Thursday, 14 September 2023

தமிழகத் தொழிலாளர்கள்

 சென்ற வாரம் நண்பன் கே. எஸ் ஐ சந்திக்க சிதம்பரம் சென்றிருந்த போது அங்கே அவனது உறவினர்களிடம் தென்னாற்காடு மாவட்டத்தின் மக்கள் கடுமையான உழைப்பாளிகள் என்ற எனது அபிப்ராயத்தைத் தெரிவித்தேன். அங்கே நில உரிமையாளர் விவசாயத் தொழிலாளர் இருவருமே ஒன்றாக நிலத்தில் விவசாயப் பணிகளைச் செய்வார்கள். நில உரிமையாளர்களின் குடும்பத்துப் பெண்களும் வயலுக்கு வந்து களையெடுத்தல் முதலிய பணிகளை மேற்கொள்வார்கள். நான்கு சக்கர வாகனங்களைக் கையாள்வதில் தென்னாற்காடு மாவட்ட ஆட்கள் நிபுணர்கள். பேருந்து ஓட்டுனர்களாக சிறப்பான பணிகளைச் செய்தவர்கள் தென்னாற்காடு வாகன ஓட்டுனர்கள். எனது அபிப்ராயங்களை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் நண்பன் கே.எஸ் ன் உறவினர். அவரது மாவட்டத்தைப் பற்றி நல்ல அபிப்ராயம் சொன்னது அவருக்கு மகிழ்ச்சி அளித்தது. எனினும் சற்று சோர்வுடன் , ‘’ நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் தம்பி. ஆனால் அதெல்லாம் இருபது வருடம் முன்பு’’ என்றார். ‘’இப்போதெல்லாம் இங்கே உள்ள பெரும்பாலான தொழிலாளர் குடும்பங்களில் உள்ள ஆண்களில் குறைந்தபட்சம் ஒருவர் அல்லது இருவர் குடி அடிமைகளாக இருக்கின்றனர். அவர்களால் சராசரியான உடல் உழைப்பைக் கூட கொடுக்க முடிவதில்லை. எனவே அவர்களின் பணித்திறன் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு கட்டுமானம் மேற்கொண்டேன். முழுக்க முழுக்க வட இந்தியத் தொழிலாளர்களைக் கொண்டே கட்டுமானம் நடந்தது ‘’ என்றார்.  

Wednesday, 13 September 2023

தேசம்

 எனது நண்பர் ஒருவர் ஹார்டுவேர் கடை வைத்திருக்கிறார். நேற்று அங்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு வந்த பெயிண்டர் ஒருவரை நண்பர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பெயிண்டர் ஒரிஸ்ஸா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்தவர். பத்து ஆண்டுகளாக கும்பகோணம் , திருவாரூர் ஆகிய பகுதிகளில் தனது சொந்த ஊரிலிருந்து கூட்டி வந்த தனது சக பெயிண்டர்களைக் கொண்டு பெயிண்டிங் வேலை செய்து வருவதாகக் கூறினார். இங்கே வேலைக்கான தேவை அதிகம் இருப்பதால் தொடர்ந்து இங்கேயே தங்கி விட்டதாகக் கூறினார். கட்டாக்கில் அவரது வீட்டில் பெற்றோருடன் அவர் உடன் பிறந்த சகோதரிகள் நால்வர் இருந்திருக்கின்றனர். அவர்கள் நால்வருக்கும் திருமணத்தை இங்கே ஈட்டிய வருமானத்தைக் கொண்டு நடத்தி வைத்திருக்கிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் . இருவரும் கட்டாக்கில் பள்ளிக்கல்வி பயில்வதாகச் சொன்னார். அவருடைய வாழ்க்கைக்கதையைக் கேட்டது மகிழ்ச்சி அளித்தது ; மனதுக்கு நம்பிக்கை அளித்தது. 

Monday, 11 September 2023

அன்புள்ள நண்பனுக்கு

 அன்புள்ள நண்பனுக்கு,

இந்த ஒரு வாரம் என்பது மறக்க இயலாத பயணங்களாலும் உரையாடல்களாலும் இனிய நினைவுகளாலும் ஆனதாக இருந்தது. பழைய தென்னாற்காடு மாவட்டத்தின் நிலப்பரப்புகளில் அதன் நிலக்காட்சிகளைக் கண்டவாறு அலைந்தோம். நாம் கண்ட பகுதிகள் வானம் பார்த்த பூமி. வட கிழக்கு பருவ மழையை மட்டுமே நம்பியிருக்கும் பகுதிகள். அங்குள்ள விவசாயிகள் கடுமையான உழைப்பாளிகள். பொதுவாகவே தண்ணீர் குறைவாக இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையான உடல் உழைப்பை நல்கக் கூடியவர்களாக இருப்பார்கள். கடந்த 20 ஆண்டுகளில் ஆழ்துளை நீர்க்கிணறுகள் மூலம் புவியின் வெகு ஆழத்திலிருந்து தண்ணீரை மேலே எடுக்கிறார்கள். எனவே முழுக்க மழையை நம்பியிருப்பது என்பது அளவில் சற்று குறைந்திருக்கிறது. தமிழகத்தில் மரப்பயிர் செய்யக் கூடிய பிரதேசமும் இதுவே. பலா, சவுக்கு, கொய்யா ஆகிய மரப்பயிர்கள் இங்கே அதிகமாக உள்ளன. மரப்பயிருக்கு தண்ணீர் அதிக அளவில் தேவைப்படாது. இருக்கும் தண்ணீரைக் கொண்டு அதனை சிக்கனமாகப் பயன்படுத்தி மரங்களை வளர்த்து விட முடியும். நூறிலிருந்து நூற்று இருபது நாட்கள் தமிழகத்தில் சராசரியாக மழை பொழியும் நாட்கள். இந்த மழை நீரை சரியான விதத்தில் நிர்வகித்தால் இந்த பிரதேசத்தின் விவசாயப் பிரச்சனையை சமாளித்து விடலாம். 

விவசாயிக்கு விவசாயம் லாபமளிப்பதாக இருக்க வேண்டும். அப்போது தான் அந்த தொழில் தொடர்ந்து நிகழ முடியும். அதுவே இயல்பான செயலாகவும் இருக்க முடியும். ‘’காவிரி போற்றுதும்’’ அதற்காகவே முயல்கிறது. 

ஏழ்மை என்பது அகற்றப்பட வேண்டும். எந்தெந்த வழிகளில் எல்லாம் ஏழ்மை அகற்றப்பட இயலுமோ அத்தனை வழிகளிலும் முயற்சிகள் நடக்க வேண்டும் என்பது எனது விருப்பம். ‘’அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய் போல் போற்றாக் கடை’’ என்கிறார் திருவள்ளுவர். ஏழ்மை சமூகத்தின் பொதுப் பிரச்சனை என்றே நான் கருதுகிறேன். அதனை தீர்க்க வேண்டியது சமூகத்தில் உள்ள அனைவரின் கடமை என்றே நான் எண்ணுகிறேன். 

நண்பா ! இந்த பயணத்தில் நாம் நிகழ்த்திய உரையாடல்கள் நிறைவளித்தன. காணும் ஒரு காட்சியிலிருந்து ஒரு உரையாடல் தொடக்கத்தை நான் நிகழ்த்துவதும் பின்னர் அந்த உரையாடலை கேள்விகள் மூலம் நீ நீட்டித்து முன்னெடுத்துச் செல்வதும் அந்த உரையாடலிலிருந்து அந்த விஷயத்தின் அடுத்த கட்டத்திற்கு செல்வதும் மேலும் அது தொடர்புடைய இன்னொரு விஷயத்துக்குச் செல்வதும் அனைத்தும் நிகழ்ந்து முடிந்த பிறகு நாம் இன்னும் ஒரு சொல் கூட உச்சரிக்கவேயில்லை என எண்ணும்படியான மறுதுவக்கத்துக்கு வந்து சேர்வதும் என மீண்டும் மீண்டும் நிகழ்ந்த செயல்கள் இனியவையாக இருந்தன. 

நான் நம் நாட்டின் மக்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஜீவனுடன் நிலைத்திருக்கும் ஒரு பண்பாட்டின் அங்கங்களாகக் காண்கிறேன். ஒரு வார காலமாக நிகழும் நம் பயணத்தை முகாந்திரமாகக் கொண்டே நாம் இதனை பரிசீலிக்கலாம். நமக்கு வழி சொன்னவர்கள் நம்முடன் உரையாடியவர்கள் நமக்கு சிறு சிறு உதவி செய்தவர்கள் என நாம் சந்தித்த மனிதர்களை நினைவில் மீட்டாலே நாம் அதனை உணர முடியும். பிறரை நேசிக்க பிறர் மீது அன்பு செலுத்த பிறருக்கு உதவ நம் பண்பாடு மக்களைத் தூண்டிக் கொண்டே இருக்கிறது. அது என்றும் இருப்பது. எப்போதும் அழியாதது. எனவே மக்களைச் சந்திப்பது என்பதும் பயணங்கள் செய்வது என்பதும் அந்த உண்மையை அந்த உணர்வை மீண்டும் மீண்டும் அறிந்து என்னை நானே புதுப்பித்துக் கொள்ளும் செயல்பாடுகள் ஆகும். 

நமது பயணத்தின் முதல் கட்டமாக நாம் வடலூர் சத்திய ஞான சபைக்குச் சென்றிருந்தோம். வடலூர் ராமலிங்க சுவாமிகள் ஒரு பெரும் யோகி. ஞானத்தேடலில் அவர் தீவிரமாக ஈடுபட்டு பலவிதமான ஆத்ம சாதனைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இறைமை உணர்வை அடையக் கூடிய எல்லா வழிகளிலும் அவரது முயற்சி இருந்திருக்கிறது. அவர் தில்லை நடராஜப் பிரானை ஆறுமுகக் கடவுளை போற்றிப் பாடிய பாடல்கள் திருவருட்பாவில் உள்ளன. தன் ஆத்ம சாதனையின் பயனாக இறைமையை அவர் ஒளி வடிவம் என உணர்ந்தார். தீபத்தை இறையருளின் வடிவமாகவும் கருணையை இறைமையின் வெளிப்பாடாகவும் கண்டவர் வள்ளலார். நம் நாட்டின் கோடிக்கணக்கான குடும்பங்களில் வீடுகளில் காலைப் பொழுதிலும் மாலை அந்தியிலும்  பெண்மணிகள் தீபம் ஏற்றுவதை தங்கள் தினசரி நடைமுறையாக வைத்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த விஷயத்தை நாம் இன்னும் ஆழமாக யோசித்துப் பார்த்தால் நமக்கு ஒரு விஷயம் புலப்படும். வள்ளலார் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்தவர். அப்போது அச்சு ஊடகம் ஆரம்ப நிலையில் இருந்தது. அச்சிடப்பட்ட கடவுளர் உருவங்கள் மக்கள் வழிபாட்டுக்குள் வந்திருக்க வாய்ப்பில்லை. கடவுளர் சிலைகள் ஆலயங்களில் வழிபடப் பட்டிருக்கும். கிராமங்களில் வினாயகர் சிலைகள் மரத்தடிகளிலும் குளத்தங்கரைகளிலும் இருந்திருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் தீபம் ஏற்றுவதையும் தீபத்தை வழிபடுவதையும் தங்கள் சமய நெறியாக மேற்கொண்டிருப்பார்கள். எங்கள் பகுதிகளில் ‘’அந்தி விளக்கே அழியாச் செல்வமே வீட்டுக்கு வந்த மகாலஷ்மி ... ‘’ எனத் தொடங்கி கூறப்படும் சிறு பாடல் ஒன்றை பலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.  நம் நாட்டின் எல்லா குடும்பங்களும் வழிபட்ட தீப வழிபாட்டையே வள்ளலார் முன்வைத்தார். தீபத்தை அருளாகவும் கருணையாகவும் கண்டது அவரது ஆன்ம தரிசனம். 

தீபச்சுடர் என்பது எப்போது காணும் போதும் நம்பிக்கை அளிப்பது. நாம் இருக்கும் அறைகளில் எப்போதும் ஒரு தீபச்சுடர் ஒளிர்ந்து கொண்டிருப்பது நமக்கு நன்மை பயப்பது என்று கூறப்படுகிறது. தாவர எண்ணெயில் எரியும் தீச்சுடர் தனது ஒளி நிறையும் பரப்பு முழுதுக்கும் ஒரு உயிர்த்தன்மையை அளிக்கிறது என்பதை தீபம் ஏற்றும் எவரும் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும். 

பசித்திருப்பவருக்கு உணவளிப்பதே சிறந்த வழிபாட்டு முறை என ஒட்டு மொத்த மானுடத்துக்கும் அறிவித்தவர் வள்ளலார். வயிற்றில் எரியும் பசித்தீயை மறைகள் ‘’வைஸ்வாநரன்’’ என்கின்றன. அந்த தீயில் அன்னத்தை அவியாக இடுதலை நம் மரபு வேள்விச்செயல் என வகுக்கிறது. 

நாம் வடலூரிலிருந்து உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமம் சென்றோம். சேவையே உன்னதமான அறம் என்பதை முன்வைக்கும் ஸ்ரீராமகிருஷ்ணரின் நெறியின் படி இயங்கும் பள்ளியில் ஸ்ரீராமகிருஷ்ணர், சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் ஆலயத்தில் அவர்களை வணங்கி அவர்கள் முன் சில நிமிடங்கள் கண் மூடி அமர்ந்திருந்தோம். பின் மதியப் பொழுதாகியிருந்தது அப்போது. அங்கே நமக்கு உணவளித்து உபசரித்தார்கள். சகோதரி கிருஸ்டைன் எழுதிய ‘’நான் கண்ட விவேகானந்தர்’’ என்னும் நூலை அங்கிருந்த நூல் விற்பனை மையத்தில் வாங்கினோம். 

உலகில் உள்ள எல்லோருக்குமே புத்தர் மீது பிரியமும் ஈர்ப்பும் இருக்கும். புத்தரை விரும்பாத குழந்தைகள் உண்டா ? புத்தரை விரும்பாத இளைஞர்கள் உண்டா? புத்தரைத் தம் மகவாகக் கருதாத பெண்கள் உண்டா? பாரதி நம் நாட்டை ‘’பூரண ஞானம் பொலிந்த நன்னாடு ; புத்தர்பிரான் அருள் பொங்கிய நாடு’’ என்கிறான்.  சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் பௌத்தம் குறித்து பேசியிருக்கிறார். ஒரு விதத்தில் , தான் ஒரு பௌத்தன் என்று சொல்கிறார். சமணம் உருவாக்கிய சென்றடைந்த இடத்திலிருந்து தனது ஞானப் பயணத்தைத் துவக்கியவர் புத்தர். எனவே மேலும் முன்னகர்ந்தவர். அவரது முன்னகர்வு என்பது எல்லா மானுடருக்கும் துயர் என்பது ஏதும் அற்ற புத்தநிலை சாத்தியம் என்பதை உரைத்தது. புத்தரின் மார்க்கத்தை தனது துவக்கப்புள்ளியாகக் கொண்டு தனக்கான மார்க்கத்தைக் கண்டடைந்தவர் ஆதிசங்கரர். மகாவீரர், புத்தர், ஆதி சங்கரர் ஆகிய மூன்று ஞானிகளும் நம் நாட்டின் பண்பாட்டு அடிப்படைக்கு மிகப் பெரிய பங்களிப்பை அளித்தவர்கள். மக்கள் சமூகங்கள் ஒற்றுமையாலும் நல்லெண்ணத்தின் அடிப்படையாலும் மேலான புரிதலாலும்  இணைக்கப்பட வேண்டியவை என்னும் நம்பிக்கை கொண்டு நம் நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தும் பணியை வெவ்வேறு அறச் செயல்கள் மூலம் 3000 ஆண்டுகளுக்கு மேலாக முன்னெடுக்கும் சமயம் சமணம். உடல் வலிமையால் பிறரை வெற்றி கொள்வது வீரம் என்றால் அகவலிமையால் தன்னை வெல்வதே மகாவீரம் எனவும் அத்தகைய மாவீரத்தின் இயல்பு சக உயிர்களிடம் கருணையுடன் இருத்தல் எனவும் பறைசாற்றி நிறுவியது சமணம். மகாத்மா காந்தி அடிகளிடம் சமணத்தின் தாக்கம் கணிசமாக உண்டு. திருநறுங்குன்றம் குகையில் பார்ஸ்வநாதர் சிலை முன் அமர்ந்திருந்தது ஒரு பெருங்கருணையாளன் முன் அமர்ந்து அவனது கருணையின் ஆசியைப் பெற்றது போல் உணர வைத்தது. 

பேராலயங்கள் நம் லௌகிக எல்லைகளைத் தகர்க்கின்றன ; இயற்கையின் பெருங்கட்டமைப்பின் ஒரு பகுதி என நம்மை உணர வைக்கின்றன. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம் அத்தகைய ஒன்று. அப்பகுதியின் மக்கள் தினமும் ஆலயத்துக்கு வந்து இறைவணக்கம் செலுத்துவதை தங்கள் வழமையாகக் கொண்டிருக்கிறார்கள். 

நமது முதல் நாள் பயணம் வடலூர், உளுந்தூர்பேட்டை, திருநறுங்குன்றம் , விருத்தாசலம் என்பதாக அமைந்தது. அன்றைய தினம் முழுக்கவே பரவசமாக இருந்தது. 

இரண்டு தினங்களுக்குப் பின், நாம் காவிரி பாய்ந்து செழிக்கச் செய்யும் சோழ நாட்டின் மையப் பகுதியில் பயணித்தோம். நம் நாட்டில் ஒரு மரபு இருக்கிறது. காலை எழுந்தவுடன் ஏழு நதிகளின் பெயர்களைக் கூறி வணங்குவார்கள். ‘’கங்கா யமுனா சரஸ்வதி சிந்து காவிரி நர்மதா கோதாவரி’’ எனக் கூறுவார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எத்தனையோ தலைமுறைகளுக்கு நதிகள் உணவளித்து உயிர்த்திருக்கச் செய்திருக்கின்றன. ‘’சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி’’ என கம்பராமாயணத்தில் ஓரிடத்தில் சொல்கிறான் கம்பன். எவ்விதமான தடைகளற்ற நகர்வைக் குறிக்கும் அந்த வரி அறத்தின் பெரும்பெருக்கையும் சுட்டிக் காட்டுகிறது. நதிதீரம் என்பது வானம் போல. எந்நாளும் பார்த்துத் தீராதது. காவிரியின் பெயரால் ‘’காவிரி போற்றுதும்’’ என ஒரு அமைப்பை நடத்தும் வாய்ப்பு அமைந்ததை அன்னை காவிரியின் கருணை என்றே கொள்கிறேன். 

நமது பயணத்தின் மூன்றாம் கட்டமாக ஓரிரு நாளில் மீண்டும் பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் பயணித்தோம். வெங்கடாம்பேட்டை விஷ்ணு ஆலயம். ஸ்ரீராமர் சயனிக்கும் சிற்பம் அகம் கரைக்கும் அழகு கொண்டது. கருவறையில் குழலின் இனிய இசையை எழுப்புகிறான் வேணுகோபாலன். மேலசித்தாமூர் சமண மடத்துக்கும் ஆலயத்துக்கும் சென்றது மிகவும் முக்கியமான அனுபவம். பின்னர் அருகில் இருக்கும் விழுக்கம் சமண ஆலயத்துக்குச் சென்றோம். 

நீ பணிக்குத் திரும்பும் காலம் நெருங்கியது என்னும் நிலையில் எதிர்பாராத வகையில் கம்பர் பிறந்த திருவழுந்தூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 

ஒரு வாரத்தில் மூன்று கட்டமாக மேற்கொண்ட இந்த பயணம் கங்கையை நோக்கி மேலும் ஒரு இரு சக்கர வாகனப் பயணத்தைத் துவக்க வேண்டும் என்னும் ஆவலை ஏற்படுத்தியது. அவ்வாறெனில் அக்டோபர் முதல் வாரம் பயணத்தைத் துவக்க வேண்டும். நவம்பர் டிசம்பரில் நம் நாட்டின் வட பகுதியில் பனிமூட்டம் தொடங்கி விடும். குளிர் அதிகமாக இருக்கும். அக்டோபரில் எனக்கு தொழில் சார்ந்து பணிகள் உள்ளன. அவ்வாறெனில் மார்ச் மாதத்துக்குப் பின்னரே நெடும்பயணத்தைத் துவக்க முடியும். பயணம் செல்ல வேண்டும் என மனத்தில் நினைத்தால் போதும் ; அதற்கான வழியை அந்த நினைவே கண்டடைந்து சொல்லும் என்பது எனது அனுபவம். அவ்வாறே அது நிகழட்டும் என விட்டுவிட்டேன். 

சமண தீர்த்தங்கரர்களை வணங்கியது ஒரு நீண்ட உபவாசத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கியது. மகாத்மா காந்தி உபவாசத்தை ஆன்ம சாதனைக்கான மார்க்கமாகக் காண்கிறார். இந்த விஷயத்தில் இறை விருப்பம் எப்படியோ அப்படி நிகழட்டும். 

உனது வாகனம் மிகவும் விரும்பத்தகுந்ததாக இருந்தது. இனிமையான பயண அனுபவத்தை அளித்தது. நீ வாகனத்தை மிகவும் சிறப்பாக இயக்கினாய். நான்கு சக்கர வாகனம் எத்தனை வசதி கொண்டதாயினும் நீண்ட தூரப் பயணங்களுக்கு இரு சக்கர வாகனமே மேலும் சிறப்பானது. உனது வார விடுமுறை நாட்களில் உனது ஊரிலிருந்து 120 கி.மீ தூரம் உள்ள இடத்துக்கு இரு சக்கர வாகனத்தில் காலை புறப்பட்டுச் சென்று மாலை வீடு திரும்பு. அன்றைய தினம் 240 கி.மீ இரு சக்கர வாகனப் பயணம் நிகழ்த்தியதாயிருக்கும். ஒவ்வொரு வார இறுதியிலும் ஒவ்வொரு திசை என நான்கு வாரங்களுக்கு நான்கு திசையில் அதே முறையில் பயணம் செய். உனது உடலும் மனமும் இரு சக்கர வாகனத்துக்குப் பழகி விடும். அதன் பின் எத்தனை நாள் வேண்டுமானாலும் நாம் சென்று கொண்டேயிருக்க முடியும். 

அன்புடன்,

பிரபு

Sunday, 10 September 2023

கம்பன் ஊர்

 நண்பன் கே. எஸ் தனது உறவினர்களுடன் மயிலாடுதுறையில் ஒரு திருமண வரவேற்புக்கு நேற்று வருகை புரிந்தான். சிதம்பரத்தில் இருந்து புறப்படும் போது எனக்கு ஃபோன் செய்தான். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அளித்தது போக கூடுதலாக 1 மணி நேரம் இருந்தால் உன்னை ஒரு முக்கியமான ஊருக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னேன். அவன் ஒத்துக் கொண்டான். 

நாங்கள் இருவரும் ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள திருவழுந்தூருக்குச் சென்றோம். கம்பன் பிறந்த ஊர். 108 திவ்யதேசங்களில் 10 வது திவ்யதேசமானது இந்த ஊர். பெருமாளின் பெயர் தேவாதிராஜன். நின்ற திருக்கோலம். பெருமாளின் மார்பில் திருமகள். கருவறையில் பெருமாளுடன் மார்க்கண்டேயர், கருடன், காவிரித் தாயார், பிரகலாதன் ஆகியோர் உள்ளனர். பெருமாள் பிரகலாதனுக்கு அருள் கொடுத்த தலம். கம்ப ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் கம்பர் ‘’இரணியன் வதைப் படலம்’’ என ஒரு படலத்தை இயற்றியிருப்பார். அதில் எழுதப்பட்டிருக்கும் பிரகலாதன் குறித்த வரிகள் மகத்தானவை. வாசிக்கும் எவர் கண்ணிலும் நீர் மல்கச் செய்பவை. 

உற்சவரின் பெயர் கோசஹன். ஆமருவியப்பன். 

நண்பனுக்கு இத்தனை பெரிய கோவிலும் இத்தனை பெரிய பெருமாளும் ஆச்சர்யம் தந்தது. அவன் கம்பன் மீது பெரும் பித்து கொண்டவன். அங்கே இருந்த கம்பர் சன்னிதியில் கம்பரை வணங்கினான்.  

Friday, 8 September 2023

நடுநாட்டில்

 வைணவ மரபில் திருவஹிந்த்ரபுரத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதியை நடுநாடு என்று சொல்வார்கள். நடுநாட்டில் அமையப் பெற்றுள்ள திவ்யதேசங்கள் இரண்டு. திருவஹிந்திரபுரம் மற்றும் திருக்கோவிலூர். 

நண்பன் கே. எஸ் சின் விடுமுறை முடிவடைய உள்ளது. சென்ற வாரத்தில் இரண்டு பயணங்கள் நிகழ்த்தியிருந்த நிலையில் முத்தாய்ப்பாக ஒரு மூன்றாவது பயணத்தை நிகழ்த்த வேண்டும் என்று அவனிடம் சொன்னேன். அடுத்தடுத்த பயணங்களால் நண்பனின் உடல் சற்று சோர்ந்திருக்கிறது. எனக்கு நீண்ட தூரம் பயணம் செய்தால் உடலும் மனமும் உற்சாகம் கொண்டுவிடும். மோட்டார்சைக்கிளில் நீண்ட தூரம் பயணித்திருப்பதால் பயணம் துவங்கிய சில நிமிடங்களில் மனநிலை உற்சாகத்துக்குச் சென்று விடும். அதன் பின்னர் அந்த உற்சாகமே அலை போல நாள் முழுதும் கொண்டு சென்று விடும். 

சென்ற இரண்டு பயணங்களும் புறப்பட காலை 9 மணி ஆனது. எனவே இந்த பயணத்தை காலை 6 மணிக்குத் துவக்கிட வேண்டும் என்று சொன்னேன். அதிகாலை 6 மணிக்கா என்றான் கே.எஸ். கொஞ்சம் யோசித்து காலை 7.30 என்றான். நேற்றிரவு நேரத்தை உறுதி செய்து கொண்டோம். அதிகாலையில் அலாரம் வைத்திருந்தேன். அலாரம் அடிப்பதற்கு முன்னரே விழிப்பு வந்து விட்டது. குளித்துத் தயாரானேன். வெளியூர் சென்றால் பெரும்பாலும் எனது இரு சக்கர வாகனத்தை வீட்டிலேயே வைத்து விட்டு செல்வேன். வீட்டில் இருப்பவர்களுக்கு நான் வீட்டில் இருப்பது போலவே தோன்றும் என்பதால். 

காலைப் பேருந்தைப் பிடித்து சிதம்பரம் சென்று சேர்ந்தேன். பொதுமக்கள் போக்குவரத்தை நான் மிகவும் விரும்புவேன். பலவிதமான மக்களைக் காண முடியும். உரையாட முடியும். பேருந்து நிலையத்தில் சில நிமிடங்கள் காத்திருந்தேன். நண்பன் வந்து என்னை அழைத்துக் கொண்டான். 

புவனகிரி குறிஞ்சிப்பாடி வழியாக வெங்கடாம்பேட்டை விஷ்ணு ஆலயத்துக்குச் சென்றோம். கிருஷ்ணன் வேணுகோபாலனாக குழல் ஊதிக் கொண்டிருக்கிறான். திருப்புல்லாணி ஆலயம் போல இங்கும் ஸ்ரீராமபிரான் சயனத்திருக்கோலத்தில் இருக்கிறான். ஒரு குழந்தையைப் போல ஸ்ரீராமன் உறங்குவதாகத் தோன்றியது. நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம். 50 அடி உயரம் கொண்ட ஊஞ்சல் மண்டபம் ஆலயத்தின் எதிரில் அமைந்திருந்தது. அங்கே பெருமாளை சேவித்து விட்டு கோலியனூர் புறப்பட்டோம். 

திருநறுங்குன்றத்தில் சில நாட்களுக்கு முன்னால் சந்தித்த தம்பதி கோலியனூர் சமண ஆலயம் குறித்து கூறியிருந்தார்கள். அந்த ஆலயத்துக்குச் சென்றோம். ஆதிநாதர் முன் அமைதியாக அமர்ந்திருந்தோம். அந்த ஆலயத்தின் அர்ச்சகர் அருக நெறி எவ்விதம் அன்றாட வாழ்க்கைக்கு ஊன்றுகோலாக விளங்கக் கூடியது என்பதை விளக்கினார். அருகர் நிழலில் சில நாட்கள் தங்கியிருக்குமாறு வருமாறு அழைப்பு விடுத்தார். அவர் அவ்விதம் அழைத்தது பேருவகை அளித்தது. ஒரு சில வாரங்களில் வருவதாகக் கூறினேன். 

அங்கிருந்து திண்டிவனம் சென்று மேல்சித்தாமூர் என்ற ஊரில் உள்ள ‘’ஜின காஞ்சி மடம்’’ என்னும் மடத்துக்குச் சென்றோம். தமிழ்நாட்டின் முக்கியமான சமண மடம் ‘’ஜின காஞ்சி மடம்’’. அங்கே ஆதிநாதர் ஆலயமும் உள்ளது. அங்கே ‘’சமணப் பண்பாடு’’ என்ற நூலை அளித்தார்கள். அங்கிருந்து அருகில் சில கிலோ மீட்டரில் இருந்த ‘’விழுக்கம்’’ என்ற ஊருக்குச் சென்றோம். அங்கும் ஒரு சமண ஆலயம். 

மதியம் 2 மணி அளவில் புறப்பட்டோம். விக்கிரவாண்டியில் மதிய உணவு. நான்கு மணி அளவில் சிதம்பரம் வந்து சேர்ந்தோம். 

ஒரு பேருந்தைப் பிடித்து ஊர் வந்து சேர்ந்தேன். பேருந்தில் கூட்டம் பிதுங்கி வழிந்து கொண்டிருந்தது. அமர நல் இருக்கை ஒன்று எனக்கு வாய்த்தது. 

கட்டுமானப் பணியிடத்தின் மேஸ்திரிக்கு ஊர் வந்ததும் ஃபோன் செய்தேன். என்னை பிக் அப் செய்து கட்டுமானப் பணியிடத்துக்கு அழைத்துச் சென்றார். இன்று பணியிடத்தில் மூன்று பேர் தான் பணி புரிந்திருந்தனர். மேசன் ஒருவர் . பணியாளர் இருவர். ரூஃப் மட்டத்துக்கு மீதமிருந்த கட்டு வேலையை செய்து முடித்திருந்தனர். முன்னர் கட்டிய சுவர்களுக்கு தண்ணீர் பிடித்தனர். வேலை முடியும் வரை கட்டுமானப் பணியிடத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருந்தேன்.  ககன், புவன், மங்கள் , சநு வுக்கு பிஸ்கட் போட்டேன்.  மேசன் என்னை வீட்டில் டிராப் செய்து விட்டு சென்றார். 

தொழில் நிமித்தம் இரண்டு பேரை சந்திக்க வேண்டியிருந்தது. ஒருவர் உள்ளூர்வாசி. இன்னொருவர் ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் இருப்பவர். இருவரையும் சந்தித்தேன். வீடு திரும்ப இரவு 10 மணி ஆகியது. 

பயணத்தைக் காலையிலேயே துவக்கியதால் இத்தனை இடங்களுக்கும் சென்று விட்டு ஊர் திரும்பி மீண்டும் வெளியூரில் இருக்கும் ஒருவரை சந்திக்க முடிந்தது என எண்ணிக் கொண்டேன்.  

Wednesday, 6 September 2023

தனிப்பெருங்கருணை

 தனிப்பெருங்கருணை

---------------------------------------

மண்ணில் நிலை கொண்டுள்ளன கால்கள்
பாதத்தில் ஒட்டிக் கொள்கின்றன மண் துளிகள்
பெருந்தோள்களில் அமர்ந்து கொள்கிறது வானம்
முதற்பெரும் ஒலியில் மூழ்கியிருக்கிறான் அருகன்
தாகமும் பசியும் கொண்ட புல் ஒன்று 
மேகங்கள் அற்ற
துல்லியமான வானைத் தீராமல் பார்க்கிறது
நீரைப் பிரசவிக்க கணம் வாய்க்கிறது வானுக்கு
பொழிகிறது
புல்லை உயிர்ப்பிக்கும் மழை

Tuesday, 5 September 2023

நடுக்காவேரி

 நண்பன் கே.எஸ் ஐ சிதம்பரத்திலிருந்து ஊருக்கு காரில் வரச் சொன்னேன். நேற்று முந்தின தினம் தென்னாற்காடு மாவட்டத்தில் சுற்றியது போல இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றலாம் எனத் திட்டமிட்டேன். நேற்று முந்தின தினம் ஞாயிற்றுக்கிழமை. அன்று கட்டுமானப் பணியிடத்தில் விடுமுறை. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணி நடைபெறும். சென்ற வாரம் பணிகள் கடுமையாக இருந்ததால் அன்று விடுப்பு எடுத்துக் கொண்டோம். அதனைப் பயன்படுத்தி நான் அன்றைய தினத்தில் பயணத்தை வைத்துக் கொண்டேன். மறக்க முடியாத பயணமாக அது அமைந்தது. 

நேற்று நண்பனுக்கு மாநில அரசு அலுவலகம் ஒன்றில் சிறு பணி ஒன்று இருந்தது. கொஞ்ச நேரத்தில் முடிந்து விடும் எனக் கணித்திருந்தான். ஆனால் நேற்று காலை அரசு அலுவலகம் சென்றவன் மாலை 5 மணிக்குத்தான் பணி முடிந்து வீடு திரும்பினான். நான் நேற்று கட்டுமானப் பணியிடத்தில் இருந்தேன். 

இன்று காலை 9 மணிக்கு சிதம்பரத்திலிருந்து ஊருக்கு வருவதாகச் சொன்னான். காலை 9.15 மணி அளவில் கட்டுமானப் பணியிடத்துக்கு பணியாளர்கள் வருவார்கள் ; அவர்கள் வந்ததும் பணியைத் துவக்கி வைத்து விட்டு கொஞ்ச நேரம் இருந்து விட்டு பயணம் புறப்படலாம் என்பது என் எண்ணம். ‘’கொஞ்ச நேரம்’’ என்பது சிவில் என்ஜினியர்கள் கணக்கில் ஒரு மணி நேரத்திலிருந்து ஒரு மணி முப்பது நிமிடம் வரை. நண்பன் பொறுமையாகக் காத்திருந்தான். இன்று மூன்று பணியாளர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள். அவர்களிடம் மதியம் வந்து விடுவேன் என்று சொல்லி விட்டு புறப்பட்டேன். 20 சிமெண்ட் மூட்டைக்கு பணம் கொடுக்க வேண்டியிருந்தது ; பணியிடத்துக்கு அருகில் உள்ள சிமெண்ட் கடையில் பணம் கொடுத்து விட்டு கிளம்பினோம். 

நண்பன் பசி பொறுக்க மாட்டான். இருப்பினும் ஊருக்கு அருகில் ஐ.டி நிறுவன ஊழியர் வயலில் 14 மாதங்களுக்கு முன் நடப்பட்டு இப்போது 15 அடி உயரத்தில் இருக்கும் தேக்கு மரங்களைக் காணச் சென்றோம். நண்பன் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டான். பின்னர் மெயின் ரோட்டில் இருந்த இன்னொரு தேக்கு தோப்பையும் காட்டினேன். 

அங்கிருந்து ஆடுதுறை சென்றோம். அப்போது காலை 11 மணி ஆகி விட்டது. அங்கே இருந்த பழமையான ஹோட்டல் ஒன்றில் காலை உணவு உண்டோம். எங்கள் பயணத்தை எங்கள் நட்பின் பொழுதைக் கொண்டாடும் விதமாக முதலில் கோதுமை அல்வா ஆர்டர் செய்தோம். அந்த ஹோட்டலின் பூரி மசால் மிகவும் பிரபலம். அதனை ஆர்டர் செய்து உண்டோம். அதன் பின்னர் நெய் பொடி இட்லி சாப்பிட்டோம். வயிறு ‘’ஃபுல்’’ ஆனது. 

அங்கிருந்து தஞ்சாவூருக்கு அருகே இருக்கும் கிராமம் ஒன்றில் வசிக்கும் இலக்கிய நண்பர் ஒருவரைக் காணச் சென்றோம். அவர் வீட்டில் மாலை 4 வரை பேசிக் கொண்டிருந்தோம். நண்பர் கவிதை எழுதுபவர் என கே. எஸ் ஸிடம் சொல்லியிருந்தேன். நண்பரின் கவிதைகளை அவரிடமிருந்து பெற்று அவரிடம் தனது அபிப்ராயங்களை கே. எஸ் ஆர்வத்துடன் கூறிக் கொண்டிருந்தான். தொடர்ந்து எழுதுமாறு கூறினான். நண்பர் வீட்டிலேயே மதிய உணவுண்டோம். அவர் வீட்டில் யாரும் இல்லை ; ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். நண்பர் சுவையான பருப்பு சாம்பார் வைத்திருந்தார். கெட்டித் தயிர் இருந்தது. சாம்பார் சாதமும் தயிரை மோராக்கி மோர் சாதமும் சாப்பிட்டுக் கிளம்பினோம். 

கிளம்பும் கணம் வரை அடுத்து எங்கு செல்வது எனத் திட்டமிடவில்லை. அந்த கணத்தில் ‘’திருப்பூந்துருத்தி’’ செல்வது என முடிவெடுத்தோம். திருவையாறு அருகே உள்ள தலம் திருப்பூந்துருத்தி. இறைவனின் பெயர் புஷ்பவனேஸ்வரர். பெயருக்கு ஏற்றார் போல ஆலயம் பூந்தோட்டமாக உள்ளது. அந்த ஆலயத்தின் சூழ்நிலையும் அமைதியும் மனத்தையும் உணர்வையும் தொட்டது. அந்த ஆலயத்தின் ஊழியர்களிடம் ஆலயம் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர்களிடம் இன்னும் சில நாட்களில் நாள் முழுக்க ஆலயத்தில் இருக்கும் வகையில் வருகிறேன் என்று சொன்னேன். அங்கே நிறைய நேரம் இருக்க வேண்டும் என்று தோன்றியது. 

காரில் நடுக்காவேரி என்ற ஊரின் வழியாக திருக்காட்டுப்பள்ளி வந்து கல்லணை பூம்புகார் சாலையைப் பிடித்தோம். நடுக்காவேரி ஊரைக் கடக்கும் போது என் மனம் பொங்கி கண்கள் கலங்கி விட்டன. அத்தனை பசுமை நெல்வயல்களிலும் வாழைத் தோட்டங்களிலும். அன்னை காவேரியின் கருணையை முழுமையாகப் பருகும் ஊர்கள் நடுக்காவேரியும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களும். இன்னதென்று கூற இயலாத உணர்வால் என் கண்கள் கலங்கின. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் உடைந்து அழுதிருப்பேன். கல்லணை பூம்புகார் சாலை வந்ததும் மனம் வழமையான நிலைக்குத் திரும்பியது. பல முறை சென்று வந்து பழகிய சாலை என்பது காரணமாக இருக்கலாம். 

நண்பன் கே.எஸ் தமிழ்ச் சமூகவியல் சார்ந்து பல கேள்விகளை எழுப்பினான். என்னுடைய பார்வைக் கோணத்திலிருந்து எனது பதில்களைச் சொன்னேன். 

இரவு 9 மணி அளவில் ஊர் திரும்பி கட்டுமானப் பணியிடத்துக்கு வந்தோம் . இன்று நடந்த பணி என்ன என்று பார்த்தேன். நண்பனை சிதம்பரம் அனுப்பி விட்டு நான் பைக் எடுத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினேன். 

நாளை மாலை 4 மணி அளவில் சிதம்பரம் வருவதாகக் கூறினேன். தில்லை காளி அம்மன், நடராஜர், சிவபுரி, திருவேட்களம் ஆகிய சிதம்பரத்தைச் சுற்றியுள்ள ஆலயங்களுக்கு செல்வதாக முடிவெடுத்தோம். 

Monday, 4 September 2023

என்ன செய்திருக்கிறோம் நாம் ?

 ’’காவிரி போற்றுதும்’’ முன்னெடுத்த செயல்கள் எதிர்பார்த்த பலன்களைக் கொடுத்திருக்கிறதா என்ற கேள்வி அதன் அமைப்பாளராக என் மனத்தில் எழும். ஒரு கிராமத்தின் விவசாயக் குடும்பங்களின் வருவாயை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதே நம் விருப்பம். இப்போது நாம் செயல்புரியும் கிராமத்தில் சில விவசாயிகள் நம் ஆலோசனைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார்கள். மேலும் பலரை நம் பணிகளும் ஆலோசனைகளும் சென்றடைந்து அவர்கள் பலன் பெற வேண்டும் என்பதே நம் விருப்பம். 

14 மாதங்கள் முன்பு ஒரு விவசாயி தனது 3 ஏக்கர் நிலத்தில் நம் ஆலோசனையின் பேரில் 1000 தேக்கு மரக்கன்றுகளை நடவு செய்தார். இன்று அவை 15 அடி உயரத்தை எட்டியுள்ளன. சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளன. எந்த வளைவும் இன்றி பிசிறும் இன்றி நேராக வளர்ந்துள்ளன. அவ்வாறு அவை வளர்வதை கவனம் கொடுத்து உறுதி செய்தோம். இன்னும் 14 ஆண்டுகளில் ஒவ்வொரு மரமும் ரூ. 1.00.000 விலை போகும். இந்த விலை அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை. 

அந்த விவசாயி பயன் பெற்றது போல கிராமத்தின் எல்லா விவசாயிக்கும் பலன் கிடைக்க வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு ; விருப்பம். 

நேற்று நண்பன் கே. எஸ் உடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது எனக்கு ஒரு புதிய எண்ணிலிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் ஒரு ஐ.டி நிறுவனம் நடத்துகிறார். அவரது நிறுவனத்தில் 250 ஊழியர்கள் பணி புரிகிறார்கள். செயல் புரியும் கிராமத்தில் அவருக்கு சில ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் முழுமையாக தேக்கு பயிரிட வேண்டும் என்று கூறினார். நான் உடனிருந்து எல்லா பணிகளையும் செய்து கொடுக்கிறேன் என்று சொன்னேன். 

நம் மீது அவர் காட்டும் பிரியமும் மரியாதையும் மிகப் பெரியது. அந்த அன்பே மீண்டும் மீண்டும் மேலும் உத்வேகத்துடன் செயல் நோக்கி செல்வதற்கான ஆர்வத்தை அளிக்கிறது. 

என்ன செய்திருக்கிறோம் நாம் என்ற கேள்விக்கான விடையாக அமைகிறது. 

Sunday, 3 September 2023

திருத்தலங்கள் நான்கு

 எனக்கு கே.எஸ் என ஒரு நண்பன் இருக்கிறான். வட இந்தியாவில் பணி புரிகிறான். அலுவலகத்தில் அவனுக்கு 15 நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு சிதம்பரத்தில் உள்ள அவனது உறவுக்காரர் ஒருவரின் வீட்டுக்கு வந்திருக்கிறான். அவர்கள் வீட்டில் ஒரு கார் இருக்கிறது. அதனை எடுத்துக் கொண்டு பழைய தென்னாற்காடு மாவட்ட பகுதிகளைச் சுற்றி வருவோம் என்று சொன்னான். எங்காவது பயணம் செல்லலாம் என எவர் அழைத்தாலும் உடனே கிளம்பக் கூடியவன் நான். பயணம் செய்கையில் எனக்கு புதிதாக எண்ணங்கள் தோன்றும். புரியாத பிடிபடாத விஷயங்கள் புரியும் ; பிடிபடும். நூற்றுக்கணக்கான மனித முகங்களைக் காணும் போது உண்டாகும் மகிழ்ச்சி இணை கூற இயலாதது. 

இன்று காலை பேருந்தில் சிதம்பரம் சென்று நண்பனை அலைபேசியில் அழைத்தேன். பேருந்து நிலையம் வந்து நண்பன் அழைத்துச் சென்றான். நண்பரின் உறவினர் வீட்டில் காலைச் சிற்றுண்டி தயார் செய்து வைத்திருந்தார்கள். பூரியும் இட்லியும். கோதுமை அல்வா தயாரித்திருந்தார்கள். பிரியத்துடன் அவர்கள் அளித்த உணவை உண்டு விட்டு எங்கள் பயணத்தைத் துவங்கினோம். 

நண்பன் இப்போதுதான் கார் ஓட்டப் பழகியிருக்கிறான் என்றாலும் காரை மிகச் சிறப்பாகக் கையாள்கிறான். ஒருவர் வாகனத்தை எப்படி இயக்கக் கூடிய்வர் என்பது சில நூறு மீட்டர்கள் அவர் வாகனத்தை நகர்த்திச் செல்கையிலேயே தெரிந்து விடும். நண்பன் சிறந்த வாகன சாரதி என்பதைப் புரிந்து கொண்டேன். 

வண்டியை வடலூர் சத்திய ஞான சபைக்கு விடச் சொன்னேன். தினமும் காலை 11.30 மணியிலிருந்து 12 மணி வரை அங்கே ஜோதியை தரிசிக்க முடியும். மீண்டும் இரவு 7.30 மணியிலிருந்து 8 மணி வரை. நாங்கள் 11.30 மணிக்கு அங்கிருந்தோம். 

ஜோதி தரிசனம் கண்டோம். பாரதி ஜோதியை ‘’எழு பசும் பொற்சுடர்’’ என்கிறான். நம் உடலின் வெப்பமாக விளங்கும் தீ. நாம் உண்ணும் உணவை உடலாக மாற்றும் தீ. நம் சுவாசத்தில் உயிராக உயிர்க்கும் தீ. ஜோதி என்பது நம் உயிரே தான். எல்லா உயிரின் எல்லாவற்றின் சிறு வடிவே ஜோதி. இறைமை அருளின் வடிவம் என ஜோதியை உணர்ந்தார் இராமலிங்க அடிகள். சிறு தீச்சுடரில் ஒளிரும் தெய்வ சைதன்யத்தை உணரும் படி ஒட்டு மொத்த மானுடத்தின் முன் கூறினார் இராமலிங்க அடிகள். நூறு ஆண்டுகளாக சுடர்ந்து கொண்டிருக்கும் வள்ளலார் ஏற்றிய தீபத்தின் முன் அகம் கரைய நின்றோம். முப்பது நிமிடங்களுக்கு மேலாக ஜோதியை வழிபட்டோம். அருட்பிரசாதமாக வெல்லம் தந்தார்கள். 

நாங்கள் அடுத்து சென்ற இடம் உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமம். அங்கே பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் திருக்கோவில் உள்ளது. அங்கு சென்று சில நிமிடங்கள் தியானத்தில் அமர்ந்திருந்தோம். அங்கிருக்கும் நூலகத்தில் சுவாமி விவேகானந்தர் நூல்கள் சிலவற்றை வாங்கினோம். ஆஸ்ரமத்தில் மதிய உணவருந்தச் சொன்னார்கள். உணவருந்தினோம். அங்கிருந்த துறவியரை வணங்கி விட்டு புறப்பட்டோம். 

உளுந்தூர்பேட்டையிலிருந்து 15 கி.மீ தொலைவில் திருநறுங்குன்றம் என்ற சமணத்தலம் உள்ளது. பகவான் பார்ஸ்வநாதர் எழுந்தருளியிருக்கும் திருத்தலம். ஒரு குகையில் புடைப்புச் சிற்பமாக பகவான் இருக்கிறார். ஆலய நடை மாலை 4 மணிக்குத் திறந்தது. வழக்கமாக காலை 6 மணியிலிருந்து மதியம் 12 மணி வரைதான் ஆலயம் திறந்திருக்கும் என்றும் இன்று அரிதாக மாலையில் திறந்துள்ளது என்று அங்கே இருந்த சிப்பந்திகள் கூறினார்கள். அந்த சமயத்தில் நெய்வேலியிருந்து ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியரும் அவரது மனைவியும் வந்திருந்தார்கள். நண்பன் அவர்களிடம் சமணம் குறித்து ஆர்வமாக உரையாடிக் கொண்டிருந்தான். அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. எங்களுக்கும் மகிழ்ச்சி. பார்ஸ்வநாதர் முன் சில நிமிடங்கள் தியானத்தில் அமர்ந்தோம். 

திருநறுங்குன்றத்திலிருந்து மாலை 6.15க்கு கிளம்பினோம். அங்கிருந்து விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம் வந்தோம். தமிழகத்தின் பேராலயங்களில் ஒன்று விருத்தாசலம். பெரிய பெரிய கோபுரங்களும் மண்டபங்களும் நிறைந்திருந்த ஆலயத்தின் இறைவன் முன் சில நிமிடங்கள் அமர்ந்தோம். 

இரவு 9 மணி அளவில் சிதம்பரம் வந்தோம். 

நான் அங்கிருந்து பயணித்து 10 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். 

நாளையும் நாளை மறுநாளும் இதைப்போல் வேறு வேறு இடங்களுக்குப் பயணிப்போம் என்று கே.எஸ் கூறினான். 

Friday, 1 September 2023

அற்புதம்

 மேற்கு வானில் சூரியன். கிழக்கே மழை மேகங்கள். சிறு மென்காற்று மேகங்களை குளிரச் செய்து மழையாக்குகிறது. 

மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறேன். சற்றே பெரிய துளிகளாக மழைத்தாரைகள் வானிலிருந்து கீழிறங்குகின்றன. ஒவ்வொரு துளியும் வானில் மிதந்து கொண்டிருப்பதைக் கண்ணால் காண முடிகிறது. ஆம். ஒவ்வொரு துளியையும். 

பொழுதைப் பரவசமாக்கிக் கொண்டிருந்தது காட்சி. 

அற்புதம் என்பது இதுதான் என அக்கணம் உணர்ந்தேன். 

நாம் அடைத்து வைத்திருக்கும் எத்தனையோ விஷயங்களை மனதிலிருந்து அகற்றுவோம் எனில் விரும்பியோ விரும்பாமலோ சுமக்கும் பாரங்களை நீக்கிக் கொள்வோம் எனில் இந்த வாழ்வின் ஒவ்வொரு கணமும் அற்புதமே.