வெள்ளிக்கிழமை மாலை 6.40க்கு இந்தியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரிக்கு அனுப்பிய கடிதத்தை விரைவுத் தபாலில் அனுப்பி அதன் நகலை மத்திய நிதியமைச்சருக்கும் விரைவுத் தபாலில் அனுப்பினேன். தபால் இன்று மாலை 4 மணி அளவில் இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி அலுவலகத்துக்குக் கிடைத்திருக்கிறது. இரவு 8 மணி அளவில் இந்தியன் வங்கி கிளையிலிருந்து மேலாளர் பேசினார். அவர் எனக்கு மிக நல்ல பரிச்சயம் உள்ளவர். அவர் அழைத்த மரியாதைக்கு உடனே வருகிறேன் என்று அங்கு சென்றேன். என் கடிதத்தை தலைமை நிர்வாக அதிகாரி வாசிக்க மிகவும் வாய்ப்பு குறைவு என நான் நினைத்தேன். ஆனால் எனது கடிதம் தலைமை நிர்வாக அதிகாரியின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது என்பதை கிளை மேலாளரின் பேச்சிலிருந்து புரிந்து கொண்டேன். கடிதம் தலைமை நிர்வாக அதிகாரிக்கு எழுதப்பட்டு அதன் நகல் மத்திய நிதியமைச்சர் அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டு இருப்பதால் மத்திய நிதியமைச்சர் அலுவலகத்திலிருந்து தங்களுக்கு வந்த நகல் கடிதத்தை இந்தியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வாய்ப்புள்ளது. அந்தக் கடிதம் சில நாட்கள் கழித்தாவது தலைமை நிர்வாக அதிகாரிக்கு வரும். தலைமை நிர்வாக அதிகாரியின் காரியதரிசிகள் அந்தக் கடிதத்தை அதிகாரியின் பார்வைக்கு கொண்டு செல்லாமல் இருக்க முடியாது; அந்நிலையை யூகித்து அதன் மூலாதாரமான என் கடிதத்தை தலைமை நிர்வாக அதிகாரி கவனத்துக்குக் கொண்டு சென்றிருப்பார்கள் என எண்ணினேன். இந்திய அதிகாரவர்க்கம் நூதனமானது ; நூதனமான மனோபாவங்கள் கொண்டது. ஒரு சாமானியன் அவற்றை முழுதும் புரிந்து கொள்ள முடியாது. மேலாளர் இந்தியன் வங்கியின் பல உயரதிகாரிகள் தனக்கு தொடர்ந்து ஃபோன் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னார். மேலாளரை சந்திக்கச் செல்லும் போதே பேச்சுவார்த்தையின் எந்த நிலையிலும் உணர்ச்சிவசப்பட்டு விடக் கூடாது என்னும் முடிவோடு தான் சென்றேன். அவர்கள் என்ன தான் சொல்கிறார்கள் என்பதைக் கேட்போம் என முடிவு செய்து கொண்டேன். மேலாளர் ஏதேதோ விஷயங்கள் சொன்னார். அவர் பல விஷயங்களைப் பேசி விஷயங்களை நீர்த்துப் போகச் செய்ய முயற்சிக்கிறார் எனப் புரிந்து கொண்டேன். அவர் மிகவும் நல்ல மனிதர் ; சிறப்பாக வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிபவர். சம்பவம் நடந்த இரு நாட்களும் அவர் ஊரில் இல்லை ; இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது. எனினும் இந்த விஷயத்தில் குறைந்தபட்ச நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். வங்கியின் இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்திருந்தாலோ சி பி கி ராம் ஸ் ல் புகாரைப் பதிவு செய்திருந்தாலோ மிக எளிதில் இந்த விஷயத்தை ‘’கேஸ் குளோஸ்’’ செய்து விடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு கேஸ் என்பது ஒரு எண் ; ஒரு எண்ணிக்கை. இந்த மாதம் 100 புகார்கள் பதிவாயின ; இந்த மாதமே 100 புகார்களுக்கும் தீர்வு கண்டு கேஸ் குளோஸ் செய்தோம் என கணக்கு காட்டுவார்கள். எனவே இம்முறை விரைவுத் தபாலில் அனுப்பி வைத்தேன். இப்போது இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்துக்கும் எனக்கும் இடையில் இந்த விஷயம் இருக்கிறது. கிளை அலுவலகத்துடனோ அல்லது பிராந்திய அலுவலகத்துடனோ நான் பேச வேண்டும் என அவசியம் இல்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் விபரம் கோரினால் தலைமை அலுவலகம் எல்லா அலுவலகங்களுக்கும் அனுப்பிய கடிதங்களை முழுக்க அளிக்க வேண்டியிருக்கும். இந்தியன் வங்கி அளிக்கும் தீர்வு எனக்குத் திருப்தியில்லை என்றால் நான் ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு செல்ல உள்ளேன். அப்போது சம்பந்தப்பட்ட வங்கியின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு சென்றிருந்தால் தான் அதனை எடுப்பார்கள். அப்போது தலைமை அலுவலகம் பதில் சொல்லும் நிலைக்கு வரும். இந்த விஷயத்தை சரியாக அணுகி மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ரிசர்வ் வங்கிக்கு செல்வேன் என்பதையும் அந்தக் கடிதத்திலேயே குறிப்பிட்டிருந்தேன்.
என் கடிதத்தின் உணர்வையோ அதில் இருக்கும் நியாயத்தையோ வங்கியைச் சேர்ந்தவர்கள் காண மாட்டார்கள். ஒரு சாமானிய வாடிக்கையாளன் ஓர் அசௌகர்யத்தை ஏற்படுத்தி விட்டானே என்பது தான் வங்கியைச் சேர்ந்த அனைவரின் எண்ணமாக இருக்கும். அவர்கள் எளிதில் ஒரு அணியாக மாறுவார்கள். அவர்களுக்கு வாடிக்கையாளர்களை பல ஆண்டுகள் எதிர்கொண்டதன் அனுபவம் இருக்கும். ஒவ்வொரு நிகழ்வும் எவ்விதம் எதிர்கொள்ளப்பட்டன என்னும் நினைவுகள் இருக்கும். அவை அவர்களுக்குள் எளிதில் பரிமாறிக் கொள்ளப்படும். வங்கி நிர்வாகம் கூட்டாகவே எந்த விஷயத்தையும் எதிர்கொள்ளும். இன்னும் சொல்லப் போனால் பிழை இழைத்த தவறிழைத்த ஊழியர்களுக்கு ஆதரவாகவே நிர்வாகம் நடக்கும் ; அதன் மூலம் மொத்த ஊழியர்களின் நன்மதிப்பைப் பெற முயலும்.
இந்த விஷயத்தில் நிறைய ‘’டாகுமெண்டல் எவிடென்ஸ்’’ இருக்கின்றன. வாடிக்கையாளர் வங்கிக்குச் சென்ற நேரம் , ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பம் அளித்த நேரம் ஆகியவை சி சி டி வி காட்சிகளில் பதிவாகியுள்ளது. வாடிக்கையாளர் விண்ணப்பத்தை அளித்த நேரம் காலை 11.30 மணி. அந்த விண்ணப்பம் அன்றைய ‘’ஃபாரெக்ஸ்’’ நேரத்தைக் கடந்து மாலை 3.30க்கு உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு விண்ணப்பம் 4 மணி நேரம் தாமதமாக உள்ளீடு செய்யப்பட்டது என்பது பெரும் பிழை. அந்த விண்ணப்பம் அடுத்த நாள் மாலை 6.45க்கு மட்டுமே பிராசஸ் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துமே டிஜிட்டலாக பதிவாகியிருக்கும் பதிவுகள். தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலம் விபரம் கோரி இவற்றைப் பெற முடியும். வங்கி தன் ஊழியரைக் காக்க முயன்றால் கூட ரிசர்வ் வங்கி ஆம்டஸ்மன் நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளும்.
நேரம் இரவு 9.30 ஆகியிருந்தது. புறப்படுகிறேன் எனக் கூறி புறப்பட்டேன். வாய்மொழியாக அளிக்கப்படும் எந்த வாக்குறுதியையும் ஏற்கக் கூடாது என இருக்கிறேன்; எதுவாக இருந்தாலும் எழுத்துப்பூர்வமாகக் கொடுங்கள் எனக் கேட்க உள்ளேன். பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு இது ஒரு பயிற்சி ; அனுபவம் என எடுத்துக் கொள்ள வேண்டும் என எண்ணினேன்.