Sunday, 3 May 2026

முதல் பாடம்

அன்புடையீர்!

நேற்று கும்பகோணத்தில் உள்ள தங்கள் மருத்துவமனைக்கு நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதன் பேரில் மருத்துவ ஆலோசனை நேரத்தை நிர்ணயம் செய்து கொள்ள வருகை புரிந்தேன். மருத்துவமனைக்குள் நுழைந்ததும் அங்கே கண்ட முதல் காட்சி மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. அதாவது, மருத்துவமனைக்கு வரும் அனைவரின் காலணிகளும் மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. வருகை புரியும் நோயாளிகள், அவர்களுடன் கூட வரும் உறவினர்கள் என அனைவரின் காலணிகளும் நேர்த்தியான முறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் பல பெரிய மருத்துவமனைகளைக் கண்டிருக்கிறேன். அங்கே நுழைந்ததுமே காலணிகள் ஒழுங்கின்றி குவியலாகக் கிடக்கும். மருத்துவமனை என்பது அதிகம் நோயாளிகள் உலவும் பகுதி என்பதால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கும் பகுதியாகையால் அங்கே தூய்மைக்கு மிக அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். எனினும் ஒரு பெரிய மருத்துவமனையின் உள்ளே செல்லும் போதே காலணிகள் ஒழுங்கின்றி குவிந்து கிடப்பது மனதின் அக ஒழுங்கை குலைப்பதாக உணர நேரும். இன்னொரு விதத்தில் மருத்துவமனை நிர்வாகத்தின் திறனின்மையையும் அது எடுத்துக் காட்டுவதாக அமையும். காலணிகளை நேர்த்தியாக அடுக்கி வைத்தல் என்னும் சிறு செயலைக் கூட செய்ய இயலாத நிர்வாகம் மருத்துவமனையை நிர்வகிக்கும் விதம் எவ்விதம் சிறப்பாக இருந்திட முடியும் எனத் தோன்றி விடும்.   மருத்துவமனைக்கு வருகை புரியும் நோயாளிகளின் காலணிகளை அடுக்கி வைக்கும் விஷயத்தில் தங்கள் மருத்துவமனை தமிழக மருத்துவமனைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக முன்னோடியாக விளங்குகிறது. 

நமது நாட்டில் சீக்கிய குருத்வாராக்கள் காலணிகளை நேர்த்தியாக அடுக்கி வைப்பதை தங்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக எண்ணுகிறார்கள். யோக வகுப்புகளுக்கு வருகை புரியும் பார்வையாளர்களிடம் யோக அமைப்புகள் காலணிகளை நேர்த்தியாக வாசலில் விட்டு வருமாறு கூறுகின்றன. யோகம் பயில்வதற்கான துவக்கச் செயலாக அச்செயல் இருக்கிறது என்பது அவர்கள் புரிதல். 

இன்னொரு விஷயத்தையும் தங்கள் மருத்துவமனையில் கவனித்தேன். மருத்துவமனை முழுவதும் தொடர்ந்து திருவாசகம் அளவான ஒலியில் ஒலித்துக் கொண்டிருந்தது. இதுவும் மிக முக்கியமான ஒரு செயல். பொதுவாக மருத்துவமனைகள் சேட்டிலைட் சேனல்களின் கேளிக்கை நிகழ்ச்சிகளை பார்வையாளர் காத்திருக்கும் நேரத்தில் ஒளிபரப்புகிறார்கள். இச்செயல் மருத்துவமனைகளில் இருப்பதை ஒரு சினிமா தியேட்டரில் இருப்பது போல் எண்ணச் செய்து விடுகின்றன. மனித மன இயக்கத்தை தாறுமாறாக ஆக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நோயாளிகள் மனநிலையைத் தீவிரமாக பாதிக்கக்கூடிய்வை. தங்கள் மருத்துவமனை எவர்  மனதையும் அமைதிப்படுத்தும் திருவாசகத்தை ஒலிக்கச் செய்வதன் மூலம் முன்னோடியான விஷயம் ஒன்றை நடைமுறைப்படுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள். 

காலணிகளை சீராக அடுக்கி வைப்பதில் மருத்துவமனை வருகையாளர்களுக்கு மிக்க உதவியாக இருக்கும் தங்கள் மருத்துவமனை வாயில் காவலர் பாராட்டுதலுக்குரியவர். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள். 

எந்த பெரிய மருத்துவமனையும் செய்திடாத இரண்டு நல்ல விஷயங்களை செயல்படுத்திட முடிவெடுத்திருக்கும் தாங்களும் தங்கள் நிர்வாகமும் பாராட்டுக்குரியது. 

அன்புடன்,

பிரபு