எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில். எனது இயல்பு எந்த விஷயத்தையும் உள்ளது உள்ளபடி சொல்லி விடுவேன். ரியல் எஸ்டேட்டில் அவ்விதம் இருந்தால் மனச்சுமை இல்லாமல் இருக்கலாம். இந்த தொழிலில் உள்ளது உள்ளபடி சொன்னாலும் வேலை நடக்கும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. எனவே 99.99 சதவீதத்தினர் அவ்விதம் இருக்க மாட்டார்கள். உளவியலில் ஒரு விஷயம் கூறப்படுவதுண்டு. சரியாகச் சொல்லப் போனால் ஒரு விஷயம் அல்ல இரண்டு விஷயங்கள். அதாவது நாம் ஒரு செயலை செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டால் அதனை 100 சதவீதம் அப்படியே சொற்களாக வெளிப்படுத்தக் கூடாது. அவ்விதம் வெளிப்படுத்தினால் அந்த செயல் நடந்து விட்டதாக மனமும் உடலும் நம்பத் தொடங்கி விடும். அடுத்த பணியை நோக்கி அடுத்த மனநிலையை நோக்கி உடலும் மனமும் நகரும். நாம் செய்ய விரும்பிய செயலுக்கு உடலும் மனமும் முழு ஒத்துழைப்பை அளிக்காது. எனவே நாம் செய்ய விரும்பியதை செய்ய விரும்பிய வண்ணமே செய்ய அல்லது இன்னும் சிறப்பாகச் செய்ய அது நடந்து முடியும் வரை அதனை வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும். இதெல்லாம் லௌகிக வாழ்க்கையில் எல்லாருமே கவனித்திருப்பார்கள். ரியல் எஸ்டேட் பேரங்களாலும் பேச்சுவார்த்தைகளாலும் ஆனது. இங்கே ஒரு செயல் நிகழ்ந்து முடியும் வரை பேசாமல் இருக்க முடியாது. ஆகவே என்ன செய்வார்கள் என்றால் செய்ய விரும்பும் விஷயத்தை சற்றே மாற்றிச் சொல்வார்கள். ஒருவருக்கு அடுத்த நாள் புதுச்சேரி செல்லும் வேலை இருந்தால் அவர் மற்றவர்களிடம் ‘’நாளை விழுப்புரம் செல்கிறேன்’’ என்பார். இரண்டும் பக்கத்து பக்கத்து ஊர்கள். ஆதலால் அவர் சொன்னது உண்மை அல்ல என்ற கணக்கில் வராது என்பது இதன் சமாதானம். இன்னும் சிலர் ‘’நாளை கடலூர் செல்கிறேன்’’ என்பார்கள். கடலூரைத் தாண்டித்தான் புதுச்சேரி செல்ல வேண்டும் என்பதால் தான் கூறியது முழு உண்மையே என்பது அவர்கள் எண்ணம். புதுச்சேரியை கடலூர், விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம் எனக் கூறுபவர்கள் ரியல் எஸ்டேட்டில் பரவலானவர்கள். புதுச்சேரி செல்ல இருப்பதை ஒருவர் ’’நாளை திருப்பூர் செல்ல இருக்கிறேன்’’ எனக் கூறினால் அவர் சற்று எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய நபர் என பிறர் ஜாக்கிரதை ஆகி விடுவார்கள். காவல்துறையில் ஒரு விஷயம் கூறப்படுவதுண்டு. ஒருவர் தன் முகவரியை மாற்றிக் கொடுக்கிறார் என்றால் அவர் நேரு நகரில் வசித்தால் இந்திரா நகர் என மாற்றி எழுதுவார். தஞ்சாவூரில் வசித்தால் திருச்சி என மாற்றி எழுதுவார் எனக் கூறுவார்கள். மனம் அந்த அளவு மாற்றத்தை மட்டுமே இலகுவாக அனுமதிக்கும். ஒருவர் முற்றிலும் மாற்றி எழுதுகிறார் என்றால் இவ்விதமான விஷயத்தை பலமுறை செய்த வழக்கம் கொண்டவர் என அவதானித்துக் கொள்வர். என்னுடைய பாணி ’’நாளை ஊரில் இல்லை’’ என்று மட்டும் கூறிவிடுவது. இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் உண்டு. உண்மையைத் தவிர வேறு எதைக் கூறினாலும் உடனிருப்பவர்களுக்கு அது தெரிந்து விடும். எதற்கு எதை மாற்றிக் கூறுவார் என்பது கூட தெரிந்து விடும். ஆதலால் எந்த அல்லலும் இன்றி சம்பந்தப்பட்டவர் மனதைப் படித்து விடுவார்கள். நண்பர் எதைச் சொன்னாலும் அதன் உட்பொருள் எனக்குத் தெரிந்து விடும். எனது மௌனத்தின் உட்பொருள் அதே அளவு நண்பருக்கும் தெரிந்து விடும். எனக்கும் அவர் மீது புகார் இல்லை. அவருக்கும் என் மீது புகார் இல்லை. நாங்கள் பல விஷயங்களில் இணைந்து செயல்படுகிறோம்.