சில வாரங்களுக்கு முன், நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அடுத்தடுத்து சந்திப்பதற்கு சில சந்தர்ப்பங்கள் வாய்த்தன. அவர் பல ஆண்டுகளாக ஒரு பள்ளியை நடத்துகிறார். அதில் இப்போதிருக்கும் 300 என்ற மாணவர் எண்ணிக்கையை 1200 என ஆக்குங்கள் என்று சொன்னேன். எனது எண்ணங்களை முன்வைத்தேன். பண்டைய இந்தியக் கல்விமுறையிலிருந்து இன்றைக்கு நிலவும் கல்வி முறை வரை பல விஷயங்களை அணுகி எடுத்துக்காட்டி எனது அபிப்ராயங்களையும் எண்ணங்களையும் அவரிடம் சொன்னேன். எனது தளத்தில் எழுதினேன். எழுதியவற்றை அவரும் வாசித்தார். குழப்புதல் (நகைச்சுவைக் கட்டுரை) யிலிருந்து அதிர்ச்சி அடைதல் என்னும் பதிவு வரைக்கும் கணிசமாக எழுதினேன். ஒரு கல்வி நிறுவனம் தொடங்குவது குறித்தும் நடத்துவது குறித்தும் என்னால் இப்போது ஒரு மனச் சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. இவை இவற்றின் இலக்கை எட்டினவா? நண்பர் பள்ளியை மேலும் விரிவுபடுத்துவரா ? இந்த இரண்டும் முக்கியமான கேள்விகள். இவற்றுக்கான பதில் நண்பரின் தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தும் எதிர்கால முடிவுகளைப் பொறுத்தும் அமையும். என்னால் இயன்ற அளவில் ஒரு துவக்கச் சித்திரத்தை உருவாக்கியுள்ளேன். அவர் தொடர்ந்து சிந்தித்து இதனுள் உள் நுழைந்தால் திட்டமிடுதலில் மேலும் அவருக்கு உதவ முடியும்.
இன்று இந்த விஷயத்தின் மைய முடிச்சு ‘’தரக் கல்வி’’க்கும் ‘’பெருந்திரள் கல்வி’’க்கும் இடையே இருக்கும் வேறுபாடு என்பதை உணர்ந்தேன். அது குறித்து எழுத வேண்டும் என எண்ணினேன். மழை விட்டும் தூவானம் விடவில்லை.