Friday, 30 August 2024

வங்கி மேலாளரின் பொறுப்பற்ற செயல்களும் பொறுப்பற்ற பதில்களும்

 எனது வீட்டுக்கு அருகாமையில் 65 வயதான முதியவர் ஒருவர் வசிக்கிறார். இன்று காலை அவரை தற்செயலாக சாலையில் சந்திக்க நேர்ந்தது. அவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி தொடர்பான ஒரு விஷயத்தை என்னிடம் சொன்னார். அதாவது, அவரது மகன் ஒரு சிறு தொகையை வங்கியில் கடனாகப் பெற்றிருக்கிறார். கடனுக்கு வட்டியும் கட்டி வந்திருக்கிறார். பின்னர் அவர் வெளிநாடு சென்று விட்டார். அந்த கடனுக்கான வட்டி மூன்று மாதங்களுக்கு மேல் செலுத்தப்படாததால் ‘’வாராக் கடன்’’ என அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. வங்கி அந்த கடன் கணக்கை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்று விட்டது. அந்த தனியார் நிறுவனம் அப்போது இருந்த அசல் வட்டி சேர்த்து மொத்த தொகையில் கணிசமான ஒரு தொகையை செலுத்தி ’’ஒரு முறை தீர்வு’’ ( one time settlement) முறையில் செலுத்துமாறு கடிதம் அனுப்பியிருக்கின்றனர். மூன்று மாதத்தில் குறிப்பிட்ட மூன்று தினங்களில் செலுத்துமாறு கூறியிருக்கின்றனர். அதன்படி இரண்டு தவணைகள் செலுத்தப்பட்டன. மூன்றாவது தவணை குறிப்பிட்ட தேதிக்கு ஐந்து நாட்கள் தாமதமாக பணம் கட்டப்பட்டிருக்கிறது. மூன்றாவது தவணை IMPS முறையில் கணக்கில் செலுத்தப்பட்டிருக்கிறது. எனினும் ஒரு வருடமாக மாதத்துக்கு இரண்டு மூன்று அலைபேசி அழைப்புகள் அந்த கடன் கணக்கில் பணம் செலுத்துமாறு வந்து கொண்டேயிருந்திருக்கின்றன. முதியவர் பணம் செலுத்தியாகி விட்டது என்ற விஷயத்தைக் கூறியிருக்கிறார். ஆனால் மூன்றாவது தவணை பணம் வரவில்லை என்று கூறியிருக்கின்றனர். என்னிடம் முழு விபரத்தையும் கூறினார். 

முதியவரின் வீட்டுக்கு காலை 11 மணி அளவில் சென்று சம்பந்தப்பட்ட வங்கி மேலாளருக்கு அனுப்ப ஒரு கடிதத்தை தயார் செய்தேன். அதில் முதியவரின் மகனின் வங்கி கணக்கு எண், ‘’ஒரு முறை தீர்வு’’க்கு அனுப்பப்பட்ட கடிதம், மூன்று தவணைகளில் பணம் கட்டப்பட்ட விபரம் ஆகியவற்றின் விபரத்தைத் தெரிவித்து அதன் நகல்களை இணைத்து மேற்படி கடன் கணக்கை நிறைவு செய்து கடன் கணக்கை முடிக்கும் அறிக்கை வழங்குமாறு விண்ணப்பித்து மனு எழுதப்பட்டிருந்தது. முதியவர் அதில் கையெழுத்திட்டார். 

இந்த மனுவை நேரில் சென்று அளிக்காமல் விரைவுத் தபாலில் அனுப்பி விட்டு மறுநாள் வங்கி மேலாளரை நேரில் சந்திக்கலாம் என்பது எனது எண்ணம். வெளியூரில் வங்கியில் பணி புரியும் எனது சகோதரனை ஒத்த நண்பனுக்கு ஃபோன் செய்த போது அவன் முதியவருடன் நேரில் சென்று மனுவை அளிக்குமாறும் ஓரிரு நாளில் அவர்கள் அறிக்கை அளித்து விடுவார்கள் ; இந்த விஷயத்தில் வேறு சிக்கல் இல்லை ; எளிதான விஷயமே என்று கூறினான். அவன் சொல்லுக்கு மதிப்பளித்து முதியவருடன் வங்கிக்கு சென்றேன். 

அந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர் ஓர் இளைஞர். அவரது வயது 35 இருக்கலாம். முதியவர் அளித்த மனுவை வாங்கிப் பார்த்தார். முழுதாகப் படித்திருப்பாரா என்பது ஐயம். ‘’உங்கள் கடன் கணக்கு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டிருக்கிறது. அதனால் அந்த கடன் கணக்குக்கும் வங்கிக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீங்கள் அந்த தனியார் நிறுவனத்தை மட்டுமே அணுக வேண்டும். எங்களிடம் வரக்கூடாது.’’ என்று சற்று கோபத்துடன் எதிர்வினையாற்றினார். 

65 வயது முதியவரிடம் 35 வயதான இளைஞர் இவ்விதமாக கோபமாக பதில் சொல்வது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. இருப்பினும் பொறுமை காத்தேன். ‘’ நீங்கள் வாய்மொழியாக எங்களுக்கு அளித்திருக்கும் பதிலை நாளை இந்த கடிதம் உங்களுக்கு பதிவுத் தபாலில் வரும் போது எழுத்துபூர்வமாக கொடுங்கள்.’’ என்று கூறி விட்டு முதியவரை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்கு வந்து விட்டேன். 

வெளியூர் வங்கியில் பணி புரியும் எனது நண்பனுக்கு ஃபோன் செய்து நடந்ததைக் கூறினேன். அவனுக்கு வங்கி அதிகாரி அளித்த பதில் மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. அவனால் நம்ப முடியவில்லை. ‘’அப்படியா பதில் சொன்னார்கள் ; அப்படி எப்படி சொல்ல முடியும்’’ எனக் கேட்டுக் கொண்டே இருந்தான். நான் மாலை 5 மணிக்கு மேல் ஃபோன் செய்கிறேன் என்று கூறி விட்டு ஃபோனை வைத்து விட்டேன்.

அந்த வங்கியின் சென்னை தலைமை அலுவலகத்துக்கு ஃபோன் செய்து வங்கியில் நடந்த விஷயத்தைக் கூறினேன். என்னிடம் ஃபோன் பேசிய அதிகாரி அதிர்ச்சி அடைந்தார். ‘’மேலாளர் ஏன் அப்படி சொன்னார்?’’ என்று கேட்டார். பின்னர் ‘’ஒரு முறை தீர்வு’’ தொகை முழுதாக வரவு வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை தான் அளிக்கும் தனியார் நிறுவன எண்ணில் பேசி உறுதி செய்து கொள்ளுமாறு கூறினார். 

அவர் அளித்த எண் ஒரு பெண்மணியுடையது. அவர் அலுவலகம் மும்பையில் இருந்தது. நான் ஃபோன் செய்த போது நேரம் மதியம் 2.15. தான் இப்போது தான் மதிய உணவு அருந்த அமர்ந்ததாகவும் 10 நிமிடம் கழித்து பேச முடியுமா என்று அவர் கேட்டார். சரி என்றேன். அந்த இடைவெளியில் அந்த கடன் கணக்கு எண்ணை குறுஞ்செய்தி மூலம் அனுப்பினேன். 2.45க்கு ஃபோன் செய்தேன். அந்த பெண்மணி கடன் கணக்கு எண் மூலம் அதன் முழு விபரங்களைப் பார்வையிட்டிருந்தார் என்பதை அவர் அந்த விஷயம் குறித்து பேசிய தொனியிலிருந்து புரிந்து கொண்டேன். சென்னை அலுவலகத்தில் பேசியிருப்பதாகவும் சென்னை அலுவலகத்திலிருந்து இன்னும் சற்று நேரத்தில் தங்கள் எண்ணுக்கு அழைப்ப்பார்கள் ; அவர்களிடம் விபரம் சொல்லுங்கள். விஷயம் சுமுகமாக தீர்வு காணப்படும் ; என்ன தீர்வு கூறப்பட்டது என்பதை எனக்கு ஃபோன் செய்து சொல்லுங்கள் என்று கூறினார். உலகில் நூற்றில் ஓரிருவர் பொறுப்புடன் இருக்கிறார்கள். அவர்களாலேயே உலக இயக்கம் என்பது நிகழ்கிறது. மும்பை பெண்மணி அவ்விதமானவர். 

சென்னை அலுவலகத்திலிருந்து ஒரு இளைஞர் அழைத்தார். மூன்றாவது தவணை  IMPS முறையில் செலுத்தப்பட்டிருப்பதை தனக்கு மின்னஞ்சல் மூலம் ஸ்கேன் செய்து அனுப்ப முடியுமா என்று கேட்டார். அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஸ்கேன் இண்டர்நெட் மையத்திலிருந்து அனுப்பப்பட்டது. மையத்தின் வாசலுக்கு வந்து நாங்கள் இரு சக்கர வாகனத்தை எடுப்பதற்குள் சென்னையிலிருந்து ஃபோன் வந்தது. மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றது ; கணக்கை பார்வையிட்டோம்; முழுத் தொகையும் செலுத்தப்பட்டுள்ளது.  நீங்கள் கணக்கு முடிக்கும் அறிக்கையை வங்கியில் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறினார். நான் இந்த விஷயத்தை உடன் மும்பை அலுவலகத்தில் உள்ள பெண்மணிக்கு தெரிவித்தேன். அவருக்கு மகிழ்ச்சி. 

முதியவரின் வீட்டுக்கு வந்து அஞ்சல் உறையில் காலையில் வங்கி மேலாளரிடம் அளிக்க எடுத்துச் சென்றிருந்த மனுவை இட்டு தபால் நிலையம் சென்று விரைவுத் தபால் மூலம் அந்த மனுவை வங்கி மேலாளருக்கு அனுப்பி வைத்தோம். விரைவுத் தபால் ரசீதை எங்கள் பிரதியில் ஒட்டி வைத்தோம். மாலை 5.30 ஆகி விட்டது. 

நான் வீட்டுக்கு வந்து நடந்த விஷயத்தை வங்கியின் ஆன்லைன் புகார் பிரிவில் பதிவு செய்ய வங்கியின் இணையப்பக்கத்துக்கு சென்றேன். புகார் அளிக்கும் பக்கம் வேலை செய்யவில்லை. வங்கியின் இணையப்பக்கத்திலிருந்து அவர்களுடைய ரீஜனல் ஆஃபிஸ் எண்ணை எடுத்து அதற்கு ஃபோன் செய்தேன். ரீஜனல் ஆஃபிஸ் அதிகாரியிடம் நடந்ததைக் கூறினேன். அவர் நிகழ்ந்த தவறுக்கு வங்கி சார்பாக வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார். 

இதைப் போன்ற விஷயங்களை வங்கி உயர் அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்பேன். வங்கி உயர் அதிகாரிகள் வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்களும் குடிமக்களும் எவ்விதம் வங்கி மேலாளர்களாலும் ஊழியர்களாலும் நடத்தப்படுகின்றனர் என்பதை இவ்விதமான சம்பவங்கள் மூலமே அறிய முடியும். வாடிக்கையாளர்கள் வங்கியில் எவ்விதமாக நடத்தப்பட்டாலும் அமைதியாகப் போய் விடுவார்கள் என்பதாலேயே வங்கி மேலாளர்கள் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்கிறார்கள் ; பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள். 

ரீஜனல் ஆஃபிஸில் தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்த விஷயம் வாய்மொழியாக ( word of mouth) அந்த மண்டலத்தில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் பரவும். அது சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தார்மீக நெருக்கடியை உண்டாக்கும். முதியவருக்கு செய்த பிழையை மேலும் ஒருவருக்கு இனி செய்யாமல் இருப்பார். 

அந்த வங்கியின் ஆன்லைன் புகார் பிரிவு இயங்காமல் இருப்பதை தலைமை அலுவலகத்தில் இருக்கும் மூன்று உயர் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தேன். அது சரியானவுடன் ஆன்லைன் புகார் அளிக்க உள்ளேன். புகார் அளிப்பதன் நோக்கம் நடந்த விஷயத்தை வங்கி உயர் அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்வதே தவிர எவரையும் தண்டிக்கும் நோக்கம் இல்லை. வங்கி மேலாளர் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. 

நான் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மீது நம்பிக்கை கொண்டவன். இந்த பதிவில் கூட சம்பந்தப்பட்ட வங்கியின் பெயரைக் கூறாமல் தவிர்த்திருக்கிறேன் என்பதிலிருந்து அதனைப் புரிந்து கொள்ளலாம்.  

Wednesday, 28 August 2024

அன்னை

குழந்தை தீர்த்தனின் குடும்பத்தினர் இன்று திருக்கருகாவூர் ஆலயத்துக்கு வந்து கரு காக்கும் அன்னையை வணங்கினர். அங்கே இருக்கும் நகரும் தொட்டிலில் அமர்ந்து கொண்டு அம்மையை சுற்றி வந்தான் திராத். நான்கு மாதக் குழந்தை. மனித முகங்களை ஆர்வமாகப் பார்க்கிறான். சூழலின் சப்தங்களை அவதானிக்கிறான்.  

நேற்று தீர்த்தனின் குடும்பத்தினர் காலை சென்னையில் புறப்பட்டு ரயிலில் ஸ்ரீரங்கம் வந்தனர். நேற்று காலையிலேயே ஸ்ரீரங்கம் ஆலயத்தில் ஸ்ரீரங்கநாதர் தரிசனம். தீர்த்தனின் எடைக்கு எடை கல்கண்டு துலாபாரம் அர்ப்பணித்தனர். தரிசனம் முடித்த பின்னர் மாலை கும்பகோணம் வந்தடைந்தனர். அங்கே தீர்த்தனின் அன்னையும் தந்தையும் தீர்த்தனுடம் விடுதி அறையில் ஓய்வெடுக்க மற்றவர்கள் சாரங்கபாணி, சக்கரபாணி ஆலயங்களுக்கு சென்று பெருமாளை வழிபட்டிருக்கின்றனர். 

இன்று காலை நான் ஊரிலிருந்து புறப்பட்டு திருக்கருகாவூர் சென்றேன். அவர்கள் எனது வருகைக்கு 30 நிமிடம் முன் ஆலயத்தில் இருந்தனர். நண்பனும் நானும் சில மாதங்கள் முன் அந்த ஆலயம் வந்ததையும் அம்மையிடம் வேண்டிக் கொண்டதையும் உணர்ச்சிகரமாக நினைத்துக் கொண்டோம். சன்னிதியில் பிள்ளை வரம் வேண்டி ஒரு குடும்பத்தினர் பிராத்தனை செய்து கொண்டிருந்தனர். 

அங்கிருந்து புறப்பட்டு பட்டீஸ்வரம் வந்தோம். துர்க்கை அம்மனை வணங்கினோம். 

ரயில் நிலையத்துக்கு மிக அருகில் இருக்கும் அறைக்கு வந்து சேர்ந்த போது சோழன் விரைவு வண்டியைப் பிடிக்க முழுதாக ஒரு மணி நேரம் இருந்தது. ரயில் நிலையத்தில் தீர்த்தன் குடும்பத்தினரை வழியனுப்பி விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்குக் கிளம்பினேன். 

தீர்த்தனின் அன்னையின் உணர்வும் மனமும் முழுமையாக தீர்த்தன் மீதேயிருந்தது. தீர்த்தனுக்காக அவர்கள் ஆற்றும் சிறு செயல் கூட முழுமை கொண்டிருந்தது. அன்னையின் பாதங்கள் மானுடரால் எப்போதும் வணங்கப்பட வேண்டியவை. 

தீர்த்தன் - அஞ்சனக் கருமுகில் கொழுந்து ( மறுபிரசுரம்)


சென்ற மாதம் என் சகோதரன் எனத்தக்க எனது நண்பன் சென்னையிலிருந்து திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையை வணங்க வந்திருந்தான். நண்பனுடன் திருக்கருகாவூருக்கும் பட்டீஸ்வரத்துக்கும் சென்றிருந்தேன். 

இரண்டு தினங்களுக்கு முன்னால் சென்னையில் நண்பனின் மனைவிக்கு சுகப்பிரசவம் நிகழ்ந்து ஆண் மகவு பிறந்திருக்கிறது. அன்னையும் மகவும் நலமுடன் உள்ளனர். 

இன்று நண்பனிடம் பேசிக் கொண்டிருந்த போது குழந்தைக்குப் பெயர் முடிவு செய்திருக்கிறீர்களா என்று கேட்டேன். தீர்த்தன் என்ற பெயரின் மரூஉ ஆன ‘’திராத்’’ என்ற பெயரை சூட்ட உள்ளோம் என்று சொன்னான். 

நம் நாட்டில் காலை விழித்தெழுந்ததும் ‘’கங்கை யமுனை சரஸ்வதி சிந்து காவேரி நர்மதா கோதாவரி ‘’ என்ற ஏழு புண்ணிய நதி தீர்த்தங்களை நினைத்து அவற்றின் பெயரைக் கூறி வணங்கும் மரபு இன்றும் உண்டு. குழந்தை திராத் பெயர் கூறி அழைக்கப்படும் போதெல்லாம் இந்த 7 புண்ணிய நதிகளின் பெயரையும் கூறும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. 

குழந்தை ஸ்ரீராமனின் பிறப்பை கம்பன் 
ஒரு பகல் உலகு எலாம்  உதரத்துள் பொதிந்து.
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை. அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை.
திரு உறப் பயந்தனள் - திறம் கொள் கோசலை.

என்கிறான்.  

கரு காக்கும் அன்னை ( மறுபிரசுரம்)

எனது சகோதரன் எனக் கூறத் தக்க அளவிலான எனது நண்பன் சென்னையில் வசிக்கிறான். அவனது மனைவிக்கு சென்ற மாதம் வளைகாப்பு நடைபெற்றது. வளைகாப்புக்கு முன்பிருந்தே நான் நண்பனிடம் திருக்கருகாவூர் ஆலயத்துக்கு வந்து முல்லைவன நாத சுவாமியையும் கர்ப்பரட்சாம்பிகை அம்மனையும் வழிபட கூறிக் கொண்டேயிருந்தேன். சென்ற வாரம் அவன் வருகை புரிவதாய் இருந்தது ; அவனது மனைவிக்கு மருத்துவ பரிசோதனைகள் இருந்ததால் தவிர்க்க இயலாமல் அவனது வருகையை ஒத்தி வைக்க வேண்டியதாயிற்று. இன்று காலை சென்னையில் சென்னை - திருச்சி சோழன் விரைவு வண்டியில் புறப்பட்டு வந்தான். நான் அந்த ரயிலில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஏறிக் கொண்டேன். என்னிடம் மயிலாடுதுறை - பாபநாசம் ரயில் பயணச் சீட்டு இருந்தது. பாபநாசத்தில் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம். பாபநாசத்தில் மதிய உணவு அருந்தி விட்டு அங்கிருந்து ஒரு ஆட்டோவில் திருக்கருகாவூர் சென்று சேர்ந்தோம். பாபநாசமும் திருக்கருகாவூரும் 6 கி.மீ தூரத்தில் உள்ளன. 3 மணி அளவில் திருக்கருகாவூர் ஆலயம் சென்றடைந்தோம். அம்மன் சன்னிதியை ஒட்டி வெறும் தரையில் சற்று தலை சாய்த்தோம். ஆலயங்களில் இவ்வாறு காத்திருப்பது கடவுளின் நிழலில் இளைப்பாறுவதற்கு ஒப்பானது. ஆலயங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்பது அதுவே. 

நடை திறந்ததும் முல்லைவன நாதரை வணங்கினோம். முல்லை வன நாதர் புற்று மண்ணால் ஆனவர். சுயம்பு. முல்லை வன நாதர் அத்தனை அழகு படைத்தவர். முல்லை வன நாதரை வணங்கி விட்டு அம்மனை வழிபடச் சென்றோம். 

மனிதர்களால் சிறு அளவிலேனும் ஒரு அன்பை உணர்ந்து கொள்ள முடிகிறது என்றால் அது தாயின் அன்பு மட்டுமே. அம்மையப்பன் எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையுமானவர்கள். 

கர்ப்ப ரட்சாம்பிகை முன்னால் குழுமியிருந்தவர்கள் அனைவருமே இளம் தம்பதியினர். மக்கட்பேறு வேண்டி இறைவனை வழிபட வந்திருந்தார்கள். இங்கே வந்து வழிபட்டுச் சென்ற பின் குழந்தைப் பேறு வாய்க்கப்பெற்றவர்கள் தங்கள் நேர்த்திக் கடன் செலுத்த வந்திருந்தனர். குழந்தைகளால் நிரம்பிய ஆலயத்தைக் காணவே சந்தோஷமாக இருந்தது. நண்பன் ஆலயத்தில் நெய்தீபம் ஏற்றினான். 

மாலை 6 மணி வரை அங்கே இருந்து விட்டு பின்னர் பட்டீஸ்வரம் புறப்பட்டோம். அங்கே ஆலயம் சென்று துர்க்கையை வணங்கினோம். 

நண்பனுக்கு இரவு 9 மணிக்கு உழவன் ரயிலில் ஊர் திரும்ப வேண்டியிருந்தது. எனவே தாராசுரம் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து ரயிலேறி மயிலாடுதுறை வந்து சேர்ந்தோம். இரவு உணவு அருந்தி விட்டு நண்பன் புறப்பட்டான். நானும் வீடு வந்து சேர்ந்தேன்.   

Monday, 26 August 2024

ஞாயிற்றுக்கிழமை

 நம் சமூகத்தில் ஞாயிற்றுக்கிழமை என்பது முழுமையாக எந்த பணிகளும் இல்லாத நாள் என்பது போல் ஒரு மனப்பதிவு உருவாகி விட்டது. தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பிலிருந்து அனைத்து கடைகளும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறந்திருக்கின்றன. அந்த நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணிகள் நடைபெறுகின்றன. ஆவணி, தை ஆகிய மாதங்களில் திருமண முகூர்த்தங்கள் அதிகம் என்பதால் அப்போதும் ஞாயிறுகளில் பணிகள் நடக்கும். பாரத ஸ்டேட் வங்கி பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பரீட்சார்த்த முயற்சியாக தங்கள் கிளைகளை ஞாயிறன்று திறந்து வைத்து குறைந்தபட்ச வங்கி சேவைகளை அளித்தார்கள். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குகின்றன. அவை விரும்பப்படுகின்றன. 

ஞாயிறன்று பணி புரிய வேண்டும் என்று நான் விரும்புவேன். நேற்று நான்கு பணிகள் வைத்திருந்தேன். நான்கும் அலுவல் சார்ந்த பணிகள். அதில் மூன்று பணிகளை நிறைவு செய்தேன். 

நண்பர் ஒருவரைச் சந்திக்க மதிய நேரத்தில் வருவதாகக் கூறியிருந்தேன். இருப்பினும் மாலை 5 மணி அளவிலேயே செல்ல முடிந்தது. நண்பர் உற்சாகமான இயல்பு கொண்டவர். பழகுவதற்கு இனியவர். அவர் வீட்டில் 50 வயது கொண்ட வேப்பமரம் இருக்கிறது. அதன் நிழலில் அமர்ந்து கொள்வதே மனதிற்கு இதமாக இருக்கிறது. 

வேம்பின் நிழலில் அமர்ந்து இருவரும் உரையாடிக் கொண்டிருந்தோம். பொழுது அணையும் நேரத்தில் மேற்கு வானில் மாலையின் முதல் நட்சத்திரத்தைக் கண்டோம். 

Wednesday, 21 August 2024

விருட்ச சன்னிதானம்


 நேற்று நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரது வீட்டை ஒட்டி சற்று பெரிய பரப்பில் காலிமனை இருந்தது. அதில் நாற்பது வயதான வேப்பமரம் ஒன்று இருந்தது. இரு கைகளால் சுற்றி நெருங்க முடியாத அளவு பருமன். பெரும் உயரம். தனது நிழல்பரப்பின் மீது கம்பீரமாக நின்றிருந்தது. அதன் நிழல்பரப்பில் உதிர்ந்திருந்த வேப்பம்பழங்களிலிருந்து சிறு சிறு வேப்பஞ்செடிகள் கணிசமாக முளைத்திருந்தன. வேப்பமரத்தின் அடியில் ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது. நான் அதில் அமர்ந்து கொண்டேன். அந்த மரத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் அருகில் சென்று அந்த மரத்தின் மீது எனது உள்ளங்கைகளை வைத்துக் கொண்டேன். மரத்தின் குளுமையை கரங்கள் உணர்ந்தன. கரங்களின் குளுமை உள்ளத்தைக் குளிர வைத்தது. அந்த ம்ரமும் அதன் நிழல்பரப்பும் விருட்ச சன்னிதானம் என எண்ணினேன். 

வேப்ப மரத்திலிருந்து சற்று தொலைவில் ஒரு பலாமரம் இருந்தது. கைக்கு எட்டும் தொலைவில் அதில் ஒரு பழம் பழுத்திருந்தது. 

Tuesday, 20 August 2024

அன்னம் - சிறுகதை - கடலூர் சீனு (மறுபிரசுரம்)

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுது பேர் தன்னை நீக்கி பிணமென்று பெயரிட்டு  காட்டில் சுட்டு நீரில் மூழ்கி நினைப்பொழியும் மயானமும் மயானத்தின் சூழலும் இந்தியர்களின் அகத்துக்கு மிகவும் பக்கத்தில் உள்ள ஒன்று. எதன் பொருட்டும் உண்மையைக் கைவிட மாட்டேன் என்ற உறுதியுடன் மயானத்தின் பிணங்களை எரித்துக் கொண்டிருந்த ராஜா ஹரிச்சந்திரன் கதை இன்றும் தமிழகத்தின் ஏதோ ஒரு கிராமத்தில் இரவுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. யக்‌ஷப் பிரசன்னத்தில் யக்‌ஷன் இந்த உலகின் பெருவியப்பு என்ன எனக் கேட்கும் வினாவுக்கு விடையாக யுதிர்ஷ்ட்ரன் மயானத்துக்குச் செல்லும் பிணங்களை தினமும் பார்க்கும் மனிதர்கள் மனித வாழ்க்கையை சாஸ்வதமாகக் கருதுவது உலகின் பெருவியப்பு என பதில் சொல்கிறான். 

‘’அன்னம்’’ சிறுகதை ஒரு மயானத்தின் பின்புலத்தில் விரிகிறது. இலுப்பையும் எருக்கும் மண்டிக் கிடக்கும் மயானம் சீரான புல்வெளிகள் கொண்ட கொன்றைப்பூக்கள் பூத்துக் குலுங்கும் குரோட்டன் செடிகள் வளர்க்கப்படும் இடமாக காலகதியில் பரிணாமம் பெற்றிருக்கிறது. சுமங்கலியான ஒரு மூதாட்டி மரணித்த பின் எரியூட்டப்பட மயானத்துக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறாள். தவிர்க்க இயலாத சில சூழ்நிலைகளால் பிணம் அங்கே வந்து சேர தாமதமாகி விடுகிறது. உறவினர்கள் அசௌகர்யமான மனநிலையுடன் எரியூட்டல் எப்போது நிகழும் என காத்திருக்கிறார்கள். 

மயானத்தின் தோற்றம் வேறுவிதமாக இருப்பதைக் காணும் கதைசொல்லி அந்த வளாகத்தினுள் நுழைகிறான். அங்கே ஒரு எம்டன் வாத்து இருக்கிறது. அந்த வாத்து தனது இணையை சில மாதங்களுக்கு முன் இழந்திருக்கிறது. தனக்கு நெருக்கமான ஒரு உயிரின் சாவினை சமீபத்தில் எதிர்கொண்டிருக்கிறது. 

அந்த வாத்தினை அந்த வளாகத்தின் பணியாளரான ஒரு பெண்மணி வளர்த்து வருகிறார். தான் உண்ணும் உணவை பகுத்தளித்து அந்த வாத்தை வளர்க்கிறாள். பிணங்களின் வாயில் போடப்படும் வாய்க்கரிசியையும் வாத்து உணவாக உண்கிறது. 

சற்று தாமதமாக மயானத்துக்கு வரும் நடுவயது இளைஞன் மரணித்த மூதாட்டியின் முன் அமர்ந்து கேட்பவர் முதுகெலும்பு சில்லிடும் வகையில் ஒப்பாரி வைக்கிறான். ஒப்பாரியில் அவன் கூறும் சொற்களிலிருந்து அந்த மூதாட்டி அந்த இளைஞன் சிறுவனாயிருந்த போது அவன் குடும்பத்தாரின் ஆதரவு இல்லாமல் தனித்து விடப்பட்ட போது அன்னமிட்டு வளர்த்தவர் என்பதை அறிய முடிகிறது. அனைவரும் திகைத்துப் போய் நிற்கையில் அந்த வாத்து ஒப்பாரி வைப்பவன் அருகில் வந்து தன் குரலை எழுப்புகிறது. அவனை அழாதே என அந்த வாத்து சொல்வதாக அதன் மொழி புரிந்த வாத்து வளர்க்கும் பெண் சொல்கிறாள். 

இந்த சிறுகதையின் வடிவம் மிக நேர்த்தியாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஆங்காங்கே விரவி இருக்கும் உணர்வுப் புள்ளிகளை வாசகன் தனது கற்பனையால் நிரப்பிக் கொள்வானாயின் - விரிவாக்கிக் கொள்வானாயின் அவன் இந்த சிறுகதையின் வடிவ ஒருமையை உணர்வான். 

மயானம் என்பது மீதமின்றி பிடி சாம்பல் ஆகும் இடம். இந்திய மரபில் பிடி சாம்பல் என்பது இறுதி அல்ல. இன்னும் சில இருக்கின்றன. சடங்குப் படி அந்த பிடி சாம்பலான அஸ்தி நீரில் கரைக்கப்பட வேண்டும். எரியூட்டல் என்பது ஜீவனின் அன்னமயகோசத்தை சாம்பலாக்கும் நிகழ்வு. ஜீவனின் அன்னமயகோசம் முற்றிலும் சாம்பலாகிப் போனாலும் அது செய்த புண்ணியம் அப்போதும் அதனைப் பற்றி நிற்கும். 

மயானப் பணியாளரின் அன்னை அன்னத்தையும் பிரியத்தையும் நம்பிக்கையையும் அளித்தவர். பணியாளப் பெண்மணியும் வாத்தை தன் அன்னையின் வடிவமாகக் கண்டு அதற்கு அன்னமிட்டவர். மறைந்த மூதாட்டியும் ஒரு ஆதரவற்ற சிறுவனுக்கு அன்னமிட்டு வளர்த்தவர். இந்த மூவருக்கும் பொதுவாக இருப்பது அன்னம். இந்த மூவரும் அருகருகே வரும் இடமாக அன்னமய உடலை எரித்து சாம்பலாக்கும் சுடுகாடு அமைந்திருப்பது புனைவு ரீதியில் சிறப்பானது. 

வாழ்த்துக்கள் சீனு !

புனைவுலகில் நீங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பது நண்பனாக எனது விருப்பம்.

Wednesday, 14 August 2024

நான் கண்ட விவேகானந்தர் - சகோதரி கிருஸ்டைன்

 


அமெரிக்காவில் டெட்ராய்ட் நகரில் வசிக்கும் கிறிஸ்டைன் தேவாலயம் ஒன்றில் ஓர் இந்தியத் துறவி உரையாற்றுவதாய் அறிந்து அந்த உரையைக் கேட்கச் செல்கிறார். அன்று கேட்கும் உரை அவரது வாழ்க்கைப் போக்கில் ஒரு திருப்புமுனையாக அமைகிறது. தனது வாழ்க்கையை ஆன்மீகப் பாதையில் அமைத்துக் கொள்ள அந்த உரை காரணமாகிறது. கிறிஸ்டைன் சகோதரி கிறிஸ்டைன் ஆகிறார். டெட்ராய்ட்டில் அன்று நிகழ்ந்த உரையை நிகழ்த்தியவர் சுவாமி விவேகானந்தர். 

சகோதரி கிறிஸ்டைன் தனது குருநாதர் குறித்து தனது நினைவுகளை எழுதியுள்ள நூல் ‘’நான் கண்ட விவேகானந்தர்’’. ஒவ்வொரு சொல்லிலும் ஜீவன் ஒளிரும் நுண்ணிய மொழியும் சித்தரிப்பும் சகோதரி கிறிஸ்டைன் உடையது. கோடானுகோடி ஜீவராசிகளில் ஓரிரண்டு ஜீவன்களுக்கு மட்டுமே வாய்க்கும் உன்னதமான ஆன்மீக அனுபவங்களை சொல்லில் வெளிப்படுத்தும் தருணம் என்பது மிகவும் அபூர்வமானது. சகோதரி கிறிஸ்டைனின் நூல் நெடுக இந்த அபூர்வம் நிகழ்ந்துள்ளது. 

முதல் முறையாக சுவாமிஜியின் உரையைக் கேட்கும் அனுபவத்தை சகோதரி விவரிக்கிறார். சுவாமிஜியின் மனப் பிரவாகத்தைக் காட்டாற்று வெள்ளம் என்கிறார். அவர் முன்வைக்கும் விஷயங்கள் காஷ்மீரச் சால்வையின் நேர்த்தி கொண்டவை என்கிறார். டெட்ராய்ட் நகரில் கேட்ட சுவாமிஜியின் உரை சகோதரி மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

பின்னர் , ஆயிரம் தீவுச் சோலையில் சுவாமிஜி தனது அமெரிக்க சீடர்களுடன் ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டிருக்கும் போது அங்கு ஒரு சீடராக இணைந்து கொள்கிறார் சகோதரி. சுவாமிஜியின் வாழ்க்கை குறித்து சுவாமிஜியின் குருநாதர் குறித்து என பல விஷயங்களை சுவாமிஜியின் சொற்கள் மூலம் நேரடியாகக் கேட்டறியும் வாய்ப்பைப் பெறுகிறார். 

யார் குரு என்ற கேள்வி சுவாமிஜியிடம் கேட்கப்படுகிறது. யார் பிரம்மத்தை உணர்ந்தவரோ அவரே குரு என பதில் சொல்கிறார் சுவாமிஜி. வினாவுக்கு பதில் சொன்னவர் பிரம்மத்தை உணர்ந்த ராமகிருஷ்ண பரமஹம்சரை குருவாகப் பெற்றவர். வினாவை எழுப்பியவர்கள் பிரம்மத்தை உணர்ந்த சுவாமி விவேகானந்தரை குருவாகப் பெற்றவர்கள். இந்த அழகிய தருணம் இந்த நூலில் பதிவாகியுள்ளது. 

சுவாமிஜி தன் சீடர்களிடம் ‘’கன்ஹேரி’’ என்ற இடத்தைக் குறித்துக் கூறுகிறார். நாம் அனைவரும் அங்கே பல நாட்கள் ஆன்மீக சாதனைகள் செய்து பல நாட்கள் பல மாதங்கள் பல வருடங்கள் ஒன்றாக இருந்திருக்கிறோம் என்று சொல்கிறார். இதனை சுவாமிஜி கூறும் போது அங்கிருக்கும் பலர் இந்தியாவுக்கு வந்ததே இல்லை. பின்னர் பல ஆண்டுகள் கழித்து சகோதரி மும்பை அருகில் உள்ள கன்ஹேரி என்ற இடத்துக்கு வருகிறார். அது பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் பௌத்த சங்கமாக இருந்த இடம் என்பதைக் காண்கிறார். பிறவிகள் பலவற்றில் ஒன்றில் தானும் தன் சீடர்களும் துறவிகளாக இருந்ததை சுவாமிஜி கூறியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்கிறார் சகோதரி. 

சகோதரி கிறிஸ்டைனின் அறிவுத்திறனையும் அழகுணர்ச்சியையும் தெய்வீகத் தன்மையையும் அவரது சொற்களில் காணும் போது அவரது குருநாதரான சுவாமி விவேகானந்தர் என்னும் பெரும் ஞான சூரியனை நம் மனம் கற்பனை செய்து கொள்கிறது. அந்த ஞான சூரியன் முன் அடிபணிகிறது.

நான் கண்ட விவேகானந்தர் - சகோதரி கிறிஸ்டைன்- மொழியாக்கம் : கோவை ந. சுப்ரமணியன் பக்கம் : 242 விலை : ரூ.60 பதிப்பகம்: ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை - 4.  
 

Tuesday, 13 August 2024

அட்மிஷன் ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளரின் நண்பரான அண்டை கிராமத்து விவசாயியின் மகன் மறுநாள் குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்தோடு போய் சாமி கும்பிட்டு விட்டு மாலை வீட்டுக்கு வருவதாகக் கூறி விட்டு சென்றிருந்தான். அமைப்பாளரும் இன்னும் 4 காலேஜ் என்னென்ன என்று யோசித்து வைப்பதாகக் கூறியிருந்தார். மாணவனும் வரவில்லை. அமைப்பாளரும் அடுத்த நாலு காலேஜ் யோசிக்கவில்லை. ஆனால் அமைப்பாளருக்கு 335 என்ற எண்ணும் 185 என்ற எண்ணும் அடிக்கடி நினைவுகளில் வந்து கொண்டிருந்தது. முன்னது ஜெனரல் ரேங்க் . பின்னது பி.சி ரேங்க். கணிணி இந்த எண்களை வரிசைப்படுத்தி அடுக்கி கலக்கி என்னென்னவோ செய்வது போல் எண்ணம் அடிக்கடி வந்து போனது. 

அடுத்த நாளும் மாணவன் வரவில்லை ; ஃபோனும் வரவில்லை. அவனே நாலு காலேஜை லிஸ்டில் சேர்த்திருப்பானோ என்று ஐயுற்றார் அமைப்பாளர். அவன் தனிநபர் இல்லை. அவன் நண்பர்கள் குழாம் திறன்பேசி வலைப்பின்னலில் இருக்கிறது என்பதால் சற்று ஆசுவாசமாக இருந்தார் அமைப்பாளர். 

இன்று காலை 10 மணிக்கு அவனிடமிருந்து ஃபோன். 

சாய்ராம் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவு கிடைத்திருப்பதாக. அவனுக்கு விரும்பியது கிடைத்ததில் மெத்த சந்தோஷம். அமைப்பாளருக்கும். 

Sunday, 11 August 2024

கவுன்சிலிங் ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளரின் நண்பர் ஒருவர் அண்டை கிராமத்து விவசாயி. விவசாயியின் மகன் இந்த ஆண்டு 12ம் வகுப்பு நிறைவு செய்துள்ளான். அவனுடைய என்ஜினியரிங் அட்மிஷன் தொடர்பாக இணையத்தில் விண்ணப்பித்தல், கல்லூரியைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவை தொடர்பாக உதவிடுமாறு விவசாயி கேட்டுக் கொண்டார்.  

அமைப்பாளர் பொறியியல் கல்வி முடித்து 21 ஆண்டுகள் ஆகிறது. கவுன்சிலிங் முறை எத்தனையோ மாற்றம் கண்டு விட்டது. அமைப்பாளர் மாணவனை தஞ்சாவூர் சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பி.டெக் அப்ளை செய்யச் சொன்னார். மாணவனும் செய்தான். முதல் பட்டியலில் பெயர் வரவில்லை. இரண்டாம் பட்டியலில் பெயர் வந்தது. ஆனால் மெக்கானிக்கல் என்ஜினியரிங் கிடைத்தது. மாணவன் மெக்கானிக்கல் வேண்டாம் என்று கூறி விட்டான். 

அண்ணா யுனிவர்சிட்டி கவுன்சிலிங்கில் இரண்டாம் பட்டியலில் முதல் மார்க் விவசாயியின் மாணவனுடையது. 200க்கு 179.5. இந்த விபரத்துடன் நேற்று அமைப்பாளர் வீட்டுக்கு வந்தான் மாணவன். அவனுக்கு சாய்ராம் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர வேண்டும் என்பது விருப்பம். வேறு சில கல்லூரிகளின் பெயர்களையும் விருப்பப் பட்டியலில் அளிக்க வேண்டும். 

25 ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டிருந்த பொறியியல் கல்லூரிகளின் பெயர்களை பட்டியலில் இருவரும் தேடிக் கொண்டிருந்தனர். ஆயிரக்கணக்கான கல்லூரிகள் இருக்கின்றன. தேடல் மட்டும் நடக்கிறதே தவிர முடிவு வந்த பாடில்லை. அமைப்பாளர் தன் வழியில் ஒரு முடிவை எட்டுவது என்று முடிவு செய்தார். 

‘’தம்பி ! செகண்ட் லிஸ்ட்ல உன் மார்க் ஃபர்ஸ்ட் இருக்குன்னு சொல்றல்ல. ஒரே மார்க் இருந்தாலும் பல பேர் அதே மார்க் இருப்பாங்க. அதுல நீ எத்தனையாவது இடத்துல இருக்கன்னு உனக்குத் தெரியுமா?’’

‘’335வது இடத்துல’’

’’பேக்வர்டு கம்யூனிட்டி லிஸ்ட்ல நீ எத்தனையாவது ரேங்க்ல இருக்க?’’

‘’185 வது இடத்துல’’

’’நீ எந்த காலேஜ்ல படிக்கலாம்னு நினைக்கற?’’

‘’சாய்ராம், சாய்ராம் அட்டானமஸ், வேலம்மாள்’’

‘’இந்த காலேஜ்ல என்னென்ன கோர்ஸ் கிடைச்சா படிப்ப?’’

‘’கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், சைபர் செக்யூரிட்டி, ஐ.டி, இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்’’

மேற்படி மூன்று கல்லூரிகளிலும் மேற்படி பாடங்களில் எத்தனை சீட் இருக்கிறது என்று கணக்கு செய்யச் சொன்னார் அமைப்பாளர். மொத்தம் 190 சீட் இருந்தது. 

‘’தம்பி ! நீ சொன்ன 3 காலேஜ்ல ஏதாவது ஒரு காலேஜ்ல நீ சொன்ன ஏதாவது ஒரு கோர்ஸ் கிடைச்சுடும் தம்பி. மொத்தம் 190 சீட் இருக்கு. நீ 185வது இடத்துல இருக்க. முதல்ல ஓ.சி லிஸ்ட் ஃபில்லப் ஆகும். நாம அதை கணக்குல சேக்கல. அது உன் பாஸிபிலிட்டியை இன்னும் கொஞ்சம் கூட்டும். அதனால இந்த மூணுல ஒன்னு கன்ஃபார்ம்’’

மாணவன் திரும்ப மறுநாள் வருவதாகக் கூறி விட்டு சென்றான். 

யாரிடமாவது விசாரித்து இன்னும் நாலு கல்லூரியை விருப்பப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நினைத்தார் அமைப்பாளர்.