சில நாட்களுக்கு முன், டூ-வீலரில் சென்று கொண்டிருந்த போது வண்டி அலைவது போல் தோன்றியது. வீட்டிலிருந்து 300மீட்டர் தூரம் சென்றிருப்பேன். நான் அப்போது இருந்த இடம் ஒரு பிரதான சாலை. அங்கே ஒரு இடத்தில் பழைய கார் லாரி டயர்களைப் போட்டு வைத்திருந்தார்கள். காற்று பிடிக்கும் கம்ப்ரஸர் இருந்தது. அங்கே சென்றேன். அது ஒரு சிறிய பரப்பு கொண்ட வீடு. வீட்டின் முன் பகுதி பஞ்சர் கடையாக இருந்தது. வண்டியை அந்த வீட்டின் முன் நிறுத்தி விட்டு உள்ளே இருப்பவர்களை அழைத்தேன். வெளியே வந்தது ஒரு சிறுமி.
‘’பஞ்சர் பார்க்கணும்’’ என்றேன்.
‘’வண்டியை கொஞ்சம் தள்ளி நிறுத்தி செண்டர் ஸ்டாண்ட் போடுங்க’’ . நான் சிறுமி கூறியவாறு செய்தேன். உள்ளேயிருந்து உபகரணங்களுடன் எவரேனும் வருவார்கள் என எண்ணினேன். உபகரணங்களை எடுத்துக் கொண்டு அந்த சிறுமியே வந்தாள். வண்டியின் பின் சக்கரத்தை வண்டியிலிருந்து நீக்கத் தொடங்கினாள். பின் சக்கரத்தில் லீவரைக் கொடுத்து சக்கரத்தின் உள்ளிருக்கும் டியூபை வெளியே எடுத்தாள். எனக்கு ஒரே ஆச்சர்யம். சக்கரத்திலிருந்து டியூபைப் பிரிப்பது அவ்வளவு எளிய பணி அல்ல. எனினும் அதனை சர்வ சாதாரணமாகச் செய்தாள். பத்து நிமிடத்தில் பஞ்சர் பார்த்து வண்டியை தயார் செய்து விட்டாள்.
அப்போது ஒருவர் காற்று பிடிக்க வந்தார். அவர் அச்சிறுமியிடம் ‘’ இன்னும் ஸ்கூலுக்கு கிளம்பலயா?’’ என்று கேட்டார். அப்போது நேரம் காலை 8.15.
‘’9.30 க்கு தான் ஸ்கூல்’’ என்றாள் அச்சிறுமி.
அவளிடம் என்ன வகுப்பு படிக்கிறாய் என்று கேட்டேன். அவள் ஒன்பதாம் வகுப்பு மாணவி. சிறு வயதிலிருந்தே அவளுக்கு இரு சக்கர வாகனங்கள் மேல் ஆர்வம் இருந்திருக்கிறது. அவளது தந்தை பஞ்சர் ஒட்டும் போது உடனிருந்து உதவிகள் செய்திருக்கிறாள். ஒரு சூழ்நிலையில் அவளது தந்தை உடல்நலம் குன்றியிருந்த போது தானே பஞ்சர் ஒட்டத் தொடங்கியிருக்கிறாள். பள்ளி நேரம் போக வீட்டில் இருக்கும் மற்ற நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் பஞ்சர் ஒட்டுவதுண்டு.
எனக்கு அச்சிறுமி சொன்ன விஷயங்கள் ஆச்சர்யம் அளித்தன. பஞ்சர் ஒட்டியதற்கான கட்டணத்தை அளித்து விட்டு புறப்பட்டேன். அன்று முழுக்க அன்று காலை நடந்த சம்பவம் நினைவில் இருந்தது.
அன்று மாலை அச்சிறுமிக்கு ஏழு புத்தகங்களை எடுத்துச் சென்று கொடுத்தேன். அவளது ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் பாராட்டி.
அவளுடைய பெயர் என்ன என்று கேட்டேன். அவள் சொன்னாள். அவள் பெயரின் பொருள் ‘’பெருஞ் செல்வம்’’ என்பதாகும். உன் பெற்றோருக்கும் நீ வாழும் சமூகத்துக்கும் நீ பெருஞ் செல்வம் என்று அவளிடம் சொன்னேன். அவள் பெரிதும் மகிழ்ந்தாள்.