எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் பல அரசியல் கட்சிகளில் செயல்பாட்டாளராக இருந்தவர். திராவிடக் கட்சிகள் மற்றும் பிராந்தியக் கட்சிகளில் செயல்பட்டிருக்கிறார். எந்த விஷயமும் அதனுள் அரசியலைக் கொண்டுள்ளது எனத் தீவிரமாக நம்புபவர். அவர் எந்த விஷயத்தையும் அரசியலின் ஒரு பகுதியாகவே புரிந்து கொள்வார்.
தனது பூர்வீக சொத்து ஒன்றை விற்பனை செய்யும் முயற்சியில் சமீபத்தில் ஈடுபட்டுள்ளார். சிறு அளவில் அதில் அவருக்கு சில ஆலோசனைகள் வழங்கினேன். பூர்வீக சொத்து 100 ஆண்டுகளாக அவர்கள் குடும்பத்திடம் இருக்கிறது. இப்போது விற்பனை செய்யும் நிலையில் ‘’கேப்பிடல் கெயின்’’ எனப்படும் மூலதன ஆதாய வரி அதற்கு வரும். அந்த மூலதன ஆதாய வரியை மொத்த வரித்தொகைக்கு வேறு ஒரு சொத்தை வாங்கினாலோ அல்லது மொத்த வரித்தொகைக்கு அவருடைய சொத்து ஏதேனும் ஒன்றில் கட்டுமானம் மேற்கொண்டாலோ அல்லது மூலதன ஆதாய வரி பத்திரங்கள் வாங்கினோலோ அதனைத் தவிர்க்க முடியும். வருமான வரியில் மிகச் சாதாரணமான விஷயம் இது.
இப்போது அவர் மனதை இந்த விஷயம் முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறது ; பின் தொடர்கிறது . மூலதன ஆதாய வரி இப்போது அவரை முழுவதுமாக வியாபித்திருக்கிறது. எனினும் அதனை அதன் கணக்கீடுகளை அவர் முழுமையாகப் புரிந்து கொண்டாரா என்பது இப்போதும் ஐயமே.
ஓர் எளிய சட்டத்தினைப் புரிந்து கொள்ளவே இவ்வளவு சிரமப்படுகிறாரே இவர் தன் வாழ்நாள் முழுக்க அரசியலை எப்படி புரிந்து கொண்டிருப்பார் என்று எண்ணினேன்.