Tuesday, 7 May 2019

தூது

என் வீட்டு மாடித் தோட்டத்தில்
சிறகு இமைக்கும்
வண்ணத்துப்பூச்சியை

பாதையில்
கம்பி வடங்களில்
அமர்ந்திருக்கும்
கரிச்சானை

வாசல் மாமரத்தின்
பொந்தில்
வசிக்கும்
பச்சைக்கிளியை

வீட்டுக்கு அருகிருக்கும்
சிறுவனத்தில்
அலைந்து திரியும்
நீலமயிலை

தூதாக அனுப்புகிறேன்
ஒரு சொல்லுடன்
அது எப்போதும்
உனது பெயராக இருக்கிறது

அவை தினமும்
உனைக் கண்டு
சொல் உரைத்து
திரும்பி வருகின்றன
உனது மௌனத்துடன்

Monday, 6 May 2019

சுற்றம் சூழ்தல்

தினமும்
பொழுது விடிந்ததும்
வீட்டு வாசல் படியில்
வந்தமர்ந்து விடுகின்றன
சில
தவிட்டுக் குருவிகள்
மைனாக்கள்
தேன் சிட்டுக்கள்
காகங்கள்
அணில்கள்

அதிகாலை நடை முடித்து
திரும்பி  வரும்
என்னைக் கண்டதும்
கிச் கிச் என்று
குருவிகள்
சிலம்பும்
வீட்டின் கூடத்துக்குள்
என்னைத் தொடர்ந்து வரும்
காம்பவுண்டு சுவரின் மேலிருந்து
காகங்கள் மிரட்டுவது போல் கரையும்

வாசலில் நிற்கும்
காரின்
டூ வீலரின்
ரியர் வியூ ஆடியை
டொக் டொக் என்று
அலகுகளால் கொத்தும்

அப்பாவும் அம்மாவும்
தானியங்கள் போடுவார்கள்
குருவிகள்
தினமும்
தத்தம்
புதிய புதிய நண்பர்களை
கூட்டிக் கொண்டு வருகின்றன

அப்பா ஊருக்குச் சென்றால்
என்னிடம்
காலையிலேயே குருவிகளுக்கு
தானியம் இட்டு  விடு
என்று
ஒவ்வொரு முறையும்
சொல்லி விட்டு செல்கிறார்

அம்மா இல்லையென்றால்
குருவிகள் கூடுதல் குரலெழுப்பும்
காக்கை குருவியின்
சுற்றம் சூழ இருப்பது
ஒளி மிக்கதாக்குகிறது
ஒவ்வொரு நாளையும்

லஷ்மிகரம்


அந்த இளம்பெண்
பணி விடுமுறையாயிருந்த
ஞாயிற்றுக்கிழமை ஒன்றில்
தாமதமாக ஆற்றிய
எல்லா அன்றாடப் பணிகளுக்கும்
அப்பால்
முன்மதியத்தில்
தன் அன்னையிடம்
மருதாணி பூசிக் கொள்ள
மென்மையான
தன் உள்ளங்கைகளை
இணைத்து வைத்துக் கொண்டாள்

இணைந்திருந்த அந்த கைகள்
பொழியும் அருவியைப் போலிருந்தன
நதியின் பாதைகள் குறிக்கப்பட்ட
தேச வரைபடம் போலிருந்தன
அந்த பெண்ணின் அன்னை
மருதாணி இடும் முன்
அவள் உள்ளங்கைகளில்
முத்தமிட விரும்பினாள்
அவள் பிறந்த போது
இட்ட
முதல் முத்தத்தைப் போல
சொல்லாக்க இயலாத உணர்வுடன்
ஈரம் கொண்ட மருதாணிப் பத்தை
வைக்கத் துவங்கினாள்
மருதாணி மகுடம் தரித்தன
பத்து விரல்கள்
பச்சைக் கோலம்
பரவியிருந்தன மற்ற பகுதிகள்

தன் மூச்சால்
ஏறி இறங்கும்
தோள்களைக் கவனித்தவாறு
சிறிது நேரம் அசைவின்றி
அமர்ந்திருந்தாள்
மணிக்கட்டுக்கு வந்த வளையல்களை
அன்னையிடம்
மேலேற்றி விடச் சொன்னாள்
பக்கத்து வீட்டு குழந்தையிடம்
தன் மூக்குக் கண்ணாடியை
சரிசெய்யச் சொன்னாள்
அக்குழந்தை கண்ணாடியை
கையில் எடுத்துக் கொண்டு ஓடியது
துரத்திப் பிடித்து
மூக்குக் கண்ணாடியை மீட்டாள்
கைகளைக் கழுவலாமா என
அவ்வப்போது அன்னையிடம் கேட்டாள்
இன்னும் மூன்று மணி நேரத்துக்கு
அசைக்கவே கூடாது
என அன்னை சொன்னதை
சிணுங்கலுடன் கேட்டுக் கொண்டாள்
அன்றைய மதிய உணவை
தட்டில் பிசைந்து
ஊட்டி விட்டாள்
அவள் அன்னை
கைகள் அசையாமல்
சிறிது நேரம் உறங்கி
விழித்து
நீரால் கைகளைக் கழுவி
அந்தி வானமெனச்
சிவந்திருந்த உள்ளங்கைகளை
அன்னையிடம் ஆர்வமாகக் காட்டினாள்

அவள் உள்ளங்கைகளைத்
தன் கண்ணில் ஒற்றிக் கொண்ட
அன்னை
நீ லஷ்மி
நீ லஷ்மி
என்று சொன்னாள்

சிரித்துக் கொண்டே
அந்த இளம்பெண்
தன் பெயர் லஷ்மி அல்ல என்று சொல்லி
தன் பெயரைச் சொன்னாள்
அந்த பெயரும்
லஷ்மிகரமாகவே
இருந்தது



மூக்குக்கண்ணாடி

அவள்
அணிந்திராத போதும்
நன்றாய் அறிந்திருந்த
அவள் விழியசைவுகளை
பயிற்சி செய்து பார்க்கிறது
அவள் மூக்குக்கண்ணாடி
மேஜை மேல் இருந்த
மூக்குக்கண்ணாடியைப் பார்த்து
கிண்டர் கார்டன் செல்லும்
ஒரு குழந்தை
லிட்டில் ஸ்டார்
என அவள் கண்ணாடியை
கையில் எடுக்கப் போனது

அவள்

அவள் ஒரு மலர்
அவ்வப்போது வான் நோக்குவாள்
அப்போது
ஒளி மிக்க வேறொரு
மலராவாள்
மென்மையாய்ப் புன்னகைக்கும் போது
ஒரு மலர்க்கொத்து
என்றாவாள்
அவள் கருணை வெளிப்படும்
கணங்களிலெல்லாம்
அபூர்வ மணம் கொள்வாள்
அவள் நீங்கிச் சென்ற பின்னும்
நீங்காமல் இருக்கும்
அந்த மணம்
அவள் எப்போதாவது சிந்தும்
விழிநீர்
புல்வெளிகளுக்கு இடையே
பூத்திருக்கும்
சிறுமலர்களாய்

அடர்த்தி

நம் உரையாடலில்

உன்னைப் பற்றிய புகழ்மொழிகள் எதையும் நான் உரைத்ததில்லை
நான் கண்ட உன் இயல்புகளைக் கூறியிருக்கிறேன்
அவை என் சொற்களுக்கு அப்பாலும் ஒளிர்கின்றன
சொல்லாக்கப்பட்டால் உன் இயல்புகளின் முழுமையை வெளிப்படுத்த இயலாதோ என தயங்கி
எப்போதும் மௌனத்தை வெளிப்படுத்துகிறேன்

நம் மௌனங்கள் அடர்த்தி கொள்கின்றன

நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஓர் இரவில் பெய்த அப்பெருமழையைச்
சுமந்திருந்த மேகங்களின் அடர்த்தி எத்தனை
அதுதான் அலைவாயில் கடல் தீண்டியதோ?

நீ திறந்திருக்கிறாய்
வானம் போல
காணும் தோறும்
அற்புதங்கள் பெருகும் வெளியென

Sunday, 5 May 2019

தவம்

வான் தீண்ட எழும்பும்
வேள்வித்தீயின்
ஆயிரமாயிரம்
நாக்குகள்
காதல்
உன்
அன்பின் மழைக்காக
நித்ய
தவமியற்றுகிறது
பூமி

Saturday, 4 May 2019

உயிர்

நீ

அலைகள் ஆர்ப்பரித்த போது
ஆழ்கடலின் அமைதியுடனிருந்தாய்

மேகங்கள் நிறைந்திருந்த
வானமாய் இருந்தாய்

வான்மீன்களுக்கு நடுவே
அரசியென கொலு அமர்ந்தாய்

இலையெல்லாம்
பூவாக
மரத்தில் மலர்ந்திருந்தாய்

படிக ஒளி
மூக்குத்தியில்
ஒளிர்ந்தது
கலங்கரை விளக்கம் போல

இறைமையின்
பிரியத்துக்குரிய
தோழியானாய்

அன்பு குறித்து சில அவதானங்கள்

அன்பின் சொற்கள்
மௌனத்துக்கும் மெல்லொலிக்கும்
இடையில்
இருக்கின்றன

அன்பின் வெளிப்பாடுகள்
நுண்ணியதிலும்
நுண்ணியதாக
உருவம் பெறுகின்றன

அன்பின் பிரதேசங்கள்
விண்ணுக்கும்
புவிக்கும்
அப்பால் உள்ளன

அன்பின் முதற்சொல்
உச்சரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது
யுகாந்திரங்களாக

அசைவற்ற புவியை
சலனமுறச் செய்தது
அன்பின் இருப்பு

நம்பிக்கை

புயலால்
அலைக்கழிக்கப்பட்ட
ஒற்றைப் படகைச் சுற்றி
திசையெங்கும் கடல்
படகிலிருப்பவன்
நம்பிக்கையுடனிருக்கிறான்
எஞ்சிய கலனில்
சேகரித்துக் கொள்கிறான்
பெய்யும்
மேகங்களின் நீர்த் துளிகளை

அடுத்த கண
நிகழ்வுகளின்
எண்ணம் இன்றி
கரிப்பை
இனிக்கச் செய்யும்
ரசவாதத்தை நினைத்துப் பார்க்கிறான்
அன்பின் மாய ரசவாதத்தை
அன்பின் ரசவாதியை