Friday, 22 May 2026

ஒரு சாமானிய பிரஜையின் தேவை

சென்ற மாதம் நண்பர் ஒருவர் என்னைத் தனது வாகனத்தின் சீட் கவர் மாற்ற உடன் அழைத்துச் சென்றார். சென்ற இடத்தில் இருந்த பணியாளருக்கு நிலுவையில் பல வாகனங்கள் இருந்தன. எனவே 2 நாட்கள் கழித்து வருமாறு கேட்டுக் கொண்டார். நண்பருக்கு அவசரம். மறுநாளே தேவைப்பட்டது. தனது தேவையை பணியாளரிடம் வற்புறுத்திக் கொண்டிருந்தார். நடப்பவற்றை பார்த்துக் கொண்டு இருந்தேன். அதற்குள் நண்பர் பணி புரியும் ஐ டி நிறுவனத்திடமிருந்து அலைபேசி அழைப்பு வந்து விட்டது. தொழில்நுட்ப விபரங்களைத் தெரிவித்த படி நண்பர் அலைபேசி அழைப்புக்குள் மூழ்கி சீட் கவர் கடையிலிருந்து சற்று தள்ளிப் போனார். சிக்னல் மேலும் தெளிவாகக் கிடைக்கும் இடத்துக்கு அவர் சென்றிருக்கலாம். அப்போது இன்னும் சில நாட்களில் மாநில சட்டசபைத் தேர்தல் நடக்க இருந்தது. சீட் கவர் கடையின் பணியாளரிடம் பேச்சு கொடுத்தேன். 

‘’என்ன அண்ணன்! எலெக்‌ஷன் வருது. யாருக்கு ஓட்டு போடறதுன்னு முடிவு செஞ்சுருப்பீங்க’’

‘’இன்னும் அதப்பத்தி யோசிக்கல சார்’’

‘’இன்னும் ரெண்டு மூணு நாள்ல எலெக்‌ஷன் அண்ணன்’’

‘’ஆமாம் சார்’’ 

‘’கவர்மெண்ட் கொடுக்கற ஃபண்ட் உங்க வீட்டுக்கு கிடைக்கதுல்ல. நிறைய ஸ்கீம் இருக்கே. காலேஜ் படிக்கற குழந்தைகளுக்கு. வீட்டுல இருக்கற பெண்களுக்கு. நிறைய எய்ட் இருக்கே. வந்துட்டு இருக்குல்ல’’

‘’சார் ! கவர்மெண்டோட எந்த ஃபண்டும் எங்க வீட்டுக்கு வரதுல்ல?’’

‘’ஏன்?’’ அதிர்ச்சியுடன் கேட்டேன். 

‘’எங்க வீட்டுக்கு அரிசி ரேஷன் கார்டு இல்ல. ஜீனி ரேஷன் கார்டுதான் இருக்கு. அரிசி கார்டு இருக்கறவங்களுக்குதான் ஃபண்டு கிடைக்கும். ஜீனி கார்டுக்கு கிடையாது’’ 

‘’உங்களுக்கு எப்படி ஜீனி கார்டு கிடைச்சுது’’

‘’தெரியல சார். ரேஷன் கார்டு அரிசி கார்டுதான் அப்ளை செஞ்சன். ஆனா எனக்குக் கிடைச்சது ஜீனி கார்டு’’

‘’உங்க கிட்ட ஓட்டு கேட்டு பிரதானமா 3 குரூப் வந்திருப்பாங்கள்ல அவங்க கிட்ட உங்களுக்கு இந்த மாதிரி ஒரு பிரச்சனை இருக்குன்னு சொன்னீங்களா?’’

பணியாளர் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். 

‘’இப்ப தேர்தல் நடைமுறை அமல்ல இருக்கு. மே 4ம் தேதி ரிசல்ட். ரிசல்ட் வந்தப்புறம் கவர்மெண்ட் மெஷினரி வேலை செய்ய ஆரம்பிக்கும். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும். ஒவ்வொரு திங்கள் கிழமையும் காலைல 10 மணிக்கு கலெக்டர் ஆஃபிஸ்ல மனுநீதி நாள் நடக்கும். அங்க போயி உங்க பிரச்சனையை சொல்லி மனு கொடுப்போம். அவங்க ஒரு நம்பர் கொடுப்பாங்க. 3 மாசத்துக்குள்ள உங்க பிரச்சனையை சால்வ் பண்ணுவாங்க. அப்படி இல்லன்னா அடுத்து என்ன செய்யறதுன்னும் யோசிப்போம். அடுத்த மாசம் நான் உங்க கடைக்கு வரேன். ஒரு மனு எழுதித் தரேன். மனுநீதி நாளுக்கு கூட வரன். என்னால முடிஞ்ச அளவு உங்களுக்கு அரிசி கார்டு கிடைக்க முயற்சி செய்யறன்’’

அதற்குள் நண்பர் வந்து விட்டார். தீவிரமாக நானும் பணியாளரும் உரையாடிக் கொண்டிருப்பதை ஆச்சர்யமாகப் பார்த்தார். 

4ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்தன. தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைந்தது. பதவியேற்பு தொடர்பான முஸ்தீபுகள் நடந்து கொண்டிருந்தன. புதிய அரசு இன்னும் பதவியேற்கவில்லை. மே 11ம் தேதி எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மனுநீதி நாள் தொடங்கும் என ஆகாஷ்வாணி வானொலி செய்தி கூறியது. எனக்கு சீட் கடை பணியாளரின் நினைவு வந்தது. 

நேற்று அவருடைய கடைக்குச் சென்றேன். அவர் என்னை மறந்திருந்தார். ஜீனி கார்டு அரிசி கார்டு எனக் கூறியதும் அவருக்கு நினைவு வந்தது. 

ஒரு வெள்ளைக்காகிதத்தில் அவருடைய கோரிக்கையை மனுவாக எழுதினேன். இப்போதிருக்கும் ரேஷன் கார்டு எண் என்ன என்று கேட்டேன். அவர் வீட்டில் பார்த்து வருகிறேன் என்றார். நாளை மீண்டும் வருகிறேன் எனக் கூறிவிட்டு வந்தேன். 

ரேஷன் கார்டு துறையின் இணையதளத்தில் ஏதேனும் விபரம் இருக்கிறதா எனக் காண அவருடைய ஸ்மார்ட்ஃபோனை வாங்கி கூகுளில் தேடிப் பார்த்தேன். அப்போது அவருடைய ஸ்கிரீன்சேவரில் தற்போதைய தமிழக முதலமைச்சரின் புகைப்படம் இருப்பதைப் பார்த்தேன்.