இந்திய அரசியல் அமைப்பில் மாநில ஆளுநர் பதவிக்கு பெரும் முக்கியத்துவம் உள்ளது. குடியரசுத் தலைவருக்கும் மத்திய அரசுக்கும் மாநில ஆளுநர் மாநிலத்தில் மாநில அரசு இயங்குமுறை குறித்து அளிக்கும் அறிக்கை என்பது மிகவும் முக்கியமானது. மாநில நடப்புகள் குறித்து ஆளுநரின் மக்கள் மாளிகை தயாரித்து அளிக்கும் அறிக்கைகள் மிக முக்கிய ஆவணங்கள் ஆகும். இந்திய அரசியல் சாசனம் பல விஷயங்களில் குடியரசுத் தலைவருக்கு அளித்திருக்கும் அதிகாரத்தை விடவும் அதிகமாக ஆளுநருக்கு அதிகாரம் அளித்துள்ளது.
2021லிருந்து 2026 வரை நடைபெற்ற ஆட்சியில் மாநில ஆளுநர் பலவிதங்களில் முறையான மதிப்பு அளிக்கப்படாமல் இருந்தார். ஆளுநரின் பல சாதாரணமான பரிந்துரைகள் கூட ஏற்கப்படாமல் இருந்தன. சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது உரை துவங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஆளுநர் கோரினார். பல கடித போக்குவரத்துக்குப் பின் அது சாத்தியமானது. மகாத்மா காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி கிண்டியில் உள்ள பெரும் வளாகமான காந்தி மண்டபத்தில் அரசு விழாவை நடத்த வேண்டும் என ஆளுநர் கோரினார். அந்த கோரிக்கை ஏற்கப்படவேயில்லை. ஆளுநர் உரை ஒன்றின் போது சட்டசபை சபாநாயகரும் மாநில அரசின் உயர்கல்வி அமைச்சரும் ஆளுநரை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டனர். மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்ட எவருக்கும் இந்நிகழ்வுகள் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தின.
1996ம் ஆண்டு வரை அரசியல் சாசனத்தின் 356வது பிரிவு இந்திய அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டிருந்தது. ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் பெரும் சீர்கேடுகள் இருப்பதாக மத்திய அரசு எண்ணினாலோ மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருந்தாலோ ஆளுநரின் பரிந்துரைப்படியோ ஆளுநர் பரிந்துரை இல்லாமலோ கூட மத்திய அரசு மாநில அரசை பதவி நீக்கம் செய்ய முடியும்.
1994ம் ஆண்டின் எஸ். ஆர்.பொம்மை வழக்கின் படி, உச்சநீதிமன்றம் அரசியல் சாசனத்தின் 356வது சட்டப் பிரிவின் படி மாநில அரசைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர சில நிபந்தனைகளை விதித்தது. அதாவது, மாநில அரசைக் கலைத்ததை ஒரு தீர்மானமாக மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பாதி உறுப்பினர்கள் ஆதரவுப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். 1996க்குப் பின் பதவியேற்ற பல மத்திய அரசுகளிடம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் என இரண்டிலும் பெரும்பான்மை இல்லை. எனவே அரசியல் சாசனப் பிரிவு 356ன் பயன்பாடு என்பது பல ஆண்டுகளாக நடைபெறவில்லை. தற்போதைய மத்திய அரசுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் என இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை இருக்கும் நிலையில் எந்த மாநில நிர்வாகமும் சீராக இருக்கிறதா என்பதையும் எந்த மாநில சட்டம் ஒழுங்கும் அமைதியாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதையும் மாநில நிர்வாகத்தில் ஊழல் இல்லாமல் இருக்கிறதா என்பதையும் உன்னிப்பாக கவனிக்கும் தன்மை மேலும் கூடுதலாக மத்திய அரசுக்கு இருக்கிறது ; மாநில ஆளுநருக்கும் இருக்கிறது.
மத்திய அரசுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பெரும்பான்மை இருக்கும் நிலையில் மாநில ஆளுநரின் பணி என்பதும் மாநில ஆளுநர் மத்திய அரசுக்கு அளிக்கும் அறிக்கைகள் என்பதும் மாநில அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டது. இதனைப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.