Wednesday, 16 October 2024

 சிறகடித்து எழும் 
பறவை ஒலியால்
பிறக்கிறது
அந்த கணத்தின் உற்சாகம்

மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கும்
நதியைக் காண்பவனின்
அகத்தில் 
பிறக்கிறது
தாய்மை

அந்திப் பொழுதில்
தினமும்
பிறக்கும்
இந்த வான்மீன்கள்
முடிவில்லாமல்
நவில்கின்றன
கருணையின் எல்லையின்மையை

தினமும் பிறந்து கொண்டேயிருக்கின்றன
ஒளி கொண்ட மலர்கள்

Sunday, 13 October 2024

ஓமந்தூர் பெரியவளைவு ராமசாமி ரெட்டியார்

 

ஓமந்தூர் பெரியவளைவு ராமசாமி ரெட்டியார்

 

காந்தி யுகம் இலட்சியவாதிகள் பலரை உருவாக்கியிருக்கிறது. மதிப்பீடுகளின் மீது முழு நம்பிக்கை கொண்ட விழுமியங்களை தங்கள் வாழ்வின் நெறியாகவும் நடைமுறையாகவும் கொண்ட நூற்றுக்கணக்கானோர் காந்தியால் ஊக்கம் பெற்று ஆன்மீகம், அரசியல், பொதுப்பணி, மருத்துவம், கட்டுமானம் என பல துறைகளில் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர். தமிழகத்தில் உருவான காந்தியர்கள் அனேகம். அவர்களில் முக்கியமானவர் ஓமந்தூர் பெரியவளைவு ராமசாமி ரெட்டியார். அவர் காந்திய இயக்கத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நாட்டுக்கும் ஆற்றிய தொண்டுகள் அளப்பரியவை. தனது வாழ்க்கைப்பாதையை அவர் அமைத்துக் கொண்ட விதம் மகத்தானது.

புதுச்சேரிக்கும் திண்டிவனத்துக்கும் இடையில் இருக்கும் சிறு கிராமமான ஓமந்தூரில் பெரியவளைவு என் அழைக்கப்படும் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ராமசாமி ரெட்டியார். சிறு வ்யதிலிருந்தே விவசாயத்தின் மீது அவருக்கு பேரார்வம் இருந்திருக்கிறது. அதிலும் தோட்டப்பயிர்கள் மீது வாழ்நாள் முழுவதும் தனிப்பிரியம் கொண்டவராயிருந்தார். எலுமிச்சையும் நெல்லியும் அவரது விருப்பத்துக்குரிய மரங்கள். அவரது உணவில் தினமும் நெல்லிக்காய் பச்சடி இருந்திருக்கிறது. அவரைச் சந்திக்க வருபவர்களுக்கு நீரில் எலுமிச்சையும் உப்பும் கலந்த எலுமிச்சை சாறு வழங்கப்பட்டிருக்கிறது.

விழுப்புரத்தில் தன் பள்ளிக் கல்வியை பயில்கிறார். காஞ்சி சங்கராச்சாரியார் பூர்வாசிரமத்தில் அதே பள்ளியில் பயின்றவர். இருவரும் அப்பள்ளியில் ஒரே காலத்தில் பய்ன்றிருக்கின்றனர். இருவரும் சக மாணவர்களாக இருந்திருக்கின்றனர். தந்தையின் மறைவால் எட்டாம் வகுப்புக்கு மேல் தனது கல்வியைத் தொடர முடியாத ரெட்டியார் கிராமத்தில் விவசாயம் பார்க்க ஆரம்பிக்கிறார். திருவாசகத்தின் மீதும் திருவருட்பா மீதும் பெரும் ஈடுபாடு கொள்கிறார். மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொள்கிறார். காந்தியின் கதர் இயக்கத்துக்காக வாரம் ஒருநாள் தன் தோளில் கதராடைகளை சுமந்து கொண்டு ஊர் ஊராக சென்று விற்பனை செய்திருக்கிறார்.கதர் இயக்கத்தில் பங்கு கொண்டதிலிருந்து தனது வாழ்நாள் முழுவதும் கதர் ஆடையை மட்டுமே உடுத்தியிருக்கிறார். அப்பிரதேசத்தின் பெரும் நிலக்கிழாரான அவர் காந்தியின் சொல்லுக்காக ஊர் ஊராக தனது தோளில் கதர்த் துணிகளை சுமந்து கொண்டு நடந்து சென்று விற்பனை செய்யும் காட்சியை கற்பனை செய்து பார்க்கும் போது பெருவியப்பு உண்டாகிறது.தாயின் விருப்பப்படி திருமணம் நிகழ்கிறது. மகன் பிறக்கிறான். மகன் பிறந்த சில ஆண்டுகளில் மகனும் மனைவியும் மரணம் அடைகிறார்கள். அதன் பின் தனது வாழ்வை ஒரு துறவியைப் போல் வாழ்கிறார் ரெட்டியார். அரசியலில் உயர் பதவிகளை வகித்தாலும் தனது எளிமையை அவர் எந்நாளும் கைவிடவில்லை.

தேடி வந்த பதவிகளிலிருந்து கூட சற்று தள்ளியிருப்பவராகவே எப்போதும் இருந்திருக்கிறார். அத்தகைய அரசியல் தலைவர்களை உருவாக்கியிருக்கிறது என்பதே காந்திய யுகத்தின் சிறப்பு. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மீதும் இராமலிங்க வள்ளலார் மீதும் பெரும் பக்தி கொண்டவராக இருந்த ஓமந்தூரார் சென்னை மாகாண முதல்வராக இருந்து அப்பதவியிலிருந்து அகன்ற பின் வடலூரில் வள்ளலார் குருகுலம் என்ற கல்வி அமைப்பை உருவாக்கி அங்கே கல்விப்பணி ஆற்றுகிறார். சில நூறு பேரை மட்டுமே மக்கள்தொகையாகக் கொண்ட அக்கிராமத்தில் ஒரு மாநில முன்னாள் முதலமைச்சர் மிக எளியவராய் கல்விப்பணி ஆற்றியதை நிகழ்த்தும் காட்சியை கற்பனை செய்து பார்க்கும் போது இலட்சியவாதத்தின் மகத்துவத்தை உணர முடிகிறது. அப்போதைய சென்னை மாகாணம் என்பது தற்போதுள்ள தமிழ்நாட்டுடன் கேரளத்தின் பெரும்பான்மையான பகுதிகளையும் கர்நாடகத்தின் பெரும்பான்மையான பகுதியையும் தற்போதைய ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் முழுமையையும் ஒரிஸ்ஸாவின் தென் பகுதியையும் தன்னகத்தே கொண்டது.

காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைவது தொடர்பாக நேரு மேற்கொண்ட நடவடிக்கைகளிலும் மேற்கொண்ட அணுகுமுறையிலும் ஓமந்தூராருக்கு பெரும் ஏற்பின்மை இருந்திருக்கிறது. ஹைதராபாத் நிஜாம் ஹைதராபாத்தை பாகிஸ்தானுடன் இணைக்க முயற்சிப்பதை சென்னை மாகாண முதலமைச்சராக உன்னிப்பாக கவனித்து பிரதமர் நேருவுக்கு தேவையான எச்சரிக்கைகளை அளித்து சர்தார் வல்லபாய் படேலுக்கு உறுதுணையாய் இருந்து ஹைதராபாத் இந்தியாவுடன் இணைவதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

ஓமந்தூரார் புதுச்சேரிக்கு மிக அருகில் இருப்பவர். எனவே புதுச்சேரியின் சூழ்நிலையை முழுவதும் உணர்ந்தவர். புதுச்சேரி இந்தியாவுடன் இணைவதில் நிகழ்ந்த காலதாமதம் அவரை வருத்தம் அடையச் செய்கிறது. சில மாதங்களில் நிகழ்ந்திருக்க வேண்டிய நிகழ்வை ஆறு வருடங்கள் என ஆக்கியது நேருவின் அரசு என்ற வருத்தம் அவருக்கு இருந்திருக்கிறது. புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்ததில் ஓமந்தூராருக்கு பெரும் பங்கு உண்டு. அவர் சென்னை மாகாண முதல்வராக இருந்த போதே புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்தது.

பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் சீடராக விளங்கியவர் ராமசாமி ரெட்டியார். ரமணாஸ்ரமத்தில் பல நாட்கள் தங்கும் வழக்கத்தைக் கொண்டவராய் இருந்திருக்கிறார். மாகாண முதல்வர் பதவியை ஏற்பதா வேண்டாமா என்ற அகக் குழப்பம் ஏற்பட்ட போது ஸ்ரீரமணரிடம் அதனைத் தெரிவித்திருக்கிறார். அடுத்த நாள் அங்கே இருந்தவர்களிடம் ரமணர் ஓமந்தூர் ரெட்டியாரை சுட்டிக் காட்டி இவருக்கு கூடிய விரைவில் அரசாங்கத்தின் பெரிய பதவி வரப்போகிறது எனக் கூறியிருக்கிறார்.புதுச்சேரியில் அரவிந்தருடனும் அரவிந்த ஆசிரமத்துடனும் நெருங்கிய தொடர்பு உடையவராக இருந்திருக்கிறார். திருக்கோவிலூர் ஞானானந்த சுவாமிகளிடம் பக்தியும் மரியாதையும் கொண்டவராயிருந்திருக்கிறார்.  திருப்பராய்த்துறை சித்பவானந்த சுவாமிகளின் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ஓமந்தூரார்.

தொழிலதிபர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்கள் ஓமந்தூரார் மீது பெரும் மதிப்பும் பிரியமும் கொண்டவராக விளங்கியிருக்கிறார். ஓமந்தூர் ரெட்டியார் வாழ்க்கை நூல் வடிவம் பெற வேண்டும் என்ற தீவிரமான விருப்பம் நா. மகாலிங்கம் அவர்களுக்கு இருந்தது. தமிழின் பயண இலக்கியத்தின் முன்னோடியான சோமலெ அவர்களை ஓமந்தூர் ரெட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுமாறு பணிக்கிறார் பொள்ளாச்சி மகாலிங்கம். ஆறு மாத காலம் தமிழகமெங்கும் பயணித்து நூற்றுக்கணக்கானோரை நேரடியாகச் சந்தித்து இதழ்களையும் ஆவணங்களையும் ஆய்வு செய்து சோமலெ அவர்கள் ஓமந்தூராரின் வாழ்க்கையை ‘’விவசாய முதலமைச்சர்’’ என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார். வேதாரண்யம் குருகுலம் அதனை வெளியிட்டிருக்கிறது.

அவர் வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கிறது. ரெட்டியார் திண்டிவனத்தில் ஒரு பெரியவரைச் சந்திக்கச் செல்கிறார். எவரையும் சந்திக்கச் செல்லும் போது மரியாதையின் அடையாளமாக எலுமிச்சைப் பழம் அளிப்பது தமிழ் மரபு. எப்போதும் தன் தோட்டத்திலிருந்து எலுமிச்சைப் பழம் கொண்டு செல்லும் ரெட்டியார் அன்று மறதியாக தோட்டத்தில் பழம் பறித்து எடுத்துக் கொள்ளாமல் சென்று விட்டார். திண்டிவனத்தில் சாலையோரத்தில் எலுமிச்சைப்  பழம் விற்கும் பாட்டியிடம் சென்று பழம் என்ன விலை என்று கேட்கிறார் ரெட்டியார். பாட்டி விலையைக் கூற விலையை சற்று குறைத்துத் தருமாறு கேட்கிறார் ரெட்டியார். அதற்கு அந்த பாட்டி இது பேரம் பேசி வாங்க வேண்டிய சரக்கு அல்ல ; ஓமந்தூர் ரெட்டியார் தோட்டத்தில் விளைந்தது. மரத்துக்குத் தேவையான ஊட்டத்தை சரியான காலத்தில் கொடுத்து நாளும் அதன் வளர்ச்சியைக் கண்காணித்து அக்கறையுடன் பராமரித்து வளர்க்கப்பட்ட மரத்தின் பழங்கள் இவை. மற்ற எலுமிச்சைப் பழங்களுக்கும் ரெட்டியார் தோட்டத்து பழங்களுக்கும் தரத்திலும் உருவத்திலும் பெரும் வேறுபாடு உண்டு. தரமான பொருளுக்கு யாரும் பேரம் பேச மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார் அந்த எலுமிச்சை விற்கும் பாட்டி.

ரெட்டியார் தோட்டத்து எலுமிச்சைப் பழங்கள் போல தமிழக அரசியலில் ஓமந்தூர் பெரியவளைவு ராமசாமி ரெட்டியாரும் தனித்துவம் கொண்டவர்தான்.   

சோமலெ எழுதிய ‘’விவசாய முதலமைச்சர்’’ நூலின் இணைப்பு : 

இனியன் - படைப்பூக்கம் மிக்க சிறுவன்

நேற்று பணி நிமித்தம் சென்னை செல்ல வேண்டியிருந்தது. திருச்சி - சென்னை சோழன் எக்ஸ்பிரஸில் சென்னைக்குப் பயணமானேன். என்னருகே ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். அவன் தன் அன்னையுடன் பாட்டி வீட்டுக்கு சென்று விட்டு காலாண்டு விடுமுறை முடிந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தான். நான் சிறுவர்களுடன் உரையாடுவதை எப்போதும் விரும்புவேன்.  அவர்கள் உலகம் குதூகலம் மிக்கது. அவர்களுடன் உரையாடும் போது நாமும் அந்த குதூகலத்தின் உலகுக்கு சில கணங்களேனும் செல்கிறோம். 

அந்த சிறுவனின் பெயர் இனியன். பெயருக்கு ஏற்ப சுபாவத்திலும் இனிமை மிக்கவன். அவனுக்கு எட்டு வயது. சென்ற ஆண்டு மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் கும்பகோணத்தில் இரண்டாம் வகுப்பு படித்திருக்கிறான். பின்னர் அவன் பெற்றோர் அவனை சென்னைக்கு அழைத்து வந்தனர். அங்கே அவனை ஒரு சி.பி.எஸ்.இ பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். அவர்கள் கணக்கில் அவனை மூன்றாம் வகுப்பு சேர்க்க வயது சில மாதங்கள் குறைவாக இருந்திருக்கிறது. அதனால் மீண்டும் இரண்டாம் வகுப்புக்கே அட்மிஷன் தரப்பட்டிருக்கிறது. தான் ஏன் இரண்டு முறை இரண்டாம் வகுப்பு படிக்கிறேன் என்பது இனியனுக்கு புரியவேயில்லை. 

பாடங்களில் நூற்றுக்கு 95 மதிப்பெண்களுக்கு மேல் எப்போதும் எடுக்கிறான். ஆனால் ஏன் அந்த ஐந்து மதிப்பெண்கள் குறைகின்றன ; தனது வெளிப்பாட்டில் குறைபாடு இருக்கிறதா என்ற ஐயம் அவனுக்கு இருந்தது. 

ஓவியங்கள் சிறப்பாக வரைகிறான். அவனுடைய வயதுக்கு அவனது ஓவியங்களில் வெளிப்படும் படைப்புத்திறன் அற்புதமான ஒன்று. 

கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறான். தனது நண்பர்களுடன் விளையாடும் போது தான் கோல் - கீப்பராக இருப்பதாகக் கூறினான். 

மழலைக்குரல் அவனுக்கு இன்னும் மாறவில்லை. அது அவனை மேலும் இனிமையானவனாக உணர வைக்கிறது. 

யாரோ சொல்லி கேள்விப்பட்டு அவனுக்கு ஜப்பான் மிகவும் பிரியமான நாடாகி விட்டது. அவன் கராத்தே பயில்கிறான் என்பதால் ஜப்பானிய சாமுராய் வாழ்க்கை முறை மீது ஈடுபாடு உண்டாகி விட்டது. தான் ஒரு சாமுராயாக வாழ வேண்டும் என்பது அவன் விருப்பம். ஜப்பான் மீதான் ஆர்வத்தில் அவன் செய்திருக்கும் செயல் வியப்பளிப்பது. இணையத்தின் உதவியால் முழுக்க முழுக்க தன்னுடைய முயற்சியால் ஜப்பானிய அரிச்சுவடியை தனது கணிணியில் தரவிரக்கம் செய்து தினமும் அரைமணி நேரம் ஜப்பானிய மொழி பயில்கிறான். இது முழுக்க முழுக்க அவனே செய்யும் செயல். 

என்னிடம் உங்களுக்கு மாங்கா காமிக்ஸ் தெரியுமா என்று கேட்டான். மாங்கா காமிக்ஸ் என்பது ஜப்பானின் சிறப்பான கலை வடிவம். பகவான் புத்தர் குறித்த மாங்கா காமிக்ஸ் உலகப் புகழ் பெற்றது. புத்தர் குறித்த மாங்கா காமிக்ஸை நான் அவனுக்கு கூடிய விரைவில் பரிசளிப்பேன் என்று அவனிடம் சொன்னேன். 

அவனுடைய அன்னை அவனைக் குறித்து கவலைப்படுகிறார். மிகவும் சென்சிடிவான குழந்தையாக இருக்கிறான் என. அவன் உயர் நுண்ணறிவு கொண்ட குழந்தை. எதிர்காலத்தில் அப்துல் கலாம் போல சிறப்பாக வருவான் என்று அவரிடம் சொன்னேன். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. 

Friday, 11 October 2024

மதில்கள் - வைக்கம் முகமது பஷீர்


நாடு முழுதும் சுற்றித் திரிந்த ஒரு கலைஞன் அவன். படைப்பூக்கம் பிரவாகிக்கும் கலை உள்ளம் கொண்டவன். நாட்டின் அனைத்து புண்ணியத் தலங்களுக்கும் சென்றவன். நாட்டின் அனைத்து புண்ணிய நதிகளிலும் தீர்த்தமாடியவன். மகாத்மா காந்தியை தன் அகத்தில் வழிகாட்டியாக ஏற்றவன். ஒரு பத்திரிக்கையில் தேசிய இயக்கத்துக்கு ஆதரவாக எழுதியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறான். சிறையை அவன் அகம் உலகின் ஒரு பகுதி என்றே பார்க்கிறது. சிறையில் இருக்கும் போது மனதுடன் ஆழமாகப் பிணைத்துக் கொண்டால் உலகம் கூட ஒரு பெரிய சிறை தானே என்று நினைக்கிறான்.  சிறையில் கொலைக் குற்றம் புரிந்தவர்கள் இருக்கிறார்கள். சிறிய குற்றங்களைப் புரிந்தவர்கள் இருக்கிறார்கள். அனைவரும் அவனிடம் நட்பு பாராட்டுகிறார்கள். சிறையில் இருக்கும் பெருமரங்களுடனும் அதில் வசிக்கும் அணில் பறவைகளுடனும் அவனுக்கு நட்பு இருக்கிறது. காவலர்களும் அதிகாரிகளும் அவனுக்கு நண்பர்கள் ஆகிறார்கள். சிறையில் கைதிகளைச் சேர்த்துக் கொண்டு ஒரு காய்கறித் தோட்டம் அமைக்கிறான். மலர்த் தோட்டத்தை சிறைக்குள் உருவாக்குகிறான். சிறையின் பெரிய மதிலுக்கு அப்புறத்தில் பெண்கள் சிறை இருக்கிறது. பெரு மதில் இருப்பதனால் இந்த பக்கத்தில் இருப்பவர்களும் அந்த பக்கத்தில் இருப்பவர்களும் பார்த்துக் கொள்ள முடியாது. எனினும் அவனுக்கு அந்த பக்கம் இருக்கும் ஒரு பெண்ணுடன் பேச வாய்ப்பு கிடைக்கிறது. சில நாட்கள் அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். தனக்கு ஒரு ரோஜாச் செடியை அளிக்குமாறு அவள் கேட்கிறாள். தனது தோட்டத்திலிருந்து ஒரு ரோஜா பதியனை எடுத்து அதன் வேர்ப்பகுதியை ஈரமான துணியால் சுற்றி மதிலைத் தாண்டி எறிகிறான். அதனை நட்டு வைக்கிறாள் அந்த பெண். இருவரும் சிறையின் மருத்துவமனையில் அடுத்த ஓரிரு நாட்களில் சந்தித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு உருவாகிறது. இருவரும் சந்தித்தார்களா என்பதே கதையின் உச்சம்.  

அழகிய மரமும் கோடரிகளும்

 சமீபத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ஒன்றில் மெக்காலேவை சிறப்பிக்கும் வசனங்கள் பேசப்பட்டிருக்கின்றன. மெக்காலே அத்தகைய சிறப்புகளுக்கு உரியவரா என்பதை சிந்தித்துப் பார்ப்போம். 

இந்திய நிலத்தில் பயணிக்கும் எவருக்கும் எளிதில் புரியக் கூடிய விஷயம் இந்தியா ஒரு விவசாய நாடு என்பது. நிகழ்காலத்தில் கூட இந்தியா விவசாய நாடு என்பதிலிருந்து கடந்த 3000 ஆண்டு காலத்திலும் இந்தியா விவசாய நாடாகவே இருந்திருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் அடைய வேண்டிய கல்வி என்பது பெரும்பாலும் விவசாயம் சார்ந்த கல்வியாக மட்டுமே இருந்திருக்கும் அல்லவா? ஊரில் பருவமழை பொழியும் காலங்கள் எவை ? விதை நேர்த்தி செய்வது எவ்வாறு? பயிர்களின் கால அளவுகள் என்ன? அறுவடை செய்யும் முறைகள் யாவை என்பதை பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கள் பாரம்பர்ய அறிவாக விவசாயிகள் கொண்டிருந்தனர். இந்தியாவின் விவசாய சமூகங்கள் கொண்டிருந்த இந்த பாரம்பர்ய கல்வியும் அதன் 3000 ஆண்டு தொடர்ச்சியுமே மகத்தான விஷயங்கள். 

சமூகவியலும் பொருளியலும் நெருங்கிய தொடர்பு கொண்டவை. பொருளியல் நிலையே சமூகங்களின் வாழ்நிலையை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் கிராமங்கள் முழுமையான பொருளியல் அலகாக இருந்திருக்கின்றன. ஒரு கிராமத்தின் உற்பத்தி என்பது உணவு தானியங்களே. உற்பத்தி ஆகும் தானியங்கள் அந்த கிராமத்தில் இருப்பவர்களுக்குள்ளேயே பங்கிடப்பட்டன. அதன் இன்னொரு பக்கமாக, ஒரு கிராமத்திற்குள் பகிர்ந்து கொள்ளும் அளவிலேயே அந்த கிராமத்தின் உற்பத்தி இருந்திருக்கிறது. இந்த பொருளியல் அடிப்படையை புரிந்து கொண்டால் மட்டுமே இந்திய சமூகவியலைப் புரிந்து கொள்ள முடியும். 

ஒரு கிராமம் என்பது 1000 ஏக்கர் நிலம் கொண்டது.  அதில் 500 ஏக்கர் விவசாய நிலமாக இருக்கும். ஒரு போகத்துக்கு ஏக்கருக்கு 2000 கிலோ நெல் கிடைப்பதாகக் கொள்ளமுடியும். எனில் 500 ஏக்கருக்கு 1,00,000 கிலோ உற்பத்தி ஆகும். ஒரு ஆண்டுக்கு இரண்டு போகங்கள் பயிரானால் 2,00,000 கிலோ உற்பத்தி ஆகும். கிராமத்தின் மக்கள் தொகை 2000. அவ்வாறெனில் அங்கே 400 குடும்பங்கள் இருப்பார்கள். இந்த 400 குடும்பங்களுக்கும் இடையே இந்த 2,00,000 கிலோ நெல்லே பரிவர்த்தனை ஆகும். இப்போது இங்கே ஒரு கேள்வி எழும். இந்த உற்பத்தி சமமாகப் பங்கிடப்பட்டிருக்குமா என்ற கேள்வி. இந்த 2000 மக்கள் தொகையில் நில உரிமையாளர்கள் இருப்பார்கள். நிலத்தில் பணி புரிபவர்கள் இருப்பார்கள். நிலத்தை உரிமை கொண்டவர்களுக்கு அதிகமாகவும் நிலத்தில் பணி புரிபவர்களுக்கு குறைவாகவுமே பங்கீடு இருந்திருக்கும். அதனை உச்சபட்ச பாரபட்சம் என்று கூற முடியாது. ஏனென்றால் கிராமத்தில் உற்பத்தி என்பது தானியம். அந்த தானியத்தை காலவரையறையின்றி சேமித்து வைக்க முடியாது. காலவரையறையின்றி சேமித்து வைக்க அது தங்கம் போன்ற உலோகம் இல்லை. விவசாயப் பணியாளர்களுக்கு ஊதியம் தானியமாகவே வழங்கப்பட்டது. இதில் இன்னொரு விஷயத்தையும் சேர்த்து யோசிக்க வேண்டும். விவசாயத்தில் விவசாயப் பணியாளரின் ஒத்துழைப்பு என்பது குறைந்தபட்சமாகவேனும் தேவை. நில உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் உடைமையாளர்கள் என்னும் வகையில் தனித்தனியானவர்களே. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நிலத்தில் விளைச்சல் அதிகம் கிடைக்க பணியாளர்களின் உழைப்பை சார்ந்தே இருப்பவர். அந்த சார்பு முழுமையானது இல்லை எனினும் பகுதி அளவிலாவது சார்ந்தே இருந்தாக வேண்டும். இதில் இன்னொரு விஷயத்தையும் சேர்த்து யோசிக்க வேண்டும். ஒரு கிராமத்தில் நிலத்தில் பணி புரியும் விவசாயத் தொழிலாளர்கள் 300 பேர் இருப்பார்கள் என்றால் அந்த கிராமத்தின் 1000 ஏக்கர் நிலத்தையும் அந்த 300 பேரைக் கொண்டே விவசாயம் செய்ய முடியும். நிலத்தை உழுதல்,நீர் பாய்ச்சுதல், விதைத்தல், களை எடுத்தல், அறுவடை என அனைத்து பணிகளையும் இந்த 300 பேரே 1000 ஏக்கருக்கும் செய்ய வேண்டும். பயிர் என்பது பருவத்தே செய்ய வேண்டியது. பருவம் தப்பினால் வேளாண்மையில் நட்டம் வந்து விடும். எனவே ஒரு கிராமத்தில் விவசாயத்தில் அதிகபட்சமாக எத்தனை உழைப்பு சாத்தியமோ அந்த உழைப்பைக் கொண்டே ஒரு கிராமத்தின் பொருளியல் தீர்மானமாகும். அதன் சமூக நிலையும் தீர்மானமாகும். விவசாயத் தொழிலாளர்கள் பாரபட்சமாக நடத்தப் பட்டிருப்பார்களா? உடைமை என்னும் விஷயத்தில் மனிதர்கள் எப்போதும் பாரபட்சமாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு இந்திய கிராமம் என்னும் அமைப்பில் அந்த பாரபட்சம் குறைவாக இருந்திருக்கும் என்று கூற முடியும். சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் தலைவரான ஜோசஃப் ஸ்டாலின் ஆட்சியாளராக இருந்த போது 70 லட்சம் விவசாயிகள் கொன்று அழிக்கப்பட்டார்கள் என்பதையும் ஸ்டாலின் அந்த படுகொலைச் சாவுகள் குறித்து ‘’ஒருவர் இறந்தால் அது துக்கம் ; ஒரு கோடி பேர் இறந்தால் அது புள்ளிவிபரம் எனக் கூறியதையும் இந்த விஷயத்துடன் சேர்த்து யோசிக்கலாம். 

உலக வரலாற்றை கவனிப்பவர்களால் ஒரு விஷயத்தை அவதானிக்க முடியும். அதாவது சுரண்டல் என்பது தொழில் மயமான சமூகத்திலேயே மிகப் பெரிய அளவில் மிக அதிக அளவில் நிகழ முடியும். தொழில் மயமான சமூகம் ஒரு மலை எனில் விவசாய சமூகம் என்பது சிறு கூழாங்கல். 

சமூகக் கட்ட்மானத்தை பொருளியல் கட்டுமானமாகப் பார்க்கும் பார்வை மார்க்ஸுக்கு இருந்தது. நான் மேலே கூறியிருக்கும் விஷயங்கள் இந்திய கிராமத்தை பொருளியல் கட்டுமானமாகப் பார்ப்பதிலிருந்து விளைந்தவை என்பதை எவரும் அறிய முடியும். 

உலக சமூகங்களைப் பற்றி இப்போது பல ஆய்வுகள் வெளிவந்திருக்கின்றன. அவை இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. கடந்த 2000 ஆண்டுகளாக உலகின் ஜி.டி.பி க்கு நாடுகளின் பங்களிப்பு எத்தனை சதவீதம் என அளவிடப்பட்டுள்ளது. பொது யுகம் 1800 வரை உலக ஜி.டி.பி யில் இந்தியா மற்றும் சீனாவின் பங்கு 90 சதவீதமாக இருந்திருக்கிறது. 




தரம்பால் என்ற காந்திய அறிஞர் ‘’அழகிய மரம்’’ ( The beautiful tree) என்ற நூலை எழுதியிருக்கிறார். இந்திய பாரம்பர்ய கல்வி முறையின் மகத்துவம் குறித்து எழுதப்பட்ட நூல் அது. பிரிட்டிஷார் எவ்விதம் இந்தியக் கல்வி முறையை அழித்தனர் என்பதை பிரிட்டிஷ் ஆவணங்களைக் கொண்டே விளக்கி வெளிச்சம் போட்டு எடுத்துச் சொன்ன நூல் அது. இந்திய பாரம்பர்யக் கல்வி முறையை அழகிய மரம் என்று கூறியவர் மகாத்மா காந்தி. தனது நூலுக்கு அதனையே பெயராக சூட்டினார் தரம்பால். 

Tuesday, 8 October 2024

சுதந்திரமும் அடிமைத்தனமும்

 எனது தோழன் பள்ளி நாட்களிலிருந்து கிரிக்கெட் விளையாடக் கூடியவர். பத்து வயதிலிருந்து கிரிக்கெட் மட்டையும் கையுமாக இருப்பார். கல்லூரி கிரிக்கெட் அணியிலும் இருந்தார். பல ஊர்களுக்குச் சென்று விளையாடக் கூடியவர். 

அவரிடம் ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக ஏதேனும் கிராமத்தில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் அவர்கள் விரும்பும் விளையாட்டு உபகரணங்களான கால்பந்து , வாலிபால், பேட்மிட்டன், ரிங் பால் ஆகியவற்றை வழங்குவதற்கு உள்ள திட்டமிடல் குறித்து சொன்னேன். அவர் விளையாட்டு வீரர் என்பதால் இந்த விஷயத்தில் அவர் கூறும் யோசனைகள் நம் திட்டத்தை செழுமையாக்க பயன்படும் என எண்ணினேன். 

அவர் ஒரு அவதானத்தைக் கூறினார். 20 ஆண்டுகளுக்கு முன்னால் குழந்தைகளின் பெற்றோர் விளையாட்டு படிப்பில் குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வத்தைக் குறைக்கக் கூடும் என எண்ணி குழந்தைகளை விளையாட அனுப்ப மாட்டார்கள். ஆனால் இப்போது கிராமம் நகரம் என பேதம் இல்லாமல் எல்லா குழந்தைகளும் அலைபேசியில் உள்ள ‘’கேம்ஸ்’’க்கு அடிமையாகி இருக்கின்றனர். எல்லா குடும்பங்களுக்கும் அலைபேசி சென்று சேர்ந்து விட்டது. எனவே எல்லா குடும்ப குழந்தைகளுக்கும் இந்த அடிமைத்தனம் வந்து விட்டது என்று சொன்னார். 

எதிர்மறையான சூழ்நிலை இருப்பது நாம் ஆற்ற வேண்டிய நற்செயலை நிகழ்த்தியே ஆக வேண்டியதன் அவசியத்தை மேலும் வலியுறுத்துகிறது. 

Saturday, 5 October 2024

தோழன்

பள்ளி நாட்களிலிருந்து எனது தோழனாக இருப்பவர் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி வசிக்கிறார். பள்ளி நாட்களில் எங்கள் பகுதியில் நூல் வாசிக்கும் பழக்கம் கொண்டவர் அவர். ராஜாஜியின் சக்கரவர்த்தித் திருமகன், மகாபாரதம் ஆகிய நூல்களை அவர் தனது வீட்டின் மாடிப்படியில் அமர்ந்து வாசிக்கும் காட்சி எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. கல்லூரிப் படிப்பு முடிந்ததும் உத்யோக நிமித்தமாக சென்னை சென்று விட்டார்.  தீபாவளி, பொங்கல் என பண்டிகை நாட்களில் ஓரிரு தினங்கள் ஊருக்கு வந்து விட்டு சென்னை சென்று விடுவார் என்பதால் கடந்த 20 ஆண்டுகளாக சாவகாசமாக உரையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த இரண்டு வாரங்களில் அடிக்கடி தோழனை எங்கள் பகுதியில் காண முடிந்தது. ஒருநாள் விசாரித்த போது ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு மாறுவதால் ஒரு மாத இடைவெளி கிடைத்ததால் சொந்த ஊரில் சில நாட்கள் இருக்கலாம் என இங்கே இருப்பதாகக் கூறினார். கடந்த வாரத்தில் இரண்டு மூன்று முறை அவருடைய வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தேன். தருமபுரம் வரை இரண்டு முறை வாக்கிங் சென்றோம். பள்ளி நாட்களின் பல நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது இருவருக்கும் மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இருவருமே எங்களுக்கு 20 வயது குறைந்து விட்டதாக எண்ணினோம். இன்று இருவரும் தரங்கம்பாடி கடற்கரைக்குச் சென்று வந்தோம். வழி நெடுக வாசிப்பு குறித்தும் வரலாறு குறித்தும் பேசிக் கொண்டோம். இன்னும் இரண்டு வாரம் அவர் இங்கே இருப்பார் என்பதால் மேலும் பல முறை சந்திக்க முடியும் என்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. 

மாதர் தீங்குரல்

 எனது நண்பரின் அலுவலகத்தில் பணி புரியும் அலுவலர் சமீபத்தில் எனக்கு அறிமுகமானார். அவரது சொந்த ஊர் கீரனூர். திருவாரூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் வடக்கே வந்தால் மயிலாடுதுறை மாவட்ட எல்லை வந்து விடும். அவரது ஊரின் சிவன் கோவில் குறித்து என்னிடம் சொன்னார். பழைய தஞ்சாவூர் மாவட்டம் என்பது எப்போதுமே வியப்பளிக்கக் கூடியது. நாம் வாழும் பகுதிக்கு மிக அருகில் ஒரு நாம் அதுவரை கேள்விப்படாத ஓர் ஆலயம் இருக்கும். அந்த ஆலயம் பேராலயமாகவும் இருக்கும். இங்கே தொன்மையான எல்லா ஆலயங்களும் பேராலயங்களே. 

+1 படித்த போது கீரனூரிலிருந்து ஒரு மாணவன் எங்கள் வகுப்பின் சக மாணவனாக இருந்தான். அவனுடன் நல்ல நட்பு இருந்தது. அவன் கீரனூர் குறித்தும் அங்கே இருக்கும் ஆலயங்கள் குறித்தும் கூறியது நினைவுக்கு வந்தது. 25 ஆண்டுகளுக்கு முன் அவனைப் பார்த்தது. அதன் பின்னர் அவனைப் பார்க்கவில்லை. 

நேற்று மாலை கீரனூர் ஆலயம் சென்றிருந்தேன். ஆலயம் , ஆலயக் குளம் இரண்டுமே பெரிதாக இருந்தன. நவராத்திரி காலம் ஆகையால் ஆகையால் கோவிலில் கொலு வைத்திருந்தனர். மாலை வழிபாட்டுக்கு கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் குழுமியிருந்தனர். கிராமத்தில் அப்போது மின்சாரம் இல்லை. ஆலயயத்தின் கருவறை தீபச் சுடரில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. சுடரொளியில் ஆலயம் கண்டது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சென்ற உணர்வை அளித்தது. 

கொலுவின் ஒரு பகுதியாக ஓர் இளம்பெண்ணின் வாய்ப்பாட்டு கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பெண் மிகச் சிறப்பாகப் பாடினார். அவரது குரல் மிக உணர்ச்சிகரமாக இருந்தது. தனது பாடல்கள் மூலம் அவ்வாலயத்தில் கலைமகளின் இருப்பை அனைவரையும் உணர வைத்தார். ‘’மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்’’ என்ற பாரதியின் வரி என் நினைவில் எழுந்தது. கலை நம் உள்ளத்தைத் தொடும் போது நமது மனமும் உணர்வுகளும் நெகிழ்கின்றன. நாம் நம் மீது மானுடம் மீது மேலும் நம்பிக்கை கொள்கிறோம். அத்தகைய தருணங்கள் அரியவை ; தூயவை. 

அப்பெண் பாடி முடித்த பின் சிறிது நேரம் காத்திருந்து அவரிடம் சென்று வணங்கி கச்சேரி சிறப்பாக இருந்தது என்று சொன்னேன். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. அந்த பெண் கல்லூரிக் கல்வியை முடித்திருப்பார் என்று எண்ணினேன். ஆனால் அவர் +1 படிப்பதாகக் கூறினார். அவரது இசை அவரது ஆளுமையை உயர்த்தியுள்ளது என்பதைப் புரிந்து கொண்டேன். 

Thursday, 3 October 2024

சமூக பொருளாதார அரசியல் ...

 ஆண்டிற்கு 3 அல்லது 4 திரைப்படங்கள் பார்ப்பதுண்டு. திரைப்படங்களைத் திரையரங்கில் மட்டுமே பார்ப்பது எனது வழக்கம். சென்ற ஆண்டு ஆகஸ்ட்டில் ஒரு திரைப்படம் பார்த்தேன். அதன் பின் ஏதும் பார்த்ததாக நினைவில்லை. ஆண்டுக்கு 4 திரைப்படம் என்பது ஒப்பீட்டளவில் குறைவு எனினும் 3 மாதத்துக்கு ஒரு திரைப்படம் என்பதாக இருக்கும். திடீரென கடந்த ஓராண்டாக எந்த திரைப்படமும் பார்க்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. என்ன காரணம் என யோசித்துப் பார்த்தேன். 

ஊரில் 4 திரையரங்குகள் இருந்தன.கடந்த ஓராண்டில் அதில் இரண்டு திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. இப்போது 2 திரையரங்குகள் மட்டுமே உள்ளன. எனவே திரையிடப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. திரைப்படம் பார்ப்பதும் குறைந்து விட்டது.