Saturday, 12 February 2022

ஞான தீபம் (மறு பிரசுரம்)

நான் வாடிக்கையாகச் செல்லும் சலூனின் உரிமையாளர் எனது நண்பர். இளைஞர். சமூகப் பிரக்ஞை உள்ளவர். 

சென்ற ஆண்டில் நான் அங்கு சென்றிருந்த போது அவரிடம் ஒரு விஷயத்தைக் கூறினேன். 

‘’தம்பி! சலூன் -ல சின்னதா ஒரு புக் ஷெல்ஃப் வைங்க. இருபது முப்பது புத்தகம் வைக்கற மாதிரி. என்கிட்ட ஆயிரம் புக்ஸுக்கு மேல இருக்கு. அதுல இருந்து முப்பது புத்தகம் உங்களுக்கு கிஃப்ட்டா தர்ரேன். சலூனுக்கு வர்ரவங்க வெயிட் பண்ணிட்டு இருக்கும் போது வாசிக்கக் கொடுங்க. யூஸ் ஃபுல்லா இருக்கும். ‘’

‘’எங்க அண்ணன்! எல்லார் கையிலும் செல்ஃபோன் இருக்கு. எல்லாரும் செல்ஃபோனைத் தோண்டிட்டு இருக்காங்க’’

‘’உண்மை தான் தம்பி. மனுஷங்கள்ள பெரும்பாலானவங்க பழக்கத்துக்கு அடிமையா இருக்கறவங்க தான். ஆனா அவங்களுக்கும் எது சரி எது தப்புன்னு தெரியும். ஒரு சலூன்ல லைப்ரரி போல ஒரு சிஸ்டம் இருக்கறத அவங்க ரொம்ப வேல்யூ உள்ளதா நினைப்பாங்க’’

’’அண்ணன் கடையில சில இண்டீரியர் ஒர்க் பண்ணலாம்னு இருக்கன். அப்ப ஒரு புக் ஷெல்ஃப் அரேஞ்ச் பண்றேன். ‘’

சில மாதங்கள் சென்றன. அவர் சலூனில் ஒரு ஏ.சி.யைப் பொருத்தினார். சுழலும் நாற்காலிகளை புதிதாக வாங்கிப் போட்டார். எனினும் அவர் திட்டமிட்ட விதத்தில் தச்சுவேலை எதையும் செய்யவில்லை. தற்காலிகமாக அதனை தள்ளி வைத்தார். 

ஒருமுறை நான் சென்றிருந்த போது உற்சாகமாக வரவேற்றார். 

‘’அண்ணன்! விஷயம் கேள்விப்பட்டீங்களா!’’

‘’என்ன விஷயம் தம்பி?’’

‘’தூத்துக்குடி-ல ஒரு சலூன்ல லைப்ரரி மாதிரி நிறைய புக்ஸ் வச்சுருக்காங்க. முடி வெட்டிக்க வர்ரவங்க அந்த புக்ஸை எடுத்துப் படிக்கிறாங்க. பிரைம் மினிஸ்டர் ரேடியோவில பேசற ‘’மன் கி பாத்’’ நிகழ்ச்சில அந்த சலூன் கடைக்காரரோட பேசியிருக்கார் அண்ணன்’’

‘’அப்படியா! நல்ல விஷயம் தம்பி. நிறைய பேருக்கு இப்படி ஒரு நல்ல விஷயம் நடக்கறது போய் சேரும். இன்னும் பல பேரு கூட செஞ்சு பாப்பாங்க’’

அந்த உரையின் ஒரு பகுதியின் காணொளியை எனக்கு தன்னுடைய அலைபேசியில் காண்பித்தார். 

‘’அண்ணன்! நாம முன்னாடி பிளான் செஞ்சதைப் போல ஏதாவது செய்யணும் அண்ணன்.’’ சகோதரர் மிகவும் ஆர்வமாக இருந்தார். 

‘’நான் யோசிக்கிறேன் தம்பி’’

வீட்டுக்கு வந்து யோசித்தேன். நடந்த சம்பவங்கள் மனதில் முன்னும் பின்னுமாய் வந்து போயின. ஒரு விஷயம் குறித்து யோசிக்கையில் நான் அதனை மனதில் ஆழ விட்டு விடுவேன். நாம் எதிர்பார்க்காத கணம் ஒன்றில் ஒரு யோசனை அல்லது ஒரு எண்ணம் அல்லது ஒரு அவதானம் மேலெழுந்து வரும். அப்படி ஒரு யோசனை உண்டானது. 

மறுநாள் நான் சலூன்கடைக்காரரைச் சந்தித்தேன். 

‘’தம்பி! நீங்க சொன்ன விஷயத்தை யோசிச்சுப் பார்த்தேன். ஒரு ஐடியா தோணுச்சு.’’

‘’சொல்லுங்க அண்ணன்’’

‘’இப்ப நம்ம ஊர் மாவட்டத் தலைநகரா ஆகியிருக்கு. தமிழ்நாட்டோட சின்ன மாவட்டங்கள்ல ஒன்னு. இந்த மாவட்டம் முழுதும் எத்தனை சலூன் இருக்கும்?’’

அவர் யோசித்தார். 

‘’நம்ம மாவட்டத்துல மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம்னு நாலு தாலுக்கா இருக்கு. நாலு தாலுக்காவிலயும் மொத்தமா 250 கிராமங்கள் இருக்கு. சராசரியா மூணு கிராமத்துக்கு ஒரு சலூன்னு வச்சுகிட்டா கிராமங்கள்-ல 80-லிருந்து 100 சலூன் இருக்கும். பெரிய டவுன், சின்ன ஊர்னு சேர்த்தோம்னா மொத்தம் 400 சலூன் இருக்கும்’’

‘’கரெக்ட் தான் சார்! 400 - 500 சலூன் இருக்கும்’’

‘’நாம இந்த 400 சலூன்லயும் பத்து புக் தர்ரோம். ஒரே நாள்ல நம்ம மாவட்டம் முழுக்க இருக்கற சலூன்கள் சலூன் லைப்ரரியா ஆகுது.’’

‘’கொஞ்சம் பெரிய வேலையாச்சே சார்’’

‘’பெரிய வேலை தான். ஆனா முக்கியமான வேலை. நாம சேந்து செய்வோம். உங்களுக்கு என்ன சப்போர்ட் வேணுமோ அத நான் கொடுக்கறன். இதைப் பத்தி நீங்க யோசிங்க. உங்களுக்கு இது சம்பந்தமா மனசுல என்ன கேள்விகள் வருதோ அதுக்கு நான் பதில் சொல்றேன். நாம இந்த விஷயம் சம்பந்தமா சேர்ந்து யோசிப்போம். வேதத்தில ஒரு மந்திரம் இருக்கு.

‘ஒன்று கூடி சிந்தியுங்கள்
சேர்ந்து அமர்ந்து விவாதம் செய்யுங்கள்
உங்கள் மனம் ஒன்றாகட்டும்’ ‘’

அவர் யோசிக்கட்டும் என நான் வீட்டுக்கு வந்து விட்டேன். 

நானும் வீட்டுக்கு வந்து ஒவ்வொரு சலூன் நூலகத்திலும் இருக்க வேண்டிய பத்து நூல்கள் என்னவாக இருக்கலாம் என யோசித்தேன். அந்த பத்து நூல்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது. சுவாமி விவேகானந்தரின் நூல்களைத் தேர்ந்தெடுக்கலாம் என முடிவு செய்தேன். 




இந்தியாவில் பலருக்கு சுவாமி விவேகானந்தர் பெரும் உந்து சக்தியாக விளங்கியுள்ளார். சமூக சேவகர்கள், கல்வியாளர்கள், தொண்டு புரிபவர்கள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர்கள் என பலருக்கு சுவாமிஜியே சிந்தனையின் அடித்தளமாக இருந்துள்ளார். எனவே இந்த பத்து நூல்களும் சுவாமி விவேகானந்தரை அடிப்படையாய்க் கொண்டு இருப்பது உகந்ததாக இருக்கும் என்று எண்ணினேன். 




சுவாமி சித்பவானந்தர் தமிழ் அறிஞர். தமிழில் விவேகானந்த இலக்கியத்தில் முக்கியமான முன்னோடி. அவருடைய தமிழ்த் தொண்டு தமிழ்நாட்டுச் சூழலில் முழுதாக உணரப்படவில்லை என்ற மனக்குறை எனக்கு உண்டு. மொழி, சமயம், இலக்கியம், ஆன்மீகம், சமூகம் சார்ந்து பலநூல்களை இயற்றியவர். தமிழ்நாட்டில் பெரும் கல்வி மற்றும் சமூகப் பணியாற்றியவர். அவர் சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய நூல்களாக இந்த 10 நூல்களும் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதினேன். 

1. சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகாந்தரின் வாழ்க்கையை சுருக்கமாக அறிமுகம் செய்யும் நூல். 

2. ஸ்ரீவிவேகானந்தர் ஜீவிதம்

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை விரிவாக முன்வைக்கும் நூல். சுவாமிஜி குறித்து ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் குறித்து இந்தியாவின் ஆன்மீகப் பாரம்பர்யம் குறித்து சுவாமிஜி வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து சுவாமிஜி இளைஞர்களுக்கு விடுத்த அறைகூவல் குறித்து விரிவாக எழுதப்பட்ட நூல். 

3. சிகாகோ பிரசங்கங்கள்

சிகாகோ சர்வ சமய மாநாட்டில் சுவாமிஜி ஆற்றிய சரித்திர பிரசித்தி பெற்ற உரைகளின் தொகுப்பு இந்நூல்.

4. தமிழகத்தில் சுவாமி விவேகானந்தர்

சுவாமிஜி சிகாகோவில் உரையாற்றிய பின் இந்தியா திரும்புகையில் கப்பலில் இராமேஸ்வரம் பாம்பன் வந்தடைகிறார். அவர் பாம்பன், இராமேஸ்வரம், இராமநாதபுரம், மானாமதுரை, பரமக்குடி, மதுரை, கும்பகோணம் மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் உரையாற்றியுள்ளார். அந்த உரைகளின் தொகுப்பு இந்நூல். 

5. விவேகானந்த உபநிஷதம்

சுவாமிஜி அமெரிக்காவில் தன் மேலைச் சீடர்களுடன் ‘’ஆயிரம் தீவுச் சோலை’’ என்னும் இடத்தில் தங்கியிருந்து அவர்களுக்கு வேதாந்தத்தைப் போதித்தார். அந்த போதனைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. 

6. ஸ்ரீராமகிருஷ்ண சரிதம்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஓர் அவதார புருஷர். நமது நாடும் நமது பண்பாடும் அழியாமல் இருப்பதற்கான முக்கியமான காரணம் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும். அவரது வரலாற்றை எடுத்துரைக்கும் சிறுநூல். 

7. இராமாயணம்

சுவாமி சித்பவானந்தர் வால்மீகி இராமாயணத்தை ஒட்டி தமிழில் எழுதிய நூல். 

8. மகாபாரதம்

சுவாமி சித்பவானந்தர் வியாச பாரதத்தை ஒட்டி தமிழில் எழுதிய நூல். 

இந்த எட்டு நூல்களும் சுவாமி சித்பவானந்தர் இயற்றியவை. 

9. ஆத்ம போதம்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அத்வைதி. அத்வைதத்தின் ஆச்சார்யரான ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட நூல் ஆத்ம போதம். திரு. வி.எஸ். நரசிம்மன் என்பவர் சுலோகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். 

10. கந்தர் அனுபூதி

அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட ‘’கந்தர் அனுபூதி’’. 

இந்த பத்து நூல்களும் கொண்ட தொகுப்பு இந்தியா குறித்து இந்திய ஆன்மீகம் குறித்து இந்தியப் பண்பாடு குறித்து மிக நல்ல அறிமுகம் அளிக்கக் கூடியவை. 

அவற்றை இணையத்தில் rktapovanam(dot)org தளத்தில் ஆர்டர் செய்தேன். இரண்டு நாளில் கைக்கு வந்தது. நண்பரின் சலூனில் கொண்டு போய் வைத்தேன். 

‘’தம்பி! எந்த நல்ல விஷயத்தையும் உடனே செய்யணும். சுபஸ்ய சீக்கிரம்-னு சொல்லுவாங்க. இந்த புக்ஸ்ஸை சலூன்ல வைங்க. ஒரு வாரம் பத்து நாள் பாருங்க. ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு. கஸ்டமர் என்ன மாதிரி கேள்வி கேக்கறாங்க. எப்படி ரிஸீவ் பன்றாங்கன்னு அப்சர்வ் பண்ணுங்க. அடுத்து என்ன செய்யலாம்னு நாம அப்புறம் யோசிக்கலாம்’’

ஒரு வாரம் கழித்து நான் சலூனுக்குச் சென்றேன். 

‘’அண்ணன்! நல்ல ரெஸ்பான்ஸ் இருக்குன்னன். தினமும் அஞ்சு ஆறு பேர் புக் எடுத்து படிக்கிறாங்க. என்ன ஏதுன்னு விசாரிக்கறாங்க அண்ணன்’’ 

‘’தம்பி! சுவாமிஜி நம்ம நாட்டையே உருவாக்கினவர். மகாத்மா காந்தி, அரவிந்தர், திலகர், வல்லபாய் படேல், நேரு, அம்பேத்கர், ஜெயப்பிரகாஷ் நாராயண் னு பலபேருக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தவரு. இன்னைக்கு நம்ம தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில அது ஸ்கூலோ காலேஜ்ஜோ சுவாமிஜி பத்தி ஒரு வார்த்தை இல்லை. குழந்தைகளும் இளைஞர்களும் அவங்க பள்ளிப்படிப்பு வழியா சுவாமி விவேகானந்தரைக் கேள்விப்பட கூட வழி இல்ல. இன்னைய தேதில ஒரு கவர்மெண்ட் ஸ்கூலோ காலேஜோ செய்யாதத நீங்க செஞ்சிருக்கீங்க. உங்களுக்கு நிச்சயம் தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும் தம்பி.’’

மேலும் சில நாட்கள் சென்றன. நான் அவ்வப்போது சென்று பார்த்து வந்தேன். அவருக்கு சில விஷயங்கள் குறித்து விளக்கம் தேவைப்பட்டது. அவற்றைக் கேட்டார். நான் எனக்குத் தெரிந்த பதில்களைத் தந்தேன். 

1. அண்ணன்! சலூன் -ல ஆன்மீகப் புத்தகங்கள் இருக்கறது பொருத்தமா இருக்குமா?

தம்பி! மகாபாரதத்துல ஒரு கதை இருக்கு. ஒரு யோகி ரொம்ப வருஷம் தவம் செஞ்சு நிறைய சித்திகளை அடையறாரு. அவர் தவம் செஞ்சுகிட்டு இருக்கும் போது வானத்துல பறக்கற ஒரு பறவை அவர் மேல தெரியாம எச்சமிட்டுடுது. அதை அவர் கோபத்தோட பாக்கறார். அது எரிஞ்சு சாம்பலா விழுந்திடுது. தான் தவத்துல ரொம்ப பெரிய இடத்துக்கு வந்துட்டோம்னு பல வருஷ தவத்தை முடிச்சுட்டு ஊருக்குள் வர்ராறு. 

ஒரு வீட்டு வாசல்ல நின்னு ‘’பவதி பிக்‌ஷாம் தே ஹி’’ன்னு பிச்சை கேக்கறார். அந்த வீட்டு அம்மா பிச்சை போட வர நேரமாகுது. அவங்க வந்ததும் கோபமா பாக்கறாரு. அந்த அம்மா ‘’ என்ன முனிவரே! என்ன கொக்குன்னு நினைச்சீங்களா உங்க பார்வையாலே எரிக்கறதுக்கு ‘’ன்னு சிரிச்சிட்டே கேக்கறாங்க. முனிவருக்கு ரொம்ப அதிர்ச்சி. உங்களுக்கு எப்படி நடந்ததை அறியுற தவவலிமை வந்ததுன்னு கேக்கறாரு. 

தவம் செய்யறவனுக்கு மட்டும்தான் தவவலிமை கிடைக்கும்னு இல்லை. தன்னோட கடமையை முழுமையாச் செய்றவனுக்கும் தவவலிமை கிடைக்கும். உடம்பு முடியாத என்னோட கணவருக்கு நான் சிரத்தையா பணிவிடை செய்றன். அதனால எனக்கு இந்த சித்தி கிடைச்சுதுன்னு அந்த அம்மா சொல்றாங்க. 

அந்த அம்மாட்ட அந்த முனிவர் ஞானோபதேசம் செய்யச் சொல்றாரு. 

இந்த ஊர்ல கடைத்தெருவுல ஒரு இறைச்சிக் கடை இருக்கு. அந்த இறைச்சிக் கடைக்காரர போய் பாருங்க. அவர் தான் உங்களுக்கு உபதேசம் செய்ய மேலும் பொருத்தமானவர்னு சொல்றாங்க. 

முனிவர் அந்த இறைச்சிக்கடைக்காரரைப் பார்க்கப் போறார். 

அந்த இறைச்சிக் கடை ஒரே சந்தடியா இருக்கு. பிராணிகளோட ரத்தம், எலும்பு , தோல்னு சிதறிக் கிடக்கு. முனிவர் அங்க போய் நிக்கறார், கடைக்காரர் அவரைப் பார்த்ததும் ‘’வாங்க முனிவரே! உங்களை அந்த அம்மா அனுப்பினாங்களா. கொஞ்ச நேரம் காத்திருக்க முடியுமா? நான் என்னோட வேலைகளை முடிச்சுட்டு வர்ரேன்னு சொல்றார். 

முனிவர் ரொம்ப நேரமா காத்திருக்கார். சாயந்திரமா வியாபாரத்தை முடிச்சுட்டு கடையை சுத்தமாக் கழுவி விட்டுட்டு முனிவருக்கு ஸ்வதர்மம் பத்தி உபதேசம் செய்றார். 

இது மகாபாரதக் கதை தம்பி. 

தன்னோட கடமையை முழுமையாச் செய்றது தான் ஆன்மீகம்னு சுவாமி விவேகானந்தர் சொல்றார். நீங்க சமூகப் பிரக்ஞையோட ஒரு நல்ல காரியம் செய்யறீங்க. அதை எங்கயும் செய்யலாம் தம்பி. தீபம் எங்க இருந்தாலும் ஒளி கொடுக்கும். மல்லிகை எப்போதும் மணம் வீசும். 

2. புத்தகங்களை யாராவது வீட்டுக்கு எடுத்துப் போய் வாசிக்கக் கேட்டா என்ன செய்றது?

அவசியம் கொடுங்க தம்பி. என் கையில நான் ஸ்பேரா சில புக்ஸ் வச்சுக்கறன். அதுல இருந்து ரீ-பிளேஸ் பண்றேன். 

3. ஒரு நாளுக்கு 5 அல்லது 6 பேர் தான் படிக்கிறாங்க. எல்லாரும் படிக்கறது இல்லையே?

அதாவது தம்பி நாம இப்ப செய்யறது முதல் முயற்சி. மாவட்டம் முழுசும் 500 இடத்துல இருந்தா ஒரு நாளைக்கு ஒவ்வொரு சலூன்லயும் ஒருத்தர்னு எடுத்துப் பார்த்தா கூட 500 பேர் தினமும் பார்க்கறாங்கன்னு அர்த்தம். ஒரு மாசத்துக்கு ஒரு வருஷத்துக்குன்னு கணக்கு போட்டு பாருங்க. எத்தனை பேரை ரீச் செய்யும்னு யோசிங்க. 

அண்ணா ஹசாரே ஒரு ரயில்வே ஸ்டேஷன் புக் ஷாப்-ல தற்செயலா சுவாமி விவேகாந்தர் புத்தகத்தை வாசிக்கறார். அதுதான் அவர் வாழ்க்கைல ஒரு முக்கியமான திருப்புமுனையா இருந்துச்சு. ‘’ரலேகான் சித்தி’’ மாதிரி கிராமத்தோட அடிப்படை அது. 

நம்ம முயற்சி என்ன பலன் கொடுக்கும் நம்மால முழுக்க கணிச்சுற முடியாது தம்பி. 

4. இப்ப நான் என்ன செய்யணும்?

’’தம்பி! நான் ஃபிரண்ட்ஸ் சில பேர்ட்ட பேசி இருக்கேன். அவங்க சப்போர்ட் பண்றேன்னு சொல்றாங்க. அவங்களுக்கு இந்த விஷயம் ரொம்ப பிடிச்சிருக்கு. 400 சலூன். சலூனுக்கு 10 புக்-னா மொத்தம் 4000 புக்ஸ். நாம ஃபிரண்ட்ஸ் சப்போர்ட்டோட புக்ஸை வாங்கிடுவோம். அப்புறம் ஒவ்வொரு சலூனுக்கும் நேரா போய் விஷயத்தைச் சொல்லி கொடுத்துட்டு வருவோம். நல்ல விஷயத்தை எல்லாரும் சப்போர்ட் பண்ணுவாங்க தம்பி. உங்க சலூன்ல ஒரு மாசமா இந்த 10 புக்ஸ் இருக்கு. உங்க எக்ஸ்பீரியன்ஸ அவங்களுக்கு சொல்லுங்க. அது இன்னும் பொருத்தமா இருக்கும்.’’

5. இது பெரிய அளவில பலன் கொடுக்குமா சார்?

இது சின்ன அளவில பலன் கொடுத்தாக் கூட நிறைய பேருக்கு பிரயோஜனமா இருக்கும் தம்பி. 

6. இதுல வேற ஏதும் சிறப்பா செய்யனுமா?

மார்ச் 15 அன்னைக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் ஜெயந்தி. அன்னைக்கு நம்ம மாவட்டத்துல உள்ள எல்லா சலூன்லயும் இந்த பத்து புக்ஸ் இருக்கற மாதிரி ஏற்பாடு செய்யலாம். 

வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. 

இந்த முயற்சியில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புபவர்கள் ulagelam(at)gmail(dot)com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 



 

Friday, 11 February 2022

கொடியேற்றம் (மறுபிரசுரம்)


இரண்டு மாதங்களுக்கு முன்னால், மயிலாடுதுறைக்கு அருகில் இருந்த ஒரு கிராமத்தில் கோவிட் தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டேன். கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் நன்மைகளை எடுத்துக் கூறிய துண்டுப் பிரசுரங்களைத் தயாரித்து எடுத்துக் கொண்டேன். அந்த கிராமத்தில் எனது நண்பரின் நண்பர் ஒருவர் எனக்கு நல்ல பரிச்சயம் உள்ளவர். அவரைச் சந்தித்தேன். அவர் அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவரிடம் அழைத்துச் சென்று எனது நோக்கங்களை எடுத்துக் கூறினார். 

கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் ஒருமுறையாவது நேரில் சென்று தடுப்பூசியின் அவசியம் குறித்து எடுத்துச் சொல்வது என்பதும் எல்லா வீடுகளையும் தொடர்பு கொண்ட பின் மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் ஒரு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்வது என்பதும் திட்டங்கள். நண்பர், நான் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் மூவரும் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து தடுப்பூசியின் அவசியம் குறித்து எடுத்துச் சொன்னோம். 

ஊராட்சித் தலைவர் துண்டுப் பிரசுர வினியோகத்தைத் துவங்கும் முன், அந்த ஊரின் மாரியம்மன் கோவிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். பணி எண்ணியவை எண்ணியவாறு நடக்க அம்மனிடம் வேண்டிக் கொண்டார். நாங்களும் வேண்டிக் கொண்டோம். 

அந்த கிராமத்தினை முழுமையாக தடுப்பூசி இடப்பட்ட கிராமமாக ஆக்க வேண்டும் என்பது எனது விருப்பம். எனது விருப்பத்தினை மாவட்ட ஆட்சியருக்கு எழுதினேன். எல்லா வீடுகளும் தொடர்பு கொள்ளப்படுவதால் கிராமத்து மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் ; ஆகவே அந்த ஊருக்கு 2000 தடுப்பூசிகள் வழங்குமாறு கேட்டுக் கொண்டேன். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நான்கு முறை சென்று அந்த கிராமம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று கேட்டேன். சுகாதாரத்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு சொன்னார்கள். அவர்களை தினமும் ஒருமுறை என இரண்டு வாரத்துக்கு சந்தித்தேன். 

பின்னர் அந்த கிராமத்தில் சுகாதாரத் துறை ஒரு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்தது. அதில் 330 டோஸ்கள் மட்டுமே வழங்கப்பட்டன. அது நான்கு மணி நேரத்தில் நிறைவு பெற்றது. அடுத்த நாளில் 40 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அவர்களை ஒரு வேன் மூலம் அழைத்து வந்து மீண்டும் ஊரில் கொண்டு போய் விட்டேன். 370 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் ஏற்பட்ட ஆர்வத்திலும் விழிப்புணர்விலும் மேலும் 100 - 120 பேர் மயிலாடுதுறைக்கு வந்து அடுத்த சில நாட்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

அந்த கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் வீட்டின் முன்னால் வைத்து பராமரிக்கக்கூடிய மலர்ச்செடியான ‘’அலரி’’யை 500 கன்றுகள் வழங்கினேன். ‘’அலரி’’யை ஆடு மாடு மேயாது என்பதால் வளர்ப்பதும் பராமரிப்பதும் எளிது. இந்த விபரத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன். 

2000 பேர் வரை முயற்சி செய்து 500 வரை மட்டுமே இலக்கு எட்டப்பட்டுள்ளதே ; இந்த கிராமத்துக்கு கூடுதல் கவனம் கொடுத்து சற்று அதிகமான டோஸ்கள் ஒதுக்கப்பட்டால் முழுமையை எட்டி விடலாமே என்ற எண்ணமும் விருப்பமும் எனக்கு. இருப்பினும் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வது தான் விவேகம் என்ற நிலை. அமைதி காத்தேன். அந்த கிராமத்தில் வேறு சில பணிகளில் உதவுமாறு ஆலோசனை சொல்லுமாறு உடன் இருக்குமாறு அந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களும் நண்பர்களும் கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறே செய்தேன். 

சில நாட்களில் மேலும் ஒரு முகாம் ஏற்பாடானது. அது மாற்றுத் திறனாளிகளுக்கானது. அதில் அந்த கிராமத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் சில நாட்களில் அந்த கிராமத்துக்கு உட்பட்ட குக்கிராமம் ஒன்றில் முகாம் ஏற்பாடானது. அதில் 200 பேர் வரை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மெல்ல மெல்ல கிட்டத்தட்ட ஊரில் பாதிபேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

நான் மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது அங்கு செல்வேன். அப்போது என்னைப் பார்ப்பவர்கள் தடுப்பூசி எங்கே போடப்படுகிறது என்ற விபரம் கேட்பார்கள். எனக்குத் தெரிந்த விபரத்தை கூறுவேன். அந்த கிராம மக்கள் பலர் என்னை ஒரு சர்க்கார் ஆசாமி என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

நேற்று மாலை 5 மணி அளவில் மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கும் கிராமம் ஒன்றிலிருந்து இளைஞர்கள் அழைத்து இன்று ஏற்பாடாகி உள்ள சுதந்திர தின விழாவில் நான் உரையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். காலை 8 மணிக்கு விழா என்று சொன்னார்கள். நான் சரி என ஒத்துக் கொண்டேன். 

இரவு 10 மணிக்கு தடுப்பூசிக்காக பணி புரிந்த கிராமத்திலிருந்து அந்த ஊரின் ஊராட்சித் தலைவர் பேசினார். இந்த நேரத்தில் அழைக்கிறாரே என்ன விஷயமாயிருக்கும் என எண்ணியவாறு அலைபேசியை எடுத்தேன். 

அந்த கிராமம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் தடுப்பூசி விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி செலுத்துக் கொள்வதில் முதன்மை பெற்றுள்ளதாகவும் அதனால் மாவட்ட ஆட்சியரின் பரிசுக்குத் தகுதி பெற்றுள்ளதாகவும் இன்று நடைபெறும் விழாவில் பரிசளிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் சற்று முன் அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்கள் என்று கூறினார். மிகுந்த நெகிழ்வுடன் நன்றி தெரிவித்தார். தடுப்பூசி விழிப்புணர்வு செயல்பாடுகளுக்காக ராஷ்ட்ரபதி அளிக்கும் விருதுக்கும் அந்த கிராமம் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறினார். மிகுந்த நெகிழ்வுடன் என்னிடம் நன்றியைத் தெரிவித்தார். 

இந்த மாத இறுதிக்குள் அந்த கிராமம் முழுமையையும் தடுப்பூசி இடப்பட்ட கிராமமாகச் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 
விழாவுக்கு நான் வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். இன்னொரு கிராமத்தில் சுதந்திர தின உரை ஆற்ற இருப்பதைத் தெரிவித்தேன். இன்று மாலை கிராமத்தில் நேரில் வந்து சந்திப்பதாகக் கூறினேன். 

இன்று காலை அந்த இன்னொரு கிராமத்துக்கு உரை ஆற்றச் சென்றேன். காலை 8 மணிக்கு அங்கே சென்று விட்டேன். அங்கே சென்றதும் அங்கே உள்ள மக்களும் நண்பர்களும் இளைஞர்களும் தேசியக் கொடியை நான் ஏற்ற வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். 

பகவான் புத்தரின் அறவாழி பொறிக்கப்பட்ட மூவர்ணக் கொடி எத்தனையோ தியாகிகளின் குருதியாலும் வியர்வையாலும் இன்று விண்ணில் பறக்கிறது. தாயின் மணிக்கொடி என்றான் பாரதி. தாயின் மணிக்கொடி பாரீர் என்றான் பாரதி. 

கொடியேற்றி ஒரு சிற்றுரை ஆற்றினேன். 

’’நாம் நம்மைப் புரிந்து கொள்ள தமிழ்நாட்டின் வரலாற்றை பிரிட்டிஷ் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட கொடும் பஞ்சங்களிலிருந்து ஆரம்பிப்பதே சரியான துவக்கமாக இருக்கும். ஈவிரக்கமற்ற பிரிட்டிஷ் அரசாங்கம் செங்கல்பட்டு , வடார்க்காடு, தென்னாற்காடு பகுதிகளில் மக்கள் லட்சக்கணக்கில் உணவின்றி செத்துக் கொண்டிருந்த போது சென்னைத் துறைமுகத்திலிருந்தே உணவு தானியங்களை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் அந்த பஞ்சத்தில் மடிந்தனர். பல குடும்பங்களின் பல கிராமங்களின் வாழ்க்கை அழிந்து போனது. இதைப் போல பல பஞ்சங்கள் இந்தியாவெங்கும் பிரிட்டிஷ் ஆட்சியில் அவ்வப்போது உருவாயின. இந்தியாவின் ஆன்மீக இயக்கங்கள் அதன் பின் தோன்றி பசியால் வாடும் மக்களுக்கு உணவளித்தன. பஞ்சத்தை எதிர்கொண்டதிலிருந்து சராசரி தமிழ் அகம் அரசாங்கத்தை அஞ்சத் துவங்கியது. அதன் மற்றொரு பக்கமாக தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் மக்களை துச்சமாக நடத்துவதையும் அச்சுறுத்துவதையும் தம் இயல்பாகக் கொண்டுள்ளனர். அரசாங்கத்தின் உறுப்பாக இருக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களின் சேவகர்கள். இந்திய சுதந்திரம் அதனை சாத்தியமாக்கியிருக்கிறது. இந்நிலையை உருவாக்க எத்தனையோ தியாகிகள் தங்கள் உதிரம் சிந்தி உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். நாம் அதனை என்றும் நம் நினைவில் இருத்த வேண்டும்.  இந்தியாவில் கிராமமே பொருளியல் - சமூக நுண் அலகு. கிராம மக்களின் விழிப்புணர்வும் ஒற்றுமையும் தன்னிறைவுமே நாம் சென்றடைய வேண்டிய இலக்கு. நாம் அதனை சாத்தியமாக்க வேண்டும். 

‘’யாதும் ஊரே; யாவரும் கேளிர்’’ என்பது தமிழ் மரபு. நான் உங்கள் ஊரைச் சேர்ந்தவன் அல்ல. எனினும் உங்கள் அன்பால் என்னை உங்களில் ஒருவனாக உணரச் செய்துள்ளீர்கள். உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். உங்கள் அன்புக்கு நான் தகுதியுடையவனா என்பது எனக்குத் தெரியவில்லை. தகுதியுடையவனாக இருக்க முயற்சி செய்கிறேன். ஜெய்ஹிந்த்’’ என்று உரையாற்றினேன். 

நிகழ்வில் 30 பேர் பங்கெடுத்தனர். 

Thursday, 10 February 2022

எழு பசும் பொற்சுடர் (மறுபிரசுரம்)

 மரக்கன்றுகள் நட்டு செயல்புரியும் கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று (06.11.20) மாலை 6.15 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஏழு தீபங்கள் ஏற்றுமாறு கேட்டுக் கொண்டோம். ஒற்றுமையிலும் கூட்டுச் செயல்பாட்டிலும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் உறுதியையும் வெளிப்படுத்தும் விதமாக தீபங்களை ஏற்றச் சொன்னோம்.  அன்றைய தினம் சப்தமி என்பதால் ஏழு தீபங்கள். இந்திய மரபில் ஏழு என்பது பலவகையில் முக்கியத்துவம் கொண்டது. ஸ்வரங்கள் ஏழு. தெய்வ அன்னையர் எழுவர். முதல் முனிவர்கள் ஏழு பேர். புண்ணிய நதிகள் ஏழு. வானவில்லின் வர்ணங்கள் ஏழு. வாரத்தின் நாட்கள் ஏழு. பிறவிகள் ஏழு. பெருங்கடல்கள் ஏழு. அதிசயங்கள் ஏழு. உடலின் உயிர்ச் சக்கரங்கள் ஏழு. 


ஆறு மாதங்களுக்கு முன்னால் முதல்முறையாக அந்த கிராமத்துக்குச் சென்றேன். ஊரின் பெயரை மட்டும் சில முறை கேட்டிருக்கிறேன். முன்னர் எப்போதும் அங்கு சென்றது கிடையாது. அப்போது, அந்த ஊரில் யாரும் எனக்கு அறிமுகமோ பரிச்சயமோ இல்லை. இந்தியா முழுக்க மோட்டார்சைக்கிளில் பயணித்தவன் என்ற முறையில் இந்திய கிராம மக்கள் ஊருக்குப் புதிதாக வருபவர்களிடம் அன்பு பாராட்டுவார்கள் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தேன். அந்த நம்பிக்கையே அவ்வளவு தொலைவில் உள்ள அந்த கிராமம் நோக்கி என்னைச் செலுத்தியது. 

இத்தனை நாட்கள் செயல்புரிந்த முறையில், இன்று அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் நண்பர்களாக உள்ளனர். அவர்கள் என் மீது காட்டும் அன்பு மறக்க இயலாதது. 

வெள்ளியன்று மாலை கிராமத்தின் எல்லா வீட்டு வாசலிலும் மக்கள் ஏழு தீபங்கள் ஏற்றினர். கிராமத்தின் வீதிகள் அகல் விளக்குகளின் ஒளியில் அழகுற மிளிர்ந்தன. அன்றைய மாலை திருக்கார்த்திகைக் கொண்டாட்டம் போல் இருந்தது. 

நான் எளிய கருவி மட்டுமே. அங்கே நிகழ்ந்த அனைத்தும் அக்கிராம மக்களாலேயே நிகழ்ந்தது. 

பணிகளுக்கு முடிவு என்பது எப்போதுமே கிடையாது. மேலும் என்ன பணிகளைச் செய்ய முடியும் என்பது குறித்தே யோசிக்கிறேன். செயல்படுகிறேன். 

கடமையைச் செய் என்கிறது கீதை.











Wednesday, 9 February 2022

காவிரி போற்றுதும் - ஊற்றுமுகம்

அன்னம் பஹு குர்வித:
-தைத்ரீய உபநிஷத்

இன்றும் காவிரி வடிநில மாவட்டங்களின் (காவிரி டெல்டா) முக்கியமான தொழில் விவசாயமே. லட்சக்கணக்கான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். இங்கு நிகழும் அனைத்து வணிகங்களுக்குமான நுகர்வோர் விவசாயிகளே. அதாவது அவர்களின் வருவாயையும் உபரி வருவாயையும் கொண்டே எல்லா வணிகங்களும் லாபமீட்டுகின்றன. இங்கே விவசாயம் லாபமான தொழிலாக இருக்கிறதா என்ற கேள்விக்கு ‘’அப்படி கூறி விட முடியாது’’ என்பதே பதிலாக இருக்கிறது. எனக்கு எந்த பகுதியின் சமூகவியல் பொருளியல் செயல்பாடுகள் மீதும் ஆர்வமும் கவனமும் உண்டு. எல்லா பண்பாடுகளின் மீதும் ஆர்வம் உண்டு. சமூக மாற்றத்துக்கான செயல்களைப் புரிய வேண்டும் என்ற விருப்பமும் காந்திய வழிமுறைகளின் மீது நம்பிக்கையும் உண்டு.

நான் எப்போதுமே ஏதேனும் ஆக்கபூர்வமான சமூகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புவேன். என்னால் இயன்ற சிறு பணிகளை அவ்வப்போது செய்வேன்.

சமீபத்தில் நண்பர்கள் சிலர், ஒரு குழுவாக இணைந்து சில சமூகச் செயல்பாடுகளை முன்னெடுக்க விரும்பினர். அதற்கு எனது ஆலோசனைகளைக் கேட்டனர். அவர்களில் சிலர் பொறியாளர்கள். சிலர் வணிகர்கள். சிலர் விவசாயிகள். அக்குழுவுக்குள் ஒருங்கிணைப்பு இருந்தது. நான் என் யோசனைகளை முன்வைத்தேன். அவர்கள் செயல்களில் துணை புரிந்தேன். எங்கள் குழுவுக்கு ’’காவிரி போற்றுதும்’’ என்று பெயரிட்டோம்.

சிலப்பதிகாரம், ‘’திங்களைப் போற்றுதும்’’ என்று துவங்குகிறது. இளங்கோ அடிகள் நிலவைப் பெண்மைக்கான – நீதி உணர்வுக்கான – குறியீடாக ஆக்கி அதனை குடிமக்கள் காப்பியத்தின் முதல் சொல்லாக்கினார். அதிலிருந்து ‘’போற்றுதும்’’ என்ற சொல்லையும் காவிரியையும் இணைத்து ’’காவிரி போற்றுதும்’’ என்று பெயரிட்டோம்.

எங்கள் ஊரைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் இருக்கும் கல்வி பயிலும் இளைஞர்களைச் சந்தித்து அவர்களிடம் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வை உருவாக்குவதும் அவர்களை அவர்கள் கிராமத்தில் அவர்கள் செய்யக்கூடிய செயல்பாடுகளைச் செய்வதற்கான ஊக்கத்தை அளிப்பதும் அவர்கள் செயல்களுக்கு அவர்களுக்கு கிராமத்திற்கு வெளியிலிருந்து ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அதனை ஏற்பாடு செய்து கொடுப்பதும் எங்கள் பணிகள் என வரையறுத்துக் கொண்டோம்.

பொதுவாக சமூகப் பணிகள் ஆற்றுவதில் திட்டமிடலும் திட்டமிடலுக்குப் பின் படிப்படியாக செயல்களில் முன்னேறிச் செல்வதும் அவசியமானது. சமூகப் பணி சமூகம் பற்றி நாம் மேலும் புரிந்து கொள்வதற்கான இன்னொரு வாய்ப்பே. நாம் எண்ணுவது எண்ணியவாறே நடக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது; ஆனால் எண்ணியதை எண்ணியவாறு நிறைவேற்றுவதற்குத் தேவையான உழைப்பையும் நேரத்தையும் கொடுப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். சரியான பாதையில், மிக மெதுவாக முன்னகர்ந்தால் கூட  எண்ணியதை எய்தி விடலாம்.

அருகாமையில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்றேன். இளைஞர்கள் ஒரு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் உரையாடினேன். எங்கள் நோக்கங்களைச் சொன்னேன். அவர்கள் ஆர்வமாயிருப்பதை அறிந்து கொண்டேன். அவர்களிடம் ஒரு விஷயத்தை முன்வைத்தேன்.

நமது மண் பலவகையான தாவர வகைகள் வளரும் இயல்பு கொண்டது. மண்ணில் வேரூன்றி விண் நோக்கி வளர்ந்தவாறிருக்கும் விருட்சத்தை தெய்வ வடிவமாகவே வழிபடும் மரபு நம்முடையது. இன்றும் நம் கிராமங்களில் ஆலமரமும் அரசமரமும் இருக்கிறது. அவை உயிர் ஆலயங்கள். ஒவ்வொன்றும் ஐம்பது வருடம், அறுபது வருடம் ஆனவை. இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் நடப்பட்டவை. நம் தலைமுறையில், கிராமத்தில் ஒரு சிலரேனும் ஆல், அரசு, வில்வம், கொன்றை, வன்னி ஆகிய மரங்களை பொது இடங்களில் நட்டு பராமரிக்க வேண்டும். ஒருபுறம், சிவனை நாம் கொன்றை மலர் சூடியவன் என வணங்குகிறோம். நமது மொழி இலக்கியங்கள் இறைமையை இயற்கையின் இனிய தன்மை கொண்டதாக முன்வைக்கின்றன. அந்த மரபின் தொடர்ச்சியாக நம்மை உணர கிராமங்களில் விருட்சங்கள் பொது இடங்களில் நடப்பட வேண்டும். மரத்தின் நிழலில் அமரும் மனிதன் வாழ்வின் மீது நம்பிக்கை கொள்கிறான். பட்சிகள் சிலம்பும் ஒலி வாழ்வை இனிமையாக்குகிறது. பட்சிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயத்துக்கு உதவுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக நீடித்திருக்கும் மரபின் வாரிசுகளான நாம் நமது பங்களிப்பை ஆற்ற வேண்டும். இந்த விஷயங்களை அவர்களிடம் கூறினேன். அவர்கள் அதனை ஏற்றனர். எந்த நல்ல விஷயத்தையும் சமூகம் வரவேற்கிறது என்பது ஓர் உண்மை.

இந்த விஷயம் உண்மையில் நூதனமானது. மண்ணிலும் நீரிலும் நாள் முழுதும் நிறைந்து பொழுதெல்லாம் விவசாயம் செய்பவர்கள் விவசாயிகள். அவர்களுக்கு மரம் நடுவதைப் பற்றி நகரத்திலிருந்து சென்ற ஒருவர் எடுத்துக் கூறுவது என்பதில் உள்ள முரண் அந்த விஷயத்தைப் பற்றி மேலும் யோசிக்கச் செய்தது. அதற்கான காரணத்தைக் கண்டடைந்தேன். இப்பகுதியின் விவசாயிகள் நெற்பயிர் வேளாண்மைக்குப் பழகியவர்கள். பெரும்பாலானோர் இரண்டு போகம் பயிரிடுகிறார்கள். இப்போதெல்லாம் மூன்று போகம் என்பது அபூர்வம். உழவு, நாற்றங்கால் உருவாக்குதல், நடவு, களையெடுத்தல், நீர் பாய்ச்சுதல் மற்றும் அறுவடை என நூறு நாட்கள் ஒரு போகத்துக்கு வேலை இருக்கும். இன்னும் சரியாகச் சொன்னால், நூறு நாட்களில் முதல் முப்பது நாட்களுக்கு முழு நேரமாகவும் பின்னர் குறைவான நேரமும் அளிப்பதாக இருக்கும். வருடத்தின் 365 நாட்களில் கணிசமான நாட்கள் வேலையில்லாமல் இருக்கும். உளுந்து பயிர் நெல் அறுவடையை ஒட்டி விதைத்து விட்டு பெரிய பராமரிப்புகள் ஏதும் இன்றி அறுவடை செய்யக் கூடியது. நெல், உளுந்து என்பதே இப்பிராந்தியத்திய விவசாயத்தின் பொது மனநிலை. அறுவடை முடிந்த பின்னர், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்து விட்டு அடுத்த போகத்துக்கான பணியைத் துவங்கும் வரை எந்த விதமான பணியிலும் ஈடுபடாமல் இருப்பது என்பதே அவர்களின் வழமையாகி விட்டது.

கிராமத்தின் மக்கள்தொகையில் மிகப் பெரும் பகுதி விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களுமே. அவர்கள் ஈட்டும் வருமானத்தை நகர்ப்பகுதிகளில் உள்ள வணிக அங்காடியில் செலவு செய்து விடுகின்றனர். நகர்ப்பகுதியிலிருந்து கிராமத்துக்கு வரும் செல்வம் என்பது ஒப்பீட்டளவில் மிகக் குறைவே. கொங்கு மண்டலம் மஞ்சள் பயிரிடுவதன் மூலம் –பருத்தி பயிரிடுவதன் மூலம் – பணப்பயிர்கள் பயிரிடுவதன் மூலம் தன்னை வலுவான விவசாயப் பகுதியாக மாற்றிக் கொண்டுள்ளது.

கிராமங்களிலேயே இந்தியாவின் ஆன்மா உறைந்துள்ளது என்றார் மகாத்மா காந்தி. இந்திய நிலத்தில் பயணித்த ஒரு மோட்டார்சைக்கிள் பயணியாக நான் அதனை உணர்ந்திருக்கிறேன். இந்தியா மாற்றம் பெற வேண்டும் எனில் அம்மாற்றத்துக்கான பணி இந்திய கிராமங்களிலேயே நிகழ வேண்டும். ஒரு இந்திய கிராமத்தில் செயலாக்கப்படும் அல்லது நிகழ்த்தப்படும் அல்லது செய்யப்படும் சோதனை எல்லா இந்திய கிராமங்களுக்கும் பொருந்தும் என்பது ஒரு நடைமுறை உண்மை.

’’காவிரி போற்றுதும்’’ நண்பர்கள் கூடி எவ்விதமான பணிகளை முன்னெடுக்கலாம் என்று சிந்தித்தோம். விவாதித்தோம். அவற்றின் விளைவாக சில செயல்களை முன்னெடுக்க முடிவு செய்தோம். நண்பர்களில் சிலர் பொறியாளர்கள். சிலர் வணிகர்கள். சிலர் விவசாயிகள். இணைந்து செயல்படுவதற்கான ஒருங்கிணைப்பை உருவாக்கிக் கொண்டோம். எவ்விதமான சமூகப் பணியும் ஒருங்கிணைப்பைக் கோரும் என்பது ஒரு முக்கியமான புரிதல். பல விதமான பணிகள் இருக்கின்றன. நாம் எவ்விதமான பணிகளை மேற்கொள்ள உள்ளோம்; அதற்கு எவ்விதமான வேலை முறை உபயோகமாக இருக்கும் என்று முடிவு செய்து கொள்வது அவசியம் என்பதை நண்பர்களுக்கு விளக்கினேன்.

காந்திய வழிமுறைகளில் ஒன்றான ‘’நுண் செயல்பாடு’’ என்பதை எங்களுக்கான வழிமுறையாக ஏற்றோம். நுண் செயல்பாடு அளவில் சிறியது. எனினும் பெருவலு கொண்டது. செயல்பாட்டாளர்களினுள்ளும் விரிவான புரிதலையும் ஆழமான ஈடுபாட்டையும் உருவாக்கக் கூடியது. ’’உருள் பெருந்தேரின் அச்சாணி’’ போன்றது.

கிராமங்களில் உள்ள பொது இடங்களில் மரக்கன்றுகள் நடுவது என்பதை எங்கள் செயல்பாடாகத் தேர்ந்தெடுத்தோம். ஒரு கிராமத்தில் 6 லிருந்து 7 தெருக்கள் இருக்கும். அதிகபட்சம் 250 மரக்கன்றுகள் வரை நட முடியும். ஆடு மாடுகள் மேயாமல் இருக்க அவற்றுக்கு நாமே வேலி அமைத்துக் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம். செய்யக்கூடிய எளிய பணியைத் தான் திட்டமிட்டிருந்தோம் என்றாலும் எனது மனம் முழு நிறைவடையவில்லை. நான் அது குறித்து எப்போதும் யோசித்தவண்ணம் இருந்தேன். விவசாயிகள் தங்கள் ஆயுள் முழுவதும் பயிரை வளர்ப்பதில் ஈடுபட்டிருப்பவர்கள்; மரம் செடி கொடிகளுக்கு மத்தியிலேயே எப்போதும் இருப்பவர்கள்; எங்கள் சிறிய குழுவுக்கு இது திருப்தியளிக்கும் பணி என்றாலும் மேலும் பெரிய அளவில் அந்த கிராமத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உறுதியாக இருந்தது. அப்போது என் மனத்தில் புதிதாக ஓர் எண்ணம் உதித்தது. எங்கள் குழுவின் நோக்கம் மரம் வளர்ப்பது; அது பொது இடத்தில் இருந்தால் என்ன அல்லது விவசாயிகளின் வீட்டுத் தோட்டத்தில் இருந்தால் என்ன என்று யோசித்தேன். பயன் தரக்கூடிய மரக்கன்றுகளை விவசாயிகளிடம் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் நட்டுக் கொள்ளுமாறு வழங்கி விடலாம்; மரத்தை ஆர்வத்துடன் அவர்கள் பராமரிப்பார்கள். நம்மாலும் ஒரு கிராமத்துக்கு பெரிய எண்ணிக்கையில் மரக்கன்றுகளை வழங்க முடியும் என எண்ணினேன். விவசாயியான எனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து அவர் வீட்டுத் தோட்டத்தின் பரப்பளவு என்ன என்று கேட்டேன். 10,000 சதுர அடி என்றார். உங்கள் வீட்டுத் தோட்டத்தில் எத்தனை மரங்கள் உள்ளன என்று கேட்டேன். நான்கு வாழைமரங்கள் உள்ளன என்றார். அவர் தோட்டத்தின் பரப்பளவுக்கு கிட்டத்தட்ட நூறு மரங்கள் நட்டு வளர்க்க முடியும். மழைக்காலத்தில் நட்டால் பருவமழை பொழியும் நான்கு மாதங்களுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் கூட இருக்காது. தானாக வளர்ந்து விடும். அதன் பின் கோடையில் கூட தன் பாட்டை தான் பார்த்துக் கொள்ளும். கிராமத்தில் மற்ற வீடுகளில் அதிக அளவில் மரம் நட்டிருப்பார்களா என்று கேட்டேன். ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் இப்படித்தான் என்றார். ஒரு கிராமத்தில் 400 வீடுகள் இருக்கும் எனில் ஒரு வீட்டுக்கு 10 மரக்கன்றுகள் வழங்கினால் மொத்தம் 4000 மரக்கன்றுகளை அக்கிராமத்துக்கு வழங்க முடியும் என்பது எங்களுக்கு பேரார்வம் அளித்தது. 250 என்ற சிறிய எண்ணிக்கையிலிருந்து 4250 என்ற சற்றே பெரிய எண்ணிக்கைக்கு எங்கள் திட்டமிடல் சென்றது எங்களுக்கு உற்சாகம் தந்தது. என் மனம் மட்டும் இன்னும் ஏதோ இருக்கிறது என்பதைக் கூறியவாறு இருந்தது. நான் யோசித்துக் கொண்டேயிருந்தேன். ஒரு வருவாய் கிராமத்தின் பரப்பளவு சராசரியாக 1000 ஏக்கர். அதில் விளைநிலம் 500 ஏக்கர் இருக்கும். அதன் வரப்புகளில் அடர்ந்து வளராது உயரமாக வளரும் மரக்கன்றுகளை குறைந்தபட்சம் ஏக்கருக்கு 40 என்ற எண்ணிக்கையில் நட முடியும். இருவருக்கு பொதுவாக இருக்கும் வரப்பில் நடத் தேவையில்லை; ஒருவரின் சொந்த நிலத்தின் உள்வரப்பில் நட்டுக் கொண்டாலே போதும்; 500 ஏக்கர் நிலத்தின் வரப்புகளில் 20,000 மரக்கன்றுகளை நட முடியும். எங்கள் எண்ணிக்கை 24,250 க்குச் சென்றது. மியாவாக்கி என்ற ஜப்பானிய முறை ஒன்று உள்ளது. அரை ஏக்கர் பரப்பளவில் இரண்டடிக்கு இரண்டடி என்ற இடைவெளியில் அடர்த்தியாக பல்வேறு மரங்களை நட்டு பராமரிக்கும் முறை அது. அரை ஏக்கர் பரப்பளவில் 5000 மரக்கன்றுகள் நட முடியும். அதனையும் சேர்த்த போது மொத்த எண்ணிக்கை 29,250 ஆனது. 250லிருந்து 29,250. கிட்டத்தட்ட நூறு மடங்கு. நண்பர்கள் உற்சாகமானார்கள். இந்த எண்ணிக்கையை ஒரு கிராமத்தில் செயல்படுத்துவோம் என்றார்கள். நான் செயலாக்கத்துக்கான வழிமுறைகளை யோசிக்கலானேன்.

நாங்கள் விவாதித்து உருவாகிய வழிமுறைகள்:

1. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களிடம் விஷயத்தை எடுத்துரைக்க வேண்டும்.

2. அவர்கள் கேட்கும் மரக்கன்றுகளை வழங்க வேண்டும். அவர்கள் கேட்கும் எண்ணிக்கையில் அளிக்க வேண்டும்.

3. ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்படும் எல்லா மரக்கன்றுகளும் நடப்பட வேண்டும்.

4. சொந்தமாக தரப்படும் மரக்கன்றுகளையும் பொது இடங்களில் நடப்படும் மரக்கன்றுகளையும் நல்ல முறையில் பராமரிப்போம் என்ற சொல்லுறுதியை கிராமத்தினர் அனைவரிடமும் பெற வேண்டும்.

5. அவர்கள் கேட்ட மரக்கன்றுகளை அவர்கள் வீட்டுக்கே கொண்டு சென்று வழங்க வேண்டும்.

6. மரம் வளர்ப்பதில் அவர்களுக்கு வல்லுனர்களின் ஆலோசனை தேவைப்பட்டால் அதை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

7. நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகள், பள்ளி, கோவில் என வாய்ப்புள்ள அத்தனை இடங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். எந்த விடுபடலும் இருக்கக் கூடாது.

கள ஆய்வு

வேளாண்மையில் ஆர்வம் உடைய விவசாயிகள் சிலர் எனது நண்பர்கள். அவர்களிடம் இது குறித்து விவாதித்தேன். அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். கிராமத்தில் ஒவ்வொரு குடும்பமாகச் சென்று கணக்கெடுக்கும் பணியை நான் மேற்கொண்டேன். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எங்கள் குழு குறித்து சொல்லி மரக்கன்றுகள் நடுதலை ஒரு சமூகச் செயல்பாடாக மேற்கொள்கிறோம்; உங்களுக்குத் தேவையான எத்தனை மரக்கன்றுகள் வேண்டுமானாலும் வழங்குகிறோம்; இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு எங்கள் நோக்கம் சிறப்பாக நிறைவேற உதவுங்கள் என்று கேட்டு அவர்கள் கூறிய மரக்கன்றுகளையும் எண்ணிக்கையையும் குறித்துக் கொண்டேன். கிராம மக்கள் பேரார்வத்துடன் பெரும் வரவேற்பு அளித்தனர். சிலர் சில ஐயங்களை எழுப்பினர். அவர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு நான் அளித்த விளக்கங்களும்:

1. நீங்கள் யார்? உங்கள் தொழில் என்ன? உங்கள் நண்பர்கள் யார்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?
எனது பெயர் பிரபு. மயிலாடுதுறையில் வசிக்கிறேன். எனது தொழில் கட்டிட கட்டுமானம். எனது நண்பர்களும் மயிலாடுதுறையில் வசிக்கிறார்கள். சிலர் பொறியாளர்கள். சிலர் வணிகர்கள். சிலர் விவசாயிகள்.

2. நீங்கள் ஏன் எங்களுக்கு மரக்கன்றுகள் வழங்க வேண்டும்?
மரம் வளர்த்தலை ஒரு சமூகச் செயல்பாடாகவும் பண்பாட்டுச் செயல்பாடாகவும் நாங்கள் காண்கிறோம். உங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி அம்மரங்கள் வளர்வதால் நிகழும் நன்மைகளுக்காக நாங்கள் இதனைச் செய்கிறோம்.

3. இதனால் உங்களுக்கு என்ன லாபம்?
இதனால் சமூகம் பயன் பெறும். அதுவே எங்கள் நோக்கம். எங்களுக்குத் தனிப்பட்ட லாபம் ஏதும் இதில் இல்லை.

4. மரக்கன்றுகள் தரும் போது பணம் கேட்பீர்களா?
எங்களுக்கு நீங்கள் எந்த பணமும் தர வேண்டாம். வழங்கப்படும் மரக்கன்றுகளை நல்லவிதமாகப் பராமரித்து வளர்த்துக் கொண்டாலே போதும்.

5. மரக்கன்றுகள் வளர்ந்து பயன் தரும் போது உரிமை கோருவீர்களா?
எப்போதும் எந்த விதமான உரிமையும் கோர மாட்டோம். எங்களுக்கு சுற்றுச்சூழலுக்கும் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும் உதவும் விதத்தில் மரக்கன்றுகளை அதிக அளவில் நட ஆசை. பொது இடத்தில் இருப்பதை விட தேவைப்படும் விவசாயிகளின் தோட்டத்திலோ அல்லது வயலிலோ இருந்தால் சிறப்பான பராமரிப்பு அவற்றுக்குக் கிடைக்கும் என்பதால் இவ்வாறு செயல்படுகிறோம். உங்களுக்கும் பலன் ; சமூகத்துக்கும் பலன். இதுவே எங்கள் நோக்கம். மரக்கன்றுக்கு சாலையில் வளர்கிறோமோ அல்லது தோட்டத்தில் வளர்கிறோமோ என்ற பேதம் இல்லை. சாலையில் இருப்பதை விட தனிப்பட்ட ஒரு குடும்பத்துக்கு அது பயன்படும் எனில் எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியே.

கள ஆய்வின் போது நாங்கள் விவசாயிகளின் பரிசீலனைக்கு முன்வைத்த சில யோசனைகள்:

1. ஒரு கிராமத்தில் 400 வீடுகள் இருக்கிறது என எடுத்துக் கொள்வோம். இப்போது 10லிருந்து 15 வீடுகளில் எலுமிச்சை மரம் இருக்கக் கூடும். அதில் உருவாகும் பழங்கள் கிராமத்துக்குள் அவர்கள் அண்டை வீட்டாருக்குள்ளும் நண்பர்களுக்குள்ளும் உறவினர்களுக்குள்ளும் பகிரப்படும். 400 வீட்டிலும் ஒரு எலுமிச்சை மரம் இருக்குமாயின் அவை ஒவ்வொன்றும் ஆண்டுக்கு சீசனில் 300 பழங்கள் காய்க்குமெனில் அக்கிராமத்தில் 1,20,000 பழங்கள் உற்பத்தியாகும். அக்கிராமத்திலேயே இருக்கும் ஒருவர் அருகில் இருக்கும் பெரிய சந்தை ஒன்றில் விற்பனை செய்ய முடியும். ஆநிரைகளுக்கு தீவனமாகும் மர வகைகள் ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கப்படும் போது அதன் உற்பத்தி ஊரின் பசுந்தீவனத் தேவையில் பெருமளவை பூர்த்தி செய்யும். மலர் மரங்கள் மூலம் சேகரமாகும் மலர்களை ஆலயங்களில் மாலைகளாக விற்பனை செய்ய முடியும்.
 
2. ஒரு ஏக்கர் நிலம் உள்ள ஒருவர் தன் உள் வரப்பில் 40 தேக்கு மரக்கன்றுகள் நடுவாரெனில் 15 ஆண்டுகளில் அவர் அதன் மூலம் ரூ.20,00,000 வருமானம் பெறுவார். இது அவர் அந்த ஒரு ஏக்கர் பரப்பில் 15 ஆண்டுகளாக இரண்டு போகம் நெல் பயிரிட்டு அடையும் வருமானத்தை விட அதிகம்.

3. இவற்றை எல்லா விவசாயிகளும் பலமுறை சிந்தித்திருப்பார்கள். பெரிய லாபம் இல்லாத ஒரு விஷயத்தை மீள மீளச் செய்வதன் சோர்வால் அவர்கள் ஆர்வம் குன்றியிருக்கின்றனர். ஒரு வெளிப்புற ஆர்வத்தை அவர்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களை அவர்கள் நன்மைக்காக அவர்களாக செயல் புரியும் ஒரு வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.

4. இவற்றுடன் மரம் நடுவதால் நிகழும் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பலன்கள் எப்போதும் இருக்கவே செய்கின்றன.

5. தமிழ்நாட்டின் சராசரி மழைப்பொழிவைப் பயன்படுத்தி ஒரு கிராமத்தில் இத்தனை மரங்களை வளர்த்து விட முடியும். ஆவணி மாதத்தை ஒட்டி நடப்படும் கன்றுகள் அந்த ஆண்டின் பருவமழையைப் பயன்படுத்தியே வேர் பிடித்து நிலை பெற்று விடும். அதன் பின் தன் வளர்ச்சியைத் தானே பார்த்துக் கொள்ளும். அந்த சாத்தியத்தைப் பயன்படுத்திக் கொள்வது நம் கடமை.

6. ஒரே நாளில் ஊரின் எல்லா குடும்பங்களும் ஒரே நேரத்தில் மரம் நடுதல் என்பது மிக முக்கியமான ஒரு பண்பாட்டுச் செயல்பாடாக ஆகும். அக்கிராமத்தின் வரலாற்றில் அது ஒரு மிக முக்கிய நிகழ்வாக ஆகும்.

இந்தியாவுக்கென ஒரு பாரம்பர்யமான வாழ்க்கை முறை பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. இம்முறையில் சமூகத்தில் அனைத்து பிரிவினருக்குமான இடமும் நீதியும் உறுதி செய்யப்படுகிறது. முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்பு அனைவருக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. வெவ்வேறு விதமான வெளிப்புறத் தாக்குதலுக்கு ஆளான பின்னரும் இந்தியா தன்னை தகவமைத்துக் கொண்டு எழுந்துள்ளது. இந்தியா தன் பண்பாட்டுக் கூறுகளை மீட்டு எழுவது என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல; ஒட்டு மொத்த உலகுக்குமே நன்மை பயக்கும்.

தொடர்புக்கு:
ulagelam(at)gmail(dot)com
 

Tuesday, 8 February 2022

ஏழைக்கு எழுத்தறிவித்தல்

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்

-பாரதி

’’காவிரி போற்றுதும்’’ கல்விப்பணி ஒன்றை ஆற்ற உள்ளது. 

ஓரிரு நாட்களுக்கு முன்னால், ஒரு எண்ணம் தோன்றியது. ஊரைச் சுற்றியுள்ள பத்து கிராமங்களில் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச ஹிந்தி வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற விருப்பம் உண்டானது. கிராமப்புற மாணவர்கள் ஹிந்தி பயில வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளதால் அவர்களின் நலனுக்காக இந்த செயலை ஒருங்கிணைக்க வேண்டும் என்று விரும்பினேன்.  

இதன் செயல்வடிவம் கீழ்க்காணும் கூறுகளை நிறைவு செய்ய வேண்டும் என்ற விதத்தில் திட்டமிட்டேன். 

1. மாணவர்களிடம் எந்த விதமான கட்டணமும் பெறப்படாது. ஆசிரியர் ஊதியம், நூல்கள், பயிற்சி ஏடுகள், தேர்வுக் கட்டணம் உட்பட அனைத்தும் ‘’காவிரி போற்றுதும்’’ வழங்கும். மாணவர்கள் வகுப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக கற்றலே எதிர்பார்க்கப்படுவது. 

2. ஹிந்தி வகுப்புகள் தினமும் ஒரு மணி நேரம் என 365 நாளும் நடைபெறும். விடுமுறை என்பது கிடையாது. வகுப்பில் பயில்வதற்கு அப்பால் வீட்டுப்பாடம் என எதுவும் கிடையாது. கற்பித்தல் , பயிற்சி, மதிப்பீடு ஆகியவை வகுப்பிலேயே நிகழும். இந்த பயிற்சிக்கு ஒரு மணி நேரம் கொடுத்தால் போதும். மீதி 23 மணி நேரத்தில் அவர்கள் வழக்கம் போல் தங்கள் பள்ளிக்கல்வி, வீட்டுவேலைகள், பெற்றோருக்கு உதவுதல் ஆகிய பணிகளைச் செய்யலாம். 

3. பொதுவாக ஒரு தமிழ் கிராமம் என்பது மூன்று அல்லது நான்கு குக்கிராமங்களைக் கொண்டது. ஹிந்தி வகுப்புகள் ஒரு கிராமத்தின் அனைத்து குக்கிராமங்களிலும் நிகழும். 

4. மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையிலிருந்து ( 8 வயது) எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை வரை (பதின்மூன்று வயது) வகுப்பில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். 10,11,12 ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்காக தயாராவார்கள் என்பதால் அவர்கள் இணைக்கப்படவில்லை. கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இதில் இணையலாம். 

5. காலை 6.20 மணியிலிருந்து காலை 7.20 மணி வரை வகுப்புகள் நடைபெறும். 

6. ஹிந்தி மொழி எழுத, படிக்க,பேச சொல்லித் தரப்படும்.

7. சென்னையில் 1918ம் ஆண்டு மகாத்மா காந்தி அடிகளால் துவங்கப்பட்ட நிறுவனம் ‘’தக்‌ஷிண் பாரத் ஹிந்தி பிரச்சார் சபா’’. பல ஆண்டுகள் காந்திஜி அதன் தலைவராக இருந்திருக்கிறார். முன்னாள் பாரதப் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி , பி.வி. நரசிம்ம ராவ் ஆகியோர் ‘’தக்‌ஷிண் பாரத் ஹிந்தி பிரசார் சபா’’வின் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த அமைப்பு   இந்திய தொழில்நுட்பக் கழகம் ( Indian Institute of Technology) (IIT) போன்ற ஓர் உயர் கல்வி நிறுவனம் ஆகும். அவர்கள் அளிக்கும் பட்டம் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டத்திற்குச் சமமானது. அவர்கள் நடத்தும் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் விதத்தில் வகுப்புகள் நடைபெறும். 

8. முதலில் ஒரு கிராமத்தில் மூன்று இடங்களில் வகுப்புகள் துவங்கப் பெறும். 

9. மூன்று மாதங்களுக்குப் பின் நான்கு கிராமங்களில் பன்னிரண்டு இடங்களில் வகுப்புகள் துவங்கப் பெறும். 

10. ஆறு மாதங்களுக்குப் பின் பத்து கிராமங்களில் முப்பது இடங்களில் வகுப்புகள் துவங்கப் பெறும். 

Saturday, 5 February 2022

ஆறுபாதி மலர்கள்

அவை மலர்கள்
ஆறுபாதி மலர்கள்
ஆறுபாதி ஏரி மலர்கள்
என்றும் சொல்லப்படுகின்றன
எப்படி சொல்லப்பட்டாலும்
அவை ஒன்றே

சோளக் கதிர்கள் பூக்கும் வயல்
மழைக்காலத்தில் 
ஏரியாகிறது
கதிர் பூத்த வயலில்
மலர்கின்றன
ஆயிரம் அல்லி மலர்கள்

ஆயிரம் அல்லி மலர்களை
ஒன்றாய்ப் பார்ப்பது
உயிரினை
உடலுக்கு அப்பாலும் துடிக்கச் செய்கிறது

ஆயிரம் மலர்களின் முன்
கை கூப்புவதற்கோ
கண்ணீர் சிந்துவதற்கோ
மண்டியிடுவதற்கோ
அடி பணிவதற்கோ
ஒரு காரணம்
ஒரு தருணம்
ஒரு உணர்வு
மிச்சம் இருக்கிறது

கவிதை எழுதுவதற்கும்

குறிப்பு : ஆறுபாதி என்ற ஊர் மயிலாடுதுறை செம்பொன்னார் கோவில் சாலையில் அமைந்துள்ளது. அந்த சாலைக்கு வடக்கே நீளமான விவசாய நிலம் ஒன்று உள்ளது. அது கோடைக்காலத்தில் விவசாய நிலமாகப் பயன்படும். மழைக்காலத்தில் ஏரியாக மாறும். மழைக்காலத்தில் நீர் முழுதும் நிறையும் போது நீர்மலர்கள் மண்ணிலிருந்து எழுந்து நீரின் மேற்பரப்பில் பூக்கும். சாலையில் செல்லும் எவரும் அந்த மலர்களைக் காண முடியும்.  

Friday, 4 February 2022

திருக்கோவிலூர்


திருவஹீந்திரபுரம் திவ்யதேசத்தை சேவித்த பின்னர் திருக்கோவிலூர் சென்று சேவிக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தேன். நடுநாட்டுத் தலங்கள் தான் எண்ணிக்கையில் மிகக் குறைவு. இரண்டு.  அவற்றை மட்டுமாவது முழுமையாக சேவிக்கலாமே என்ற எண்ணம்.  நம் அன்றாடச் சூழ்நிலை என்பது மாறாத் தன்மை கொண்டது. அது குறித்த பிரக்ஞை இருக்கும் என்றால் மட்டுமே அதிலிருந்து மீறி புதிய இடங்களுக்குச் செல்ல முடியும். புதிய செயல்களைச் செய்து பார்க்க முடியும். 

திருக்கோவிலூர் வைணவ வரலாற்றில் மிக முக்கியமான இடம். 

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என மூவரும் பெருமாளை தத்தம் வழியில் உணர்ந்த விதத்துடன் தொடர்புடையது. அதாவது, திருக்கோவிலூர் மலையில் ஏறிக் கொண்டிருக்கும் போது பொய்கையாழ்வார் மழையை எதிர்கொள்கிறார். சிறிது நேரம் மழை விடட்டும் என திருக்கோவிலூர் குன்றில் உள்ள சிறு குகை ஒன்றில் மழைக்கு ஒதுங்கி உடலை சாய்த்து ஓய்வெடுக்கிறார். மழை வலுத்துப் பெய்கிறது. அப்போது பூதத்தாழ்வார் அங்கே வந்து சேர்கிறார். ஒருவர் சயனிக்கும் இடத்தில் இருவரால் அமர முடியும் என அச்சிறுகுகையில் அவருக்கு இடம் தருகிறார். சிறிது நேரம் கழித்து பேயாழ்வார் அங்கே வந்து விடுகிறார். முதல் இருவரும் இருவர் அமரும் இடத்தில் மூவர் நிற்க முடியும் என அவருக்கும் இடம் தருகின்றனர். 

அப்போது பொய்கையாழ்வார், 

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று

என்ற பாசுரத்தைப் பாடுகிறார். 

அதன் பின்னர் பூதத்தாழ்வார்,

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்

என்ற பாசுரத்தைப் பாடுகிறார். 

பேயாழ்வார் இந்த இரண்டு பாசுரங்களைக் கேட்ட பின்னர், 

திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன்; புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று

என்ற பாசுரத்தைப் பாடுகிறார். 

வைணவ தத்துவத்துவின் அடிப்படையான தரிசனத்தைக் கூறும் இந்த மூன்று பாசுரங்களும் பிறந்த இடம் திருக்கோவிலூர். அந்த சிறுகுகையில் மூவரும் இந்த ஒவ்வொரு பாசுரங்களாக ஒவ்வொருவர் பாடிய பின்னர் நான்காவதாக ஒருவர் அங்கே வந்து சேர்ந்திருப்பதை உணர்கிறார்கள். அவர் பெருமாள் என்பது அவர்கள் உணர்வுக்குத் தெரிகிறது. 

மாத்வ வழிமுறையின் முக்கியமான ஆச்சார்யரான ரகுராய தீர்த்தர் ஜீவசமாதி அடைந்துள்ள இடமும் திருக்கோவிலூர். தென்பெண்ணை நதிக்கரையில் ரகுராய தீர்த்தரின் அதிஷ்டானம் அமைந்துள்ளது. இந்த வழிமுறையில் வந்தவரே பகவான் ஸ்ரீராகவேந்திரர். 

திருக்கோவிலூரில் ரகோத்தமன் என்ற பெயர் பலருக்கு இருக்கும். ஒருவரின் பெயர் ரகோத்தமன் எனில் அவர் திருக்கோவிலூர் அதனைச் சூழ்ந்துள்ள பகுதியைச் சேர்ந்தவர் என அறிந்து கொள்ளலாம். 

நானும் எனது நண்பர் ஒருவரும் மயிலாடுதுறையிலிருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ்ஸில் மதியம் ஏறி விழுப்புரம் சென்றடைந்தோம். அங்கிருந்து ஒரு பேருந்து மூலம் திருக்கோவிலூர் சென்றோம். திருக்கோவிலூர் ஆலயத்தை ஒட்டிய பாரம்பர்யத்துடனும் வாழ்முறையுடனும் இருப்பதை உணர்ந்தோம். அமைதியான ஊர். அழகான சன்னிதித் தெரு. சில ஊர்களைப் பார்த்தால் வாழ்க்கையின் மீதிக் காலத்தை அங்கேயே கழித்து விடலாம் எனத் தோன்றும் . அவ்வாறான ஒரு ஊர் இது. கடலூர் அருகில் திருச்சோபுரம் என ஒரு ஊர் உள்ளது. அந்த ஊரிலும் அவ்வாறான ஒரு உணர்வை அடைந்திருக்கிறேன். வாழ்க்கைக்கு அழகுணர்வு என்பது தேவை. ஒரு சமூகத்தின் அழகுணர்வு ஊரின் அமைப்பில் வெளிப்படும். சற்று முயன்றால் , நம்மால் எல்லா ஊர்களையும் அழகாக்க முடியும். நவீன வாழ்க்கை , தனிமனிதனுக்கு பல்வேறு உரிமைகளை உத்திரவாதங்களை உருவாக்கித் தந்துள்ளது. ஆனால் அதிலிருந்து எழுந்து வர வேண்டிய மேம்பட்ட அழகியல் நம் சமூகத்துக்கு வந்து சேரவில்லை. 

உலகளந்த பெருமாளை சேவித்து விட்டு ரகுராய தீர்த்தரின் ஜீவசமாதி முன் அமர்ந்திருந்து விட்டு இரவு 10 மணிக்கு மேல் கிளம்பி விழுப்புரம் வந்து அங்கிருந்து புதுச்சேரி வந்து மறுநாள் அதிகாலை ஊர் வந்து சேர்ந்தோம். அன்றைய திருக்கோவிலூர் விழுப்புரம் பயணம் மறக்க முடியாதது. நாங்கள் சென்றது ஒரு கோடைக்காலம் என ஞாபகம். தென்றல் பேருந்தின் சாளரம் வழியே வீசிக் கொண்டிருந்தது. சிறு சிறு ஊர்கள். இனிமையான ஒரு பொழுது. 

அன்பில் சென்று வந்தது திருக்கோவிலூர் நினைவுகளை மீட்டுக் கொள்ள ஒரு வாய்ப்பு தந்தது. 



Thursday, 3 February 2022

அன்பில்


நேற்று அன்பில் ஆலயத்துக்குச் சென்றிருந்தேன். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயங்களை திவ்யதேசங்கள் என்று கூறுவர். அவை மொத்தம் 108. பூமியில் உள்ளவை 106. மற்ற இரண்டும் பரமபதம் மற்றும் வைகுண்டம். அவை விண்ணுலகில் உள்ளன என ஐதீகம். புவியில் இருக்கும் 106 திவ்யதேசங்களையும் சேவித்தவர்கள் விண்ணுலகில் இருக்கும் பரமபதத்துக்கும் வைகுண்டத்துக்கும் சென்று பெருமாள் திருவடி நிழலை அடைவார்கள் என்பது ஐதீகம். 

இந்த 108 திவ்ய தேசங்களில் சோழ நாட்டு திவ்ய தேசம் 40 . நடுநாட்டு திவ்யதேசம் 2. தொண்டை நாட்டு திவ்ய தேசம் 22. பாண்டிய நாட்டு திவ்ய தேசம் 18. மலைநாட்டில் 13ம் வடநாட்டில் 11ம் உள்ளன. 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. இந்த திவ்ய தேசங்கள் அனைத்தையும் சேவிக்க வேண்டும் என்று. அதற்கான செயல்களைத் துவக்கினேன். ஒரு மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் நாளைக்கு ஒரு கோயில் என முப்பது திவ்யதேசங்களை சேவித்தேன். ஒரு நாளைக்கு ஒரு ஆலயம் மட்டுமே செல்வேன். அங்கே அதிக நேரம் இருப்பேன். அருகிலேயே இன்னொரு ஆலயம் இருந்தால் கூட அடுத்த நாள் தான் வருவேன். இவ்வாறான ஒரு பயணத்தை மேற்கொண்டது தமிழ்ப்  பண்பாட்டை அறிந்து கொள்ள உணர்ந்து கொள்ள வாய்ப்பு அளித்தது. 

நடுநாட்டு திவ்ய தேசம் எண்ணிக்கையில் இரண்டு மட்டுமே. அவை கடலூர் அருகில் உள்ள திருவஹீந்திரபுரம் மற்றும் விழுப்புரம் அருகில் உள்ள திருக்கோவிலூர். திருவஹீந்திரபுரம் சென்று பெருமாளை சேவித்து விட்டு வந்தேன். அதன் பின் சில காலம் கழித்தே திருக்கோவிலூர் சென்று வந்தேன். 

சோழ நாடு என்பது காவிரிப்பூம்பட்டினம் தொடங்கி திருவரங்கம் வரை உள்ளது. என் இருப்பிடம் சோழ நாட்டில் என்பதால் அந்த ஆலயங்களை ஓரளவு நிறைவு செய்தேன். இதுவரை ஐம்பது ஆலயங்களுக்கு மேல் சென்றிருப்பேன். ஆலயங்களில் தெய்வத்தை வணங்கி விட்டு அதன் கற்தரையில் கண் மூடி அமர்ந்திருப்பேன். ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் ஒரு மரபு. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் மரபை தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு தலம். எவ்வளவு அதிகமான நேரம் அங்கே இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இருப்பேன். அந்த இடத்துக்கு எத்தனையோ மஹானுபாவர்கள் வந்திருப்பார்கள். அவர்களின் இருப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது அத்தலம். 

காஞ்சிபுரத்தில் உள்ள எனது நண்பர் ஒருவர் காஞ்சிக்கு அருகில் உள்ள திவ்யதேசங்களை சேவிக்க வருமாறு அழைத்துக் கொண்டிருக்கிறார். அங்கே சென்றால் தொண்டை நாட்டு திவ்ய தேசங்களை சேவிக்க முடியும். நேரமும் காலமும் கூடி வர வேண்டும். 

தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் உள்ள ஆலயங்களை வாரத்துக்கு ஒன்று என்ற கணக்கில் சேவித்தாலே ஓராண்டில் கணிசமான ஆலயங்களை சேவித்து விட முடியும். 

சுப்பு ரெட்டியார் என்ற தமிழ் அறிஞர் அனைத்து வைணவ திவ்ய தேசங்களையும் சேவித்து அது குறித்து பயணக் கட்டுரை எழுதியுள்ளார். தமிழின் மிக முக்கியமான பயண நூல்கள் அவை. 

நேற்று திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள அன்பில் என்ற திவ்யதேசத்திற்கு சென்று பெருமாளை சேவித்தேன். சிறிய ஆலயம். பெருமாள் சயன திருக்கோலம். ஒரு குழந்தையைப் போல படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார். திருவரங்கப் பெருமாளை நினைவுபடுத்தும் முகம். பெருமாளுக்கு சுந்தரராஜன் என்று பெயர். அழகின் அரசன். அழகின் தலைவன். அதில் எந்த ஐயமும் இல்லை. 

நாகப்பட்டினத்தில் பெருமாளின் நாமம் சௌந்திரராஜன். திருக்கண்ணபுரத்தில் சௌரிராஜன். அழகர் கோவில் கள்ளழகர் பெயரும் சுந்தரராஜனே. 

கொள்ளிடத்தின் வடகரையாக திருச்சி மாவட்டமும் தென்கரையாக தஞ்சை மாவட்டமும் அமைந்துள்ளது. ஒரு மைல் அகலம் கொண்ட கொள்ளிடத்தைக் கடந்தால் ஆற்றின் இருகரைகளிலும் இருப்பவர்கள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் வர முடியும். ஆலயத்தில் இருந்த மூத்த குடிமக்கள் தங்கள் இளம் வயதில் ஆற்றின் தென் கரையிலிருந்து வடகரையான அன்பிலுக்கு வந்து பள்ளியில் படிக்கும் தங்கள் நண்பர்கள் குறித்து நினைவு கூர்ந்தார்கள். 

அன்பில் சென்று பெருமாளை சேவித்து விட்டு வந்தது மீண்டும் திவ்ய தேசப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியது. 

Wednesday, 2 February 2022

இசைவும் மாற்றும்

காந்திய வழிமுறைகள் பலவற்றில் முக்கியமான ஒன்று மாற்றுக் கருத்து கொண்டிருப்பவர்களிடமும் தொடர்ச்சியான உரையாடலில் இருப்பது. காந்தி பிரிட்டிஷாரை எதிர்த்தார். எதிர்த்தவாறே அவர்களுடன் உரையாடலிலும் இருந்தார். மனிதத்தன்மையின் எல்லையை மீறி பிரிட்டிஷார் நடந்து கொண்ட போது கூட பிரிட்டிஷ் அமைப்புடன் தொடர்ச்சியான உரையாடலில் இருந்தார். மனிதர்கள் திரண்டிருக்கும் எந்த ஒரு அமைப்புமே முழு எந்திரமாக ஆகி விடுவதில்லை என்பதையும் அதன் ஒரு மிகச் சிறு பகுதியேனும் மனிதத் தன்மை கொண்டிருக்கும் என்பதையும் காந்தி நம்பினார். பிரிட்டிஷ் அரசின் வைஸ்ராய்கள், பிரதமர்கள், கட்சித் தலைவர்கள் என அனைவரிடமும் தனிப்பட்ட கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். பிரிட்டிஷ் அரசில் பலர் காந்திக்கு தனிப்பட்ட நண்பர்களாக இருந்துள்ளனர். 

இன்று தமிழ்நாட்டின் சாமானிய அரசியல் பிரக்ஞை அரசமைப்பு என்பதை எதிர்மறைத் தன்மையுடனே அணுகுகிறது. அரசாங்கம் என்பது மிகப் பெரிய அமைப்பு. இலட்சக்கணக்கான மனிதர்களால் ஆனது. கோடிக்கணக்கான மனிதர்களால் ஏற்கப்படுவது. மக்களாட்சியில் அரசாங்கத்துக்கும் பொது மக்களுக்குமான பொது அம்சம் என்பது எந்த சட்டம் பொது மக்களை வழிமுறைப்படுத்துகிறதோ அதே சட்டம் தான் அரசாங்கத்தையும் வழிமுறைப்படுத்துகிறது என்பதே. ஒரு பெரிய அமைப்பு செயல்படும் போது நிச்சயம் பலவிதமான அபிப்ராயங்களும் அபிப்ராய பேதங்களும் உருவாகும். இது இயல்பானது. ஊழல் மிகப் பெரிய சிக்கல். அதிகார அமைப்பின் மனத்தில் ஊழலை நிலைபெறச் செய்து விட்டு நம் நாட்டை விட்டு அகன்றிருக்கிறது பிரிட்டிஷ் ஆட்சி. சாமானிய மக்கள் ஒட்டு மொத்த அரசமைப்பையும் ஊழல் மிக்கதாக நினைக்கிறார்கள். அது பகுதி உண்மை ; முழு உண்மை அல்ல. அரசமைப்பில் இருக்கும் ஊழலைக் களைய அரசாங்கத்துக்குள்ளேயே பல்வேறு அமைப்புகள் உள்ளன. அவை தங்கள் கவனத்துக்கு வரும் விஷயங்களில் கணிசமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் செய்கின்றன.  மனித உரிமைகள் ஆணையம், சென்ட்ரல் விஜிலென்ஸ், கணக்குத் தணிக்கை அமைப்புகள் ஆகியவையும் அரசாங்கத்தின் பகுதிகளே. அவை குறித்த விழிப்புணர்வு தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. 

அரசு அலுவலகங்களுக்குச் செல்ல நேரிடும் போது அவற்றின் சட்ட திட்டங்கள் குறித்த அறிதலோடு செல்கிறேன். அங்கே நிகழ வேண்டிய செயல்கள் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கிறதா என்பதை சரிபார்க்கிறேன். அவ்வாறு நிகழவில்லை என்றால் அதனை நிகழ்த்துவதற்கு அதனை எங்கு கொண்டு செல்ல வேண்டுமோ அங்கு கொண்டு செல்கிறேன். 

அரசு அலுவலகங்களில் மூன்று மணி நேரத்தில் நடக்க வேண்டிய வேலையைச் செய்ய மூன்று மாதங்கள் கூட ஆக்குகிறார்கள் என்பது உண்மை. இந்நிலை மாற வேண்டும் என்ற கரிசனம் கொண்டவர்கள் அதிகார அமைப்பை வேலை செய்ய வைக்க அதற்குள் இருக்கும் உயர் அமைப்புகளின் உதவியையும் துணையையும் கொண்டும் செயல்பட வேண்டும். 

சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் இது. என் நண்பர் ஒருவர் வெளிநாட்டில் இருந்தார். அவரது அம்மாவின் பெயரில் மனை வாங்க விரும்பினார். நில உரிமையாளருக்கு அவருடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தச் சொன்னேன். பத்திரப் பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு நண்பருக்கு உதவினேன். பத்திரப் பதிவு அலுவல்கம் சென்ற போது அங்கு எழுதப்பட்டிருந்த விதிகளைப் பார்த்தேன். அதில் பத்திரம் முத்திரைத் தாளாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற விதியைப் பார்த்தேன். எனது நண்பரின் பத்திரத்தை சாதாரணத் தாளில் உருவாக்கி முத்திரைக் கட்டணத்தை வங்கி வரைவோலையாக செலுத்தி விட்டேன். பத்திரப் பதிவு இனிதே நடந்தது. இதனால் ஆயிரம் ரூபாய் மிச்சம். 

அன்று அது பத்திரப் பதிவு அலுவலகத்தாலும் நிலம் விற்பவராலும் பத்திரம் எழுதுபவராலும் நூதனமாகப் பார்க்கப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து அரசு  பதிவுக் கட்டணத்தை முழுமையாக இணையம் மூலம் செலுத்த வேண்டும் என்றும் முத்திரைக் கட்டணத்தை இணையம் மூலமாகவோ அல்லது முத்திரைத்தாளாகவோ செலுத்தலாம் என்ற  நடைமுறையைக் கொண்டு வந்தது. 


Tuesday, 1 February 2022

விழிப்பு

தமிழ்ச் சமூகத்தில் நான் ஒரு விஷயத்தைக் கவனித்தது உண்டு. இங்கே சமூகம் சார்ந்தோ பொருளியல் சார்ந்தோ சட்ட்ம் சார்ந்தோ பரவலான விழிப்புணர்வு கிடையாது ; அதன் விரிவாக்கமாக இவை சார்ந்து பெரும் அறியாமை மட்டுமே நிலவுகிறது. சராசரி தமிழ் மனம் தான் அரசியல் பிரக்ஞை கொண்டிருப்பதாக எண்ணுகிறது. ஆனால் அரசியல் பிரக்ஞையின் அடிப்படையான பாடம் என்பது அதிகார அமைப்பு சமூகத்தில் எவ்விதம் நிலை கொண்டுள்ளது என அறிந்திருப்பதே தவிர அரசியல் கட்சிகளின் பின்னால் செல்வது அல்ல என்பதை உணர்ந்திருப்பது.

சட்டமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை என்பது இந்திய அரசியலின் அடிப்படையான கட்டுமானங்கள். அதில் அதிகார வர்க்கமே பெரும் அதிகாரம் கொண்டது. அரசியல்வாதிகள் ஐந்து ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருப்பார்கள். அரசு அதிகாரிகளே முப்பது ஆண்டுகளுக்கு மேல் பதவி வகிப்பவர்கள். நீதித்துறையின் அதிகாரம் நுட்பமானது ; ஆனால் மிக உறுதியானது. 

தமிழ்நாட்டில், தமிழ் மக்கள் சட்டமன்றம் மூலம் நிகழும் செயல்பாடுகளே அரசின் செயல்பாடுகள் என எண்ணுகிறார்கள். இது பொதுவான மக்களின் புரிதல். ஆனால் எந்த அரசுக்கும் முழு முற்றான அதிகாரம் இல்லை. எந்த அதிகாரிக்கும் கூட முழு முற்றான அதிகாரம் இல்லை. அவர்கள் அனைவரும் நீதித்துறைக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள். சட்டத்தைத் தாண்டி செயல்பட்டால் நீதித்துறையால் தண்டிக்கப்படக் கூடியவர்கள். 

மக்களிடம் சட்டம் குறித்து குறைந்தபட்ச விழுப்புணர்வு உண்டானால் கூட அரசு இயங்கும் முறையில் பெரும் மாற்றங்கள் இயல்பாக நடக்கத் துவங்கும். குடிமக்கள் தங்கள் பல தேவைகளை சட்டபூர்வமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். நீதிமன்றத்தில் தான் சட்டம் செல்லுபடியாகும் என்றல்ல எல்லா அலுவலகங்களிலுமே சட்டத்தின் படி மட்டுமே அதிகாரிகளால் செயல்பட முடியும். இதனைக் கூறும் போது, என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்படும். எல்லா இடத்திலும் சட்ட மீறல் இயல்பாக பழகியிருக்கிறதே என்பதே. அதற்கு நான் அளிக்கும் பதில் சட்டம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருக்கும் சமூகத்தில் சட்ட மீறல் இயல்பாக நடக்கும். ஏனென்றால் மீறலை நிகழ்த்துபவர்களுக்கு நன்றாகத் தெரியும் இதனால் பாதிக்கப்படும் யாருக்கும் சட்டம் தெரியாது என. 

சமீபத்தில் ஒரு நண்பர் தனது நிலத்தில் தேக்கு பயிரிட விரும்பினார். ஆனால் அவருக்கு அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டுமா என்று ஐயம். உங்கள் நிலத்தில் நீங்கள் மரம் வளர்க்க அரசாங்க அனுமதி எதற்கு என்று கேட்டேன். அவர் ஐயம் தீரவேயில்லை. இப்போது அனுமதி பெறாமல் வைத்து விட்டால் பல ஆண்டுகள் கழித்து வெட்டும் போது சிக்கலாகி விடுமா என்ற அச்சம் அவருக்கு. அவ்வாறெல்லாம் ஆகாது என்பதை விளக்கினேன். முதலில் தேக்கு மரம் நடுங்கள். பின்னர் அந்த விபரத்தை ஒரு கடிதம் மூலமாக கிராம நிர்வாக அலுவலருக்குத் தெரிவித்து ‘’அடங்கல்’’ என்ற நில ஆவணத்தில் அதனைப் பதிவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள். அது ஒரு மிகப் பழைய முறை. அவ்வாறு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்றேன். 

சமீபத்தில் இன்னொரு நண்பர் தனது வயலில் மின் கம்பிகள் தொடர்ந்து திருடு போவதாக காவல்துறையிடம் புகார் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். அவர் வயதான விவசாயி . எண்பது வயதானவர். ஊக்கத்துடன் விவசாயம் செய்கிறார். மின்கம்பிகள் திருடு போனதால் வயலில் உள்ள நெற்பயிருக்கு நீர் பாய்ச்ச முடியாத நிலை. மாற்று ஏற்பாடு செய்தார். காவல் நிலையம் செல்ல என்னையும் அழைத்தார். உடன் சென்றேன். புகாரை பெற்றுக் கொண்டனர். புகார் பெற்றுக் கொண்டதற்கு ஒப்புகை தருமாறு கேட்டோம். இடத்துக்கு நேரில் வந்து விசாரிப்பதாகக் கூறினார்கள். வந்து விட்டோம். ஒரு மாதம் ஆனது. எந்த விசாரணையும் இல்லை. பின்னர் நண்பர் புகாரை காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு அனுப்பி விட்டார். இது நிகழ்ந்த பின் காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்து விட்டு சென்றனர். 

பதவியேற்பின் போது, ‘’இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பால் மாறாப் பற்று கொண்டிருப்பேன்’’ என்றே அனைவரும் பதவியேற்கிறார்கள். சட்டத்தின் ஆட்சி என்பதும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுமே மக்களாட்சியின் மாண்பு. அது விழிப்புணர்வு கொண்ட சமூகத்தில் மட்டுமே நிகழ முடியும்.