நேற்று ஊருக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் ஒருவரைச் சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது. அவருடன் 15 நிமிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் கிராமத்தில் ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளை முன்னெடுக்க வாய்ப்பு இருக்குமா என பரிசீலித்தோம். அவருக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன் என்று கூறினேன்.
அன்புள்ள நண்பருக்கு,
நமது பண்பாடு மண்ணிலும் கல்லிலும் மரத்திலும் இயற்கையிலும் உறைந்திருக்கும் இறைமையை மானுடரை உணரச் சொல்கிறது. இயற்கையை உணர்பவனும் அறிபவனும் ஆராதிப்பவனுமே இறைமையின் முற்றத்துக்குச் சென்றடைகிறான் என்பது நம் பண்பாட்டின் புரிதல்.
‘’காவிரி போற்றுதும்’’ ஒரு கிராமத்தை ஒரு தேசம் என்றே காண்கிறது. குறியீட்டுரீதியில் ஒரு கிராமத்துக்குச் செய்யும் பணி என்பது தேசம் முழுமைக்கும் செய்யும் பணியே ஆகும்.
நமது கிராமத்தில் நம்மால் பல பணிகளை முன்னெடுக்க முடியும். எளிய அடிப்படையான பணிகள். எனினும் பெருவலிமை கொண்ட அடித்தளமாய் அமைய வாய்ப்புள்ள பணிகள்.
ஒரு கிராமத்தில் தோராயமாக 500 குடும்பங்கள் இருக்கின்றன எனக் கொள்வோம். அந்தக் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கோ சிறுவர்களுக்கோ சிறுமிகளுக்கோ தங்கள் தோட்டத்தில் பலா, நெல்லி, நாவல், பப்பாளி, விருட்சி, நந்தியாவட்டை, வில்வம் ஆகிய மரக்கன்றுகளை வளர்க்க ஆவல் இருக்கக் கூடும். அதற்கான வாய்ப்பு அமையாமல் இருந்திருக்கும். ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு கிராமத்தின் 500 வீடுகளையும் நேரடியாக அணுகி அவர்களுக்குத் தேவையான மரக்கன்றுகள் எத்தனை எவை எவை என்னும் கணக்கெடுப்பை மேற்கொள்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் சராசரியாக ஒரு உதாரணத்துக்கு 20 மரக்கன்றுகள் வேண்டும் எனக் கூறினால் அந்த கிராமத்தில் சட்டென 10,000 மரங்கள் நடப்பட ஒரு வாய்ப்பு உருவாகிறது அல்லவா? அந்த வாய்ப்பு மிகவும் மங்களகரமானது என்பது ‘’காவிரி போற்றுதும்’’ எண்ணம். அந்த மரக்கன்றுகளை அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் நட்டு வளர்த்துக் கொள்ள நாம் வழங்குவோம்.
மரங்களைத் தேர்ந்தெடுப்பதில் மரங்களை நடுவதில் மரங்களுக்கு நீர் வார்ப்பதில் நாம் மக்களுக்கு அடிப்படையான சில விஷயங்களைச் சொல்லித் தர வேண்டியிருக்கிறது. 10,000 மரங்களுமே சிறப்பாக வளர அந்த வழிகாட்டல்கள் அவசியம். இருப்பினும் 500 அல்லது 1000 ஆயிரம் பேருக்கு அந்த வழிகாட்டலை அளிப்பது என்பது அதிக நாட்களையும் அதிக நேரத்தையும் எடுத்துக் கொள்ளும் பணி. இருப்பினும் அந்தத் தொடர்பு கொள்ளல் நம் நோக்கங்கங்களை முழுமை செய்யும் என்பதுடன் கிராமத்தின் மொத்த மக்களையும் இணைக்கும் செயலாகவும் இருக்கும்.
முதல் கட்டமாக கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மரக்கன்றுகள் கொடுத்து அவை ஓராண்டில் கணிசமான அளவில் வளர்ச்சி பெற்றன என்றால் அந்தக் கிராமத்தின் மக்களைக் கொண்டே ஊரின் பொது இடங்களில் நிழல் மரங்களையும் பூமரங்களையும் பெரிய அளவில் நட முடியும். நாம் மரங்களை மட்டும் நடவில்லை ; மக்கள் மனங்களில் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் நடுகிறோம்.
‘’ஒன்று கூடி சிந்தியுங்கள் ; சேர்ந்து அமர்ந்து விவாதம் செய்யுங்கள் ; உங்கள் மனம் ஒன்றாகட்டும்’’ என்கிறது நம் மறை.
‘’காவிரி போற்றுதும்’’ இவ்விதமான பணிகளை சில கிராமங்களில் வெற்றிகரமாக முன்னெடுத்திருக்கிறது. எனவே ‘’காவிரி போற்றுதும்’’ இப்பணிகளை எவ்விதம் வெற்றிகரமாக முன்னெடுப்பது என்பதில் பயிற்சியும் அனுபவமும் பெற்றிருக்கிறது. அதன் விளைவாக எதனை முன்னே செய்வது எதனை அடுத்து செய்வது எனத் திட்டமிடுவதிலும் தேர்ச்சி கொண்டிருக்கிறது.
தங்கள் கிராமத்தில் தங்களுடன் இணைந்து செயல்படுவது மிகவும் மகிழ்ச்சிகரமானது. நாம் சேர்ந்து சிந்திப்போம் ; சேர்ந்து விவாதிப்போம். நம் இலக்கை சேர்ந்து அடைவோம். ‘’காவிரி போற்றுதும்’’ புரிதல்களில் முதன்மையானது ‘’ஒற்றுமையே வலிமை’’ என்பதேயாகும்.
அன்புடன்,
அமைப்பாளர்
‘’காவிரி போற்றுதும்’’