Wednesday, 1 April 2026

அதிகாலைக் கனவு

 இன்று அதிகாலை ஒரு கனவு கண்டேன். எவ்விதம் அது அதிகாலைக் கனவு என்று கூறுகிறேன் என்றால் கனவு கண்டவுடன் விழித்து விட்டேன். அப்போது நேரம் 4.45. கனவு என்னவெனில், சென்னை ஐ ஐ டி அல்லது சென்னை எஸ்.ஈ.ஆர்.சி போன்ற ஓர் உயர்கல்வி நிறுவனம். அங்கே எம்.ஈ அல்லது எம்.டெக் போன்ற மேல்படிப்புக்குத் தேர்வான மாணவர்கள் அங்கே இருக்கும் ஓர் ஆய்வகத்துக்குச் செல்கிறோம். நாங்கள் 25 பேர் இருப்போம். எங்கள் வகுப்புகளின் முதல் நாள் அன்று. அலுவலகத்தில் சேர்க்கை தொடர்பான பணிகளை முடித்து விட்டு அவர்கள் அளித்த குறிப்புகளின் படி ஆய்வகத்துக்கு வருகிறோம். அங்கே இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்கள். நிறைய பேராசிரியர்கள் இருக்கிறார்கள். அலுவலகத்தில் எங்களை யாரைச் சென்று பார்க்கச் சொன்னார்களோ அவரைச் சென்று பார்க்கிறோம். அப்போது அங்கிருக்கும் ஆய்வகம் எங்களுக்கு ஆர்வமூட்டுவதாய் இருக்கிறது. அதன் செயல்பாடுகளை கவனிக்கிறோம். அந்தப் பேராசிரியர் எங்களில் ஒருவரின் ஃபுல் சைஸ் நோட்டை வாங்கி அதில் ஒரு கணக்கை எழுதுகிறார். அது கணிதத்தில் ’’மேட்ரிக்ஸ்’’ என்னும் பாடத்தில் கேட்கப்படும் வினா. நாங்கள் அந்த வினா என்ன என்று பார்க்கிறோம். அந்த நோட்டை வாங்கி அக்கணக்குக்கான தீர்வை ஏழெட்டு படிகளில் கொண்டு வந்து நான் எழுதுகிறேன். அதனை அவரிடம் காட்டுகிறோம். ‘’சரியான விடை’’ என்று கூறுகிறார்.