ஒருநாள் ஊரில் இல்லை என்றால் அடுத்த நாள் பல வேலைகள் குவிந்து விடும். வெள்ளியன்று இரவு 7.30 மணியளவில் முத்துநகர் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது ரயில்வே பாதுகாப்பு படையிலிருந்து ஃபோன் வந்தது. சீர்காழி தீ விபத்து தொடர்பாக நான் அளித்த புகார் தொடர்பாக என்னிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என. சனிக்கிழமை காலை 10 மணிக்கு ரயில் நிலையத்தில் இருக்கும் ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்துக்கு வருகிறேன் என சொன்னேன். காலை 8 மணி அளவில் தான் வீடு வந்து சேர்ந்தேன். குளித்து உணவருந்தி விட்டு கிளம்ப 9.45 ஆகி விட்டது. காலையிலேயே ரயிலில் சீட்டாடும் கும்பல் குறித்த புகாரை சி பி கி ராம் ஸ் ல் பதிவு செய்தேன். பயண விபரங்களை எழுதி தளத்தில் பதிவிட்டேன். அதற்கே நேரம் சரியாக இருந்தது. நான் அளித்த சி பி கி ராம் ஸ் புகாரை ’’கட் காபி பேஸ்ட்’’ செய்து பிரிண்ட் அவுட் எடுத்து கையில் வைத்துக் கொண்டேன். சம்பவம் நடந்த நாள் என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். எட்டாம் தேதி. புதன்கிழமை. சம்பவம் நடந்து 17 நாட்கள் ஆகியிருப்பதால் நினைவுகள் மங்கியிருக்கும் என விசாரணை செய்பவர்கள் எதிர்பார்ப்பார்கள் என யூகித்தேன். ரயில் நிலையம் வீட்டிலிருந்து 5 கி.மீ. பாதி தூரம் சென்றிருப்பேன். 9.56க்கு ரயில்வே பாதுகாப்பு படையிலிருந்து ஃபோன் வந்தது. ‘’ஆன் தி வே . இன்னும் 5 நிமிடத்தில் இருப்பேன்’’ என்று சொன்னேன். ரயில் நிலையம் சென்று பிளாட்ஃபாரம் டிக்கெட் எடுத்துக் கொண்டு நடைமேடை 1 ல் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்துக்குச் சென்றேன். அங்கே ஆய்வாளர் ஒருவர் இருந்தார் ; சார் ஆய்வாளர் வந்து விடுவார்; சற்று காத்திருங்கள்’’ என்றனர். காத்திருந்தேன். பின்னர் அவர் வந்தார். என்னைப் பற்றி விசாரித்தார். சிவில் என்ஜினியர். கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் ரியல் எஸ்டேட். இதையெல்லாம் சொன்னேன். நீங்கள் வாக்குமூலம் தர வேண்டும் எனக் கூறினார். ஒரு காகிதம் கொடுங்கள் ; எழுதிக் கொடுக்கிறேன் என்றேன். நான் வாக்குமூலம் கொடுக்க அவர் எழுதி பதிவு செய்து அதில் நான் கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும் என்பதே அவர்கள் முறை என்றார். நான் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. ஒரு முழு வெள்ளைக் காகிதத்தில் தேதி நேரம் இடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சார் ஆய்வாளர் இன்னார் முன்னிலையில் பதிவு செய்யப்படும் இன்னாரின் வாக்குமூலம் என எழுதி அதன் அடியில் ஒரு கார்பன் தாள் வைத்து எழுதிக் கொண்டார். வாக்கிய அமைப்புகள் எவ்விதம் அமைக்க வேண்டும் என அவருக்கு முன் தீர்மானம் இருந்தது. அதன் படி அமைத்தார். நான் ஆட்சேபம் ஏதும் தெரிவிக்கவில்லை. சம்பவம் நடந்த தேதி என்ன என்று கேட்டார். ஜூலை 8ம் தேதி என்றேன். அன்று என்ன நாள் என்றார். புதன்கிழமை என்றேன். அன்று அஷ்டமியும் கூட எனக் கூற எழுந்த ஆவலை மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டேன். அவர் ஒரு வாசகம் சொல்ல அதில் நான் திருத்தம் சொல்ல என நான் கூறிய திருத்தங்களுடன் வாக்குமூலம் பதிவானது. நான் மிகவும் இழுத்துப் பிடிக்கவில்லை ; சி பி கி ராம் ஸ் ல் புகார் பதிவான பின் சம்பவ இடத்தில் கரிக்கட்டையாய் இருந்த 11 மரங்கள் ரயில்வே நிர்வாகத்தால் நீக்கப்பட்டன.விசாரணை பல அளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் நிறுத்திக் கொள்வது சிறப்பு என எனக்குத் தோன்றியது. அங்கே தீ எரிந்து கொண்டிருந்த போது 3 ரயில்கள் அப்பாதையைக் கடந்து சென்றிருக்கின்றன. ரயில்வே லைனுக்கு அருகில் தீ எரிந்து கொண்டிருக்கிறது என்னும் தகவல் ரயில் லோகோ பைலட், ரயிலின் கார்டு, ரயிலில் பயணித்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் ஆகிய மூவராலும் சீர்காழி ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தெரிவித்திருக்கப்பட வேண்டும். 3 ரயில்கள் என்பதால் 9 பேர் இதற்கு பொறுப்பு. இரண்டு ரயில்கள் பயணிகள் ரயில்கள் என்பதால் 7 பேர் இதற்கு பொறுப்பு. இந்த 7 பேரிடம் ரயில்வே லைன் அருகில் தீ பற்றி எரிந்து கொண்டிருப்பது குறித்து ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தகவல் தெரிவித்தீர்களா என விளக்கம் கேட்க வேண்டும். அவ்விதம் நிகழ்ந்ததா என்பது இனிமேல் தான் தெரியும். துறை ரீதியான விசாரணை நடத்துங்கள் என எனது புகார் மனுவில் கோரியிருந்தேன். இப்போதே விசாரணை நடந்து கொண்டிருக்கிறது ; எரிந்து போய் நின்றிருந்த 11 மரங்களின் ஒளிப்படம் அவர்கள் கோப்பில் இருந்ததைக் கண்டேன். அந்த மரங்கள் நீக்கப்பட்டதன் ஒளிப்படங்களும் இருந்தன. நான் அளித்த சி பி கிரா ம் ஸ் புகார் இன்னும் நடப்பில் இருக்கிறது என்பதை எனது சி பி கி ராம் ஸ் கணக்கில் நுழைந்து தினமும் பார்க்க முடிகிறது. கோப்பு தீர்வு காணப்பட்டது எனக் கூறப்படும் போது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி அந்த முழுக் கோப்பையும் கோர முடியும். முழுக் கோப்பையும் கண்டால் என்ன செய்தார்கள் என்பது தெரியவரும். அந்தக் கோப்பை ஆதாரமாகக் கொண்டு தேவையெனில் சி பி கி ராம் ஸ் ல் மேலும் ஒரு அப்பீல் செய்ய முடியும். சூழலை உன்னிப்பாகக் கவனிப்போம் என இருந்தேன். என்னுடைய ஆதார் அட்டையின் நகல் இரண்டு வேண்டும் எனக் கேட்டனர். வீட்டுக்கு வந்து எடுத்துக் கொண்டு போய் கொடுத்தேன்.