Monday, 16 February 2026

அகவய அபிப்ராயங்கள் - மனம்

 ஒவ்வொருவருக்கும் மனம் இருக்கிறது. மனம் இருப்பதால் மட்டுமே 99.99 சதவீத மனிதர்கள் தங்கள் இருத்தலையே உணர்கிறார்கள். மனதை மட்டுமே எல்லாமும் என்று நினைக்கின்றனர். மனம் ஒரு பொருளா அதன் வடிவம் என்ன அதன் செயல்முறை என்ன என்பதை நாம் அறிந்ததில்லை ; அதனை அறிய வேண்டும் என விருப்பம் கொண்டதில்லை. அறிவதற்கான பாதையில் செல்லத் துவங்குவதில்லை. அந்த பயணத்தை முழுமை செய்வதில்லை. மனம் என்பது ஞாபகங்களின் தொகுப்பு. ஞாபகம் ஒவ்வொருவரின் சூழலுக்கு ஏற்ப மாறுவது. ஒருவரின் ஒரு மனம் போல இன்னொருவருக்கு இன்னொரு மனம் இருக்கிறது. ஒருவருக்கே ஒன்றுக்கு மேற்பட்ட மனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவ்விதமே. மனம் சொல்வது மட்டுமே நமக்குக் கேட்கிறது. மனம் சொவதைக் கேட்டு அப்படியே நாம் நடந்து விடுவதில்லை. நல்லதாயினும் அல்லதாயினும். மனங்கள் பூசலிடுகின்றன. மனங்கள் விரும்புகின்றன. மனங்கள் இணைகின்றன. மனங்கள் பிரிகின்றன. மனங்கள் சினேகிக்கின்றன. மனங்கள் விரோதம் கொள்கின்றன. மனம் உடலைத் தன் கட்டுப்பாட்டில் எடுக்கிறது. மனம் உடல் இயக்கத்தில் தாக்கம் செலுத்துகிறது. துயர் என உணர்வது மனத்தில். மகிழ்ச்சி என உணர்வதும் மனத்தில்.