Friday, 30 October 2026

பரஸ்பர மௌனம் (நகைச்சுவை)

இரண்டு தினங்களுக்கு முன்னால் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் 2 மணி நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். மிகவும் உற்சாகமான உரையாடல். எங்கள் பேச்சு புத்தகங்கள் குறித்து திரும்பியது என்பதே அந்த உரையாடல் அவ்வளவு சுவாரசியமாக இருந்ததற்கு காரணம். உரையாடல் நிறைவு பெற்று நாங்கள் விடைபெற்றுக் கொண்டோம். அன்று மாலை அவருக்கு ஃபோன் செய்து தயக்கத்துடன் ஒரு விஷயத்தைச் சொன்னேன். அதாவது எனக்கு ஒரு வலைப்பூ இருக்கிறது ; எனது வலைப்பூவில் நான் எழுதுகிறேன் என்று. நான் கூறியதைக் கேட்ட பின் அவரும் தயக்கத்துடன் இன்னொரு விஷயம் சொன்னார். அவருக்கும் வலைப்பூ இருக்கிறது ; அவரும் வலைப்பூவில் எழுதுகிறார் என்று. தமிழ்ச் சூழல் எவ்விதம் இருக்கிறது என்றால் 2 மணி நேரம் அறிவார்ந்த விஷயங்களை மனம் விட்டுப் பேசும் இருவர் தங்களை எழுதுபவர்கள் எனக் கூறுவதில் தயக்கம் காட்டும் நிலையே இருக்கிறது. ஏன் எழுதுபவர்கள் தங்களை எழுதுபவர்கள் எனத் தமிழ்ச் சூழலில் சொல்லத் தயங்குகிறார்கள். எழுத்து என்பது படைப்பூக்கத்தையும் அறிவார்த்தத்தையும் தன் தன்மைகளாகக் கொண்டது. தமிழ்ச் சமூகத்துக்குப் பொதுவாக படைப்பூக்கத்தின் அறிவார்த்தத்தின் சங்கேதங்களைப் புரிந்து கொள்ளும் திறனோ பயிற்சியோ கிடையாது.  அவர்களுடன் உரையாடுவது என்பது அஸ்ஸாமி மட்டுமே தெரிந்த ஒருவரும் கன்னடம் மட்டுமே தெரிந்த இன்னொருவரும் உரையாடிக் கொள்வது போன்றது. எழுத்தறிவு இல்லாத ஒருவரிடம் பேருந்தின் அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருக்கும் ஊரின் பெயரை வாசிக்கச் சொல்வதற்கு சமம் அது. எழுதுபவர்கள் தங்கள் நெடிய அனுபவத்தில் தமிழ்ச்சூழல் அளிக்கும் அல்லலை பலமுறை அனுபவித்திருப்பார்கள். எனவே எங்கும் எவரிடமும் தான் எழுதுபவன் எனக் கூற மாட்டார்கள்.   நான் எப்போதுமே குறிப்பிடும் விஷயம் ஒன்று உண்டு. அதாவது தமிழ்ச் சமூகத்தின் எழுத்தறிவு 20 சதவீதமாக இருந்த காலகட்டத்தில் தான் திராவிட இயக்கம் தமிழின் ஆகப் பெரிய இலக்கியச் சாதனையான கம்பராமாயணத்தை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் எனக் கூறியது.