Saturday, 11 January 2020
Friday, 10 January 2020
ஆயிரம் புத்தகங்கள்
எங்கள் இல்லம் விசாலமானது; பெரியது. கூடம், அறைகள், வாகன நிறுத்தம் ஆகியன ஒவ்வொன்றுமே பெரியவை. தரைத்தளம், முதல் தளம் என இரண்டு மாடிகள் கொண்டது. முதல் தளத்தில் இரண்டு பெரிய அறைகள். அங்கேயிருந்து தரைத்தளத்தில் உணவுக்கூடத்தைக் காண முடியுமாறு வடிவமைக்கப்பட்டவை. தரைத்தளத்தில் ஒரு அறை உண்டு. வீட்டில் இரண்டு தென்னை மரங்கள் இருக்கின்றன. வீட்டின் முன் ஒரு வேப்ப மரம் இருக்கிறது. கொல்லைப் பக்கத்தில் கருவேப்பிலை மரமும் வாழை மரமும் உண்டு. அப்பா மாடித்தோட்டம் போட்டிருக்கிறார். அதில் ஒரு செம்பருத்திச் செடி மரமாக வளர்ந்து அவ்வப்போது பூக்கிறது. காலை வீட்டு வாசலில் அம்மா கோலமிடும் நேரத்தில் அம்மா வாசலுக்கு வருவதைப் பார்த்ததும் முப்பது பறவைகள் கிரீச் கிரீச் என்று கீச்சிட்டுக் கொண்டு சூழ்ந்து கொள்ளும். தவிட்டுக் குருவி, மைனா, வால் காகம். காகம் ஆகியவை வந்து விடும். பறவைகளுடன் சில அணில்களும் வந்து விடுகின்றன. அம்மா கோலமிட சிறிது தாமதமானால் வீட்டினுள் மெல்ல அடி எடுத்து வைத்து கூடத்தினுள் நுழையும்.
கடந்த வாரம் எனது அறையிலும் தந்தையின் அறையிலும் Cup boardக்கு கதவு போடும் வேலை நடந்தது. ரொம்ப நாளாக செய்ய நினைத்த வேலை. தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. அம்மா அதனை உடன் செய்ய வேண்டும் என்று பிரியப்பட்டார்கள். வேலை துவக்கப்பட்டது. நான்கு ஆசாரிகள் ஒரு வாரம் வேலை செய்தார்கள். வீடெங்கும் மரத்தூள் பரவியிருந்தது. டிரில்லிங் மெஷின் இயங்கிக் கொண்டிருக்கும் சத்தம். வீடு பல வருடமாகப் பழகியிருந்த இயங்குமுறையில் இந்த ஒரு வாரம் சற்று மாற்றம் கண்டது.
என்னுடைய அறை முழுதும் புத்தகங்களே நிரம்பியிருக்கும். என்னுடைய மேஜையிலும் புத்தகங்களே. அவற்றை அடுக்கி விட முடியுமா என்பது எனக்கு ஓர் ஐயமாகவே இருந்தது. எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன என்பதையும் நான் கணக்கிட்டிருக்கவில்லை. என்னுடைய அறையின் ஷெல்ஃப்கள் பெரியவை. புத்தகங்களை அவற்றில் அடுக்கி வைத்தால் முன்னால் உள்ள புத்தகங்கள் பின்னால் உள்ள புத்தகங்களை மறைத்து விடும். எல்லாப் புத்தகமும் கண்ணில் படுமாறு ஷெல்ஃபை மூன்று அடுக்காகப் பிரித்து புத்தகங்கள் வைக்க ஏற்பாடு செய்யுமாறு கூறினேன். அதே போல அமைக்கப்பட்டது. என்னுடைய ஷெல்ஃபில் எல்லா புத்தகங்களையும் அடுக்கியுள்ளேன். ஒரு முறையான அடுக்கில் அமைக்கப்பட்டுள்ளதால் எத்தனைப் புத்தகங்கள் இருக்கின்றன என்று கணக்கிட்டேன். ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் இருந்தன. மலைப்பாக இருந்தது. மனதில் ஒரு மெல்லிய கலக்கம் ஏற்பட்டது.
ஐந்து வயதிலிருந்து புத்தகங்கள் வாசிக்கிறேன். கவிதை, நாவல், சிறுகதை, வரலாறு, சமூகவியல், அறிவியல், அரசியல், பொருளாதாரம், மொழி, தமிழின் மரபிலக்கியங்கள், சமய இலக்கியங்கள் என நூல்களின் வகைப்பாடு விரிவடைந்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு புத்தகத்தையும் கையில் எடுத்து அடுக்கும் போது அது வாங்கப்பட்ட சூழல் அதன் வாசிப்பு அனுபவம் ஆகியவை நினைவில் எழுகின்றன. புத்தகங்கள் எனக்கு எத்தனையோ வாழ்க்கைகளைக் குறித்து எடுத்துச் சொல்லியிருக்கிறது. எத்தனையோ மனிதர்களைப் புரிந்து கொள்ள உதவியிருக்கிறது. சுயமாகச் சிந்திக்க சுயமாக முடிவெடுக்க துணை புரிந்திருக்கிறது.
தமிழ்க் கவி ஔவை ‘’கற்றது கைம்மண் அளவு’’ என்கிறாள்.
வாணி கலைத்தெய்வம் மணிவாக்கு உதவிடுவாள்
ஆணிமுத்தைப் போல அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெல்லாம் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.
என்கிறான் பாரதி.
வாணி கலைத்தெய்வம் மணிவாக்கு உதவிடுவாள்
ஆணிமுத்தைப் போல அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெல்லாம் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.
என்கிறான் பாரதி.
Thursday, 9 January 2020
பயணம்
இன்று இரவு சென்னை புறப்படுகிறேன். வெள்ளிக்கிழமையன்று பத்து நூல்கள் வெளியீட்டு விழாவில் ‘’அகதி’’ சிறுகதைத் தொகுப்பு குறித்து பேசுகிறேன்.
மறுநாள் சனிக்கிழமை காலை நவஜீவன் எக்ஸ்பிரஸ்ஸில் அகமதாபாத் செல்கிறேன். ஞாயிறு காலை அகமதாபாத் சென்றடைகிறேன். ஞாயிறும் திங்களும் சர்வதேச காற்றாடித் திருவிழாக் கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறேன்.
செவ்வாயன்று இரண்டு நாட்கள் பயணம் முடிந்து சென்னை திரும்புகிறேன். உடன் அங்கிருந்து புறப்பட்டு மயிலாடுதுறை.
நண்பர்கள் அழைக்கிறார்கள். ஊர் திரும்பியதும் ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு ஒருநாள் செல்ல வேண்டும்.
நண்பர்கள் அழைக்கிறார்கள். ஊர் திரும்பியதும் ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு ஒருநாள் செல்ல வேண்டும்.
படகு நீரில் மிதப்பது போல பயணங்களில் மிதக்கிறேன்.
Wednesday, 8 January 2020
நோய்மைக்கு எதிரான யுத்தம்
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் வயதால் சற்று முதியவர். முதுமை காரணமாக உடல் உழைப்பை வழங்க இயலாமல் இருப்பவர். பல ஆண்டுகளுக்கு முன்னால் அவருடைய குரல் நாண் பெருமளவில் பாதிக்கப்பட்டதால் அவருக்கு ஒரு அறுவைசிகிச்சை நடந்திருக்கிறது. ஆகையால் சரளமாகப் பேச முடியாதவர். மிகக் குறைவாக ஓரிரு வார்த்தைகள் பேசுவார். அவருடைய வீட்டில் தனியாக இருக்கிறார்.நான் வாரம் ஒருமுறையாவது சென்று அவரைப் பார்த்து வருவேன். அவர் உடல்நலம் எவ்வாறு உள்ளது என்று விசாரிப்பேன். காலையும் மாலையும் பூசனை செய்து திருநீறு அணிவார். வீட்டுத் தோட்டத்தில் பூச்செடிகளும் காய்கறிகளும் கீரையும் வைத்து பராமரிக்கிறார். அந்த தோட்டப்பணியை மேற்கொள்வார். பின்னர் வீட்டில் அமைதியாக அமர்ந்திருப்பார்.
சில வாரங்களுக்கு முன்னால் அவருக்குச் சர்க்கரை நோய் இருப்பது இரத்தப் பரிசோதனை மூலம் தெரியவந்தது. மருத்துவரின் பரிந்துரைப்படி சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் வாங்கித் தந்தேன். அவர் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் அவர் முறையாக மாத்திரை எடுத்துக் கொள்கிறாரா என்பதை மாத்திரையின் எண்ணிக்கையைக் கொண்டு அறிந்து கொள்வேன். காலையும் மாலையும் சிறிது தூரம் காலாற நடக்கச் சொல்வேன். கொஞ்ச தூரம் நடந்தாலே தலை சுற்றி வருகிறது என்பார்.
அவருக்குத் தேவையான மாத்திரைகளை ஃபார்மஸியில் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்திய அரசாங்கத்தின் பாரதீய ஜன் ஔஷதி கேந்திரா என்ற மருந்துக் கடைகளைக் குறித்து அறிந்தேன். மத்திய அரசாங்கத்தின் இரசாயனத் துறை, தரமான மருந்துகள் சகாயமான விலையில் எளிய மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாடு முழுதும் துவங்கி நடத்தி வரும் கடைகள் தான் ஜன் ஔஷதி மருந்துக் கடைகள். மற்ற மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துகள் இங்கே நாலில் ஒரு பங்கு விலையில் கிடைக்கின்றன. பரவலாகக் காணப்படும் நோய்களுக்கு மருந்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் அனைத்துமே இந்த மருந்துக்கடையில் கிடைக்கிறது. வழக்கமாக நண்பருக்கு மாதத்திற்கு ரூ.300 என்ற அளவில் மாத்திரைகளுக்குச் செலவாகும். இப்போது ரூ.75 மட்டுமே ஆகிறது. இது விலை தொடர்பானது மட்டுமல்ல; விலை குறைவாய் உள்ள மாத்திரை என்பது அவருக்கு அவர் நோய் குறித்த பயத்தையும் பதட்டத்தையும் குறைக்கிறது.
நாடு முழுதும் ஜன் ஔஷதி கேந்திராக்கள் அதிக அளவில் இயங்க வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது. அதன் மூலம் குடிமக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை அளிக்க முற்படும் தன் கடமையைச் செய்ய முற்படுகிறது. மக்கள் இந்த கடைகளை அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் மருந்து தயாரிப்பில் பல ஆண்டுகளாக கொள்ளை லாபம் பார்த்துப் பழகியவை. மருந்து கம்பெனிகள் - ஃபார்மஸிகள் - மருத்துவர்கள் என்னும் வலைப்பின்னல் தத்தம் வணிக நோக்கங்களுக்கான ஒத்துழைப்பில் பல்லாண்டு பழக்கம் கொண்டது. ஒரு செயல்பாட்டை உதாரணமாகச் சொல்கிறேன். எங்கள் ஊரில் ஒரு மருத்துவர் மருந்து சீட்டில் மருந்தின் பெயரை எழுதும் போது அவர் அந்த மாத்திரைக்காக அவருடைய ஃபார்மஸிஸ்டுக்கு மட்டுமே புரியக் கூடிய நான்கெழுத்து குறிப் பெயரை எழுதுவார். அதில் உள்ள அட்சரங்களில் எதுவும் மருந்தின் பெயரில் இருக்காது. அவர் ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு குறிப்பெயர் வைத்திருப்பார். அவர் எழுதும் குறிப்பெயருக்கான மருந்து எது என்பது அவருடைய ஃபார்மஸிஸ்டுக்கு மட்டுமே தெரியும். அந்த மருந்து சீட்டை எடுத்துக் கொண்டு வேறு ஃபார்மஸிக்கு சென்றால் இதில் எழுதப்பட்டிருக்கும் எதுவும் மருந்தின் பெயர் அல்ல என்பார்கள். அந்த மருத்துவரின் மருந்துக்கடைக்கே வந்தாக வேண்டும். அங்கும் அந்த மாத்திரையை முழு மாத்திரை அட்டையுடன் தர மாட்டார்கள். கத்தரிக்கோலால் ஒவ்வொரு மாத்திரையாக கத்தரித்து வைத்திருப்பதையே தருவார்கள். முழு மாத்திரை அட்டையில் மருந்தின் பெயரும் இரசாயனமும் இருந்தால் அடுத்த முறை வேறு கடைகளில் வாங்குவதற்கான வாய்ப்பைத் தடுப்பதற்காக இந்த ஏற்பாடு. இவ்வாறு நடந்து கொள்வது தார்மீகப்படி மிகப் பெரிய அநீதி. சட்டபூர்வமாகவும் மிகக் கடுமையான குற்றம்.
மருத்துவ சேவைக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட- நோயாளிகளின் வாழ்க்கைச் சூழலையும் பொருளாதார நிலையையும் கவனத்தில் கொண்டு - பொருத்தமான - தக்க - சிகிச்சை அளிக்கும் எத்தனையோ மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதையும் சேர்த்தே இந்த விஷயத்தில் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்களின் சேவைக்கு நாடு என்றும் கடன்பட்டுள்ளது.
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை எல்லா மாநிலங்களிலும் ஜன் ஔஷதி கேந்திராக்கள் அமைந்து எளிய மக்கள் பயன்பட வேண்டும் என்பது அரசின் எண்ணம். படித்தவர்கள், விபரம் தெரிந்தவர்கள் எளிய மக்களுக்கு இதனைக் குறித்து எடுத்துச் சொல்ல வேண்டும்.
மக்களாட்சியில் அரசாங்கம் என்பது மக்கள்தான். இன்று அது இந்தியர்களின் நினைவில் இருக்கிறதா என்ற ஐயம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. எந்த நியதிகளுக்கும் ஒழுங்குமுறைகளுக்கும் உட்பட மறுப்பது என்பது இந்தியப் பொதுப் பண்பாக உருவாகி வருகிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மக்கள் நலத்துக்கான திட்டங்கள் மக்களைப் பெருமளவில் சென்றடைய வேண்டும் என்பதில் குடிமக்கள் இருவேறு எண்ணம் இன்றி இருக்க வேண்டும்.
Tuesday, 7 January 2020
Monday, 6 January 2020
சென்னை புத்தகக் கண்காட்சி
சென்னை புத்தகக் கண்காட்சி இந்த மாதம் 9ம் தேதி துவங்குகிறது. 21ம் தேதி வரை நடைபெறுகிறது. 2003ம் ஆண்டு முதல் முறையாகச் சென்றேன். கல்லூரியில் பொறியியல் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். நானும் எனது நண்பனும் மயிலாடுதுறையில் அதிகாலை கிளம்பி மதியப் பொழுதில் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றோம். அப்போது காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியில் நடைபெறும். அதன் பின்னர் ஓரிரு ஆண்டுகள் தவிர பெரும்பாலான ஆண்டுகள் சென்றிருப்பேன். பின்னர் கண்காட்சி அரங்கு ஆங்கிலோ - இந்தியன் பள்ளிக்கு மாறியது. இப்போது ஒய்.எம்.சி.எ.
ஆயிரக்கணக்கானோர் குழுமக் கூடிய கண்காட்சி வெளி. ஏதோ ஒரு விதத்தில் எல்லாருடைய சிந்தனையும் புத்தகங்கள் குறித்து. எந்த பண்பாட்டு நிகழ்விலும் மக்களுக்கு ஆர்வம் இருக்கும் போது அது சமூகத்தில் ஆக்கபூர்வமான விளைவுகளை உருவாக்குகிறது.
சிந்திக்கும் சமூகம் முன்னேறும். பேதங்களைத் தவிர்த்து இணைந்து செயல்படும். சிந்தனைக்கும் கூட்டுச் செயல்பாட்டுக்கும் வாசிப்பு வழி அமைத்துக் கொடுக்கும்.
தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலகட்டத்திலேயே நம் நாடு கலையில், இலக்கியத்தில், நுண்கலையில், கட்டுமானத்தில், அறிவியலில், வானியலில் பெரும் உயரங்களைத் தொட்ட நாடு. நம் முன்னோர் நம் நாட்டை ஒவ்வொரு மானுடனின் ஆத்ம விடுதலையை அளிக்கும் நிலமாக உருவாக்கியுள்ளனர். அடுத்த தலைமுறைக்கு மேலான சமூகத்தை வழங்கக் கூடிய பொறுப்புணர்வு நம் அனைவருக்கும் உள்ளது. நமது வாசிப்பும் சிந்தனையும் அதனை உறுதி செய்யட்டும்.
Saturday, 4 January 2020
ஒரு நண்பர்
சென்ற வாரம் ஒரு நண்பரைச் சந்தித்தேன். எங்கள் முதல் சந்திப்பு. இரண்டு நாட்கள் உடனிருந்தோம். ஒன்றாகத் தங்கியிருந்தோம். இரண்டு நாட்களும் கணமும் பிரியாமல் ஒன்றாகவே இருந்தோம். அமெரிக்காவில் மென் பொறியாளராக பணிபுரிகிறார். அவரது மனைவியும் அமெரிக்காவில் பணிபுரிகிறார். குழந்தைகள் அங்கேயே பள்ளிக்கல்வியைப் பயின்று கொண்டுள்ளனர். மரபிலக்கியத்தின் மீதும் நவீன இலக்கியம் மீதும் ஆழ்ந்த பற்று கொண்டவர். திருக்குறள் மீதும் கம்பராமாயணம் மீதும் பெரும் ஈடுபாடு கொண்டவர். இலக்கியம் குறித்தும் சமூகம் குறித்தும் இரண்டு நாட்களும் உற்சாகமாக விவாதித்தோம். பிரிய மனமின்றிப் பிரிந்தோம்.
நேற்று அலைபேசியில் அழைத்தார். அமெரிக்கா செல்ல விமான நிலையம் நோக்கி தனது சொந்த ஊரிலிருந்து காரில் சென்று கொண்டிருப்பதாக சொன்னார்.
அடுத்த ஆண்டு இந்தியா வரும் போது சந்திப்போம்; அதுவரை மின்னஞ்சல் தொடர்பில் இருப்போம் என்றார்.
மீண்டும் ஒரு நட்பு; ஒரு பிரிவு.
Friday, 3 January 2020
ஒரு முழு வட்டம்
2000 ஜனவரியில் நான் மோட்டார்சைக்கிள் வாங்கினேன். ஹீரோ ஹோண்டா சிடி 100 எஸ் எஸ். 1987ல் அப்பா வீட்டின் முதல் மோட்டார் வாகனத்தை வாங்கினார். ஹீரோ ஹோண்டா சிடி 100. அப்பா அதன் பின் மூன்று வாகனம் மாற்றி விட்டார்கள். நான் இன்னும் மாற்றவில்லை. கார் இருக்கிறது. ஆனாலும் டூ-வீலர் மீது தான் அதிக பிரியம். 2000 புத்தாண்டை ஒட்டித்தான் வண்டி வாங்கினேன். அப்போது டிரைவிங் லைசன்ஸ் எடுத்து சில மாதங்கள் ஆகியிருந்தது. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வந்திருந்தேன். அப்போது கல்லூரி மாணவர்கள் மிகச் சிலரிடமே மோட்டார் வாகனம் இருக்கும். இப்போது சொன்னால் அப்படியா என ஆச்சர்யப்படுவார்கள். கல்லூரி மாணவர்களில் கணிசமானோருக்கு இரு சக்கர வாகனம் இயக்கத் தெரியாது. அதிகமாக சைக்கிள்தான் புழக்கத்தில் இருக்கும். விரிவுரையாளர்கள் மோட்டார் வாகனம் பயன்படுத்துவர்.
இன்று என்னுடைய வாகனம் 99999.9 என்ற எண்ணிக்கையைத் தொட்டு மீண்டும் 00000.1 என மறுசுற்றுக்கு வந்தது. புதிய சுற்று புதிய வாகனம் என நம்ப வைக்கிறது. எனக்கும் இருபது வருடம் பின்னால் சென்று விட்டதாக ஓர் உணர்வு. எப்போதோ ஒரு லட்சம் கிலோ மீட்டர் என்ற அளவைத் தாண்டியிருக்கும். நடுவில் பல வருடங்கள் ஸ்பீடாமீட்டர் இயக்கத்தில் இல்லாமல் இருந்தது. கம்பெனியில் அந்த வகை ஸ்பீடாமீட்டர்கள் தயாரிப்பில் இல்லை என்று சொல்லி விட்டார்கள். ஹீரோ ஹோண்டா கம்பெனி இரண்டாகப் பிரிந்து விட்டது. சில மாதங்களுக்கு முன் மிக முயற்சி செய்து அதன் உதிரி பாகம் ஒன்றைத் தருவித்து ஸ்பீடாமீட்டரை மீண்டும் இயங்கச் செய்தேன்.
ஓர் உற்ற தோழனைப் போல உடனிருந்திருக்கிறது. சோழ மண்டலம் முழுமையையும் சுற்றியிருக்கிறோம். நானும் எனது வாகனமும் செல்லாத பாதைகள் இந்த பிரதேசத்தில் மிகச் சொற்பம்.
டூ-வீலரில் இந்திய நிலமெங்கும் சுற்றியிருக்கிறேன்.
என்னை என் வாகனம் அறியும்.
இந்த கணம் அதனை எண்ணி உளம் விம்முகிறேன்.
Thursday, 2 January 2020
முதல் தினம்
நேற்று உத்தமர் கோவில் சென்றிருந்தேன். சோழ நாட்டு திவ்ய தேசங்கள் நாற்பது. வைணவ மரபில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்கள் 108. அதில் பூலோகத்தில் உள்ளவை 106. மற்ற இரண்டும் பரமபதம் மற்றும் வைகுண்டம். இந்த 106 திவ்யதேசங்களில் சோழ நாட்டு திவ்ய தேசங்கள் 40. நடு நாட்டு திவ்ய தேசங்கள் 2. பாண்டி நாட்டு திவ்ய தேசங்கள் 18. மலை நாட்டு திவ்ய தேசங்கள் 13. வட நாட்டு திவ்ய தேசங்கள் 11. தொண்டை நாட்டு திவ்ய தேசங்கள் 22.
இவற்றில் நான் 50க்கும் மேற்பட்ட திவ்ய தேசங்கள் வரை சென்றிருப்பேன். திவ்யதேசங்கள் அனைத்துக்கும் செல்ல வேண்டும் என விரும்புபவர்கள் முதலில் நடு நாட்டு திவ்ய தேசத்தில் துவங்கலாம். இரண்டு தலங்கள். கடலூர் அருகில் உள்ள திருவஹீந்திரபுரம் மற்றும் திருக்கோவிலூர். நடு நாடு முழுமை பெற்று விடும்.
சோழ நாட்டு திவ்ய தேசங்களில் உத்தமர் கோவிலும் அன்பிலும் நான் சென்றதில்லை. நெடு நாளாக செல்ல வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தேன். நேற்று சென்றேன்.
புத்தாண்டுத் தீர்மானங்களின் படி அதிகாலை விழித்து எண்ணிய வண்ணம் அனைத்தையும் செய்தேன். காலை புத்தம் புதிதாக இருந்தது. நான் மக்களைச் சந்திக்க விரும்புபவன். மக்களுடன் இருக்க விரும்புபவன். எனவே பண்டிகை தினங்களில் பயணிப்பதை விரும்புவேன். காலை 8.10 எக்ஸ்பிரஸில் திருச்சி பயணமானேன். அகல ரயில்பாதையில் விரைவு ரயில்கள் மயிலாடுதுறையிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் திருச்சி சென்றடைந்து விடுகின்றன. பேருந்தெனில் குறைந்தபட்சம் நாலரை மணி நேரம் ஆகிவிடும்.
சிறு வயதில் ரயிலிலும் ரயில் நிலையங்களை ஒட்டியும் வாழ்க்கை அமைய வேண்டும் என விரும்புவேன். ரயிலைப் பார்ப்பது ரயில் ஹாரனைக் கேட்பது என்பது பரவசமூட்டும் அனுபவமாக இருக்கும்.
திருச்சி ஆலயங்கள் நிறைந்த ஊர். மக்கள் குடும்பம் குடும்பமாக ஆலயங்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். மக்கள் முகத்தில் மகிழ்ச்சி. எப்போதும் இறைவனிடத்தில் அவர்களுக்கு ஒரு பிராத்தனை இருந்து கொண்டேயிருக்கிறது. மேலான வாழ்க்கை. அமைதி.
உத்தமரைச் சேவித்தேன். உத்தமரைச் சேவித்து ஆண்டின் முதல் தினம் தொடங்கியது.
Wednesday, 1 January 2020
ஓர் அன்னையின்
முன்னால்
நதிக்கரையில்
வேர்கள்
பாதி நதியிலும்
பாதி நிலத்திலும்
பரவி நிற்கும்
பெரும் விருட்சத்தின்
முன்னால்
பிராத்தனைகளுடன்
ஏற்றப்பட்டுள்ள
தீபங்களின் முன்னால்
மௌனத்துடன்
உயர்ந்திருக்கும்
மலையின் முன்னால்
உலகைத் தன் சிறகுகளால்
அணைக்கும்
பறவையின் முன்னால்
சிந்தப்படும்
விழிநீர்
உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது
ஒவ்வொரு
புதிய
நாளையும்
Subscribe to:
Posts (Atom)