எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் அகம் ஆழம் மிக்கது என அவரை சந்தித்த முதல் தினத்திலிருந்து எண்ணியிருக்கிறேன். அவர் உலகியல் பணிகளையும் உலகியல் திட்டமிடல்களையும் சிறப்பாகச் செய்யும் ஒருவர். அவரது உத்யோகம் தொடர்பான பணிகள் அவரது நாளின் பெரும்பகுதி நேரத்தை எடுத்துக் கொள்ளும். அவருடன் சில முறை பயணிக்கவும் வாய்ப்பு அமைந்தது. அவரது காரில் ஒருமுறை நீண்ட பயணம் செய்தோம். அவரது டூ வீலரில் நீண்ட பயணம் ஒன்று மேற்கொண்டோம். சிலமுறை ஒன்றாக ரயிலில் பயணித்திருக்கிறோம். வெவ்வேறு ஊர்களில் சந்தித்திருக்கிறோம். ஓரிரு வாரங்கள் முன்னால் அவர் தனது முதல் சிறுகதையை எழுதி அனுப்பியிருந்தார். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனை நான் எவ்விதம் வாசிக்கிறேன் என்பதை அவருக்குத் தெரிவித்தேன். இன்று ஒரு சிறுகதை எழுதி அனுப்பியிருந்தார். இந்தக் கதையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைப் பற்றி அவரிடம் சொன்னேன். அப்போது அவர் ஒரு விஷயம் சொன்னார் : ‘’அதாவது , ஒரு வாசகர் ஒருவரிடம் நான் எழுதுமாறும் படைப்புச் செயல்பாட்டுக்குள் இருக்குமாறும் சொல்லிக் கொண்டிருந்த போது நான் உடனிருந்தேன் . அச்சொற்களை எனக்கான சொற்களாகவும் எடுத்துக் கொண்டேன்’’ என்றார். நண்பர் தொடர்ந்து எழுத வேண்டும் என விழைகிறேன்.