ஜூலை 28, 29 ஆகிய இரு தினங்களில் வங்கியில் நிகழ்ந்த சேவைக்குறைபாட்டை வங்கியின் சி இ ஓ வுக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன். எனது கடிதம் எந்த தனிநபருக்கும் எதிரானது அல்ல ; சினத்தின் வெளிப்பாடும் அல்ல. ஒரு வித்தியாசமான நிகழ்வை வங்கி நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தினேன் . அவ்வளவுதான். நாம் ரயில் நிலையம் செல்கிறோம் ; அங்கே சந்தேகத்துக்கு இடமாக ஒரு பை கேட்பாரற்று கிடக்கிறது எனில் ஆர் பி எஃப் காவலர்களிடம் தெரிவிப்பதைப் போன்ற நிகழ்வுதான் நான் செய்ததும்.
எங்களுக்கு சேவைக்குறைபாடு நிகழ்ந்த தினத்தில் காலை 11.30க்கு வங்கியில் உரக்க குரலெழுப்பியிருக்க முடியும். அதனை நான் ஒரு வழிமுறையாகவோ அல்லது தீர்வாகவோ எப்போதும் எண்ணுவதில்லை. காலை 11.30 மணிக்கே ‘’ஸோனல் அலுவலகம்’’ ஃபோன் செய்ய முடியும். அந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 100 கிளைகள் இருக்கும். 5 நிமிடத்துக்கு ஒருமுறை அந்த 100 கிளைகளிலிருந்தும் ஏதேனும் ஒரு ஃபோன் வந்தால் அந்த அலுவலகம் ஃபோன் அட்டண்ட் செய்வதை மட்டுமே ஒரு வேலையாகச் செய்ய முடியும். நான் தாமதமாக வேலை முடிந்த பின் நடந்ததை விவரித்து கடிதம் அனுப்பினேன். அது ஒரு நாகரிக வழிமுறை.
எனக்கு வங்கி மீதோ வங்கி ஊழியர்கள் மீதோ வங்கியின் சம்பந்தப்பட்ட ஊழியர் மீதோ அல்லது பிற ஊழியர்கள் மீதோ வருத்தம் கிடையாது. நிகழ்ந்தது ஒரு பிழை. அதனை சுட்டிக் காட்டினேன். அவ்வளவுதான். கடிதம் அனுப்பிய பின் வங்கிக்குச் சிலமுறை செல்ல நேர்ந்த போது வங்கி ஊழியர்களின் பார்வையில் சிறு துணுக்குறலை உணர்ந்தேன். அது ஏன் என யோசித்தேன். அவர்கள் வங்கி என்பது ஊழியர்களான அவர்களுடையது என எண்ணுகிறார்கள். அது முழு உண்மை அல்ல ; பகுதி உண்மை. வங்கி என்பது வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் என்னும் இரு குழாமுக்கும் சொந்தமானது. நான் புரிந்து கொண்டிருப்பது முழு உண்மை.