமுறை நிகழ்வில் நமது தன்னார்வத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக. 

6. அமர்வின் துவக்கங்களும் அமர்வின் வாசிப்பு நேரமும் வாசிக்கும் புத்தகமும் ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்பட வேண்டும். நிகழ்வின் இறுதியில் அது ஓர் அட்டவணையாக்கப்பட வேண்டும். 

7. நூல் வாசிப்பு மட்டுமே வாசிப்பாக கருதப்படும். கிண்டிலில் நூல் வாசிக்கலாம்.

இந்த விதிமுறைகளின் படி, ஆர்வமுடையவர்கள் சுயமாக இந்த நிகழ்வில் பங்கெடுத்துக் கொள்ளலாம்!



இந்தியா : ஓர் அனுபவம்

2016ம் ஆண்டு ஒரு மோட்டார்சைக்கிளில் இந்தியாவை சுற்றி வந்தேன். அந்த 22 நாட்கள் எனக்கு பல புரிதல்களை அளித்தன. என் சிந்தனையில் என் செயல்முறையில் தாக்கங்களை உருவாக்கின. தேசம் என நான் உணர்வது லட்சோப லட்சம் எளிய மக்களையே. அந்த எளிய மக்களுக்கு லௌகிகத்தின் குறைந்தபட்ச வசதிகளைக் கொண்டு சேர்த்தால் அவர்கள் லௌகிகத்துக்கும் அப்பால் எண்ணற்ற செயல்களைச் செய்து முடிப்பார்கள். இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கிராமங்கள் இந்திய வரலாற்றிலும் இந்தியப் பண்பாட்டிலும் முக்கியமானதாக இருக்கின்றன. கல்வி, விவசாயம், தொழில்நுட்பம் ஆகியவை கிராமங்களில் மிகச் சிறப்பாக இருந்திருக்கின்றன. விவசாயம், வானியல், காலநிலை, உலோகங்கள் ஆகிய துறைகளில் இந்தியாவின் பாரம்பர்யமான அறிவு என்பது இன்றளவிலும் மிகப் பெரியது. 

இரக்கமற்ற சுயநலமே உருவெடுத்த பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவைக் கொடும் பஞ்சங்களில் தள்ளி இந்திய சமூகத்தின் உளவியலில் ஆழமான அச்சத்தையும் அவநம்பிக்கையையும் உருவாக்கியது. இந்திய சுதந்திர இயக்கம் அந்த  அச்சத்தை நீக்கி மக்களை ஒருங்கிணைத்தது. 

லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், விபின் சந்திர பால் ஆகிய தலைவர்கள் இந்திய சுதந்திரம் என்பது சாத்தியமான ஒன்றே என்ற மனப்பதிவை இந்திய சமூகத்தில் உருவாக்கினர். மகாத்மா காந்தி இந்திய சுதந்திர இயக்கத்தில் சாமானியர்களை அதிக அளவில் பங்கெடுக்கச் செய்து பெரும் மக்கள் இயக்கமாக்கி இந்திய சுதந்திரத்தை சாத்தியமாக்கினார். இந்தியாவின் சுதந்திரத்துடன் சுதேசி கல்வி, மனித ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல், கதர் பயன்பாட்டை அதிகரித்தல், இயற்கையைச் சுரண்டாமல் இருத்தல் ஆகிய விழுமியங்களை இணைத்தே முன்னெடுத்தார் மகாத்மா. இன்றும் அதன் தேவை இருக்கிறது. இந்தியாவுக்கு மட்டுமல்ல ; ஒட்டு மொத்த உலகுக்கும். 




Thursday, 12 August 2021

பொன்னும் பவளமும்

இந்திய சுதந்திரத்தின் பொன்விழா கொண்டாடப்பட்ட போது நான் 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எங்கள் ஊரில், பள்ளிகளின் ‘’வினாடி - வினா அணி’’ களில் எங்கள் பள்ளியின் அணி வலுவானது. எங்கள் பள்ளி சார்பாக நானும் திரு. குமரேசன் என்பவரும் கலந்து கொள்வோம். இருவருமே 11ம் வகுப்பு படித்தோம். பொன்விழா கொண்டாட்டத்துக்கான போட்டிகள் அந்த ஆண்டு அதிக அளவில் நடைபெற்றன. எங்கள் ஊரில் நடந்த அனைத்து போட்டிகளிலும் எங்கள் அணியே முதலிடம் பெறும்.  

எங்கள் பள்ளி மேனிலைப் பள்ளி. அதில் 6,7,8 வகுப்புகள் ஒரு குழுவாகவும் 9,10 வகுப்புகள் ஒரு குழுவாகவும் 11,12 வகுப்புகள் ஒரு குழுவாகவும் இருக்கும். 11,12ம் வகுப்பு மாணவர்களிலிருந்து ஒரு ‘’வினாடி - வினா அணி’’யை உருவாக்க எழுத்துத் தேர்வு எங்கள் பள்ளியில் நடந்தது. மொத்தம் 25 கேள்விகள். நான் 18 கேள்விகளுக்கு சரியான பதிலெழுதி முதலிடம் பெற்றேன். திரு. குமரேசன் 16 கேள்விகளுக்கு சரியான பதிலெழுதி இரண்டாம் இடம் பெற்றார். நாங்கள் இருவரும் 12ம் வகுப்பு மாணவர்களை மதிப்பெண்களில் தாண்டியதால் +1, +2 ஆகிய இரு வருடமும் ஊரில் நடந்த எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டோம். கலந்து கொண்ட எல்லா போட்டிகளிலும் நாங்களே முதலிடத்தில் வெற்றி பெற்றோம். பத்து நாட்களுக்கு ஒருமுறையாவது பள்ளியின் காலை வழிபாடு கூட்டத்தில் போட்டிகளில் பெற்ற வெற்றி அறிவிக்கப்படும். அப்போது எங்கள் இருவரின் பெயரும் சொல்லப்படும். 

சுதந்திரத்தின் பொன்விழாவை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் மாநில அளவிலான வினாடி வினா போட்டிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு அணி தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டு மாநில அளவில் வினாடி வினா நடத்தப்பட்டது. அப்போதைய நாகப்பட்டினம் மாவட்டம் சார்பாக எங்கள் அணி தேர்வாகியது. மாவட்டம் முழுதிலும் இருந்து வந்திருந்த அணிகளுக்கு இடையே நடந்த போட்டி எழுத்துத் தேர்வு - வினாடி வினா என இரு கட்டமாக நடத்தப்பட்டது. அதில் நாங்கள் முதலிடம் பெற்றது எங்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது. மாவட்டத்தின் பிரதிநிதிகளாக சென்னைக்குச் செல்கிறோம் என்று எண்ணும் போதே சந்தோஷம் இருந்தது.  மாநில அளவில் நடந்த போட்டியில் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம். எனினும் நாங்கள் மாநில அளவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டோம் என்ற செய்தியை பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்தில் அறிவித்தார்கள். 

அந்நிகழ்வுக்குப் பின்னர், திருச்சியில் சங்கம் ஹோட்டலில் மாநில அளவிலான ஒரு வினாடி - வினா நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிப்பு பள்ளிக்கு வந்தது. பெரிய பரிசுத் தொகை. நிகழ்ச்சி 12 பகுதிகளாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சில நாட்களுக்கு முன்னால் நடந்த மாநில அளவிலான போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்ததால் இந்த போட்டியில் பள்ளி சார்பில் கலந்து கொள்ளக் கூடியவர்களைத் தேர்ந்தெடுக்க மீண்டும் தேர்வு நடத்தப்படும் என பள்ளியில் அறிவித்தனர். மீண்டும் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. 25 கேள்விகள். நான் முன்னர் நடந்தது போல் 18 மதிப்பெண் பெற்று முதலிடம். திரு. குமரேசன் 16 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம். மீண்டும் எங்கள் அணியே தேர்வானது. 

திருச்சியில் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து 120க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. முதல் கட்டமாக எழுத்துத் தேர்வு. அதில் 20 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் நாங்கள் தேர்வானோம். பின்னர் வினாடி - வினா போட்டி. அதில் காலிறுதி சுற்று வரை சென்றோம். இரண்டு வார பகுதியாக அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்றாலும் அது நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. 

இந்திய சுதந்திரத்தின் பொன்விழாவை ஒட்டி நடந்த வினாடி வினா நிகழ்ச்சிகள் என்பதால் இந்தியாவின் வரலாறு, புவியியல், வேளாண்மை, அரசியல் சாசனம், பலதுறைகளில் சாதனை படைத்த இந்தியர்கள் என பல விஷயங்கள் குறித்து பயில அந்நிகழ்ச்சிகள் உதவின. 

இப்போது இந்திய சுதந்திரத்தின் பவள விழாக் கொண்டாட்டங்கள் துவங்குகின்றன. பொன்விழாக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்தது போல பவள விழாவிலும் ஏதேனும் ஒரு விதத்தில் பங்கெடுக்க விரும்பினேன். மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் 75 லட்சம் இந்தியர்கள் தேசிய கீதம் பாடி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் நிகழ்வுக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். அதில் 75 பேரை பங்கெடுக்கச் செய்தேன். 

Wednesday, 11 August 2021

பிரபு நண்பர்களின் 12 பிரச்சனைகள் (நகைச்சுவைக் கட்டுரை)

நகைச்சுவைக் கட்டுரை:

1. பிரபு நண்பர்கள் என்பது பொதுவான வார்த்தை. பிரபு நண்பர்களுக்குள் ஒரு பொதுத்தன்மையை அவ்வளவு எளிதில் கண்டடைந்து விட முடியாது.  கல்லூரியில் சேர இருப்பவரும் பிரபுவின் நண்பர். ரிடையர் ஆகி 25 ஆண்டுகளாக பென்ஷன் வாங்கிக் கொண்டிருப்பவரும் பிரபுவின் நண்பர். இன்னும் சொல் படியாத மழலைகள் கூட பிரபுவுக்கு நண்பர்கள். 

1 (அ) இவ்வாறு பல வகைப்பாடுகளுக்குள் பிரபுவின் நண்பர்கள் இருந்தாலும் நண்பர்களின் எண்ணிக்கை கணிசமானதாக இல்லை. அதற்கான காரணத்தை பிரபுவும் அவரது நண்பர்களும் பல ஆண்டுகளாக ஆராய்கிறார்கள். இன்னின்ன காரணம் என்பது நண்பர்களுக்குத் தெரிகிறது. ஆனால் பிரபுவுக்கு இன்னும் பிடிபடவில்லை என்பதால் நண்பர்கள் அமைதி காக்கின்றனர். 

2. பிரபுவின் நண்பர்களாயிருப்பவர்கள் காலையில் நெடுநேரம் தூங்குபவர்களாக இருக்கக் கூடாது. ‘’ என்னப்பா இது, காலைல 8 மணி வரைக்கும் தூங்கிக் கிட்டு இருக்க. உனக்கு டிஃபன் செஞ்சு கொடுத்தப்பறம் வீட்டுல லேடிஸ்க்கு எவ்வளவு வேலை இருக்கும் தெரியுமா? பாத்திரம் தேய்க்கணும், துணி துவைக்கணும், வீடு துடைக்கணும். அடுத்த வேலை சாப்பாடு தயார் செய்யணும். கொஞ்சம் விஷயம் புரிஞ்சு நடந்துக்கப்பா. இந்த பழக்கத்தால எவ்வளவு கஷ்டம் பாரு.’’ பிரபுவின் கரிசனம் நியாயமானது என்பதை நண்பர்களும் புரிந்து கொள்கிறார்கள். இருப்பினும் அதனைத் தனிமையில் சொல்லாமல் சம்பந்தப்பட்ட  (அதாவது பாதிக்கப்பட்ட)  நபர்களின் முன்னிலையிலேயே ஏன் பிரபு சொல்லி விடுகிறார் என அவர்களுக்குப் புரிவதில்லை. 

3. பிரபுவுடைய ஃபோன் பெரும்பாலும் சுவிட்ச் ஆஃப் ஆகியிருக்கும். சமீபத்தில் பிரபு தன் நண்பர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். அதாவது, ‘’நீங்கள் அழைக்கும் போது என் அலைபேசி சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தால் எனக்கு ஒரு எஸ். எம். எஸ் அனுப்புங்கள். நான் ஆன் செய்யும் போது பார்த்து விட்டு அழைக்கிறேன்’’ என. அதன் பின், எப்போதாவது வரும் ஓரிரு அழைப்புகளும் நின்று விட்டன. 

இருந்தாலும் நண்பர்கள் அனைவரும் பிரபு அழைக்கும் போது ஃபோனை எடுக்க வேண்டும். அலைபேசியில் அவரே அழைத்தாலும் ‘’பிரபு பேசறன்’’ என ஆரம்பிப்பார். பிரபு இன்னும் டெலிஃபோன் மனநிலையிலிருந்து வெளிவரவில்லை என்பது அந்த துவக்கத்துக்கான காரணம். ஒரு நண்பன் கேட்டான் : ‘’அண்ணன்! உங்க ஃபோன்ல இருந்து நீங்க தான் அண்ணன் பேசுவீங்க. அப்புறம் ஏன் ஒவ்வொரு தடவையும் இந்த ‘பிரபு பேசறன்’’?’’ . பிரபு சில கணங்கள் அமைதிக்குப் பின் ‘’ என் ஃபோன்ல இருந்து இன்னொருத்தர் பேசவும் சாத்தியக்கூறு இருக்குல்ல’’ ‘’இருக்கு ஆனா அதுக்கான நிகழ்தகவு ரொம்ப குறைவு’’ இந்த உரையாடலைக் கேட்டவர்கள் இது கணிதம் தொடர்பானது என்றே எண்ணினார்கள். 

4. ஒரு நண்பன் போட்டித் தேர்வுக்கு தயார் செய்ய பிரபுவின் வீட்டுக்கு வந்தார். அவரது தயாரிப்பில் ஒருநாள் தலையிடாமல் இருந்தார் பிரபு. இரண்டாம் நாள் காலையில் ‘’உன் கொஸ்டின் பேங்க்கையும் ஒர்க்கிங் ஷீட்டையும் கொண்டு வா’’ என ஆணையிட்டார். இருபத்து நாலே கால் பெருக்கல் 19 என கேள்வி. நண்பர் அவரறிந்த முறைப்படி 24ஐயும் 19ஐயும் பெருக்கி பின்னர் கால் பாகத்தையும் 19ஐயும் பெருக்கிக் கூட்டிக் கொண்டிருந்தார். ‘’என்னப்பா பண்ற. இப்படி கணக்கு போட்டா எப்படி பாஸ் ஆகிறது?  இருபத்து நாலே காலோட இருபதைப் பெருக்கு. 485. அதுல இருந்து 24 1/4 கழி. 460.75ன்னு ஆன்ஸர் ஆப்ஷன் சி யா இருக்கு பாரு. அத டிக் பண்ணு.’’ அன்று மதியமே நான்கு நாட்கள் தங்கி பரீட்சைக்கு தயார் செய்யலாம் என எண்ணிய நண்பர் பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் பிடித்தார். 

5. பிரபுவுக்கு கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கும் பழக்கம் கிடையாது. கடைகள் என்பவை பொருட்கள் இருக்கும் இடம் என்றே புரிந்து கொண்டிருக்கிறார் ; அங்கே விற்பனையும் நடக்கும் என்ற புரிதல் அவருக்கு இன்னும் ஏற்படவில்லை. கடைகளுக்கோ வணிக அங்காடிகளுக்கோ பிரபுவை உடன் அழைத்துச் சென்றால் சேமியா பாக்கெட், ஷேவிங் லோஷன், சொட்டு நீலம் ஆகியவற்றைக் கூட பெருவியப்பாக நோக்குவார். ஒவ்வொரு முறை அழைத்துச் செல்லும் போதும் ஒரே கதையைச் சொல்வார். சாக்ரடீஸ் கதை. சாக்ரடீஸ் தினமும் வணிக அங்காடிக்கு செல்வாராம். ஆனால் எதுவும் வாங்க மாட்டார். அங்காடிக்காரர் எதுவும் வாங்காமல் தினமும் என்ன பார்க்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். எத்தனை பொருட்கள் இல்லாமல் என்னால் நிம்மதியாக இருக்க முடிகிறது  என்பதை இங்கே வரும் போது உணர்கிறேன் என்பாராம். 

5 (அ). அங்காடிகளில் ஆர்வம் இல்லாத பிரபுவுக்கு கட்டுமானம் அவரது தொழில் என்பதால் ஹார்டுவேர் கடைகளில் பேரார்வம் உண்டு. நண்பர்களை வெளியூருக்கு ஆர்வத்துடன் அழைத்துச் செல்வார். டி. எம். டி கம்பி லோடு செய்ய, டைல்ஸ் பெட்டிகளை வாங்க, பிளம்பிங் சாமான் வாங்க, எலெக்ட்ரிக் வயர் வாங்க, பெயிண்ட் வாங்க என அங்கே கூட்டிச் சென்று விடுவார். அவர்களை அங்கே உட்கார வைத்து விட்டு பிரபு டாடா ஏஸோ மினி லாரியோ பிடிக்கச் சென்று விடுவார். வண்டி வந்ததும் அவை லோடு ஆகும். லோடு ஆன வண்டியிலேயே நண்பர்களை டிரைவருக்குப் பக்கத்தில் அமர வைத்து சைட்டில் சென்று காத்திருங்கள்; நான் வந்ததும் அன்லோடு செய்து விடலாம் என்பார். 

நண்பர்கள் அசௌகர்யமாக உணர்ந்தாலோ அதை வெளிப்படுத்தினாலோ ‘’ இந்த மெட்டீரியல் போய் சேந்தா தான் இன்னும் ஒரு மாசத்துக்கு தினசரி 15 லேபருக்கு வேலை இருக்கும். அவங்க ஒவ்வொருத்தருக்கும் எத்தனை விதமான செலவு இருக்கும் என யோசிச்சுப் பாருங்க. அத்தனை பொறுப்பான வேலையை உங்களுக்கு கொடுத்திருக்கன்’’ என்பார். பல தொழிலாளர்களின் வாழ்க்கை தங்கள் கையில் இருப்பதாய்  ந்ண்பர்களுக்குத் தோன்றும். பிறகு அவர்கள் யோசிப்பார்கள். ‘’சூப்பர் மார்க்கெட்டில் கடையில் பொருள் வாங்கினாலும் பல தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன் அடைவார்கள். ஏன் பிரபுக்கு அது தெரியவில்லை?’’ யோசிக்கத்தான் முடியும். பிரபுவிடம் கேட்க முடியாது. 

(5) (ஆ) இணைய வர்த்தகம் குறித்து பிரபுவுக்கு சமீபத்தில் தெரிய வந்திருக்கிறது. நண்பர் ஒருவர் வோல்டாஸ் கம்பெனியில் ஒரு குளிர்சாதனப் பெட்டியை வாங்கினார். பிரபு எந்நாளும் இல்லாத திருநாளாக என்ன விலை என்று கேட்டார். நண்பர் விலையைச் சொன்னார். நண்பரிடமிருந்து ஸ்மார்ட் ஃபோனை வாங்கி வோல்டாஸ் இணையதளத்துக்குச் சென்று அந்த மாடலின் விலையைச் சொன்னார். நண்பர் நாலாயிரம் ரூபாய் அதிகம் கொடுத்திருக்கிறார். நண்பருக்கு நாலாயிரம் அதிகம் கொடுத்திருக்கிறோமே என்பதை விட நுகர்வு குறித்து பிரபு சுட்டிக் காட்டி தெரிந்து கொள்ள வேண்டிய நிலை வந்து விட்டதே என்பது தான் கூடுதல் வருத்தம். 

(6) கட்டுமானம் பிரபுவுடைய தொழில் என்பதால் அவரால் பகல் முழுதும் எந்த சிரமமும் இல்லாமல் ஒரே இடத்தில் நிற்க முடியும். கட்டுமானம் நடைபெறும் இடத்தில் அவர் அமர மாட்டார். நண்பர்கள் கட்டுமானப் பணி நடக்கும் இடத்துக்கு வந்தால் அவர்களும் நிற்க வேண்டும். ஒருமணி நேரத்தில் அவர்களுக்கு தலை சுற்றி மயக்கம் வரும். ‘’நீங்க உங்க ஸ்டாமினாவை இன்னும் இம்ப்ரூவ் செய்யணும்’’ என்று சொல்லி அதற்கான டிப்ஸ்ஸை சொல்வார். 

பிரபுவுக்கு ஒரு பழக்கம் உண்டு. வீட்டை விட்டு வெளியே சென்று விட்டால் மீண்டும் வீடு திரும்பித்தான் உணவு அருந்துவார்; தேனீர் குடிப்பார். எனவே அவருடன் சென்றால் தேனீர்க்கடைகளில் தேனீரோ காஃபியோ கிடைக்காது. ‘’நம்ம தமிழ் சொஸைட்டிக்கு டீயும் காஃபியும் வந்து அறுபது வருஷம் இருக்குமா. ஊரே டீக்கடையில நிக்குது. எந்த வேலைன்னாலும் ஆரம்பிச்சா கண்டினியுட்டி மிஸ் ஆகாம செய்யணும். நம்ம ஆளுங்க எத்தனை டீ பிரேக் எடுத்துக்கறாங்க.’’ என்று அங்கலாய்ப்பார். உடன் செல்லும் நண்பர் டீ வாங்கிக் கொடுக்காததுடன் இப்படி லக்சர் வேறு அடிக்கிறானே என எண்ணுவார். 

(7) துணிக்கடைக்கு அழைத்துச் சென்றால் பிரபுவுக்கு ஐந்து நிமிடம் தான் கணக்கு. ஒரு நல்ல வசதியான இடத்தில் அமர்ந்து கடையை வேடிக்கை பார்ப்பார். ஏதேனும் தேர்ந்தெடுங்கள் என்று சொன்னால் வெண்ணிறத்தைத் தேர்ந்தெடுப்பார். நண்பர்கள் ’’உங்க கலர் சென்ஸை நீங்க வளத்துக்கணும் பிரபு ‘’ என்பார்கள். ‘’நீங்கள்லாம் அதிகபட்சம் 10 செட் டிரஸ் ஒரே தடவைல எடுத்திருப்பீங்களா. கடலூர் ஃபிளட் அப்ப நான் 1500 செட் டிரஸ் எடுத்தன். ஒரு கிராமத்துல இருந்த 500 குடும்பங்களுக்கு. 500 செட் ஜெண்ட்ஸூக்கு. 500 செட் லேடீஸுக்கு. 500 செட் குழந்தைகளுக்கு. அந்த கிராமமே சந்தோஷமாச்சு. மாவட்டம் முழுக்க இருக்கற ரெவின்யூ பியூபிள் நம்ம ஒர்க் பத்தி தான் பேசினாங்க’’பிரபு இப்படி பதில் சொல்லும் போது நண்பர்கள் என்ன செய்ய முடியும்?

(8) பிரபுவிடம் மூன்று கேட்டகிரி உண்டு. ‘’அறிமுகம் பரிச்சயம் நட்பு’’. நட்பு கேட்டகிரியில் இருப்பவர்கள் நாம் முந்தைய இரண்டில் இருந்தால் இன்னும் கொஞ்சம் லகுவாக இருக்கலாமோ என எண்ணுவார்கள். 

(9) பிரபுவிடம் எப்போதும் ஏதாவது பொது காரியம் குறித்து ஒரு திட்டம் இருக்கும். எவ்வளவு ‘’எகானமியாக’’ வடிவமைக்க முடியுமோ அவ்வளவு எகானமியாக அது இருக்கும். எந்த அளவுக்கு எகானமியாக இருக்கிறதோ அந்த அளவுக்கு கடுமையான உழைப்பைக் கோரும். பிரபு எகானமியாகத் திட்டமிடுகிறார் என சந்தோஷப்படுவதா அல்லது நம்மிடம் கடுமையான உழைப்பைக் கோரப் போகிறார் என வருத்தப்படுவதா என்று நண்பர்களுக்குத் தெரியாது. 

(10) பிரபுவுக்கு சில விஷயங்கள் சொன்னால்தான் புரியும். சொல்லாமலும் சில விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் ஏன் அதை முதலிலேயே சொல்லவில்லை என்று கேட்பார். 

(11) சமீபத்தில் வெளியான ‘’இசை மொழி’’ கட்டுரையை வாசித்த நண்பர்கள் நம்மைப் பற்றியும் ஏதாவது எழுதி விடுவாரோ என கலக்கமுற்றனர். என்னுடைய எந்த கட்டுரையிலும் நண்பர்களின் பெயரை வெளியிட்டதில்லை அல்லவா என பிரபு அவர்களை சமாதானப்படுத்தினார். 

(12) பிரபு தன்னை ஒரு ஜனநாயகவாதி என்று சொல்கிறார். நண்பர்கள் அனைவரிடமும் பல விஷயங்களை கவனத்துக்குக் கொண்டு வருவார். விவாதிப்பார். அவர்கள் கருத்துக்களைக் குறித்துக் கொள்வார். இருப்பினும் நண்பர்களுக்கு ஜனநாயகவாதி என சொல்லிக் கொள்ளும் எல்லாரையும் போல பிரபு தான் நினைப்பதையும் விரும்புவதையும் மட்டும் செய்கிறாரோ என்ற ஐயம் உண்டு. 

Tuesday, 10 August 2021

ஆற்றின் கரையில்


காவிரியின் கிளை ஆறு ஒன்றின் கரையில் மோட்டார்சைக்கிளில் பயணிக்கும் சூழல் வாய்த்தது. ஆற்றின் கரையை ஒட்டியே  கிட்டத்தட்ட நாற்பது கிலோ மீட்டருக்கு மேல் பயணம். சில கிராமங்களில், ஆற்றங்கரையில் நின்றிருக்கும் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான ஆலமரங்களும் அரசமரங்களும் தம் கருணை நிழல் கொற்றத்துடன் வீற்றிருந்தன. இந்த மரங்களை நட்டவர்கள் யார்? அந்த கிராமத்தில் யாரேனும் ஒரு சிலர் அறிந்திருக்கலாம் அல்லது அடுத்தடுத்த தலைமுறைகள் உருவாகி யாருக்கும் நினைவில்லாமல் கூட போயிருக்கக் கூடும். தான் நினைக்கப்பட வேண்டும் என்பதற்காக யாரும் மரம் நட்டிருக்க மாட்டார்கள். மரம் நடுபவனுக்கு அனுபவத்தில் ஒரு விஷயம் தெரிந்திருக்கும். நடுபவனை ஒரு நிமித்தமாகக் கொண்டு மரம் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. பறவைகளின் பிராணிகளின் வழியாகவும் பெருவிருட்சங்கள் மண்ணைத் தொட்டு வேர்பிடித்து வளர்கின்றன. கல்லினுள் தேரைக்கும் தர்மம் உணவூட்டும் என்பார்கள். 

ஒரு மரம் எத்தனையோ உயிர்களுக்கு காப்பாக இருக்கிறது. எறும்புகள், பூச்சிகள், பறவைகள், பிராணிகள் என பல ஜீவன்கள் ஒரு பெருமரத்தின் நிழலைச் சூழ்ந்து வாழ்கின்றன. மரம் நடுதல் ஒரு நற்செயல். உயிர்க்கோளத்தில் மனித இனம் சின்னஞ்சிறியது. மரங்களை நடுபவர்கள் மனிதப் பிரக்ஞைக்கும் அப்பால் இருக்கும் உயிர்ப்பிரக்ஞையின் நினைவின் அடுக்குகளில் சஞ்சரிக்கிறார்கள். 

ஒரு மரத்தை ஒரு தாவரத்தை ஒரு விலங்கை ஒரு பறவையை தெய்வரூபமாகக் காண்பது என்பது மானுடன் கொள்ளும் மகத்தான உணர்வு. அந்த உணர்வை உலகப் பண்பாட்டுக்கு அளித்தது நம் நாடு. 

‘’பூரண ஞானம் பொலிந்த நன்னாடு புத்தர்பிரான் அருள் பொங்கிய நாடு’’ என்றான் பாரதி. பிறப்பிலிருந்து இறப்பு வரை உடலின் உள்ளத்தின் வலியால் துயருரும் மானுடர்க்கு துயரம் நீங்கிய விடுதலையின் மார்க்கத்தைக் காட்டினார் பகவான் புத்தர். அவர் ஞானம் பெற்றது அரசமரத்தின் அடியில். 


நம் மரபு தென் திசை முதல்வன் சனகாதி முனிவர்களுக்கு பிரணவப் பொருள் உரைத்தது ஆலமரத்தின் அடியில் என்கிறது.


ஆலும் அரசும் நிறைந்திருப்பது கிராமத்துக்கு பெரும் நன்மைகளைக் கொண்டு வரும் என்ற நினைவு மனதில் எழுந்தபடியே இருந்தது. 

அந்த கிளை ஆறு பயணிக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் ஆற்றின் கரையில் 108 ஆல்- அரசு கன்றுகளை நட வேண்டும் என்ற விருப்பம் உண்டானது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நாம் அறியாத பெயர் கூட தெரியாத யாரோ ஒருவர் நட்டு பராமரித்த விருட்சத்தின் நிழலில் நாம் இளைப்பாறும் போது இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் இளைப்பாறப் போகும் ஒருவருக்கான பொறுப்பு நமக்கு இருக்கிறது. 

இது மழைக்காலத்தின் துவக்கம். வட கிழக்குப் பருவமழை அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கும். அந்த காலத்தை ஒட்டி மரங்கள் நடப்படுமாயின் அவை வேர் பிடித்து விடும். அக்டோபரிலிருந்து டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் நல்ல வளர்ச்சி பெறும். 

நண்பர்களிடம் பேச வேண்டும். 



எண்ணம்

உன்னை
ஒரு வண்ணமாக
இசையின் ஒரு துளியாக
சிறகடிப்பின் ஒலியுடன்
மேலெழுந்து கொண்டிருக்கும்
ஒரு பறவையாக
வனாந்தரத்தில்
சிகர உச்சியில்
நிறையும்
மௌனமாக
ஒரு ஒளிக்கீற்றாக
எண்ணிக்
கொள்கிறேன் 

Monday, 9 August 2021

பறவை

அன்றாடத்தின் பாடுகள்
அலைகள்
கடல் மணலைக் கரைப்பதாய்
கரைத்துக் கொண்டிருக்கின்றன
நீண்டிருக்கும் சாலையில்
நடந்து கொண்டிருக்கிறான்
தாகம் கொண்ட யாத்ரீகன்
மேகம் சூழ்ந்த வானம்
வெட்டவெளியாயிருக்கிறது
மேகம் நினைவில் அவ்வப்போது எழுகிறது
மெய் சிலிர்த்து
அகம் பொங்கி
ஒரு துளி கண்ணீர்
முடிவிலா வண்ணங்களின்
உலகின் மேல்
பறக்கத் தொடங்குகிறது
விடுதலையின்
பறவை

Saturday, 7 August 2021

ஊரும் தலைநகரும்


எங்கள் ஊர்க்காரர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு.  எங்கள் ஊருக்கு வடக்கே 34 கி.மீ தூரத்தில் ஆனைக்காரன் சத்திரம் என்ற ஊர் உள்ளது. பரவலாக அதனைக் கொள்ளிடம் என்று அழைப்பார்கள். கொள்ளிடம் ஆற்றின் கரையில் இருப்பதால் ஊரையே கொள்ளிடம் எனக் கூறி விட்டார்கள்.   ரயில் நிலையத்துக்கும் அதே பெயர். எங்கள் ஊர்க்காரர்கள் அதனை ஓர் எல்லையாகக் கருதுவார்கள். அந்த கொள்ளிடம் நதியைத் தாண்டிச் சென்று விட்டால் மனம் பரபரக்கும். சிதம்பரம் செல்வதென்றால் ஒரு கணக்கில் அதனை எங்கள் பிராந்தியமாக எடுத்துக் கொள்ளலாம். சேத்தியாத்தோப்பு பரவாயில்லை.  அதைத் தாண்டி விட்டால் மனம் நிலைகொள்ளாது. எப்போது ஊருக்குத் திரும்பலாம் என்று தோன்றி விடும். 

முக்கியக் காரணம் தண்ணீர். காவிரியும் அதன் கிளை ஆறுகளும் பாய்வதால் தண்ணீர் எப்போதும் மிதந்து கிடக்கும். மிகையான தண்ணீர் இயல்பாகவே ஒரு சோம்பலை உருவாக்கி விடும். குறைந்தபட்சமாக ஒரு வேலை செய்தால் கூட மனம் ஒரு நிறைவை உணர்ந்து விடும். ஒருவிதமான நிலப்பிரபுத்துவ மனநிலை. 

தண்ணீரை அளவாக செலவிடுதலை முக்கிய தினசரி நடவடிக்கையாக மேற்கொள்ளச் சொல்லும் சென்னை எங்கள் ஊர்க்காரர்களுக்கு பெரும் அசௌகர்யம். முக்கால் வாளியில் முழுக் குளியலை எப்படி முடிப்பது என்பது ஊர்வாசிகளுக்கு புரியாத புதிர். எங்கள் ஊர்க்காரர்களுக்கு எங்கள் ஊர் தண்ணீர் தான் ருசி. சென்னையில் ஒருநாள் வேலை என்றால் வாட்டர் பாட்டிலில் மூன்று லிட்டர் தண்ணீர் எடுத்துச் செல்பவர்கள் உண்டு. சென்னைக்கு அங்கே குடியிருக்கும் எங்கள் ஊர்க்காரர்களைப் பார்க்கத்தான் செல்வார்கள். அவர்கள் குடிக்கத் தண்ணீர் வேண்டுமா என்று கேட்டால் கையோடு கொண்டு வந்திருக்கிறோம் என்பார்கள். அவர்கள் அதில் கொஞ்சம் தண்ணீரை வாங்கிக் குடித்து விட்டு ‘’என்ன இருந்தாலும் நம்மூர் தண்ணி நம்மூர் தண்ணி தான். நீங்கல்லாம் கொடுத்து வச்சவங்க. நாங்க தான் இங்க கிடக்கோம்’’ என்பார்கள். சிலர் ‘’அதென்ன நீங்க மட்டும் அவ்வளவு விவரம்’’ எனக் கூறி கொண்டு போன தண்ணீரை அவர்கள் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொண்டு சென்னைத் தண்ணீரை வாட்டர் பாட்டிலில் ஊற்றிக் கொடுத்து விடுவார்கள். 

சென்னையில் மாம்பலம், கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் எங்கள் ஊர்க்காரர்கள் அதிகம். இப்போது சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. ‘’நம்ம வீராணம் தண்ணி தானே சிட்டிக்கு சப்ளை’’ என்பது ஊர்க்காரர்களின் எண்ணம். 

சென்னையில் ரயிலேறி விட்டால் எங்கள் ஊர்க்காரர்களின் கண்கள் தேடுவது ஒன்றைத்தான். ‘’கொள்ளிடம் தாண்டியாச்சா’’. 




தாண்டி விட்டால் ‘’அப்பாடா’’ என்று ஒரு ஆசுவாசம். நிம்மதி. 

Friday, 6 August 2021

இசை மொழி

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். தீவிரமான இசை ரசிகர். இரவு பத்து மணிக்குத் துவங்கி நள்ளிரவு ஒரு மணி வரை இசை கேட்பது அவரின் நாற்பதாண்டு கால பழக்கம். வானொலி, டேப் ரெகார்டர் தொடங்கி இப்போது தனது அலைபேசியில் இணையம் மூலம் பாட்டு கேட்பது வரை தனது ஒலி சாதனங்களையும் காலத்துக்குத் தகுந்தாற் போல் மாற்றியுள்ளார். 

பழைய தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர்களுக்கு ஊர்ப்பெருமை ஜாஸ்தி. பக்கத்து பக்கத்து ஊர்க்காரர்களே தத்தம் ஊர்ப்பெருமை பேசிக் கொள்வார்கள். இயக்குனர் கே. பி யின் திரைப்படம் ஒன்றில் ஒரு தஞ்சாவூர்காரரும் ஒரு திருவையாறுக்காரரும் ஊர்ப்பெருமை பேசுவார்கள். தஞ்சாவூர்க்காரர் சொல்வார் : ‘’நான் குடிச்ச தண்ணியே சங்கீதம்’’. திருவையாறுகாரர் சொல்வார் : ‘’நான் சுவாசிச்ச காத்தே சங்கீதம்’’. இரண்டு ஊருக்கும் இடையே 15 கி.மீ தான் தூரம். தமிழில் ஒரு பழமொழி உண்டு : ‘’கூடப் பிறந்தவனிடமே பிறந்த வீட்டுப் பெருமை பேசுவது’’ என்று.

காலையில் முதல் பாசஞ்சரைப் பிடித்து விழுப்புரம் போய் அங்கே வைகை எக்ஸ்பிரஸுக்கு மாறி மதியத்துக்குள் சென்னை சென்று அங்கே வேலைகளை முடித்து விட்டு இரவே ரயிலில் ஊர் திரும்பி விடுவது எங்கள் பகுதியினரின் பழக்கம். காலை டிபனும் சொந்த ஊரில். இரவு உணவு வீட்டில். இதற்கிடையே போவதும் வருவதுமாக 600 கி.மீ பயணம் நிகழ்ந்திருக்கும். இப்போது, சென்னை செல்லும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் காலை 5.45க்கு வருகிறது. அதைப் பிடித்தால் 11 மணிக்கு சென்னை செல்லலாம். மாலை 4 மணிக்கு அதே ரயில் ஏறினால் இரவு 9 மணிக்கு ஊருக்கு வந்து விடலாம். 

நண்பரிடம் சொன்னேன் : ‘’ நாம சென்னைக்கு தெற்க இருக்கோம். அதே போல சென்னைக்கு வடக்க இருக்கறவங்களும் சென்னையோட நெருக்கமான தொடர்புல இருப்பாங்க இல்லயா’’

நண்பருக்கு இசையில் இருக்கும் ஆர்வம் புவியியலில் இல்லை. எந்த பாவனையும் இல்லாமல் பார்த்தார். 

‘’நமக்கு டிரெயின் கனெக்டிவிட்டி இருக்கறாப் போல சென்னைக்கு வடக்க இருக்கற ஊர்களும் ரயிலால இணைக்கப்பட்டிருக்கும் இல்லயா. பாடகர் எஸ். பி. பி. க்கு சொந்த ஊர் நெல்லூர். மெட்ராஸ்ல இருந்து 200 கி.மீ’’

‘’எஸ். பி.பி ஆந்திராவா? அப்ப அவர் தாய்மொழி தெலுங்கா?’’

‘’ஆமாம். உங்களுக்குத் தெரியாதா?’’

‘’இல்லை. இப்போதான் கேள்விப்படறன்’’

‘’பாடகர் பி.சுசீலாவுக்கும் தாய்மொழி தெலுங்கு’’

நண்பர் அதிர்ச்சி அடைந்தார். 

‘’ஏ.எம். ராஜா தெரியும் இல்லையா. அவருக்கும் தெலுங்குதான் தாய்மொழி’’

நண்பருக்குப் பேரதிர்ச்சி. சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார். பின்னர் ஒரு பெயரை உச்சரித்தார். 

‘’பாடகர் பி. பி. ஸ்ரீநிவாஸ்?’’

’’ஆந்திராவுல காக்கிநாடான்னு ஒரு ஊர் இருக்குல்ல. அதான் அவரோட பிறந்த ஊர்.’’

எதுவும் பேசாமல் இரண்டு பேரும் இருந்தோம். தூரத்தில் கௌரவம் படத்திலிருந்து ‘’ அறிவைக் கொடுத்ததோ துரோணரின் கௌரவம்; அவர் மேல் தொடுத்ததோ அர்ஜூனன் கௌரவம்’’ என்ற பாடல் வரி கேட்டது. 

நண்பர் என்ன கேட்கப் போகிறார் என்று தெரிந்து விட்டது. 

‘’பிரபு! டி. எம். எஸ்?’’

‘’அவர் மதுரைக்காரர்’’

நண்பர் ஆசுவாசமடைந்தார். 

‘’ஆனா’’

‘’ஆனா என்ன?’’

‘’அவரோட தாய்மொழி சௌராஷ்ட்ரா’’

நண்பருக்கு சொல்லே எழவில்லை. 

‘’வேற யார் யாருக்கு தாய்மொழி வேற?’’

‘’ எஸ் .ஜானகிக்கு தெலுங்கு.  எம்.எஸ்.வி க்கு மலையாளம்’’  

நண்பர் அயர்ந்து விட்டார். அடுத்து அவர் கேட்ட கேள்வியில் நான் அயர்ந்து விட்டேன். 

‘’ஜேசுதாஸ்?’’

நான் பதிலைச் சொன்னேன். 

அப்போது பக்கத்து வீட்டிலிருந்து வானொலிப் பெட்டியில் ‘’சின்னக் கண்ணன் அழைக்கிறான்’’ என்ற பாடல் ஒலித்தது. 

‘’இத்தனை வருஷம் மியூசிக் கேக்கறன். நீங்க சொல்ற விஷயத்தை இப்பதான் முதல் தடவையா கேள்விப்படறன்’’

‘’இசைக்கு மொழி கிடையாது இல்லையா. அதனால நீங்க முழுசா அதுல மூழ்கிட்டீங்க.’’ 

‘’நீங்க சொல்ற விஷயங்களை தெரிஞ்சுகிட்ட பிறகு அந்த கலைஞர்களோட கலை மேல இன்னும் பெருசா மதிப்பு உருவாகுது. புதுசா ஒரு மொழிய கத்துகிட்டு  அந்த சமூகத்தோட ஆழ்மனசுல இடம் பிடிக்கறதுன்னா ரொம்ப பெரிய விஷயம்’’