Saturday, 21 February 2026

புத்தகங்கள் புத்தகங்கள் (நகைச்சுவைக் கட்டுரை)

 எனது மேஜை பல்வேறு வஸ்துக்களால் நிறைந்து கிடந்தது. சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகி குறைந்தது 15 நாட்களாவது ஆகியிருக்கும். எப்படி துவங்குவது என்னும் அச்சம். அத்தனை இருந்தன மேஜையில். ஒரு சாதாரண (அசாதாராண!) விஷயத்தை இத்தனை நாள் ஒத்திப் போடுவதா என மேஜையை சரி செய்யத் தொடங்கினேன். இம்முறை சரி செய்த போது நான் ஒன்றை உணர்ந்தேன். என் மேஜை முழுக்க புத்தகங்கள் தான் இருக்கின்றன. ஒரு புத்தகம் வாசித்தால் உடனே அதைக் குறித்து எனது தளத்தில் எழுதி விடுகிறேன். ஆனால் அந்த புத்தகத்தை புத்தக அலமாரியில் கொண்டு போய் வைப்பது இல்லை. ஏனெனில் எனது புத்தக அலமாரி நிரம்பி விட்டது. ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் இருக்கின்றன. புதிதாக வைக்க இடம் இல்லை. எனது அறையில் ஒரு ஷெல்ஃப் காலியாய் இருப்பதை இன்று காலையில் பார்த்தேன். மேஜையில் இருக்கும் புத்தகங்கள் அனைத்தையும் அதில் கொண்டு போய் வைத்து விட்டு வந்தேன். மேஜையின் மேல்பரப்பு ஓரளவு சரியாகி விட்டது. இன்னும் டிராவ் திறக்கப்படவில்லை. அதைத் திறந்தால் இன்னும் என்னென்னவோ?