Saturday, 12 December 2020

ஆசான் சொல் - 13

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு (781)

நட்பு மானுட மனம் கொள்ளும் உணர்வுகளில் மகத்தானது. மனித மனம் தான் பிறர் என எதனையும் பிரித்து பிரித்து அர்த்தப்படுத்திக் கொள்ளும் தன்மை உடையது. அவ்விதமான எந்த பிரிவினையும் பேதமும் இல்லாதது நட்பு. பிரியம், நேசம் போன்ற உறவின் உணர்வு நிலைகளில் முதன்மையானது நட்பு. நட்புக்கு எந்த நிபந்தனையும் இல்லை. கடவுளையே தோழனாகக் கருதியிருக்கிறார்கள் நம் நாட்டில்.

நட்பைப் போல் அரிய ஒன்று மானுட வாழ்வில் உண்டா என வியந்து கேட்கிறார் திருவள்ளுவர். 

நாம் ஆற்றும் ஒரு செயலுக்கு ஒரு நண்பனைப் போல எவர் துணை நிற்க முடியும் என்றும் கேட்கிறார். 

ஒரே திருக்குறளில் பெருவியப்பை வெளிப்படுத்தும் இரண்டு வினாக்கள். 

அறச்சார்பு கொண்டவர்களுக்கு நண்பனாக உடனிருந்து யுத்தத்தை வென்று கொடுத்தவன் பகவான் ஸ்ரீகிருஷ்ணன்.