Sunday, 12 November 2023
தீபாவளி தரிசனம்
காவிரி போற்றுதும் - புதிய செயல்முறைகள்
Friday, 10 November 2023
ஜீவன்
இன்று காலை 10 மணிக்கு பணியிடத்துக்கு சென்றிருந்தேன். கான்கிரீட்டில் நீர் நிறுத்த நேற்று மாலையே ‘’பாத்தி கலவை’’ அமைக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை நல்ல மழை எனவே கான்கிரீட்டின் மேல் நீர் தேங்கி நின்றது வசதியாகிப் போனது ; தனியாக தண்ணீர் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை.
வீட்டிலிருந்து எனக்கு அலைபேசி அழைப்பு வந்தது. எனது நண்பர் ஒருவர் மூத்த குடிமகன். பணி ஓய்வு பெற்று பத்து ஆண்டு ஆகிறது. அவரது மனைவி நெஞ்சுவலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி என்னிடம் தெரிவிக்கப்பட்டது. உடன் மருத்துவமனைக்கு விரைந்தேன். நண்பரைச் சந்தித்தேன். அரசு மருத்துவமனையில் படிவங்கள் சிலவற்றை நிரப்பிக் கொண்டிருந்தார். ஆதார் அட்டையின் நகலையும் ரேஷன் கார்டு நகலையும் அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தனர். நான் சென்று நண்பரின் மனைவியைப் பார்த்தேன். அவர் மயக்க நிலையில் இருந்தார். அவர் வீட்டில் பணி புரியும் பெண்மணி அவருடன் இருந்தார். எனது நண்பர் ஒருவர் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிகிறார். அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டேன். விபரம் சொன்னேன். அவர் உடன் மருத்துவமனையின் எமர்ஜென்சி பிரிவுக்கு பொறுப்பான மருத்துவரைத் தொடர்பு கொண்டு நோயாளியின் உடல்நிலை குறித்து விசாரித்திருக்கிறார். நோயாளிக்கு ஏற்பட்டிருப்பது ‘’மாசிவ் ஹார்ட் அட்டாக்’’ . இதய அடைப்பை நீக்கும் மருந்து தரப்பட்டுள்ளது. எவ்வளவு விரைவில் தஞ்சாவூர் செல்ல இயலுமோ அவ்வளவு விரைவில் செல்வது நல்லது. இது நண்பரான மருத்துவர் என்னிடம் சொன்ன செய்தி. நான் விபரத்தைப் புரிந்து கொண்டு நண்பரிடம் நாம் ஒரு ஆம்புலன்ஸில் புறப்படுவோம் என்று சொன்னேன். நண்பர் சென்னை செல்லலாம் என விரும்பினார். நான் அவ்வாறே செய்வோம் என்று சொன்னேன். ஒரு இ.சி.ஜி எடுத்தார்கள். அது நார்மலாக இருந்தது. எனவே சென்னை செல்ல இயலும் என புரிந்து கொண்டேன். ஆம்புலன்ஸில் புறப்பட்டோம். இந்த இ.சி.ஜி சென்னையில் உள்ள மருத்துவர் ஒருவருக்கு ஒளிப்படமாக அனுப்பப்பட்டது. அவர் அதனைப் பார்த்து விட்டு சென்னை வரை வர வேண்டாம் ; புதுச்சேரியில் ஒரு மருத்துவமனையின் பெயரைச் சொல்லி அங்கே அட்மிட் ஆகச் சொன்னார். பயணத்தின் வழி புதுச்சேரி என்பதால் எங்கள் திட்டத்தை சென்னை என்பதற்கு பதில் புதுச்சேரி என அமைத்துக் கொண்டோம்.
ஆம்புலன்ஸ் டிரைவர் மிகத் திறமையாக வாகனத்தை இயக்கி எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் கொண்டு சேர்த்தார். நாலைந்து மருத்துவர்களைக் கொண்ட குழு ஒன்று மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க காத்திருந்தது. சென்னை மருத்துவர் ஃபோன் மூலம் சொல்லியிருக்கிறார் என்பதால் முன்னேற்பாடுடன் இருந்தனர். மருத்துவமனையை அடைந்ததும் ஐ.சி.யு வில் அட்மிட் செய்தனர்.
நண்பரின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். ஆம்புலன்ஸ் ஊருக்குப் புறப்பட்டது. அதில் நான் ஊர் திரும்பினேன். காலை 10 மணியிலிருந்து அலைச்சல். மாலை 6 மணிக்கு வீடு திரும்பினேன்.
நெருக்கடியான தருணம் ஒன்றில் நண்பருடன் உடனிருந்தது நிறைவை அளித்தது. நண்பரின் மனைவியின் உடல்நிலை மேம்பட்டது மகிழ்ச்சியைத் தந்தது.
Thursday, 9 November 2023
முதல் தளம் - ரூஃப் கான்கிரீட் ( நகைச்சுவைக் கட்டுரை)
சட்ட விரோத மரம் வெட்டுதல் - பள்ளி வளாகம் - மேலதிக விபரம் அளித்து மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்
Wednesday, 8 November 2023
ஸ்ரீ ரமண விஜயம் - சுவாமி சுத்தானந்த பாரதியார்
பாரதம் ஞானபூமி. மானுட வெள்ளத்தில் அபூர்வத் துமிகளாக எழுந்து ஞானவானில் சூரியன்களாக ஒளிவிடும் ஞானிகள் உலகம் முழுமைக்குமான ஞானத்தை அளித்த தேசம். எதை அறிவதன் மூலம் யாவும் அறியப்படுகிறதோ அதனை முற்றறிந்த ஞானிகள் தங்கள் எல்லையில்லாப் பெருங்கருணையின் விளைவாக சாமானிய மனிதர்களை நோக்கிப் பேசினார்கள் ; வழிகாட்டினார்கள். ஞானிகள் அறிந்தது பெருமலைகள் என அகன்றும் பரந்தும் உயர்ந்தும் இருப்பது எனில் சாமானியர்களின் புரிதல்கள் மீச்சிறு மண் துகளென சிறியவை. எனினும் ஞானிகள் சாமானியர்களிடம் அவர்களின் சாமானிய விசனங்களை நோக்கி பேசினார்கள். மண்ணைப் பற்றியிருக்கும் மனிதரிடம் எல்லையில்லா வெளி குறித்து பேசினார்கள். எல்லையின்மையுடன் இயைந்து இருப்பதற்கான மார்க்கங்களைக் காட்டினார்கள்.
நூறு கோடி மனிதர்கள் உளர் எனில் அவர்களில் ஒருவரே முழுமையை உணர்ந்த ஞானியாகிறார். அவ்வாறெனில் நூறு கோடி மனிதர்களுக்கு ஞானம் கிட்டாது என்பது அதன் அர்த்தமா என யோசிப்போமெனில் ஒரு ஞானிக்கு சாத்தியமானது நூறு கோடி மனிதர்களுக்கும் சாத்தியம் என்பதே அதன் உள்ளுறை என்பதை உணர முடியும்.
கங்கை பிரவாகம் எடுத்து ஓடுகிறது. பனிமலைகளில் தொட்டால் உடலை உறைய வைக்கும் பனிநீராய் பெருகி தம் வேகத்தால் பாறைகளை உருட்டி பல கிளை நதிகளை இணைத்துக் கொண்டு நூறு நூறு காதங்களுக்குப் பயணிக்கிறது. கங்கையில் அந்தி வணக்கம் செய்பவர்கள் உண்டு. மூழ்கி எழுபவர்கள் உண்டு. கங்கை நீரைக் கொண்டு நிலம் திருத்தி விவசாயம் செய்பவர்கள் உண்டு. படகின் மூலம் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு செல்பவர்கள் உண்டு. கங்கை பிரவாகிக்கிறது ; பிரவாகிப்பது அதன் தன்னியல்பு. பிரவாகித்துப் பெருகுவது மூலம் பல்வேறு சாத்தியங்களை உருவாக்கித் தருவது அதன் விளைவு. ஞானிகளும் அவ்விதமானவர்களே. ஞானிகளின் கருணையும் அன்புமே சமூகத்தின் நியதிகளாக அறங்களாக மேன்மைகளாக விளங்குகிறது. சூரியனின் நுண் வடிவே தீபம். சிறிய தீபம் வீடொன்றின் இருள் நீக்குகிறது. வீட்டுக்கு உரியவன் வீட்டுக்குள் நுண் சூர்யன் ஒன்றைப் பதிட்டை செய்கிறான். தீபம் ஏற்றுதலை நுண் சூரியப் பதிட்டை என உணர்ந்து கொண்டு செய்பவனும் உண்டு. அதை அவ்வாறு உணராமல் செய்பவனும் உண்டு. தீபம் இருவருக்கும் ஒரே ஒளியையே அளிக்கும். ஞானிகளின் ஞானமும் அவ்வாறானதே.
நம் தேசம் மானுடனாய்ப் பிறந்த அனைவருமே நிறைநிலை எய்த வேண்டும் என்னும் இலட்சிய நிலை நோக்கி மானுடத்தை இட்டுச் செல்வதை தனது இயங்குமுறையாகக் கொண்டது. உலகம் என்பது மானுடர் நிறைநிலை எய்துவதற்கான செயற்களம் என வகுத்தளித்துள்ளது. நாம் கால் வைத்து நடக்கும் நம் மண் ஞானம் தேடிப் பயணித்த ஞானிகளின் காலடிச் சுவடுகளால் ஆனது.
சாமானிய மானுடர்களின் அகம் சமூக அடையாளங்களுடன் தன்னைப் பிணைத்துக் கொள்கிறது. இன்ன குடும்பத்தைச் சேர்ந்தவன், இன்ன மொழி பேசுபவன், இன்ன பிரதேசத்தைச் சேர்ந்தவன், இன்ன உத்யோகம் பார்ப்பவன் என இவ்விதமான அடையாளங்களுக்கே தங்கள் முழு வாழ்வையும் அளித்து விட நேர்கிறது. சாமானியர்கள் இந்த அடையாளங்களின் சிறையில் இருக்கிறோம். சிறையில் இருக்கிறோம் என்பதையே அறியாத நிலையில் இருக்கிறோம். இந்த அடையாளங்களை நீக்கிக் கொள்கையில் விடுதலை என்பது சாத்தியமாகிறது.
ஆசிரியனின் வாழ்வை மாணவன் எழுதுவது என்பது நம் நாட்டின் மரபு. மாணவனின் ஞானப் பாதையில் அது முக்கியமான சேருமிடங்களில் ஒன்றாக அமைகிறது.
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி ஞானசூரியன். அவருடைய அருளின் கருணையின் சிறு துளி கூட எந்த எளிய உயிருக்கும் வீடுபேறு நல்கக் கூடியது. அத்தகைய கருணா மூர்த்தியின் சரிதத்தை அவரது மாணவரான சுவாமி சுத்தானந்த பாரதியார் ‘’ஸ்ரீ ரமண விஜயம்’’ என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி தனது ஆசானின் புகழை வாழ்வை சிறப்பை எழுதியிருக்கிறார் சுவாமி சுத்தானந்த பாரதியார்.
ஞான ஆசிரியரின் வாழ்வைக் கேட்பவர்கள் அதில் சிறு கல்லாக புல்லாக பொருளாக எளிய எறும்பாகக் கூட அந்த மாகதையின் உள்ளே தங்களை உணர வாய்ப்பு உண்டு என்கிறது நமது மரபு. வாசிக்கும் எவரையும் அவ்விதம் உணர வைக்கும் நூல் சுவாமி சுத்தானந்த பாரதியாரின் ‘’ஸ்ரீ ரமண விஜயம்’’.
ஸ்ரீ ரமண விஜயம் , ஆசிரியர் : சுவாமி சுத்தானந்த பாரதியார் பதிப்பகம் ; ஸ்ரீரமணாஸ்ரமம் , திருவண்ணாமலை
Monday, 6 November 2023
சென்னைப் பயணம் ( நகைச்சுவைக் கட்டுரை)
அமைப்பாளருக்கு ஒரு நண்பர். அவர் இரவுலாவி ( நாக்டிரனல்). அதாவது அவர் முழு இரவும் தூங்காமல் விழித்திருப்பார். காலை 6.30க்கு உறங்கத் தொடங்குவார். மதியம் 1 மணி அளவில் விழிப்பார். மதியம் எழுந்ததும் உணவு அருந்துவார். காலை நேரம் தூங்கி விடுவதால் காலை உணவு இல்லை. நேரடியாக மதிய உணவு. பின்னர் 2 மணி அளவில் மீண்டும் உறக்கம். மாலை 5 மணிக்கு எழுவார். ஸ்னானம் முடித்து தயாராவார். முழு இரவும் விழித்திருப்பார்.நண்பர் சங்கீதப் பிரியர். எனவே இரவு முழுதும் இசை கேட்கும் வழக்கம் உண்டு. பல வருடமாக இவ்விதமாகவே பழகி விட்டார். பகலில் இயங்க மாட்டார் என்றில்லை ; பகலிலும் இயங்குவார் ; அது ஒரு விதிவிலக்கு மட்டுமே. அவர் உறங்கும் நேரம் அவ்வப்போது சற்று மாறுபடும். காலை 6.30 என்பது சமயத்தில் காலை 5.30 என இருக்கும் அல்லது காலை 4.30 என இருக்கும். அதிகாலை 4 மணிக்கு முன்னால் அவர் எப்போதும் உறங்கியது இல்லை.
அமைப்பாளருக்கு இரவு 9 மணி ஆனாலே தூக்கம் கண்ணைச் சொக்கும். இருப்பினும் அமைப்பாளரும் இரவுலாவியும் நண்பர்கள்.
இரவுலாவிக்கு ஒரு பூர்வீக நிலம் இருக்கிறது. நூறு வருடம் இரவுலாவியின் குடும்பத்துக்கு சொந்தமாக உள்ள இடம். அந்த இடத்தின் ஆவணங்கள் 100 ஆண்டுகள் தொன்மையானவை என்பதால் அந்த இடத்தின் மூல பத்திரம் தேவைப்படுகிறது. உள்ளூர் பதிவு அலுவலகத்தில் 75 ஆண்டுகள் ஆவணம் மட்டுமே உள்ளது. அதற்கு முன் உள்ள ஆவணங்களை எவ்விதம் பெறுவது என இரவுலாவி முயன்று வருகிறார். அமைப்பாளரின் நண்பர் ஒருவர் இவ்விஷயத்தில் உதவக் கூடும் என அவரிடம் இரவுலாவியை அழைத்துச் செல்கிறார் அமைப்பாளர்.
இரவுலாவி அமைப்பாளரிடம் கேட்டார். ‘’பிரபு ! தீபாவளி முடிஞ்சதும் சென்னை போவோமா?’’
அமைப்பாளர் திடுக்கிட்டு ‘’தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு. அதுக்குல்ல எந்த ராஜா எந்த பட்டணமோ. நாம உடனே கிளம்புவோம்’’
‘’மோட் ஆஃப் டிரான்ஸ்போர்ட் என்ன?’’ இரவுலாவி கேட்டார்.
‘’காலைல விழுப்புரம் பேசஞ்சர் இருக்கு. காலை 6 மணி டைம். 9.10க்கு விழுப்புரம் போயிடும். 9.30க்கு விழுப்புரத்தை பல்லவன் பிடிச்சோம்னா 12.10க்கு சென்னை எக்மோர்’’ அமைப்பாளர் திட்டத்தைச் சொன்னார்.
‘’திருச்செந்தூர் சென்னை காலைல 5 மணிக்கு இருக்கே’’
‘’அதுல ரிசர்வேஷன் பண்ணனும். அன் - ரி ல போக முடியாது; ஒரே கூட்டமா இருக்கும்’’
‘’அன் - ரி யா ? அப்படின்னா என்ன?’’
‘’அன் ரிசர்வேஷனோட ஷாட் ஃபார்ம்’’
‘’சரி ! அப்ப பல்லவனை பிடிச்சுடுவோம்’’
‘’நம்ம டிஸ்கஷன் ஒரு மணி நேரத்துல முடிஞ்சிடும். அதுக்கப்புறம் லஞ்ச் முடிக்கறோம். நான் இன்னொரு ஃபிரண்டை மீட் பண்ணனும். அதுக்கு ஒரு மணி நேரம் ஆகும்’’
இரவுலாவி ‘’நானும் என்னோட ஃபிரண்டு ஒருத்தரை மீட் பண்ணனும்’’
’’சாயந்திரம் கோயம்பேடு வரோம். ஃபர்ஸ்ட் பஸ்ஸை பிடிச்சு ஊர் வந்து சேர்ரோம்’’
சென்னை வரை பயணித்த அலுப்பு இந்த திட்டமிடுதலிலேயே அமைப்பாளருக்கும் இரவுலாவிக்கும் ஏற்பட்டு விட்டது.
அமைப்பாளர் காலை 4 மணிக்கு அலாரம் வைத்து விட்டு அலைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு உறங்கத் தயாரானார்.
இரவுலாவி இன்றைய இரவும் தூக்கம் வராது ; நாளை பகலிலும் தூக்கம் வராது ; நாளை இரவும் தூக்கம் வராது. தூக்கமே இல்லாமல் எப்படி 36 மணி நேரம் இருப்பது என யோசித்து இசை கேட்கத் துவங்கினார்.
Saturday, 4 November 2023
பள்ளி வளாகம் - சட்ட விரோத மரம் வெட்டுதல் - மாவட்ட ஆட்சியர் அலுவலக பதில்
வீட்டுக்கு வந்து இது குறித்த ஒரு புகார் மனுவைத் தயாரித்து அனுப்பினேன். அதன் மொழிபெயர்ப்பைக் கீழே அளித்துள்ளேன். தமிழகத்தில் , அரசு அலுவலகங்களில் ஆங்கிலத்தில் அனுப்பப்படும் புகார் மனுக்கள் சற்று மேலதிக கவனத்துடன் அணுகப்படுகின்றன என்பது ஒரு நடைமுறை உண்மை. நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்படலாம் என்னும் சாத்தியக்கூறு அந்த மேலதிக கவனத்தை உருவாக்குகிறது.
*******
அனுப்புநர்
&&&&&&
பெறுநர்
1. மாவட்ட ஆட்சியர்
2. வருவாய் கோட்டாட்சியர்
3. வட்டாட்சியர்
4. மாவட்டக் கல்வி அதிகாரி
ஐயா,
பொருள் : சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் குறித்த புகார்
பார்வை : ஊராட்சி ஒன்றியப் பள்ளி, &&&&& கிராமம், 14.10.2023
14.10.2023 அன்று , 11 மணி அளவில், மயிலாடுதுறை மாவட்டம், &&&&&& வட்டம், &&&&&& கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் இருந்த மரம் தோராயமாக 7 நபர்களால் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தது. இரும்பு ஆயுதங்கள், இரும்பு உபகரணங்கள், கட்டிங் மெஷின் மற்றும் டிராக்டர் ஆகியவை அவர்களால் மரம் வெட்ட பயன்படுத்தப்பட்டன. மரத்தின் கிளைகளை இழுக்க டிராக்டர் பயன்பட்டது. இந்த காட்சியை நான் அப்பகுதியைக் கடந்த போது கண்டேன்.
அதிர்ச்சியடைந்து நடந்த சம்பவத்தைக் குறித்து கூற வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்றேன். அங்கிருந்த ஊழியர்களிடம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் செயல் குறித்து கூறி அதனைத் தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன். அங்கிருந்த ஊழியர்கள் வருவாய் ஆய்வாளரை அலைபேசியில் அழைத்து விஷயத்தைக் கூறி மரம் வெட்டுதலை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கையை உடன் மேற்கொள்ளுமாறு கூறினர்.
மேற்படி பள்ளி வளாகத்தில் மரம் வெட்ட வருவாய்த்துறையிடம் உரிய அனுமதி பெறப்பட்டதா என்பதை விசாரித்து அறியுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
அவ்வாறு அனுமதி பெறப்படவில்லையெனில் அங்கே மரம் வெட்டப்பட்டது ஒரு கிரிமினல் குற்றம் ஆகும். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், மரம் வெட்டியவர்கள், டிராக்டர் ஓட்டுநர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாவர். சட்டபூர்வமான நடவடிக்கை அவர்கள் மேல் மேற்கொள்ளப்பட வேண்டும்.
முதன்மையாக , கள்ளத்தனமாக மரம் வெட்டுதலுக்கு அளிக்கப்படும் ‘’சி’’ படிவம் உரிய விதத்தில் அளிக்கப்பட வேண்டும். உச்சபட்சமான அபராதம் விதிக்கப்பட வேண்டும். மரம் வெட்டுதலில் ஈடுபடுத்தப்பட்ட டிராக்டர் வருவாய்த்துறையால் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
இந்த மனுவின் மூலம், நிகழ்ந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளுமாறும் குற்றம் இழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் வருவாய்த்துறையை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
தங்கள் உண்மையுள்ள,
*****
இடம் :
நாள் : 14.10.2023
பெரும் திருவிழா
தமிழ் சமூகத்தில் தீபாவளி என்பது மிகப் பெரும் திருவிழா. ஐப்பசி அமாவாசை அன்று தீபாவளி தினம். ஒரு மாதம் முன்பாக புரட்டாசி அமாவாசையில் தீபாவள் விற்பனை தொடங்கி விடும். எங்கள் வட்டாரத்தில் ஒரு லட்சம் குடும்பங்கள் இருக்கிறது எனக் கொண்டால் குடும்பத்துக்கு நான்கிலிருந்து ஐந்து பேர் என ஐந்து லட்சம் பேருக்கு புத்தாடைகள் வாங்கப்பட வேண்டும். சாலையோரக் கடைகளிலிருந்து பெரும் கடைகள் வரை விதவிதமான ஆடைகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். வெளியூரில் இருக்கும் உடன் பிறந்த சகோதரிகளுக்கு தீபாவளி சீர் செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் குடும்பத்துக்கும் ஆடை எடுத்துக் கொண்டு இனிப்புகள் , பழங்கள் , தாம்பூலம் ஆகியவை வாங்கிக் கொண்டு செல்லும் சகோதரர்கள் தீபாவளி வணிகத்தின் முக்கியமான நுகர்வோர். கடைவீதிகளில் பலவிதமான உணவுப்பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. நெல்லிக்காய், பனங்கிழக்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவை குவிக்கப்பட்டுள்ளன. கையில் பணத்துடன் கடைவீதி வருபவர்கள் கண்டதும் வாங்குவார்கள் என.
தீபாவளி முடிந்து 15 நாளில் திருக்கார்த்திகை. அதன் பின் ஒரு மாதம் ஒன்றரை மாதம் கழித்து தைப்பொங்கல். ஓரிரு மாதங்களில் சித்திரைப் புத்தாண்டு.