Tuesday, 13 August 2024
அட்மிஷன் ( நகைச்சுவைக் கட்டுரை)
Sunday, 11 August 2024
கவுன்சிலிங் ( நகைச்சுவைக் கட்டுரை)
அமைப்பாளரின் நண்பர் ஒருவர் அண்டை கிராமத்து விவசாயி. விவசாயியின் மகன் இந்த ஆண்டு 12ம் வகுப்பு நிறைவு செய்துள்ளான். அவனுடைய என்ஜினியரிங் அட்மிஷன் தொடர்பாக இணையத்தில் விண்ணப்பித்தல், கல்லூரியைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவை தொடர்பாக உதவிடுமாறு விவசாயி கேட்டுக் கொண்டார்.
அமைப்பாளர் பொறியியல் கல்வி முடித்து 21 ஆண்டுகள் ஆகிறது. கவுன்சிலிங் முறை எத்தனையோ மாற்றம் கண்டு விட்டது. அமைப்பாளர் மாணவனை தஞ்சாவூர் சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பி.டெக் அப்ளை செய்யச் சொன்னார். மாணவனும் செய்தான். முதல் பட்டியலில் பெயர் வரவில்லை. இரண்டாம் பட்டியலில் பெயர் வந்தது. ஆனால் மெக்கானிக்கல் என்ஜினியரிங் கிடைத்தது. மாணவன் மெக்கானிக்கல் வேண்டாம் என்று கூறி விட்டான்.
அண்ணா யுனிவர்சிட்டி கவுன்சிலிங்கில் இரண்டாம் பட்டியலில் முதல் மார்க் விவசாயியின் மாணவனுடையது. 200க்கு 179.5. இந்த விபரத்துடன் நேற்று அமைப்பாளர் வீட்டுக்கு வந்தான் மாணவன். அவனுக்கு சாய்ராம் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர வேண்டும் என்பது விருப்பம். வேறு சில கல்லூரிகளின் பெயர்களையும் விருப்பப் பட்டியலில் அளிக்க வேண்டும்.
25 ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டிருந்த பொறியியல் கல்லூரிகளின் பெயர்களை பட்டியலில் இருவரும் தேடிக் கொண்டிருந்தனர். ஆயிரக்கணக்கான கல்லூரிகள் இருக்கின்றன. தேடல் மட்டும் நடக்கிறதே தவிர முடிவு வந்த பாடில்லை. அமைப்பாளர் தன் வழியில் ஒரு முடிவை எட்டுவது என்று முடிவு செய்தார்.
‘’தம்பி ! செகண்ட் லிஸ்ட்ல உன் மார்க் ஃபர்ஸ்ட் இருக்குன்னு சொல்றல்ல. ஒரே மார்க் இருந்தாலும் பல பேர் அதே மார்க் இருப்பாங்க. அதுல நீ எத்தனையாவது இடத்துல இருக்கன்னு உனக்குத் தெரியுமா?’’
‘’335வது இடத்துல’’
’’பேக்வர்டு கம்யூனிட்டி லிஸ்ட்ல நீ எத்தனையாவது ரேங்க்ல இருக்க?’’
‘’185 வது இடத்துல’’
’’நீ எந்த காலேஜ்ல படிக்கலாம்னு நினைக்கற?’’
‘’சாய்ராம், சாய்ராம் அட்டானமஸ், வேலம்மாள்’’
‘’இந்த காலேஜ்ல என்னென்ன கோர்ஸ் கிடைச்சா படிப்ப?’’
‘’கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், சைபர் செக்யூரிட்டி, ஐ.டி, இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்’’
மேற்படி மூன்று கல்லூரிகளிலும் மேற்படி பாடங்களில் எத்தனை சீட் இருக்கிறது என்று கணக்கு செய்யச் சொன்னார் அமைப்பாளர். மொத்தம் 190 சீட் இருந்தது.
‘’தம்பி ! நீ சொன்ன 3 காலேஜ்ல ஏதாவது ஒரு காலேஜ்ல நீ சொன்ன ஏதாவது ஒரு கோர்ஸ் கிடைச்சுடும் தம்பி. மொத்தம் 190 சீட் இருக்கு. நீ 185வது இடத்துல இருக்க. முதல்ல ஓ.சி லிஸ்ட் ஃபில்லப் ஆகும். நாம அதை கணக்குல சேக்கல. அது உன் பாஸிபிலிட்டியை இன்னும் கொஞ்சம் கூட்டும். அதனால இந்த மூணுல ஒன்னு கன்ஃபார்ம்’’
மாணவன் திரும்ப மறுநாள் வருவதாகக் கூறி விட்டு சென்றான்.
யாரிடமாவது விசாரித்து இன்னும் நாலு கல்லூரியை விருப்பப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நினைத்தார் அமைப்பாளர்.
Saturday, 10 August 2024
அமிர்தம் - தி.ஜானகிராமன்
Wednesday, 7 August 2024
திருநாங்கூர் திவ்ய தேசங்கள்
வைணவத்தில், ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த ஆலயங்களை திவ்ய தேசங்கள் என்று குறிப்பிடுவர். மொத்த வைணவ திவ்ய தேசங்கள் 108. அவற்றில் 106 பூலோகத்தில் உள்ளன. வைகுண்டம், பரமபதம் ஆகிய இரண்டும் விண்ணுலகில் உள்ளன. பூலோகத்தில் உள்ள 106 திவ்ய தேசங்கள் சோழ தேசத்து திவ்ய தேசங்கள் (40) , நடு நாட்டு திவ்ய தேசங்கள் (2), பாண்டிய நாட்டு திவ்ய தேசங்கள் ( 18), மலை நாட்டு திவ்ய தேசங்கள் (13), தொண்டை நாட்டு திவ்ய தேசங்கள் (22), வட நாட்டு திவ்ய தேசங்கள் (11) என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன. சோழ நாட்டு திவ்ய தேசங்கள் 40ல் 11 திவ்ய தேசங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நாங்கூர் என்ற ஊரைச் சுற்றி அமைந்துள்ளன. நாங்கூரை 11 திவ்ய தேசங்களின் தலம் என்று சொல்வதைப் போல அதன் மிக அருகில் அமைந்திருக்கும் காழிச் சீராம விண்ணகரத்தையும் தலைச்சங்க நாண் மதியத்தையும் சேர்த்து 13 திவ்ய தேசங்கள் என்றும் குறிப்பிடுவது உண்டு.
சைவத்தில் தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர் எனக் குறிப்பிடப்படுவது உண்டு. அதே போல , வைணவத்தில் நாங்கூர் நாலாயிரம் என ஒரு சொல் உண்டு. அதாவது நாங்கூரில் நாலாயிரம் அந்தணக் குடிகள் இருந்ததாக அதன் பொருள். இதிலிருந்து வைணவத்தில் நாங்கூர் ஒரு முக்கிய இடம் வகித்ததை அறிய முடியும். வைணவ வரலாற்றில் நாங்கூர் ஒரு முக்கிய இடம் வகித்திருக்கிறது. வைணவத்தின் முக்கியமான பெரியவரான திருமங்கை ஆழ்வார் அவதரித்த தலமும் நாங்கூருக்கு மிக அருகில் உள்ளது.
நாங்கூரில் நான்கு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் 11 ஆலயங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆலயமும் ஆலயம், அதனைச் சுற்றி உள்ள வீதிகள், திருக்குளம், சிறு கோபுரங்கள், பிரகாரம் ஆகியவற்றைக் கொண்டவை. பெருமாள் நின்ற திருக்கோலத்திலும் அமர்ந்த திருக்கோலத்திலும் சயனத் திருக்கோலத்திலும் சேவை சாதிக்கும் ஆலயங்கள். இந்த 11 ஆலயங்களில் ஒரு ஆலயம் பத்ரிநாத் ஆலயத்துக்கு சமமானது என்பது நம்பிக்கை. ஒவ்வொரு ஆலயமாக காலையில் சேவிக்கத் தொடங்கினால் மொத்த 11 ஆலயங்களையும் சேவிக்க மாலை ஆகி விடும். நாங்கூரைப் போல இத்தனை நெருக்கமாக வைணவ ஆலயங்கள் அமைந்திருப்பது தொண்டை நாட்டின் காஞ்சிபுரத்தில் மட்டுமே.
தை அமாவாசை அன்று நாங்கூரின் 11 பெருமாளும் கருட வாகனத்தில் மணி மாடக் கோயிலில் காட்சி தருவார்கள். நாங்கூர் கருட சேவை என்னும் இந்த உற்சவம் மிகவும் பிரசித்தியானது.
இந்த 11 ஆலயங்களுக்கும் மிக அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிந்து பெருமாள்களை வணங்கும் வகையில் நாங்கூரை மையமாகக் கொண்டு சில விஷயங்கள் திட்டமிடப்பட வேண்டும்.
ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மந்த்ராலயத்தில் ஒரு நடைமுறை உண்டு. பக்தர்கள் எவரும் அங்கே உள்ள பொதுக் கூடத்தில் தங்க முடியும். பக்தர்கள் தங்கள் உடைமைகளை வைத்துக் கொள்ள பொருள் வைப்பறை(cloak room)யில் பூட்டும் சாவியும் கொண்ட ஒரு தடுப்பு தரப்படும். அதில் தங்கள் உடைமைகளை பக்தர்கள் வைத்துக் கொள்வார்கள். சுகாதாரமான பொது குளியல் அறைகளும், பொது கழிவறைகளும் தங்கும் கூடத்தின் ஒரு பகுதியாக தனியாக இருக்கும். பொருள் வைப்பறை தடுப்பில் மட்டுமே தங்கள் பொருட்களை வைத்திருக்க வேண்டும். பொதுக் கூடத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது. இரவு 9 மணிக்கு கூடத்தில் உள்ள அனைவருக்கும் பாயும் தலையணையும் தரப்படும். காலை 5 மணிக்கு அதனைத் திருப்பித் தந்து விட வேண்டும். காலை 5 மணிக்கு மேல் எவரும் பொதுக் கூடத்தில் உறங்கக் கூடாது. காலையில் எழுந்து நீராடி அனைவரும் சுவாமி சன்னிதிக்கு சென்று விடுவார்கள். இந்த ஒட்டு மொத்த செயல்பாடுகளுக்கும் எந்த கட்டணமும் கிடையாது. ஒருவர் எத்தனை நாள் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம். ஆலயத்தில் ஒரு நாளைக்கு இரண்டு வேளை அன்னதானம் உண்டு. காலை 11.30 மணிக்கு ஒருவேளை. இரவு 7 மணிக்கு இன்னொரு வேளை. மந்த்ராலயம் தவிர ஆந்திரா , கர்நாடகாவில் பல ஆலயங்களில் இந்த விதமான வழிமுறை உண்டு. இது மிகவும் வெற்றிகரமான அனைவருக்கும் பயனளிக்கும் வழிமுறை.
நாங்கூரில் இவ்விதமான நடைமுறை ஒன்றை செயல்படுத்திப் பார்க்கலாம். நாடெங்கும் இருக்கும் விஷ்ணு பக்தர்கள் நாங்கூர் வர வாய்ப்பு உருவாகும். நாங்கூரின் 11 ஆலயங்களுக்கும் தினமும் வணங்கச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கூடும். நாங்கூருக்கு அருகே புள்ளிருக்கு வேளூர் எனப்படும் ‘’வைத்தீஸ்வரன் கோவில்’’ அமைந்துள்ளது. வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நாங்கூர் பெருமாள்களை வணங்க ஒரு வாய்ப்பு உருவாகும். இன்று நாட்டின் பல பகுதிகளிலிருந்து திருக்கடவூர் அபிராமி அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சஷ்டியப்த பூர்த்தி , பீம ரத சாந்தி ஆகிய சடங்குகளை செய்து கொள்வதற்கு வருகை புரிகிறார்கள். அந்த திருக்கடவூர் ஆலயமும் நாங்கூருக்கு மிக அருகில் அமைந்திருக்கும் தலமே. நாங்கூர் இப்போது நான்கு வழிச் சாலையாக்கப்பட்டுள்ள கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு கிழக்கே நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம். எனவே சாலை இணைப்பு சிறப்பாக உள்ளது.
மத்திய மாநில அரசுகளின் சுற்றுலாத் துறைகள், மத்திய மாநில அரசுகளின் பண்பாட்டுத் துறைகள், வைணவ அமைப்புகள் இது குறித்து சிந்தித்தால் நலம் பயக்கும்.
Monday, 5 August 2024
பெரிதினும் பெரிது கேள்
பாரதம் விந்தையான ஒரு நிலம். பாரதத்தின் குடிகள் ஒவ்வொன்றிடமும் அபூர்வமான தன்மைகளும் பிரத்யேகமான குணாதிசயங்களும் இருந்திருக்கின்றன. தன்னைச் சூழ்ந்திருக்கும் இயற்கையை இறையின் வடிவமாகக் காணுதல் என்பது இங்குள்ள சகல குடிகளுக்குமான வழக்கமாக இருந்திருக்கிறது. எழுதாக் கிளவி இயற்கையை உபாசிக்கும் தன்மை கொண்டது என்பதால் தென்குமரி தொடங்கி வட இமயம் வரை உள்ள பல சமூகங்களால் ஏற்கப்பட்டதாக இருந்திருக்கிறது. எழுதாக் கிளவியைத் தொகுத்த தொகுப்பாளனான கிருஷ்ண துவைபாயனனே உலகின் பெரும் காவியமான மகாபாரதத்தைப் படைத்தவன். அவனது சொற்கள் இந்த நாடெங்கும் பல்வேறு கதைசொல்லிகளால் இசைப்பாடகர்களால் சாமானிய மக்களை சென்றடைந்து கொண்டே இருந்தன. இந்த மண்ணின் ஒவ்வொரு வில்லாளியும் தன்னை அந்தரங்கமாக அர்ஜூனனாக உணர்ந்தான். ஒவ்வொரு பலசாலிக்கும் பீமசேனனே இலட்சிய வடிவமானான். திரௌபதியை நினைத்து காந்தாரியை நினைத்து ஒவ்வொரு பெண்ணும் கண்ணீர் சிந்தினர். ஞானப் பாதையில் நடக்கும் ஒவ்வொருவருக்கும்ம் கிருஷ்ணன் சொன்ன சொற்கள் கைவிளக்காய் அமைந்து வழிகாட்டின. ஆதிகவி வால்மீகி படைத்த ஆதிகாவியம் இந்த நிலத்தின் ஒவ்வொரு கிராமத்தையும் ஒவ்வொரு குடும்பத்தையும் சென்றடைந்து கொண்டேயிருந்தது. தசரத குமாரர்களின் ஒற்றுமையே சகோதர ஒற்றுமைக்கும் சகோதர உணர்வுக்குமான மேலான சாத்தியமானது. தசரத குமாரனே தனிமனித மேன்மையின் உச்சபட்ச சாத்தியமானான். அவன் அன்பால் நிறைந்தவன் ; மாவீரன் ; தன்னை நம்பி அபயம் என வந்தவர்க்கு அடைக்கலம் எப்போதும் அளிப்பவன். செல்வத்தைப் பெரிதென எண்ணாதவன். தந்தை சொல்லை எப்போதும் சென்னி சூடியவன். இந்த நிலத்தின் ஒவ்வொரு பெண்ணும் தசரத குமாரனை தனது மகவாகவே கண்டாள். அனுமன் ஆற்றலின் அறிவின் ஸ்தூல வடிவமானான். முயற்சிக்கும் பராக்கிரமத்துக்கும் பக்திக்கும் அனுமனை உதாரணமாகக் கொண்டது இந்த நிலம். தன்னைக் கடந்த - தன்னை வென்ற தீர்த்தங்கரர்களின் சரிதங்கள் அருகநெறி மேற்கொண்ட துறவிகளால் நாட்டின் ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒவ்வொரு மலைக்குடிக்கும் அறிவிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. அருக நெறி வலியுறுத்தும் பஞ்சசீலங்கள் ஒவ்வொரு சமூகத்தின் கவனத்திலும் அருகத் துறவிகளால் கொண்டு சேர்க்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. மனிதப் பிறவிகளை வலியிலிருந்தும் துயரிலிருந்தும் மீட்க துக்க நிவாரண மார்க்கம் அருளிய புத்தனின் கருணையும் அருளும் பௌத்தத் துறவிகளால் பாரத நிலமெங்கும் சென்று சேர்ந்தது. எழுதாக் கிளவியும் ஆதிகாவியமும் உலகின் பெரிய காவியமும் சமண் நெறியும் புத்தரின் சொற்களும் சென்று சேர்ந்து உருவான குமுகங்கள் பாரத குமுகங்கள். சொல்லால் உயிர் கொண்ட தேசம் பாரதம்.
Saturday, 3 August 2024
ஆடிப் பதினெட்டு
இன்று ஆடி மாதம் 18ம் நாள். காவிரி வடிநிலப் பகுதிகளில் சிறப்பாக ஆடிப்பெருக்காகக் கொண்டாடப்படும் தினம். இந்த வருடம் காவிரி நீர் இன்னும் ஊரை வந்தடையவில்லை.
கருநாடக மாநிலத்தின் பருவமழையால் காவிரி வெள்ளம் பெருக்கெடுத்து வந்து கொண்டிருக்கிறது. எனினும் தமிழக அரசால் தண்ணீரின் கணிசமான பகுதியை காவிரி, அரசலாறு, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் திறந்து விட இயலவில்லை. மாநில அரசுக்கு அதில் பெரிய அக்கறையோ ஈடுபாடோ இல்லை. ஒட்டு மொத்த காவிரி நீரும் கொள்ளிடத்தில் திறந்து விடப் படுகிறது.
காவிரியுடன் மக்களுக்கு உணர்வுபூர்வமான தொடர்பு இருக்கும் வரையே வடிநிலப் பகுதிகளில் செழிப்பும் வளமும் இருக்கும்.
ஆறுதல் செய்தியாக காவிரி நீர் இன்று கும்பகோணம் வரை வந்தடைந்துள்ளது என அறிந்தேன். திருச்சிராப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் மக்கள் உற்சாகத்துடன் ஆடிப்பெருக்கு கொண்டாடியிருக்கக் கூடும்.
Friday, 2 August 2024
காணுகின்ற காட்சியாய் காண்பதெல்லாம் காட்டுவதாய்
தமிழறிஞர் ரா. பத்மநாபன் அவர்கள் இயற்றிய ‘’தமிழ்ச் செய்யுள் வடிவில் பகவத் கீதை ‘’ நூலுக்கு தமிழறிஞரும் எழுத்தாளருமான திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய பணிந்துரையை இன்று வாசித்தேன். நாஞ்சில் சிறந்த கலைஞர். சிறந்த ஆசிரியர். அவர் எழுதியுள்ள சிறு குறிப்பான இந்த பணிந்துரையிலேயே அவரது அறிவின் விரிவையும் நுணுக்கமான கலைப் பார்வையையும் உணர முடிகிறது.
திராவிட இயக்கத்தால் தமிழின் ஆகப் பெரிய கவிஞனும் உலகின் ஆகப் பெரிய கவிஞர்களில் ஒருவனுமான கம்பன் ஊருக்கு ஊர் மேடைக்கு மேடை தாக்குதலுக்கு ஆளான போது கம்பனின் சிறப்பை கம்பன் கவியின் மாண்பை தமிழ் மக்களிடம் கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டன கம்பன் கழகங்கள். நாஞ்சில் மும்பையில் இருந்த போது அங்கு நிறுவப்பட்டிருந்த தமிழ்ச் சங்கம் கம்பன் விழாக்களை மும்பையில் நடத்துகிறது. அதனை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் அறிஞர் ராய. சொ அவர்களின் மாணவரான ரா. பத்மநாபன். கம்பன் கழகம் நடத்தும் பட்டிமன்றங்களில் இளைஞரான நாஞ்சில் உரையாற்றுகிறார். அப்போது ரா. ப அவர்களிடம் கம்பனை முழுமையாகப் பாடம் கேட்கும் வாய்ப்பு நாஞ்சிலுக்குக் கிடைக்கிறது.
தமிழ்ச் சங்க கட்டிடத்தில் கம்பராமாயண பாடம் நடக்கிறது. வகுப்பில் மொத்தம் 17 மாணவர்கள். பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து நாஞ்சில் மட்டும் ஒரே மாணவர் என்னும் நிலையை வகுப்பு அடைகிறது. ஒரு மாணவர் என்றாலும் ஊக்கம் குன்றாமல் கம்பனை நாஞ்சிலுக்குப் புகட்டுகிறார் ரா. ப. தமிழ்ச் சங்க கட்டிடம் இருக்கும் இடம் இருவருக்கும் தூரம் என்பதால் நாஞ்சிலை தனது வீட்டுக்கு வரச் சொல்லி பாடம் சொல்கிறார் ரா. ப. நான்கடி அகலம் ஆறடி உயரம் கொண்ட முடிசூடிய ராமன் சித்திரம் முன்பு தினமும் பாடம் நடக்கிறது. அந்த காட்சியை தம் உயிர்ப்பான எழுத்தால் உயிர்ப்புடன் தீட்டிக் காட்டுகிறார் நாஞ்சில்.
சிறு குறிப்பாயிருக்கும் ஒரு பணிந்துரையின் பரப்புக்குள் இலட்சியவாதம் கொண்ட ஆசிரியர் ஒருவரின் உயிர்ச்சித்திரம், மும்பையின் நில அமைப்பு விபரங்கள், மும்பை மற்றும் தமிழக உணவுகள் என பல விஷயங்களை எடுத்துக் காட்டுகிறார் நாஞ்சில்.
நாஞ்சிலின் கம்பன் மீதான பற்று யாவரும் அறிந்ததே. இந்த பணிந்துரை அவருக்கு தன் ஆசிரியர் மீதிருக்கும் பற்றையும் இணைத்துக் காட்டுகிறது.
பாரதி கலைமகளை ‘’காணுகின்ற காட்சியாய் காண்பதெல்லாம் காட்டுவதாய்’’ என்கின்றான். அறிவின் இயல்பு அது.
ஒரு ரயில் நிலைய சந்திப்பு
நண்பர் ஒருவர் இன்று மதியம் 2.30க்கு ஊருக்கு வருவதாகக் கூறியிருந்தார். அவருக்கு கும்பகோணத்தில் ஒரு வேலை. முடித்து விட்டு இங்கு வருவதற்கு திட்டமிட்டிருந்தார். கும்பகோணம் பணியில் எதிர்பாராத ஒரு மாற்றம். சற்று முன்னதாகவே ஊருக்கு வந்து விட்டார். மாயூரநாத சுவாமியையும் பரிமள ரங்கநாதரையும் சேவித்து விட்டு ரயில் நிலையம் சென்றடைந்திருக்கிறார். நான் மதியம் 1 மணி அளவில் அவருக்கு ஃபோன் செய்தேன். நண்பர் விபரம் சொன்னார். 15 நிமிடத்தில் ரயில் நிலையம் சென்று சேர்ந்தேன். நண்பரைச் சந்தித்தேன். நண்பருடன் அலைபேசி மூலம் உரையாடியிருக்கிறேன். நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை. நண்பர் காலையில் ஒருமுறை அலைபேசியில் அழைத்திருக்கிறார். அழைப்பை எடுக்கத் தவறி விட்டேன். சற்று தாமதமாகத்தான் பார்த்தேன். இன்று வீட்டில் யாரும் இல்லை. எனவே ரயில் நிலைய கேண்டீனில் மதிய உணவு அருந்தினேன். ஆலய தரிசனம் முடித்து மதிய உணவு அருந்தி விட்டு நண்பர் ரயில் நிலையத்துக்கு வந்திருக்கிறார். எனவே அவரை ரயில் நிலைய பிளாட்ஃபார பெஞ்சில் அமரச் சொல்லி விட்டு நான் உணவருந்தச் சென்றேன். மதியம் 1.30லிருந்து மதியம் 3.10 வரை ரயில் நிலையத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். இன்று ஆடிவெள்ளி. நாளை ஆடிப்பெருக்கு. எனவே கோவை ஜன் சதாப்தி ரயிலில் கூட்டம் மிகக் குறைவாக இருந்தது. வழக்கமான நாள் எனில் கூட்டம் அள்ளும். நண்பரை ரயில் நிலையத்தில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த ரயில் நிலையத்தில் எத்தனை பேரை சந்தித்திருப்பேன். எத்தனை பேரை வழியனுப்பியிருப்பேன் என எண்ணிப் பார்த்தேன். பெரும் எண்ணிக்கை. மீண்டும் ஒரு சந்திப்பு. மீண்டும் ஒரு வழியனுப்பல்.
Thursday, 1 August 2024
கடலின் கரையில்
நேற்று நண்பர் ஒருவரைச் சந்திக்க கடலூர் சென்றிருந்தேன். பேருந்தில் பயணிக்கலாமா என யோசித்து பின்னர் முடிவை மாற்றி இரு சக்கர வாகனத்தில் சென்றேன். காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரையான பயணம் எனில் இரு சக்கர வாகனம் இலகுவானது என்பது என் அனுபவம். இந்த நெறியை நாடு முழுதும் பயணித்த போது முழுமையாகப் பின்பற்றினேன். இப்போதும் அந்த நெறி மனதில் இருப்பதால் இரவில் இரு சக்கர வாகனப் பயணத்தை இயன்ற அளவு தவிர்க்கிறேன். எனினும் நேற்று மதியம் உணவருந்தி விட்டு கிளம்பினேன்.
2014ம் ஆண்டிலிருந்து 2024ம் ஆண்டு வரையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஆகப் பெரிய சாதனை என்பது நாடெங்கும் நடைபெற்றுள்ள சாலைப் பணிகள். அதனை சாலைகளில் பயணிக்கும் எவராலும் உணர முடியும். ஊரிலிருந்து 2.15க்குப் புறப்பட்டேன். 3.00 மணிக்கு சிதம்பரம் தாண்டியிருந்தேன். 4.00 மணிக்கு கடலூரில் இருந்தேன். நண்பர் 15 நிமிடத்தில் வந்து விடுவதாகக் கூறினார். மஞ்சக்குப்பம் போலீஸ் மைதானத்தில் காத்திருந்தேன். லேசான மழை பெய்தது. நண்பர் மழையினூடாக வந்து சேர்ந்தார். மைதானத்துக்கு எதிரில் ஸ்டேடியத்துடன் கூடிய கால்பந்து மைதானம் இருந்தது. ஸ்டேடியத்தில் சென்று அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். நிறைய விளையாட்டு வீரர்கள் மழை ஓய்வதற்காகக் காத்திருந்தார்கள். அந்த சூழல் இனிதாக இருந்தது. மைதானமும் மழையும் சூழலும் மனதுக்கு இனிமையாக இருந்தது. நான் எப்போதும் புதிய ஊர்களையும் புதிய சூழலையும் விரும்புவேன்.
மழை விட்டதும் தேவனாம்பட்டினம் கடற்கரைக்குச் சென்றோம். கடலில் இறங்கினோம். கடலில் அதிக அளவு மழை பெய்திருக்க வேண்டும். கடல் மிகக் குளிர்ச்சியாக இருந்தது.
கரையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம்.
இரவு 7 மணிக்கு ஊருக்குக் கிளம்பினேன். இரு சக்கர வாகனப் பயணத்துக்கு பகல் ஒளியே சிறந்தது. பகல் ஒளியிலேயே சாலை துலக்கமாக இருக்கும். இரவின் ஒளி அத்தனை போதுமானதல்ல. மெதுவாக வாகனத்தை இயக்கி 9.30 மணி அளவில் வீடு வந்து சேர்ந்தேன்.
இனிய சந்திப்பு. இனிய உரையாடல். இனிய பயணம்.
ஓட்டுநர்
கடலூரிலிருந்து இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன்.
ஒரு இளைஞன் ‘’லிஃப்ட்’’ கேட்டான்.
வண்டியில் ஏற்றிக் கொண்டேன். காரைக்காட்டில் இறங்கிக் கொள்வதாகச் சொன்னான்.
வழக்கம் போல சீரான வேகத்தில் - அதாவது மெதுவாக - சென்று கொண்டிருந்தேன்.
‘’அண்ணா! கொஞ்சம் ஸ்பீடா ஓட்டுங்க’’ என்றான் இளைஞன். அவன் இறைஞ்சும் குரலில் கூறியதால் நான் பதில் ஏதும் சொல்லவில்லை.
சற்று வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினேன்.
சில நிமிடங்களில் ’’அண்ணா ! நீங்க எந்த ஊர் வரைக்கும் போரீங்க?’’ என்றான்.
‘’சிதம்பரம்’’
‘’அப்ப நான் பெரியபட்டுல இறங்கிக்கறேன்’’
வண்டி சென்று கொண்டேயிருந்தது. வண்டி வேகத்தை அதிகப்படுத்துமாறு அவன் இறைஞ்சியது மனதில் இருந்ததால் ‘’ தம்பி ! வண்டியை நீ ஓட்டுறியா?’’ என்றேன்.
வாகன இயக்கம் அவன் கைக்கு மாறியது.
எடுத்த எடுப்பிலேயே அதிவேகம் எடுத்து விட்டான். வண்டி விர் விர் என வேகமாக சென்று கொண்டேயிருந்தது. ஒரு வண்டியை ஓவர்டேக் செய்தான். எதிர்ப்பக்கம் ஒரு கார். எதிர்திசையில் இரு வாகனங்களும் நெருங்குகின்றன. குறைந்த இடைவெளி மட்டுமே இருந்தது. அதில் புகுந்து ‘’கட்’’ அடித்து கடந்தான்.
‘’தம்பி ! நான் ஓட்டட்டுமா?’’ என்றேன்.
அவன் வாகனத்தைத் தரவில்லை. கிட்டத்தட்ட நான் ஓட்டும் வேகத்தில் வாகனத்தை இயக்கினான். அதாவது சீரான வேகத்தில். அதாவது மெதுவாக.