என்னிடம் யாராவது ஒரு நிலமோ மனையோ விற்பனைக்கு வருகிறது என்று சொன்னால் அந்த இடத்தை என்னிடம் காட்டச் சொல்வேன். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அனைவருமே முதலில் இடத்தைப் பார்க்க விரும்புவார்கள். அந்த இடத்தைப் பார்க்கும் போது மனம் எப்படி உணர்கிறது உள்ளுணர்வு எவ்விதம் செயல்படுகிறது என்பது முக்கியமானது என்பதால் முதலில் இடத்தை நேரில் பார்ப்பது என்பதை வைத்துக் கொள்வார்கள். அந்த இடம் அமைந்திருக்கும் சாலையின் அகலம் என்ன பக்கத்து நிலம் அல்லது மனை யாருக்குச் சொந்தமானது எல்லைகள் வேலியிடப்பட்டிருக்கின்றனவா வித்தியாசமாக ஏதும் புறச்சூழ்நிலை உள்ளதா என்பவை அந்த முதற்பார்வையிலேயே தெரிந்து விடும். என் மனதுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே அந்த இடத்தை எனது வாடிக்கையாளர்களுக்குக் காட்டுவேன். ஒருவருக்கு இடம் பிடித்திருந்து இடத்தின் உரிமையாளர் சொல்லும் விலைக்கு அருகில் வரும் அளவு வாடிக்கையாளருக்கு வாங்கும் சக்தி இருந்தால் ‘’வாங்குபவர்’’ ‘’விற்பவர்’’ சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். இது பரவலான வழிமுறை. கடந்த சில நாட்களில் நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். நில உரிமையாளர் அல்லது நிலத் தரகர்கள் எவரும் நிலம் அல்லது மனை விற்பனைக்கு வருகிறது என்று சொன்னால் முதலில் அவர்களை அந்த நிலத்தின் ஆவண நகல், மூல ஆவண நகல், 100 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றிதழ், சொத்து வரி ரசீது நகல், மனை வரைபடம் அல்லது நில வரைபடம், அதில் கட்டிடம் இருந்தால் கட்டிட வரைபடம் ஆகிய அனைத்தையும் ஒரு கோப்பாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை வற்புறுத்திக் கூற வேண்டும் என இருக்கிறேன். நான் இந்தத் துறைக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகிறது. கட்டுமானம் தான் என்னுடைய தொழில். அதன் உப பிரிவாக ரியல் எஸ்டேட் எனக்கு இருந்தது. ரியல் எஸ்டேட்டை பிரதானமாக நான் கொண்டதில்லை. ஆனால் நான் துறைக்கு வந்ததற்கும் இப்போதைக்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது. முன்னர் என்னுடைய வாடிக்கையாளர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். ஊரில் சிறந்த குடியிருப்புப் பகுதியில் 2400 சதுர அடி மனையை சதுர அடி ரூ.100 வீதம் ரூ.2,40,000க்கு வாங்க முடியும். 20 ஆண்டுகளுக்கு முன்னால் சதுர அடி ரூ.100 விற்ற மனை இப்போது சதுர அடி ரூ.2500 விற்கிறது. ரூ.2,40,000 என்ற அளவில் வாங்கப்பட்ட மனை இன்று ரூ.60,00,000க்கு விற்பனை ஆகிறது. 25 மடங்கு விலையேற்றம். ஒரு ஏக்கர் விளைநிலம் அப்போது ரூ.44,000 என்ற விலையில் இருந்தது. இன்று ஒரு ஏக்கர் நிலம் ரூ. 30,00,000 க்கு விற்பனை ஆகிறது. 68 மடங்கு விலையேற்றம். இடம் மாறவில்லை. அப்படியே இருக்கிறது அசையாமல். விலை மாறிவிட்டது பலமடங்கு. இந்த 20 ஆண்டுகளில் பத்திரப்பதிவுத் துறையின் விதிமுறைகளும் பெரும் மாற்றம் கொண்டுள்ளன. இருப்பினும் ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் மனதில் கடந்த காலத்தின் நினைவுகள் மட்டுமே ஆழ வேரூன்றி இருக்கிறது. இந்தத் துறையே ‘’கடந்த காலத்தின் கைதி’’ ( prisoner of past)யாக உள்ளது.
இனி என்ன செய்யலாம் என இருக்கிறேன் என்றால் நில உரிமையாளர்களோ அல்லது தரகர்களோ இடம் குறித்து கூறினால் அந்த நிலத்தின் ஆவண நகல், மூல ஆவண நகல், 100 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றிதழ், சொத்து வரி ரசீது நகல், மனை வரைபடம் அல்லது நில வரைபடம், அதில் கட்டிடம் இருந்தால் கட்டிட வரைபடம் ஆகிய அனைத்தையும் ஒரு கோப்பாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனக் கூற இருக்கிறேன். இன்று எந்த ஒரு அசையா சொத்துமே மிகக் குறைந்தபட்சம் ரூ.10,00,000 என்ற விலையில் இருக்கிறது. அத்தனை மதிப்பு மிக்க சொத்து தொடர்பான கோப்பை உருவாக்கிக் கொள்வது நில உரிமையாளரின் கடமை ; மேலும் நிலத் தரகர்களுக்கும் நேரம் மிச்சமாகும். ஒரு இடத்தைக் காட்டி வாடிக்கையாளருக்கு அந்த இடம் பிடித்திருந்து ‘’விற்பவருடன்’’ சந்திப்பு ஏற்பாடு செய்யச் சொன்னால் தேவையான ஆவண நகல்களைப் பெறுவதில் ஒரு வாரம் ஓடி விடும். அந்த பணியில் அலைச்சல் அதிகம்.
நிலம் அல்லது மனை தொடர்பான கோப்பு உருவாக்கப்படும் போது அந்த இடம் அல்லது மனை தொடர்பான விஷயங்கள் ஒரு சட்டகத்துக்குள் அல்லது வரையறைக்குள் வருவது அந்த இடம் தொடர்பான வணிக நகர்வை முக்கிய இடத்துக்குக் கொண்டு செல்லும் என எண்ணுகிறேன்.
மீடியேட்டர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பே ‘’டாகுமெண்ட் ஜெராக்ஸ்’’ என ஆவண நகல் வைத்திருப்பார்கள். ‘’டாகுமெண்ட் ஜெராக்ஸ்’’ வைத்திருக்கும் மீடியேட்டர் நில உரிமையாளரின் நம்பிக்கைக்குரியவர் என்பது பொருள். நம்பிக்கைக்குரிய மீடியேட்டரிடம் மட்டுமே நில உரிமையாளர் ‘’டாகுமெண்ட் ஜெராக்ஸ்’’ தருவார். இப்போது காலமும் சூழ்நிலையும் சட்டதிட்டங்களும் இடம் பொருள் ஏவலும் மாறி விட்டது. முழுமையான கோப்பு இப்போது அவசியத் தேவை.
ஒரு இடத்தையோ அல்லது ஒரு நிலத்தையோ பார்த்தால் அது என் மனதுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே நான் அதில் ஈடுபடுவேன். ‘’பிடித்திருக்கிறது’’ அல்லது ‘’பிடிக்கவில்லை’’ என்பதை உடனடியாக அங்கேயே கூறி விடுவேன். இனி நிலத்தின் உரிமையாளர்கள் அல்லது மீடியேட்டர்களிடம் நிலத்தின் கோப்பை முழுமையாகக் கொடுத்தால் தான் நிலம் அல்லது இடம் பார்க்கவே வருவேன் எனக் கூறி விடலாம் என இருக்கிறேன்.