இறைவன் பெரும் படைப்பாளி. அவனது சிந்தை கணந்தோறும் படைத்துக் கொண்டேயிருக்கிறது. சமீபத்தில் அவன் படைத்த 3 பூனைக்குட்டிகள் வீட்டின் கார் ஷெட் அருகே உலாவுகின்றன. அங்கே இரு தென்னை மரங்கள் உள்ளன. அந்த தென்னை மரங்கள் தான் அவற்றின் பயிற்சிக் கூடம். மரத்தில் தன் கால் நகங்களின் துணை கொண்டு இறுகப் பிடித்து தொற்றி தொற்றி ஏறிப் பழகுகின்றன. கட்டுமானத்தில் பயன்படும் உபகரணங்கள் அங்கே கிடக்கும். அவற்றில் ஏறிக் குதித்தி அவற்றைக் கவிழ்க்கின்றன. இரவு நேரங்களில் வீட்டு வாசலில் கிடக்கும் மிதியடியில் குளிருக்கு இதமாக வந்து படுத்துக் கொள்கின்றன. அடிக்கடி அவற்றைப் பார்க்க நேர்கிறது. நம் பிராந்தியத்தில் நம்மை விட சுதந்திரமாக உலவும் இவன் யாராக இருப்பான் என்னும் விதத்தில் என்னைப் பார்க்கின்றன. தாய்ப்பூனை அவ்வப்போது வந்து அவற்றைப் பார்த்துக் கொண்டு செல்கிறது. அந்தச் சிறு பிராந்தியத்தை தங்கள் முழு சுவாதீனத்தில் எடுத்திருக்கின்றன அப்பூனைக் குட்டிகள்.