Tuesday, 30 November 2021

நிறை

மாலை அந்தி
நீர் சூல் கொண்ட மேகங்கள்
நிறைந்திருக்கும்
மழைக்காலம்
இரண்டிரண்டு மேகங்கள் இடையே
பளிச்சென சில விண்மீன்கள்
மழைக்காலத்தில் சீக்கிரமாய் வந்துவிடும்
இருள்
ததும்பிக் கொண்டிருக்கிறது
தனியே நிற்கிறது
கிராமத்துச் சாலை 
ஏகாந்தமான அந்த இடத்தில்
ஏகாந்தமான அந்த பொழுதில்
ஏகாந்தமான அந்த கணத்தில்
நிறைகின்றன
உனது நினைவுகள்

Monday, 29 November 2021

நன்றி


சமூக வாழ்க்கை என்பது கூட்டு வாழ்க்கையே. உயிர்கள் அனைத்தையும் சமமாகக் காண்பது என்பதே இந்தியப் பண்பாடு உலகுக்கு அளித்த கொடை. மேலான சக வாழ்வை நோக்கி நகர்வதே மானுட விடுதலையாக இருக்க முடியும். 

மயிலாடுதுறை அருகில் உள்ள கிராமம் ஒன்றில் நவம்பர் 12 தொடங்கி ஆறு நாட்கள் நண்பர்களின் ஆதரவால் தினமும் 500 பேருக்கு உணவளித்தோம். இது முற்றிலும் நண்பர்களால் மட்டுமே சாத்தியமானது. அவர்களின் உணர்வு மகத்தானது. சொந்த நிதி அளித்ததோடு தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் இந்த செயல் குறித்து கொண்டு சென்று அவர்களையும் இதில் பங்கு பெறச் செய்தார்கள். தினமும் நிகழும் நிகழ்வுகளை ஆர்வத்துடன் கேட்டறிந்தார்கள் ; ஊக்கம் அளித்தார்கள்; செயல்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதில் எப்போதும் உடனிருப்போம் என்றார்கள்.  அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தியாவின் சாமானிய மக்களுக்கு சக மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் விருப்பமும் பெரிய அளவில் இருக்கிறது. சமூகச் செயல்பாட்டாளனாக நாளும் நான் உணரும் விஷயம் இது. சக மனிதனை அவன் இருக்கும் இடத்தில் சந்தித்தோம் என்றால் அவனை நம்மால் மேலும் புரிந்து கொள்ள முடிகிறது. 

ஆறு நாட்களும் சமையல் செய்து கொடுத்த சமையல்காரர்கள் மிகச் சுவையான உணவை சமைத்து நேரத்துக்கு அளித்தார்கள். அவர்களுக்கு நன்றி. சமையல் என்னும் கலையின் ஆரம்ப பாடத்தினை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன்.  

ஊர் மக்கள் தங்கள் அன்பாலும் பிரியத்தாலும் இதயத்தை நிறையச் செய்தார்கள். அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். 

‘’காவிரி போற்றுதும்’’ நுண் செயல்பாடுகளாக தமது பணிகளை முன்னெடுக்கிறது. நுண் அளவில் விஷயங்களைத் திட்டமிடுதலும் செயல்படுத்தலுமே அதன் வழிமுறைகள். ஒரு தீபச் சுடர் ஒரு அறையின் இருளை சில கணங்களில் நீக்குவது போன்ற எளிய முறைகள் நம் செயல்முறைகள். நம்மிடம் எப்போதும் செய்வதெற்கென பணிகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. 
 

மழைநீர்

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

-திருக்குறள், வான் சிறப்பு

{பெருங்கடலும் நீர் இன்றி வற்றிப் போகும்; வான் மேகம் மழையைப் பொழியவில்லை எனில். }

என்னுடைய தொழில் சார்ந்து நான் எழுதிய பதிவுகள் வாசகர்கள் பலரால் மிக ஆர்வத்துடன் வாசிக்கப்பட்டன. பலர் தங்கள் மகிழ்ச்சியை மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி உரையாடலிலும் தெரிவித்தனர்.  என்னுடைய கல்லூரிப் படிப்பு முடிந்த பின்னர் கட்டிடத் துறையில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற தீரா விருப்பம் எனக்கு இருந்தது. 

அப்போது நான் பல விஷயங்களை யோசித்திருக்கிறேன். நான் கல்லூரி முடித்த அதே ஆண்டில் அக்டோபர் நவம்பர் ஆகிய மாதங்களின் ‘’தி இந்து’’ நாளிதழை சேகரித்து வைத்தேன். அதில் காலநிலை குறித்த பக்கத்தில் இந்தியாவின் முக்கிய மாநகரங்களிலும் நகரங்களிலும் அன்றன்றைய மழைப்பொழிவு எவ்வள்வு என்ற விபரம் அளிக்கப்பட்டிருக்கும். அதில் நாகப்பட்டினமும் உண்டு. அக்டோபர் ஒன்றாம் தேதி நாகப்பட்டினத்தில் மழை எவ்வளவு அடுத்த நாள் எவ்வளவு என ஒவ்வொரு நாளுக்கும் அட்டவணை போட்டுக் கொண்டேன். 1000 சதுர அடி கொண்ட வீட்டின் மாடியில் இத்தனை செ.மீ மழைக்கு எவ்வளவு மழைநீர் சேகரமாகும் என்று கணக்கிட்டேன். ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்று கணக்கீடு காண்பித்தது. மழைநீரை பூமியில் செலுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்து ஒரு கவனம் அப்போது உருவாகி வந்தது. நான் மழைநீரை சேகரிக்கும் விதமாக பெரிய அளவிலான நீர்த்தேக்கத் தொட்டிகளை ஒவ்வொரு வீட்டிலும் அமைக்கும் வகையில் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அந்த எண்ணத்தின் நீட்சியாக வீடுகளின் தரைத்தளத்திலோ அல்லது மாடியிலோ 10 அடி நீளம் 10 அடி அகலம் 10 அடி உயரம் கொண்ட ஒரு அறையை நீர்த்தொட்டியாக மாற்றி ஆண்டு முழுதுக்கும் தேவைப்படும் தண்ணீரை அதில் சேர்த்து வைப்பதன் சாத்தியங்கள் குறித்து பரிசீலித்தேன்.

பின்னாட்களில், தமிழ்நாட்டின் வறட்சி மிக்க மாவட்டங்களில் சிலர் வீட்டில் தரைத்தளத்திலோ முதல் தளத்திலோ 10 அடிக்கு 10 அடி அளவுள்ள 10 அடி உய்ரம் கொண்ட  ஒரு அறையை ஜன்னல்கள் இல்லாமல் கட்டி பெரிய தண்ணீர் தொட்டியாகப் பயன்படுத்துவதை அறிய நேரிட்ட போது மகிழ்ச்சியாக இருந்தது. 100 சதுர அடி கொண்ட அறையில் 30,000 லிட்டர் தண்ணீரை சேகரித்து வைக்க முடியும். பருவ மழை மற்றும் கோடை மழை மூலம் வருடத்தில் மூன்றில் ஒரு பங்கு நாட்களுக்கான தண்ணீர் தேவையை நிலத்தடி நீர் இல்லாமலே அடைய முடியும்.  தேவையே கண்டுபிடிப்பின் தாய்  என்று சொல்வார்கள். 

சமீபத்தில், ஒரு காலிமனையில் கட்ட இருக்கும் கட்டிடம் ஒன்றில் தரைத்தளத்தில் பாரம்பர்யமான முறையில் ஒரு கிணறு வெட்டி அக்கட்டிடத்தில் மாடியில் சேகரமாகும் மொத்த மழைநீரையும் அந்த கிணற்றில் கொண்டு சேர்க்கும் விதத்தில் திட்டமிட்டு அதற்கு அந்த கட்டிட உரிமையாளரின் இசைவைப் பெற்றுள்ளேன். 

Saturday, 27 November 2021

மரபு

தமிழ் நாட்டில் மரபான தமிழ்க்கல்வி என்பது ஆறு அல்லது ஏழு வயதில் துவங்கியிருக்கிறது. இலக்கிய இலக்கண நூல்களை மனப்பாடம் செய்ய வேண்டும். ஆசிரியர் அந்நூல்களின் செய்யுள்களை பதம் பிரித்து சொல்லும் பாடத்தைக் கேட்டுக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விதம் கற்க வேண்டும்.  இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேதங்கள் இவ்வாறே பயிலப்பட்டு வந்தன. சொல் என்னும் விதை மனம் என்னும் நிலத்தில் ஊன்றப்பட்டு முளைத்தெழும் வகையிலான கல்வி முறை அது.  வேதம் எழுதாக் கிளவியாக பல தலைமுறைகளுக்கு அளிக்கப்பட்டதும் அவ்வாறே. வேத பாடசாலைகளின் வடிவத்திலேயே மரபான தமிழ்க்கல்வியும் நிகழ்ந்திருக்கிறது. நடைமுறைக் கணிதமும் இங்கே மனப்பாடமாக இருந்திருக்கிறது. 

மரபான தமிழ்க்கல்வி இன்று மிக எளிய வடிவத்திலாவது ஏதேனும் ஒரு விதத்தில் தொடர வேண்டும். தமிழின் மிக முக்கியத் தேவை இது. 

Friday, 26 November 2021

வாசகர்

இன்று அமெரிக்காவிலிருந்து ஒரு வாசகர் பேசினார். என்னுடைய வலைப்பூவை தொடர்ந்து வாசிக்கக் கூடியவர். ‘’காவிரி போற்றுதும்’’ முன்னெடுக்கும் செயல்பாடுகள் குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். ‘’காவிரி போற்றுதும்’’ மக்கள் ஒருங்கிணைப்பை உருவாக்குவதை தனது பணிப் பாணியாகக் கொண்டது. எனவே அதன் செயல்பாடுகளின் வெற்றி முழுக்க முழுக்க  மக்களையே சாரும். எனவே பணி குறித்த எல்லா நற்சொற்களையும் வான் நோக்கி ‘’ ராம் கிருஷ்ண ஹரி’’ என்று சொல்லி இறைவனுக்கு அர்ப்பணித்து விடுகிறேன்.  

வலைப்பூவில் எழுதிய ‘’யானை பிழைத்தவேல்’’ தொடரை தொடர்ந்து வாசித்திருக்கிறார்.  அதன் பின் தினம் மூன்று கம்ப ராமாயணப் பாடலை வாசித்து அவற்றை அவர் திறக்கும் விதத்தை விரிவாக எழுதி வைத்திருக்கிறேன் என்று சொன்னார். அவற்றை எனக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டேன். கம்பன் கவி குறித்து சொல்வதற்கு அவருக்கு நூறு நூறு சொற்கள் இருக்கின்றன. கடந்த ஓராண்டாக கம்பனைத் தொடர்ந்து வாசிப்பதால் அவருக்குள் ஏற்பட்ட பல நுண் உணர்வுகளைத் தெரிவித்தார். அமெரிக்காவின் பூங்காக்களில் மலர்ந்திருக்கும் மலர்களைக் காண கம்பன் மேலும் இரண்டு கண்களை அளித்து விட்டதாக சொன்னார். 

பால், காஃபி , தேனீர் தவிர்த்திருப்பது குறித்து எழுதிய பதிவை வாசித்து விட்டு அதன் பாதிப்பில் அவரும் அவற்றைத் தவிர்த்து விட்டு இப்போது ‘’பிளாக் டீ’’ மட்டும் அருந்துவதாகச் சொன்னார். எனக்கு ஒரு ஜென் கவிதை நினைவில் வந்தது. அதனை அவரிடம் சொன்னேன். 

தேனீர் என்பது இவ்வளவுதான்
முதலில் தண்ணீரைக் கொதிக்க விடு
பிறகு தேயிலைப் போட்டுக் கலக்கு
பிறகு உரிய விதத்தில் அருந்து
இது தெரிந்தால்
போதும் உனக்கு

Thursday, 25 November 2021

நர்மதை நதி வலம்

 
நூல் : நர்மதை நதி வலம்     ஆசிரியர் : கே. கே. வெங்கட்ராமன்    தமிழாக்கம் :    C. வரதராஜன்    வெளியீடு : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் , மயிலாப்பூர் , சென்னை-4 விலை : ரூ. 40/-

புராணத்தில் ஒரு கதை உள்ளது. புண்ணிய நதிகள் அனைத்தும் வான் உலகில் இருந்தன. அப்போது சிவபெருமான்  அந்நதிகளிடம் புவியில் வாழும் மனிதர்களை உய்விக்க அங்கு செல்ல எவருக்கு விருப்பம் உள்ளது என்று வினவுகிறார். நர்மதை தான் முதலில் பூமிக்குச் செல்வதாகக் கூறி பூமியை வந்தடைகிறாள். அன்றிலிருந்து நர்மதை சிவனுக்கு மிகவும் பிரியம் கொண்ட நதியாகிறாள். சிவனின் ஜடாமுடியில் வசிக்கும் கங்கையே ஆண்டுக்கு ஒருமுறை காராம் பசு உருவெடுத்து நர்மதையில் புனித நீராடிச் செல்கிறாள். 

நர்மதை நதிக்கரையில் மிக அதிக எண்ணிக்கையில் சிவாலயங்கள் உள்ளன. வட இந்தியாவில் ’’நர்மதா பரிக்ரமா’’ என்னும் நதி வலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோரால் மேற்கொள்ளப்படுகிறது. நர்மதை நதி உற்பத்தி ஆகும் அமர்கண்டக்கில் தொடங்கி நதி நம் வலப்பக்கமாக வர மேற்கு நோக்கி நதி கடலில் சங்கமம் ஆகும் சங்கமஸ்தானம் வரை நடந்து செல்ல வேண்டும். அங்கே நர்மதையை படகின் மூலம் கடந்து நதிக்கு வடதிசைக்குச் சென்று நர்மதையின் உற்பத்திஸ்தானமான அமர்கண்டக் வரை நடந்து செல்ல வேண்டும். நர்மதை ஆற்றின் நீளம் 1200 கி.மீ. இந்த நதி வலம் 2400 கி.மீ நீளம் கொண்டது. 

இந்த பயணத்துக்கென்று தனிப்பட்ட விதிகள் உள்ளன. 

1. நர்மதை நதி வலம் செல்பவர்கள் கையில் காசோ பணமோ வைத்துக் கொள்ளக் கூடாது. 

2. நதி வலத்தின் போது பிச்சையெடுத்துத்தான் உணவருந்த வேண்டும். ஒருவரிடம் பிச்சை கேட்டு அவர் மறுத்தால் மேலும் இருவரிடம் மட்டும்தான் பிச்சை கேட்க வேண்டும். மூவரும் மறுத்து விட்டால் அன்றைய உணவைத் துறந்து விட வேண்டும். 

3. நதி வலத்தின் போது காலில் காலணி அணியக் கூடாது. வெறும் காலுடனே நடக்க வேண்டும். 

4. நினைவில் நர்மதை அன்னையை மட்டுமே இருத்தி பயணம் மேற்கொள்ள வேண்டும். 

மேலும் சில விதிகளும் உண்டு. 

இந்திய ராணுவத்தில் பணி புரிந்த கேப்டனாகப் பணி புரிந்த திரு. கே.கே. வெங்கட்ராமன் அவர்கள் இந்த 2500 கி.மீக்கும் அதிகமான நடைப்பயணத்தை தனியாக மேற்கொள்கிறார். துவங்கிய தினத்திலிருந்து நான்கு மாதம் பத்து நாட்களில் பயணத்தை நிறைவு செய்கிறார். அந்த பயணத்தில் அவர் அறிந்த உணர்ந்த கேட்ட அடைந்த அனுபவங்களை ‘’நர்மதை நதி வலம்’’ என நூலாக எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

திரு. வெங்கட்ராமன் அவர்கள் ஐயப்ப பக்தர். ஆண்டுதோறும் சபரிமலைக்குச் செல்பவர். ஐயப்ப ஸ்தோத்திரத்தைச் சொன்னவாறே நர்மதை நதி வலத்தையும் மேற்கொள்கிறார். அவரது பயணப்பையில் சபரிமலை சாஸ்தாவின் படம் இருக்கிறது. 

ஆரம்ப சில நாட்களில் பிச்சை கேட்பது அவருக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. எனினும் நர்மதை நதிக்கரையில் வசிக்கும் மக்கள் நதி வலம் மேற்கொள்பவர்கள் மேல் காட்டும் அன்பையும் பிரியத்தையும் மரியாதையையும் காணும் போது அவர் மனம் காணும் அனைவரையும் தம் உறவாக எண்ண வைத்து விடுகிறது. 

ஒரு நாளைக்கு சராசரியாக 20 கி.மீ நடந்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருப்பதால் காலை 5 மணிக்கு எழுந்ததுமே நடக்கத் தொடங்கி விடுகிறார். நதியின் கரையிலேயே நடக்க வேண்டும். காலை 11 மணிக்குள் 10 கி. மீ தூரம் நடந்து அங்கே உள்ள கிராமத்தில் நர்மதை நதியில் குளித்து விட்டு பிச்சை கேட்டு பிச்சை அளிப்பவர் அளிக்கும் உணவை ஏற்று சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மதியம் 1 மணி அளவில் மீண்டும் கிளம்பி மேலும் 10 கி.மீ தூரம் சென்று அங்கே உள்ள கிராமத்தில் இரவு தங்கி விடுகிறார். 

தனிப்பயணி என்பதால் கிராம மக்கள் இவரைச் சூழ்ந்து கொண்டு நதி வல அனுபவங்களைக் கேட்கின்றனர். இராமாயண மகாபாரதக் கதைகள் குறித்து பேசுகிறார்கள். அந்த கிராம மக்களுக்கு வேதாந்த விஷயங்களில் கூட ஈடுபாடு இருப்பதைப் பதிவு செய்கிறார். 

100 கி.மீ க்கு பயணத்தில் வனப்பாதை இருக்கிறது. அங்கே இருக்கும் வனவாசிகள் பரிக்ரமா செல்பவர்களிடம் இருக்கும் தங்களுக்குத் தேவையான பொருட்களை மிரட்டி வாங்கிக் கொள்வது உண்டு. அவர்கள் பெண்களுக்கு எந்த தொந்தரவும் செய்ய மாட்டார்கள். ஆனால் ஆண்களிடம் அவர்கள் வேட்டியைக் கூட பிடுங்கி விடுவார்கள். வனப்பாதை துவங்கும் இடத்தில் ஒரு அற நிறுவனம் பரிக்ரமாவாசிகளுக்கு சாக்குப் பையை அளிக்கிறது. வனவாசிகளுக்கு சாக்குப்பை தேவைப்படாது. வேட்டியை இழந்தவர்கள் இந்த சாக்குப்பையை கட்டிக் கொள்ள வேண்டும். நூலாசிரியர் இந்த வனப்பாதையை பரிக்கிரமா செல்லும் ஒரு குழுவுடனே கடக்கிறார். அந்த குழுவில் இருக்கும் மற்ற உறுப்பினர்களிடம் வேட்டியைப் பறித்துக் கொள்ளும் வனவாசிகள் இவரை விட்டு விடுகிறார்கள். இவரிடமிருந்து தீப்பெட்டியையும் பிளேடையும் மட்டும் எடுத்துக் கொள்கின்றனர். 

ஒரு கிராமத்தில் பெரியவர் ஒருவரிடம் பிச்சை கேட்கிறார் நூலாசிரியர். அவர் ஒரு மளிகைக்கடைக்காரர். கடை வாசலில் ஒரு பெஞ்ச் இருக்கிறது. ஆனால் தரையைச் சுட்டிக் காட்டி அங்கே அமர் என ஆணையிடுகிறார். சினம் தவிர்க்க வேண்டும் என்ற நதி வல நெறியை மேற்கொள்வதால் அமைதி காக்கிறார் திரு. வெங்கட்ராமன். உணவு சமைத்துக் கொள்ளத் தேவையான மளிகைப் பொருட்களைக் கொண்டு வந்து தருகிறார் கடைக்காரர். தனக்கு சமைத்துக் கொள்ளத் தெரியாது என்று பணிவுடன் தெரிவிக்கிறார் நூலாசிரியர். உன் உணவை சமைத்துக் கொள்ளத் தெரியாமல் நீ என்ன பரிக்கிரமா செய்கிறாய் என ஆத்திரப்படுகிறார் கடைக்காரர். அவரிடம் நன்றி சொல்லி விட்டு நடக்கிறார் திரு. வெங்கட்ராமன். கொஞ்ச நேரத்தில் கடைக்காரரும் அவருடைய மனைவியும் பின்னால் வந்து தங்களை மன்னித்து தங்கள் வீட்டில் உணவருந்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள். அவ்வாறே செய்கிறார் நூலாசிரியர். மதிய உணவை அங்கே முடித்து புறப்பட ஆயத்தமானதும் அந்த ஊர் இளைஞர்கள் அன்று காலை நடந்ததைக் கேள்விப்பட்டு நீங்கள் எங்கள் ஊரைப் பற்றி எதிர்மறையான எண்ணத்துடன் போகக் கூடாது . எனவே இரவும் இங்கே தங்கியிருந்து எங்கள் உபசரிப்பை ஏற்று எங்களுக்கு ஆசியளித்துச் செல்ல வேண்டும் என்கின்றனர். அவர்கள் அன்பை மறுக்க வழியின்றி அங்கேயே தங்குகிறார். 

ஓர் ஏழைக் குடியானவரிடம் ஆசிரியர் பிச்சை கேட்கிறார். அவருக்கு உணவளிக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால் வீட்டில் வறிய நிலை. ஒரு இடத்தில் காத்திருக்குமாறு சொல்லி விட்டு தனது வீட்டுக்குச் சென்று மனைவியிடம் விஷயத்தைக் கூறுகிறார். குடியானவரின் மனைவி ஆசிரியரை வீட்டுக்கு அழைத்து வருமாறு சொல்கிறார். உணவு தயாரிக்க மளிகை இருக்கிறதா எனக் கேட்கிறார் குடியானவர் . நாளை ஒரு நாள் உணவுக்கு நம்மிடம் மளிகை இருக்கிறது. நாம் நாளை உணவருந்த இன்று ஒரு பரிக்ரமாவாசியைப் பட்டினி போடக் கூடாது என்று சொல்லி உடன் அழைத்து வருமாறு சொல்லி உணவு தயார் செய்து அளிக்கிறார் குடியானவரின் மனைவி. அந்த ஏழைக் குடியானவரின் வீட்டில் உணவருந்தியதை நெகிழ்வுடன் பதிவு செய்கிறார் நூலாசிரியர். 

தனியாகப் பயணிக்கும் நூலாசிரியரை நர்மதை நதிக்கரை மக்கள் ‘’பாபாஜி பாபாஜி’’ என்றே அழைக்கின்றனர். 

இராணுவத்தில் பணி புரிந்தவர் என்பதால் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் ஏராளமான வழிகளை உருவாக்கிக் கொள்கிறார். மாலையுடன் பயணம் முடிந்து தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கடிதம் எழுதுகிறார் திரு. வெங்கட்ராமன். பரிக்ரமா அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். அந்த கிராமவாசிகளின் உறவினர்களோ நண்பர்களோ 100 அல்லது 120 கி.மீ தொலைவில் இருந்தால் அவர்கள் முகவரியை அளித்து அதனைத் தனது தொடர்பு முகவரியாக அளிக்கிறார். நூலாசிரியரின் கடிதம் கண்டவுடன் அவர் கொடுத்திருக்கும் முகவரிக்கு அவரது உறவினர்கள் கடிதம் எழுதுகின்றனர். பரிக்கிரமாவாசிகள் நதிக்கரையில் தங்கியிருப்பார்கள் என்பதால் இவர் போய் சேரும் கிராமவாசிகள் இவரிடம் கடிதத்தை கொண்டு வந்து அளிக்கிறார்கள். இராணுவத்தின் துல்லியத் திட்டமிடல் இவருக்கு உதவி செய்கிறது. 

தெற்குப் பகுதி நதி வலத்தின் போது ஒரு பெண்மணி தனக்கு தோல் நோய் ஒன்று இருப்பதாகவும் அதற்கு வடகரையில் இருக்கும் அனசூயா அன்னையின் ஆலயத்திலிருந்து மண்ணை எடுத்து வர வேண்டும் என்று கேட்கிறார். வட பகுதி நதி வலத்தின் போது அந்த ஊருக்கு வந்ததும் அனசூயா ஆலய மண்ணை எடுத்து வைத்துக் கொண்டு அந்த வீட்டாருக்கு கடிதம் போடுகிறார். தான் இன்ன தேதியில் உங்கள் ஊருக்கு மறுகரையில் இருக்கும் இன்ன ஊரில் இருப்பேன். உங்கள் உறவினர்கள் எவரையும் நதியைக் கடந்து வரச் சொல்லி பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார். அவ்வாறே அவர்களும் செய்கின்றனர். 

பல்வேறு மனிதர்களுடனான உணர்ச்சிகரமான இனிய நினைவுகளை நூலெங்கும் பதிவு செய்கிறார். கங்கையில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் கரையும்; நர்மதையைக் கண்டாலே பாவங்கள் இல்லாமலாகும் என்பது நர்மதா நதி தீரத்தில் வசிப்பவர்களின் நம்பிக்கை என பதிவு செய்கிறார். 

வாசிக்கும் அனைவரையும் தாமும் இது போல ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும் என எண்ண வைக்கும் ஒரு நூல் இந்நூல். 

நர்மதா பரிக்ரமா மேற்கொள்பவர்களை மஹாபலி, பரசுராமர், அனுமன், வீடணன், கிருபர், அஸ்வத்தாமன், வியாசர் ஆகிய ஏழு சிரஞ்சீவிகள் காப்பார்கள் என்பது நம்பிக்கை. 

Wednesday, 24 November 2021

சைக்கிள்

சைக்கிள் ஒரு குறியீடு. எளிமையின் பொறுப்புணர்வின் குறியீடு. கட்டற்ற நுகர்வுக்கு மாற்றாக இருக்கும் ஆக்கபூர்வமான செயல்பாடு. 28ம் தேதி சைக்கிள் பயணத்தின் பங்கேற்பாளர்கள் அனைவருமே இன்றிலிருந்து தினமும் கொஞ்ச தூரம் சைக்கிள் ஓட்டிப் பழகுகிறார்கள். நானும் ஒரு சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்று முழு அழுத்தத்தில் காற்று பிடித்து வந்தேன். சைக்கிள் ஓட்டியது பள்ளி நாட்களை நினைவுபடுத்தியது. பள்ளி நாட்களில் சைக்கிள் மிதித்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு இருக்கும் அதே ஆர்வமும் உற்சாகமும் நம்பிக்கையும் இப்போதும் இருக்கிறது. சற்று கூடியிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். பல ஆண்டுகளுக்கு முன்னால், கோடிக்கரையில் ஒரு ஃபிரெஞ்ச் தம்பதியைப் பார்த்தேன். அவர்கள் பாரிஸில் கிளம்பி துருக்கி , வளைகுடா நாடுகள், ஈரான், ஆஃப்கானிஸ்தான் வழியாக இந்தியா வந்து சேர்ந்திருந்தனர். அடுத்து மியான்மார், மலேசியா செல்ல திட்டம் என்று கூறினார்கள். சைக்கிளில் உலகை வலம் வர வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம். அடுத்தடுத்து மேலும் சில பயணங்களையும் சைக்கிளை மையப்பொருளாகக் கொண்டு மேலும் சில விஷயங்களையும் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிறது. 

Tuesday, 23 November 2021

செலவு (சிறுகதை)

நான் முதல் தடவை ஊரை விட்டுக் கிளம்பிய போது, காசிநாதன் தாத்தாவிடம் தான் பணம் கேட்டேன். அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரமாகத்தான் சென்றிருந்தேன்.  சில வினாடிகள் என் முகத்தை உற்றுப் பார்த்தார். என்னை அவர் அமர்ந்திருக்கும் கயிற்றுக் கட்டிலில் அமர வைத்து விட்டு  உள்ளே சென்று மூவாயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார். இன்று வரை எங்கள் இரண்டு பேரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஏழைக் குடியானவர். என்றாலும் எப்போதும் பெருந்தன்மையும் பெரிய மனுஷத் தன்மையும் இல்லாமல் இருந்தது கிடையாது. ஔவை சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதை சுட்டிக் காட்டுகிறாள். 

மகாத்மா காந்தி உப்பு காய்ச்ச தண்டிக்கு நடைப்பயணம் போன ஆண்டில் தான் பிறந்ததாகக் கூறுவார். சுதந்திரம் கிடைத்த போது அக்ரஹாரத்தில் இருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சுந்தரம் வாத்தியார் என்னும் சுந்தரய்யர் கொடி ஏற்றி வந்தே மாதரம் என்று சொன்னதையும் மாணவர்கள் திருப்பிச் சொன்னதையும் எப்போதும் நினைவு கூர்கிறார். இப்போதும் காலை எழுந்தவுடன் பன்னிரண்டு முறை வந்தே மாதரம் என்கிறார். இரவு உறக்கத்துக்கு முன் பன்னிரண்டு முறை வந்தே மாதரம் என்கிறார். சில விஷயங்கள் ஆகி வந்தவை. தினமணி மட்டும் தான் வாசிக்கிறார். அரசியல் பேசுவதில்லை ; அரசியலில் ஆர்வமும் காட்டுவது இல்லை. ‘’ராஜாஜி ரொம்ப பெரிய மனுஷர்.’’ என்பார். வேறு ஏதும் பேச மாட்டார். அவருக்கென ஒரு தனித்துவம் இருந்தது. எல்லாரையும் போல் அவர் இல்லை. கொஞ்சம் வித்யாசமானவர். வித்யாசமானவர்கள் அடையும் தனிமையில் லயித்திருந்தார்.

காசிநாதன் தாத்தா ஒருமுறை வீட்டாருடன் ஏற்பட்ட சிறு முரண்பாடு காரணமாக வீட்டை விட்டுச் சென்றிருக்கிறார். சென்னைக்கு ரயிலேறிச் சென்று அங்கிருந்து விசாகப்பட்டினம் போய் சேர்ந்திருக்கிறார். பூரி ஜெகன்னாத ஆலயத்தில் ஒரு மாதம் இருந்து விட்டு, கல்கத்தா போய் மூன்று மாதம் சுற்றியிருக்கிறார். அதன் பின்னர் வீடு திரும்பியிருக்கிறார். ‘’பசின்னு சொன்னா இந்த நாட்டுல சோறு போட எத்தனையோ மகராசிங்க இருக்காங்க. மூட்டை தூக்கற - பத்து பாத்திரம் தேய்க்கற - மண்வெட்டியால வாசல சுத்தம் பண்ற வேலையை யாரோ ஒருத்தர் கொடுப்பாங்க. போய்ட்டே இருக்க வேண்டியது தான். ஒரே இடத்துல குட்டை மாதிரி தேங்கி இருந்தாத்தான் எல்லா சிக்கலும்’’. தை மாத நெல் அறுவடை முடிந்து மாசி கடைசியில் உளுந்து பயிர் பறித்தவுடன் ஒரு மாதம் தேசாந்திரம் கிளம்பி விடுவார். ஜெய்ப்பூர், அலகாபாத், அமிர்தசரஸ், ஹரித்வார், ரிஷிகேஷ். தில்லி அவருக்கு மிகவும் பிரியமான ஊர். ‘’எத்தனை விதமான ஜனங்கள்’’ என்பார். ‘’இந்திய ரயில்வே போல இத்தனை சகாயமான கட்டணத்துல போக்குவரத்து உலகத்துல எங்கயும் கிடையாது.’’ ஊர்க்காரர்கள் பயணத்துக்குப் பழக வேண்டும் என்று சொல்வார். அவரிடம் பல கதைகள் இருந்தன. ஹிந்துஸ்தானி சங்கீதம் குறித்து. வட இந்திய சந்தைகள் குறித்து. புராணங்களில் இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்கள் குறித்து. இந்திய நதிகள் குறித்து. சொல்லிக் கொண்டேயிருப்பார்.  வானொலிப் பெட்டியும் ஆகாசவாணியும் அவரது நிரந்தரத் துணை. 

மறையூரில் ஊரை விட்டு ஓடிப் போன இரண்டாம் ஆள் நான். பெங்களூர், பெல்காம், பூனா, பம்பாய், அகமதாபாத், உதய்ப்பூர், அபு மலை, அமிர்தசரஸ், தில்லி, டேராடூன் என பல ஊர்களில் ஓரிரு வாரங்கள் இருந்து விட்டு வீடு திரும்பினேன். காசிநாதன் தாத்தாவிடம் வாங்கிச் சென்றது மூவாயிரம் ரூபாய். திரும்பி வரும் போது என் கையில் மூவாயிரத்து முன்னூறு இருந்தது. மண்வெட்டி பிடித்து வேலை செய்த கைகள். எந்த வேலையையும் செய்து விடும். உணவகங்களில் பலவிதமான தூய்மைப்படுத்தும் வேலைகள் இருக்கின்றன. பாத்திரங்கள், சமையல்கட்டு, குடோன், டயனிங் டேபிள்கள். இந்த பணிக்கென்றே இருப்பவர்கள் செய்து செய்து சலித்துப் போயிருப்பார்கள். தற்காலிகமாக இதனைச் செய்பவர்களால் துப்புறவாகச் செய்ய முடியும். அங்கேயே உணவு கிடைத்து விடும். சில்லறையும் தேறும். ஹோட்டலிலேயே தங்கிக் கொண்டு ஊர் சுற்றலாம். அதனால் தான் எடுத்துச் சென்ற பணத்தை விடக் கூடுதலாக கையில் கொண்டு வந்தேன். பணத்தை திரும்பப் பெற்றுக் கொண்ட போது தாத்தாவுக்கு சந்தோஷம். என்னென்ன வேலைகள் செய்திருக்கக் கூடும் என்பது அவருக்குத் தெரியும். 

‘’ஜெய்ராம் தம்பி ! நீங்க உடல் உழைப்புக்கு சலிக்கறவர் இல்லை. காவேரி டெல்டா-ல, விவசாயக் குடும்பங்கள்ல மனஸ்தாபம் எப்போதும் இருக்கும். நீங்க தான் பெருந்தன்மையா போகணும். அப்பாவும் அம்மாவும் ரொம்ப கவலைப்பட்டாங்க தம்பி. உங்க அக்காவும் தங்கச்சியும் பரிதவிச்சுப் போய்ட்டாங்க. ‘’

‘’அண்ணன் காரங்க செத்து ஒழிஞ்சிருப்பன்னு சந்தோஷமா இருந்திருப்பாங்களே’’

காசிநாதன் தாத்தா பதில் சொல்லவில்லை. சங்கடமான விஷயங்கள் பேசப்படும் போது மௌனமாயிருப்பது அவர் வழக்கம். 

வீட்டில் சொத்தைப் பிரித்துக் கொண்டோம். எனக்கு ஐந்து ஏக்கர் நிலம் கிடைத்தது. அண்ணன்கள் இருவருக்கும் தலா ஏழு ஏக்கர். அப்பா வீட்டையும் தன் பங்குக்கு ஐந்து ஏக்கரையும் வைத்துக் கொண்டார். அவருக்குப் பிறகு அம்மாவுக்குப் போய் சேரும் என்று உயில் எழுதி வைத்தார். ஒரே வீட்டில் இருப்பதா வேண்டாமா என்பது அவரவர் விருப்பம் என்று கூறி விட்டார். அண்ணன்கள் இருவரும் பக்கத்துத் தெருவில் வாடகைக்குக் குடியேறினர். நான் வீட்டில் இருந்தேன். காசிநாதன் தாத்தா அப்பாவிடம் பண்ணை ஆளாக வேலை பார்த்தார். என்னுடைய நிலத்தில் நான் எலுமிச்சைத் தோட்டம் போட்டேன். 

ஐயர்மார்கள் பண்ணை நிலங்களையும் அக்ரஹாரத்தில் இருக்கும் வீடுகளையும் வேகமாக விற்றுக் கொண்டிருந்தார்கள். நிலத்தையும் வீட்டையும் விற்கக் கூடாது என்ற உறுதியுடன் இருந்த இரண்டு ஐயர்மார்களின் நாலு வேலி நிலத்தை பண்ணையம் பார்க்கக் கூடிய சூழல் எனக்கு உருவானது. என் எலுமிச்சைத் தோட்டத்துடன் இந்த வேலையையும் பார்த்தேன். விவசாயம் என்பது வானம், பூமி, தண்ணீர். விவசாயியின் மனமும் அப்படி இருக்க வேண்டும். இருந்தால் கொடுப்பினை. 

காலையில் எழுந்தவுடன் இந்தியாவின் ஏழு புண்ணிய நதிகளின் பெயரைச் சொல்வேன். ஏழு புண்ணிய நகரங்களின் பெயரைச் சொல்வேன். பெரும் நீர்ப்பரப்பில் ஒரு துளி ஆனதாகவும் பெரும் நிலப்பரப்பில் ஒரு துளி மண் ஆகிவிட்டதாகவும் தோன்றும். அந்த உணர்வுடனே ஒரு நாள் நகரும். புண்ணியம் என்பது என்ன? உயிர்களுக்கு உதவுவது தானே! இந்திய நதிகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தன் கரையில் வாழும் கோடானுகோடி ஜீவன்களுக்கு வாழ்க்கையை அளித்திருக்கின்றன.  வருஷத்துக்கு ஒரு மாதம் ரயிலில் பத்தாயிரம் கிலோ மீட்டர் சுற்றி விடுகிறேன். பெரும்பாலும் நான் மட்டும். அபூர்வமாக உடன் சிலருடன். 

சகோதரிகளுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து கொடுத்தோம். எனக்கும் திருமணம் ஆனது. இரண்டு பெண் குழந்தைகள். 

காசிநாதன் தாத்தா ஆயிரம் பிறைகளைப் பார்த்து ஏழு ஆண்டு ஆகி விட்டது. உழைத்து உரமேறிய உடல். இன்னும் அப்பா வயலில் வேலை செய்கிறார். அவருக்கு எழுபது வயது இருக்கும் என்று தான் பார்ப்பவர்கள் நினைக்கிறார்கள். 

ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தார். உட்கார வைத்து குடிக்கத் தண்ணீர் கொடுத்தேன். 

சில நிமிடங்கள் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தார். அவர் மகன்களைப் பற்றி பேசப் போகிறார் என்று யூகித்தேன். 

‘’ஜெயராம் தம்பி ! நாப்பது வயசுக்கு மேல தான் நான் கல்யாணம் செஞ்சுகிட்டன். அஞ்சு வருஷம் கழிச்சு தான் பையன்க பொறந்தாங்க’’

சொல்லிவிட்டு மௌனமானார். 

ஒரு சிறு இடைவெளிக்குப் பின்னர் பேசத் தொடங்கினார். 

‘’ரெண்டு பேரும் குடிக்கு அடிமையா இருக்காங்க. அவங்க மட்டும் இல்ல. இன்னைக்கு ஊர்ல இருக்கற ஆம்பளைங்கள்ள நூத்துக்கு தொன்னூத்து அஞ்சு பேரு குடிக்கறவங்க. கையில ஒத்தக்காசு சேமிப்பு யார்ட்டயும் இல்லை. எனக்கு ஒரு உதவி செய்ங்க தம்பி’’

’’சொல்லுங்க தாத்தா’’

’’இதுல ஐயாயிரம் ரூபா இருக்கு’’ ஒரு கவரை என்னிடம் தந்தார். 

‘’நான் இறந்து போய்ட்டா என் மகன்கள்ட்ட செலவுக்கு ஒத்த ரூபா இருக்காது. அப்ப அவங்க யார்ட்டயாவது போய் என்னோட சடங்குகள செய்ய கடன் கேட்டு நிக்கக் கூடாது. அப்ப நான் கொடுத்தன்னு சொல்லி இந்த பணத்தை அவங்க கிட்ட கொடுக்கணும். எனக்காக இதைச் செய்யணும். ‘’  

என் மனைவி அவருக்கு மோர் கொண்டு வந்து கொடுத்தாள். 

கிளம்பும் போது என்னிடம் ‘’ராஜாஜி ரொம்ப பெரிய மனுஷர் ‘’ என்றார். 

Monday, 22 November 2021

ஓவியம்

உனது ஓவியத்தை
தீற்றிக் கொண்டிருக்கிறேன்
பாறை உருகிய நீர் அருவியென
கொப்பளிக்கிறது
உனது கூந்தல்
இடைவெளிகளில் நிரம்புகின்றன
மேகங்களும் அடர் இரவும்
உதயத்தின் வானமும்
அஸ்தமனத்து அந்தியும்
தீட்டப்படும் போது
உனது முகத்தின் நெற்றி 
மெல்ல மெல்ல புலப்படுகிறது
வற்றாத நதிகள் வரையப்பட்ட போது
அவை  கண்களாயின
நிலமும்
காற்றும்
நீரும்
தீயும்
வரைந்த பின்னால்
வானம் 
அந்த ஓவியத்தில்
நிரப்பிக் கொண்டது
தன்னை

சைக்கிள் பயணம்

இந்த வார இறுதியில், ஒரு சைக்கிள் பயணத்தை ஒருங்கிணைக்கலாம் எனத் திட்டமிட்டுள்ளேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்ட போது ரிஷிகேஷில் ஓர் ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். அங்கே இருந்தவர்களிடம் எனது பயண அனுபவங்களைக் கூறிக் கொண்டிருந்தேன். ஆசிரமவாசி ஒருவர் ஆசிரமத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்னால் நாங்குநேரியிலிருந்து ரிஷிகேஷுக்கு சைக்கிளில் ஒருவர் வந்ததாகவும் இரண்டு மாதத்துக்கு ஒரு தடவை யாராவது ஒரு சைக்கிள் பயணி தமிழ்நாட்டிலிருந்து வருகிறார்கள் என்றும் மேலும் தமிழ்நாட்டில் இருந்து நடந்தே ரிஷிகேஷ் வருபவர்களும் இருக்கிறார்கள் என்றும் கூறினார்.  

எனது நண்பர் ஒருவர் பூனாவிலிருந்து பெங்களூர் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்பவர். ஆறு மாதத்துக்கு ஒரு முறை அவர் அந்த பயணத்தை மீண்டும் மீண்டும் நிகழ்த்துவார். 




பல வருடங்களுக்குப் பின் மேற்கொள்ளும் சைக்கிள் பயணம் இது. அனேகமாக இதுவே சைக்கிளில் மிக அதிக தூரம் மேற்கொள்ளப் போகும் பயணம். மயிலாடுதுறையிலிருந்து பரங்கிப்பேட்டை வரை சென்று திரும்ப உத்தேசித்துள்ளோம். நண்பர்கள் பன்னிருவர் பயணத்தில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். முன்னர் சிதம்பரம் வரை என்று தான் திட்டமிட்டோம். சிதம்பரம் 40 கி.மீ தூரத்தில் உள்ளது. சென்று மீள 80 கி.மீ. இரட்டை இலக்கத்தில் உள்ள பயண தூரத்தை மூன்று இலக்கமாக ஆக்க விரும்பி நான் பரங்கிப்பேட்டையைத் தேர்ந்தெடுத்தேன். மயிலாடுதுறையிலிருந்து பரங்கிப்பேட்டை 65 கி.மீ தூரம் . ஆகவே எங்கள் மொத்த பயண தூரம் 65 + 65 = 130 கி.மீ. நூறு என்பதை ஆயிரமாகக் கொள்ளும் பழக்கம் நம் மரபில் உண்டு. இந்த பயணத்தில் பங்குகொள்பவர்கள் பலர் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் சைக்கிளில் பயணிப்பதற்கு ஒரு துவக்கத்தை உருவாக்கித் தரும் விதமாக பயணம் 100 கி.மீ.க்கு மேல் அமைய வேண்டும் என்று விரும்பினேன். 

பரங்கிப்பேட்டை மகா அவதார் பாபாஜியின் ஜென்மபூமி. அவர் சிறு வயதில் அங்கு தான் வசித்திருக்கிறார். அவருடைய தந்தை அங்கே இருக்கும் முருகன் கோவிலில் அர்ச்சகராகப் பணி புரிந்திருக்கிறார். அந்த கோவில் ஊரின் மத்தியில் இருக்கிறது. பரங்கிப்பேட்டையில் பாபாஜிக்கு அழகிய ஒரு சிற்றாலயம் அவரது பக்தர் ஒருவரால் கட்டப்பட்டுள்ளது. 




ஞாயிறன்று காலை 5 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து புறப்பட உத்தேசித்துள்ளோம். பங்கேற்பாளர்கள் சைக்கிள் எடுத்துக் கொண்டு வந்து விட வேண்டும். அது அவர்களின் சொந்த சைக்கிளாகவோ வாடகை சைக்கிளாகவோ இருக்கலாம். இரண்டு ஒரு லிட்டர் பாட்டில்களில் குடி தண்ணீர் நிரப்பி எடுத்துக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் இரண்டு புளிசாதப் பொட்டலங்கள் தரப்படும். காலை உணவும் மதிய உணவும் அவையே. இரவு உணவுக்கு ஊர் திரும்பி விடலாம். பயணத்தின் போது அலைபேசி கொண்டு வரக் கூடாது. 

நம்முடைய வழக்கமான ஒரு தினத்தை ஆர்வமூட்டும் அனுபவங்கள் கொண்ட தினமாக மாற்ற இது போன்ற நுண் விஷயங்கள் உதவுகின்றன. பங்கேற்பாளர்கள் அனைவருமே பயண தினத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.