Saturday, 24 October 2026

ரூ.500 செலவில் சென்னை சென்று வருவது எப்படி? (நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் மானசீகமாக தன்னை ஒரு சிறுவனாக எண்ணிக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் சிறுவனாக இருந்த போது விலைவாசி எப்படி இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கும் என்னும் அறிவிக்கப்படாத நம்பிக்கை அவரிடம் இருக்கிறது. 

காலை 4.45க்கு திருச்செந்தூர் - சென்னை விரைவு வண்டி ஊர் வழியே செல்லும். காலையில் எழுந்து குளித்து முழுகிக் கிளம்ப அந்த ரயில் உகந்தது அல்ல. காலை 6 மணிக்கு விழுப்புரம் பாசஞ்சர் இருக்கிறது. அதில் சென்றால் விழுப்புரத்தில் 9.25க்கு பல்லவன் விரைவு ரயிலைப் பிடித்து விடலாம். 11.30 மணியளவில் சென்னை சென்றடையலாம். இவை அனைத்தையும் தாண்டி காலை 7.30க்கு திருச்சிராப்பள்ளி - தாம்பரம் இண்டர்சிட்டி விரைவு ரயில் இருக்கிறது. காலை உணவை முடித்து விட்டு வண்டி ஏறினால் மதிய உணவுக்கு சென்னை சென்று விடலாம். மதியம் 1.30 போல் சென்ற வேலையைப் பார்த்தால் இரவு ரயில் பிடித்து ஊர் திரும்பலாம். 

அமைப்பாளர் காலை 5 மணிக்கு அலாரம் வைத்திருந்தார். எனினும் 4.30க்கே விழிப்பு வந்து விட்டது. குளித்துத் தயாராகி ரூ.500 மட்டும் எடுத்துக் கொண்டு சென்னை கிளம்பினார். கூட சில்லறையாக ரூ.25 இருந்தது. 2 கிமீ தொலைவில் இருக்கும் பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினார். கடைவீதி சென்றடைந்த போது காலை மணி 6.20. உணவகம் ஒன்றில் காலை உணவு தயாரா என்று கேட்டார். அப்போது அங்கே காஃபி மட்டுமே இருந்தது. இன்னும் 15 நிமிடம் ஆகும் என்றனர். 

உணவகங்கள் திறக்கும் நேரம் காலை 5 மணி என்றால் அப்போதே காலை உணவு என ஒரு சில உணவு வகைகளாவது தயாராக இருக்க வேண்டும். நெடுந்தூரம் செல்பவர்கள் காலை உணவு அருந்தி விட்டு தங்கள் பயணத்தைத் தொடங்குவார்கள் என்னும் புரிதல் உணவக உரிமையாளர்களுக்கு இருக்க வேண்டும். நெடுந்தூரத்திலிருந்து பயணித்து ஊர் வந்தடைபவர்கள் உணவருந்த நினைக்கலாம். அதற்காகவும் உணவகங்கள் தயாராக இருக்க வேண்டும். உணவகங்களில் காலை உணவு முழுமையாகத் தயாராக காலை 8 மணி ஆகி விடுகிறது. காலம் மாறி விட்டது என அமைப்பாளர் எண்ணினார். 

இன்னொரு உணவகம் சென்றார். உணவு தயாரா என்று கேட்டார். 5 நிமிடம் உட்காருங்கள் என்றனர். பொங்கல் என்றார் அமைப்பாளர். பொங்கல் மட்டும் தான் தயாரித்திருந்தனர். அமைப்பாளர் முதல் வாடிக்கையாளர் என்பதால் முதலில் கேசரி வைத்தனர். பின்னர் பொங்கல். பொங்கல் சில மணி நேரங்களுக்கு தாக்குப் பிடிக்கும். ஒரு காஃபி அருந்தினார். பில் தொகை ரூ.100. டிப்ஸ் ரூ.5 சேர்த்து ரூ.105 ஆகக் கொடுத்து விட்டு ரயிலைப் பிடிக்கக் கிளம்பினார். டவுன் பஸ் ஒன்றில் ஏறி ரயில் நிலையம் சென்றார். சென்னை எழும்பூருக்கு ஒரு டிக்கெட் எடுத்துக் கொண்டார். ரூ.130 ரயில் கட்டணம். அமைப்பாளர் கையில் இப்போது ரூ.270 இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு சென்னை சென்று திரும்ப வேண்டும். 

அமைப்பாளர் கையில் மிகக் குறைவாகப் பணம் வைத்துக் கொள்ள ஒரு காரணம் உண்டு. அது என்னவெனில் அவருடைய கட்டுமானத் தொழிலில் கட்டுமான இடத்தில் 30 லிருந்து 50 பணியாளர்கள் பணி புரிவார்கள். அமைப்பாளர் அனைவருக்கும் ஊதியத்தை அன்றன்றே வழங்கி விடுவார். என்றாலும் பணியாளர் எண்ணிக்கை அதிகம் என்பதால் தினம் ஒருவர் ஏதேனும் காரணத்தைக் கூறி ரூ.500 கொடுங்கள் ரூ.1000 கொடுங்கள் என்று கேட்பார்கள். ஒருவருக்குக் கொடுத்தால் அதையே முன்னுதாரணமாகக் காட்டி அனைவரும் கேட்பார்கள். அதைத் தவிர்க்க அமைபாளர் மேற்கொள்ளும் வழி கட்டுமான இடத்துக்கு காலை செல்லும் போது கையில் பணமே இல்லாமல் வெறும் கையுடன் செல்வார். யாராவது பணம் கேட்டால் இன்று என் கையில் எந்த பணமும் இல்லை ; சாயந்திரம் சம்பளம் கொடுக்கவே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறுவார். கையில் பணம் இல்லாமல் அதனைக் கூறுவதால் உள்ளதைச் சொல்வதன் சாதகங்கள் அமைப்பாளருக்குக் கிட்டும். கையில் பண இருப்பு இல்லாத ஒருவரிடம் யாரும் பணம் கேட்டு மேலும் வற்புறுத்த மாட்டார்கள். அமைப்பாளர் மட்டுமல்ல கட்டுமானத் தொழில் புரியும் அனைவருமே இந்த உபாயத்தைக் கைகொள்வார்கள். இந்த வழகத்தின் படி எங்கு சென்றாலும் கையில் பணமே இல்லாமல் செல்வது அல்லது குறைவான தொகை கையில் வைத்துக் கொள்வது என்பதைச் செய்கிறார் அமைப்பாளர்.

சென்னை சென்றடைய மதியம் 1 மணி ஆகி விட்டது. வழியில் இரு தேனீர் கொஞ்சம் சுண்டல் வாங்கி சாப்பிட்டார். சென்னையில் ஒரு உணவகத்தில் திருப்தியாக லெமன் சாதம் அருந்தி விட்டு நண்பருக்கு ஃபோன் செய்தார் அமைப்பாளர். நண்பர் வந்து தனது காரில் பிக் அப் செய்து கொண்டார். பார்க்க உத்தேசித்திருந்த வேலையை இருவரும் சேர்ந்து பார்த்தனர். மாலை 5 மணிக்கு இருவரும் காரில் ஊருக்குப் புறப்பட்டனர். 8 மணிக்கு புதுச்சேரி வந்தடைந்தனர். நண்பரின் வாகனம் இ வி கார். அங்கே 30 நிமிடம் கார் எலெக்ட்ரிக் சார்ஜ் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் இருவரும் இரவு உணவு அருந்தினர். உணவுக்கான தொகையை அமைப்பாளர் கொடுத்த பின்னும் அவர் கையில் ரூ.50 மீதி இருந்தது. 

நள்ளிரவு 11.30க்கு நண்பர் அமைப்பாளரை வீட்டுல் கொண்டு வந்து விட்டு விட்டு சென்றார்.