Saturday, 31 March 2018

யாம் எழுவோம்

யாம் எழுவோம்
எங்கள் பலவீனங்களிலிருந்து
தன்னலக் கண்ணிகளால் ஓயாது வீழும் சேற்றிலிருந்து
நம்பிக்கையின்மையின்மைகளிலிருந்து
அறியாமை அளிக்கும் நிரந்தரமான இருளிலிருந்து
எப்போதும் உடனிருக்கும் ஐயங்களிலிருந்து

உதயத்தின்
செந்நிறச் சூரியன்
அலைகளிலிருந்து எழும்
வான் சுழலும்
கொற்றப்புள்
மர உச்சியில்
அமரும்
புல்நுனி
மேலும்
மேலெழும்
ஒவ்வொரு நாளிலும்

யாம் எழுவோம்

தண்டவாளப் பாதை

சிறுவர்கள் ஆடும் மைதானத்துக்கும்
புதர்ப்பரப்புக்கும்
இடையே இருக்கிறது
தண்டவாளப் பாதை

கிரிக்கெட் பந்து
கடந்து செல்கிறது
தண்டவாளப் பாதையை

இப்படியும்
அப்படியும்
இப்படியும் அப்படியும்
செல்லும் ரயில்கள்
போன
பிறகு

Friday, 30 March 2018

நெடுஞ்சாலைப் புளியமரங்கள்



மாலை
வீட்டு வாசலில்
அவசர அவசரமாய் 
கதவைத் தட்டும்
சீருடையில் புழுதி பூசிய
பள்ளிக் குழந்தைகள்
போல்
நிற்கின்றன
நெடுஞ்சாலைப் புளியமரங்கள்

முன்பெல்லாம்
வருடா வருடம்
ஊர் ஏலத்தில்
புளியம்பழத்துக்காக
மட்டும்
உலுக்கப்படுபவை
இப்போது
ஜே சி பி யால்
அடிக்கடி
பெயர்க்கப்பட்டு
விறகுகளாகின்றன
சாலை விரிவாக்கத்துக்காக

இல்லாமல் போனாலும்
அங்கொன்றும் இங்கொன்றும்
இருந்தாலும்
சாலையின் 
சாலை பற்றிய நினைவுகளில்
நீங்காமல் இருக்கின்றன
புளியமரங்கள்

நெடுஞ்சாலைப் புளியமரங்கள்



Thursday, 29 March 2018

தொலைதூரம்

நீ
முன்கோபம் கொண்ட தருணங்கள்
கூராய் வார்த்தை இறக்கிய நிகழ்வுகள்
கேலிப் புன்னகை பூத்த வினாடிகள்
மெல்ல சீண்டிய சொற்கள்
திட்டமிட்ட மௌனங்கள்
முகம் பொத்தி அழுத நாட்கள்
வேறாய் விலக்கியிருந்த இடைவெளிகள்
மறவாத குறிப்புகளாக
மிதக்கின்றன
மணற் திட்டுகளாக

அன்பின் 
பிரியத்தின்
காதலின்
எத்தனையோ பொழுதுகள்
தொலைதூர ஞாபகங்களாகின்றன
பாலை நிலத்தின்
தூர மலைகளாக
குன்றுகளாக

Wednesday, 28 March 2018

சலனமுறும்



ஏரியாய் சலனமுறும்
சமுத்திரத்திற்கு
எதிரே
ஒரு பழைய கருங்கல் கோட்டை

சர்பத் கடைக்காரன்
அன்றாடத்துக்கு
அப்பால்
வரலாற்று நினைவுகள்

ஆட்டோவில் வந்த
ஒரு குடும்பம்
கருங்கல் கோட்டை
சர்பத் கடைக்காரரிடம்
கண்ணாடி டம்ளரில்
சர்பத் வாங்கி
அருந்தியபடி
பார்க்கிறார்கள்

ஏரியாய் இல்லாத சமுத்திரத்தை
வரலாறு இல்லாத கோட்டையை

ஐந்து நிலம்

கடற்கரையில்
அலை நனைக்கும் கால்களில்
ஒட்டிக் கொள்ளும் நுரை
காணாமல் போகிறது
உடனே

மொட்டை மாடியில்
படுத்திருக்கும்
ஆரம்ப நிமிடங்களில்
நீங்காமல் இருக்கிறது
பெருஞ்சுமை

நான்
காணாமல் போகும் காட்டில்
நிகழ்கிறது
மறுபிறப்பு

இரண்டு குன்றுகளுக்கு
இடைப்பட்ட
குறுகிய பாதை
கடக்கப்படும் போது
முகத்தில் அறைகிறது
தண்ணென்னும் காற்று

ஆர்வத்துடன் காண்கின்றன
வானத்து மீன்கள்
பாலைவனத்தின் ஒற்றைப் பயணியை

20.03.2018
10.15

Tuesday, 27 March 2018

கடைசிக் கதிர்


கடைசிக் கதிரின் காட்சியில்
இருக்கின்றன
ஓர் இள வயது முதல் துக்கம் 
காதலியைக் கைவிட்ட பொழுது
பிறர் கண்ணீர் அர்த்தம் அளிக்காத நாள்
பலி கொடுத்த நட்பு
மகத்தானவற்றிலிருந்து விலகிய தூரம்

ருத்ரப் பிரயாகை


பெரும் புயலாய் காற்று வீசிய நாளில்
அன்றும்
கால நதியில் மிதந்து கொண்டிருந்தன உயிர்கள்
நதி அரிக்கும் மணல் கீழிருக்க
எனது கவசங்களைத் துறந்து
நின்று கொண்டிருக்கிறேன்
ஊழிக் கூத்தின் முன்பு
கருப்பையின் அசைவுகளாய்
புவியும் இருளும் 
நான் பெருகிக் கொண்டேயிருக்கிறேன்
மணல் துகள் எண்ணிக்கையில்
ருத்ரப் பிரவாகமாக

Monday, 26 March 2018

உன்னை எப்படிக் கையாள்வது?

உன்னைச் சந்தித்த நாளிலிருந்தே
எனது ஆகப் பெரிய சிக்கலாய் இருப்பது
உன்னை எப்படிக் கையாள்வது என்பது

பெயரும் நட்சத்திரங்கள் போல
உனது விருப்பங்கள் மாறி விடுகின்றன
உனது தேர்வுகள் மாறி விடுகின்றன
உனது ரசனைகள் மாறி விடுகின்றன

எப்போதும் ஒரு அடி முன்னால் இருக்கிறாய்
எனது கணிப்புகளின் எல்லைக்கு
ஒரு கண்ணாடியைக் கையில் வைத்திருப்பது போல
ஒரு பந்தை சுழற்றிக் கொண்டிருப்பது போல
ஒரு கத்தியை கரத்தில் வைத்திருப்பது போல
உன்னை ஏந்தும் தருணங்கள் இருக்கின்றன

கையாளத் தெரியாததை கையாள்வதின் 
 பதட்டம்  இல்லாமல் இருக்கிறது
உன்னை எதிர்கொள்ளும் போது

உன்னைச் சந்தித்த நாளிலிருந்தே
எனது ஆகப் பெரிய சிக்கலாய் இருப்பது
உன்னைக் கையாள்வது எப்படி
என்பது


Sunday, 25 March 2018

உடனும் தொலைவும்

உன் 
உடன் 
நடந்த போது
நீ நிலவைக் காட்டினாய்

அக்கணத்தின்
எதிர்பாராமையால்
திணறி
நிலைப்படுத்தினேன்

நீ
சொல்லிக் கொண்டே போனாய்
நதிக்கரையின் வசந்தங்களை
ஆறு பெருக்கெடுத்த நாட்களை
ஆலய நாகஸ்வர இசையை
கண்டாமணியின் நள்ளிரவு ஒலித்தல்களை
தேவாலயத்தின் திருமண விழாவை
அதிகாலைத் தொழுகை அழைப்பை

காட்சிப்படுத்திக் கொள்ளவோ
ஒலியாய் கேட்கவோ 
இயலாமல்

உன்னைப் பார்த்துக் கொண்டு
வந்தேன்
உடனும்
தொலைவும்