நேற்று இரவு எனது நெருங்கிய உறவினர் ஒருவர் மூர்ச்சையானார். எனக்குத் தகவல் தெரிந்து உடன் அங்கு சென்றேன். ஒரு ஆம்புலன்ஸ் வரச் சொல்லி முதலுதவிக்கு ஒரு மருத்துவமனைக்குச் சென்று விட வேண்டும் என முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து மருத்துவமனைக்கு மூர்ச்சையானவரை அழைத்துச் சென்றேன். மூர்ச்சையாயிருந்தவர் உடலின் சில பகுதிகளைக் காணும் போது அவர் மூளை நரம்புமண்டலம் தொடர்பான பாதிப்புக்கு ஆளாகியிருக்கக் கூடும் என்று எனக்குத் தோன்றியது ; அதனால்தான் அவரை எக்காரணம் கொண்டு நடத்தி அழைத்துச் செல்லக் கூடாது என முடிவு செய்து ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்து ஆம்புலன்ஸில் இருந்த நகரும் படுக்கையில் அவரை அவர் படுக்கையில் படுத்திருந்த வண்ணமே மாற்றி ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர் முதல் எண்ணமாக மூளை நரம்புமண்டல பாதிப்பு எனக் கணித்து மூளையில் இரத்தக்கட்டு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதினார். ஆரம்பகட்ட முதல் உதவி சிகிச்சைகள் தரப்பட்டன. அங்கிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள ஊரின் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தலைப்பகுதியை சி டி ஸ்கேன் செய்து பார்த்தனர். மூளையில் இரத்தக்கட்டு இருப்பதை அறிந்தனர். சில மணி நேரங்களில் தலைப்பகுதியில் ஒரு மண்டையோட்டைத் துளைத்து ஓர் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைசிகிச்சைக்கு சில மணி நேரங்களுக்குப் பின் உறவினர் உடலில் அசைவுகள் தென்படலாயின. அவர் உடலை அசைக்கத் தொடங்கினார். அவர் விழிகளைத் திறக்க முயன்றார். சுற்றி இருப்பவர் பேசுவதை அவர் புரிந்து கொள்கிறார் என்பதையும் அவர் முகம் அவர் மனம் அதை உள்வாங்கிக் கொள்வதையும் காட்டுகிறது. அறுவைசிகிச்சைக்குப் பின் மீண்டும் ஒரு ஸ்கேன் செய்யப்பட்டது. ஸ்கேன் அறிக்கை அடிப்படையில் இன்னொரு அறுவைசிகிச்சை தேவைப்படுமா அல்லது மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்தால் போதுமா என்பது முடிவு செய்யப்படும்.