Thursday, 28 April 2022

திருப்பெயர்

 வானத்தின் எல்லையின்மையை
அகத்தில்
நிறைக்கிறது
உனது  பெயர்

கூட்டுச் செயல்பாடு

கச்சத்தீவு  பயணத்தின் போது, விசைப்படகினை இயக்கும் மீனவர்களிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர்கள் அனைவரும் என் மேல் பிரியத்துடன் இருந்தனர். எங்கள் படகில் 150 பேர் வரை பயணித்திருப்போம். அந்த படகின் பயணிகள் அனைவரும் நொறுக்குத் தீனிகளை வாங்கி வைத்திருந்தனர். கடல் ஒவ்வாமை ஏற்படக் கூடும் என்பதால் எலுமிச்சைப் பழம், உப்புக் காற்றினைச் சமாளிக்க மாங்காய் , நெல்லிக்காய் என பலவிதமான தின்பண்டங்கள் அவர்களிடமிருந்தன. ஆனால் இவையெல்லாம் கடலிலேயே நாள்கணக்காக பயணிப்பவர்களின் பழக்கங்கள். எங்கள் பயணம் ஐந்து மணி நேரம் தான். கிளம்புவதற்குள் முடிந்து விடும். 



கடலில் ஒரு விஷயம் கவனித்தேன். கடலில் செல்ல செல்ல 20 - 30 நிமிடங்கள் வரை கரை தெரியும். அதன் பின் கரையைக் காண முடியாது. நம் உலகமே தண்ணீராலும் காற்றாலும் சூரியனாலும் வானத்தாலும் மேகங்களாலும் மட்டுமே சூழ்ந்திருக்கும். நடுக்கடலில் பெரிய அலைகள் இருக்காது. ஆனால் கடல்நீர் அலைந்தவாறே இருக்கும். படகு அலைகளின் மீது ஏறி ஏறி செல்லும். சமயத்தில் ஒரு பெரிய அலை எதிர்பாராமல் உருவாகி முன்நிற்கும். படகை இயக்குபவர்கள் முழுமையாக கடலின் போக்கைக் கவனித்து அதற்கு இசைவான முறையில் இயக்கிக் கொள்வார்கள். விசைப்படகை நான் இயக்க விரும்புகிறேன் என்று அவர்களிடம் கூறினேன். என்னிடம் சுக்கானைக் கொடுத்தார்கள். கார் ஸ்டியரிங் போல் தான் இருந்தது. ஆனால் முழுமையாக சுழலக் கூடியது. கணிசமான நேரம் இயக்கினேன். அப்போது மக்களிடமிருந்து தின்பண்டங்கள் படகை இயக்குபவரின் அறைக்கு வந்த வண்ணம் இருக்கும். தர்பூசணிப் பழங்கள், மாங்காய், நெல்லிக்காய் என எது வந்தாலும் அவர்கள் அனைவருமே அதைப் பகிர்ந்தே உண்பார்கள். உணவு என்ற ஒன்று கைக்கு வந்ததுமே அவர்கள் கைகள் அதனைப் பகிரத்தான் பாயும். படகை இயக்கும் குழு ஒரு கரத்தின் ஐந்து விரல்களைப் போல ஒருங்கிணைந்து தான் செயல்படுவார்கள். நான் அது குறித்து யோசித்துப் பார்த்தேன். எனது தர்க்க மனம் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தது. 

அவர்கள் இருப்பது கடலில். கரை கண்ணிலிருந்து மறைந்து விட்டால் எந்த வெளி உதவியும் கிடைக்காது. எந்த நெருக்கடி என்றாலும் படகில் இருக்கும் ஐந்து அல்லது ஆறு பேர்தான் இணைந்து சமாளிக்க வேண்டும். அவர்களுக்குள் இயல்பாகவே ஒருங்கிணைப்பு இருந்தால் தான் நெருக்கடியில் ஆகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும். அவர்கள் மனங்களில் சிறு பேதம் எவ்விதமாகத் தோன்றினாலும் அதன் விளைவை அனைவரும் சேர்ந்து அனுபவிக்க வேண்டும். 

கூட்டுச் செயல்பாட்டின் முக்கியத்துவத்தை கடல் எளிதில் பயிற்றுவித்து விடுகிறது என நினைத்துக் கொண்டேன்.  

Wednesday, 27 April 2022

கடல் பார்த்தல்

சிறு வயதிலிருந்தே கடல் பார்க்கும் ஆர்வம் எனக்கு உண்டு. கடல் எப்போதும் ஒரு தோழனாகவே மனதில் பதிவாகியிருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கடல் நோக்கி செல்வது என்பது பள்ளி நாட்களிலிருந்தே வழக்கமாயிருக்கிறது. மோட்டார் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டவுடன் வாரத்தில் ஒருநாள் மாலை கடற்கரைக்குச் சென்று இரவு வரையிலான பொழுதை அங்கே செலவிடுவது என்பது எனது வழக்கங்களில் ஒன்றானது. 25 கி.மீ தொலைவில் ஊரிலிருந்து கடல் இருப்பதால் இதனை சாத்தியமாக்க முடிந்தது. பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரைகளைத் தவிர வாணகிரி, சின்னங்குடி போன்ற ஊர்களின் கடற்கரைக்கும் செல்வேன். பௌர்ணமி தினங்களில் மாலை இரண்டு மூன்று மணி நேரம் கடற்கரையில் இருக்க விரும்புவேன். கடல் பொங்கி நுரைத்து ஆரவாரமாய் கரை நோக்கி வரும். அலையின் சப்தம் அகத்தில் பலவிதமான உணர்வுகளை உண்டாக்கும். கடலில் மூழ்கிக் குளிப்பதும் உண்டு. 

கம்பன்,

 'ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இரும் சடைகள் தாங்கித், தாங்கரும் தவ மேற்கொண்டு, 
பூழி வெம் கானம் நண்ணிப், புண்ணியத் துறைகள் ஆடி, 
ஏழிரண்டு ஆண்டில் வா என்று இயம்பினன் அரசன்; என்றாள்' 

என்று கைகேயி கூறுவதாகக் கூறுகிறான். உலகம் என்பது பெரியது. கடல் என்பது மேலும் பெரியது. மிகப் பெரிய கடலால் சூழப்பட்ட மிகப் பெரிய உலகை பரதன் ஆள வேண்டும் என்பது கைகேயியின் விருப்பம் என்பதை கம்பன் காட்டுகிறான். 

கடலைக் காணும் போது முதல் செல் அமீபா இங்கிருந்து தானே உற்பத்தியாகியிருக்கும் என்று நினைப்பேன். இந்திய மரபில் கடல் என்பது மிகவும் ஆழமான தொல்படிமம். பெருமாள் கடல்வண்ணன். கடலில் பள்ளி கொள்பவன். திருமகள் கடலின் மகள். மருத்துவத்தின் தெய்வமான தன்வந்திரி பாற்கடல் கடையப்பட்ட போது அதில் அமிர்தக் கலசத்துடன் தோன்றியவர் என்கிறது இந்தியத் தொன்மங்கள். 

எனக்கு கடல் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. கடற்கரைக்குச் செல்லும் போது அங்கிருக்கும் மீனவர்களிடம் அவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லும் போது என்னையும் கூட்டிச் செல்கிறீர்களா என்று கேட்பேன். அவர்கள் எனக்கு நீச்சல் தெரியுமா என்ற வினாவை எழுப்புவார்கள். எனக்கு நீச்சல் தெரியாது. நீச்சல் தெரியாத ஒருவரை கடலுக்குள் அழைத்துச் செல்வது பாதுகாப்பானதில்லை என்று கூறிவிடுவார்கள். 

கடல் பயணம் செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. கச்சத்தீவில் நிகழும் திருவிழாவுக்கு இந்தியர்களுக்கு இரண்டு நாட்கள் அனுமதி உண்டு. பெயரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்து கொண்டு இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்யும் விசைப்படகில் கச்சத்தீவு சென்று வரலாம். அவ்விதமாக நான் கடல் பயணம் மேற்கொண்டேன். காலை 7 மணி அளவில் எங்கள் விசைப்படகு இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டது. ஐந்து மணி நேரத்துக்கு மேல் கடலில் சென்றது விசைப்படகு. எங்கும் நீர் மயம். அலாதியான அனுபவம் அது. கடலில் இருக்கும் போது மனம் விரிவடையும். மனம் நெகிழ்ந்து மிகவும் மிருதுவான நிலைக்கு வந்து விடும். வாழ்க்கை மீதும் சக மனிதர்கள் மீதும் இருக்கும் நம்பிக்கை பன்மடங்காகக் கூடும். மதியம் 12 மணி அளவில் கச்சத்தீவு சென்றடைந்தோம். சிறிய தீவு அது. இலங்கைக்கான இந்தியத் தூதர் அங்கே வந்திருந்தார். மறுநாள் மதியம் 12 மணி அளவில் புறப்பட்டு அன்று மாலை 5 மணி அளவில் இராமேஸ்வரம் வந்து சேர்ந்தோம். 

சென்னையிலிருந்து அந்தமான் செல்ல கப்பல் போக்குவரத்து உள்ளது. அது ஒரு வார காலப் பயணம். கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் செல்லவும் கப்பல் உள்ளது. அந்த இரண்டு பயணங்களும் மேற்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பங்களில் ஒன்று. 










 

ஓட்டம்

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். வயதானவர். பணி ஓய்வு பெற்று 22 ஆண்டுகள் ஆகி விட்டன. தினசரி 5 கி.மீ நடைப்பயிற்சி மேற்கொள்வார். ஒரு மாதத்துக்கு முன்னால் காலைநடைக்குச் சென்ற போது சாலையில் தடுக்கி விழுந்து விட்டார். அடி ஒன்றும் பலமாக இல்லை. வெளிக்காயங்கள் எதுவும் இல்லை. அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை நன்றாக அறிவார்கள். ஒரு ஆட்டோ பிடித்து அவருடைய வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டார்கள். வீட்டில் உள்ளவர்கள் பரிசோதித்துப் பார்த்தார்கள். வெளிக் காயம் ஏதுமில்லை. கை கால் முகம் கழுவி ஆசுவாசப்படுத்திக் கொண்டு லேசான மயக்கம் போன்ற உணர்வு இருக்கிறது ; கொஞ்ச நேரம் படுத்து உறங்குகிறேன் என்று கூறிவிட்டு தனது அறையில் படுத்து உறங்கி விட்டார். சில மணி நேரம் கழித்து எழுந்தால் அவர் தன் வாழ்நாள் முழுதும் சேகரித்த ஞாபகங்களில் பெரும்பாலானவற்றை மறந்து விட்டார். முதல் விஷயம் அவருக்கு தமிழ் மறந்து விட்டது. தன்னைச் சுற்றியிருக்கும் குடும்ப நபர்களைப் பார்த்து ‘’நீங்களெல்லாம் யார்?’’ என்று ஆங்கிலத்தில் கேட்டார். அவர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். உடனே அவரை அள்ளிப் போட்டு உள்ளூர் பொது மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். அவரும் என்ன ஏது என்று புரியாமல் அவர்களுடன் சென்றார். மருத்துவரிடம் நடந்தவற்றை குடும்பத்தினர் விளக்கினர். மருத்துவர் சென்னை அழைத்துச் செல்ல சொன்னார். அதுவரை எடுத்துக் கொள்ள சில விட்டமின் மாத்திரைகளைப் பரிந்துரைக்க விரும்பி நண்பரிடம் அவரது பெயரைக் கேட்டார். நண்பருக்கு அவருடைய பெயரும் நினைவில்லை. அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு அருந்தக் கூறினர். அதாவது தட்டில் உணவை வைத்து அவர் முன் வைத்தனர். அதை எப்படி உண்ண வேண்டும் என்பது அவருக்கு மறந்திருந்தது. ஸ்பூனால் அவருக்கு ஊட்டி விட்டனர். ‘’இந்த பெண்மணி ஏன் இவ்வளவு துயரமாய் இருக்கிறார்? ஏன் அழுது கொண்டு இருக்கிறார்? இவர் யார்?’’ என்று ஆங்கிலத்தில் தனது மகனிடம் கேட்டார். அந்த பெண்மணி அவரது மனைவி. அவருடைய நிலையை விட அவருடைய வினாக்கள் அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்தின. அவருடைய வினாக்களின் துயரிலிருந்து விடுபட எண்ணி ஒரு மருத்துவரை அழைத்து வந்து அவர் நெடுநேரம் உறங்குவதற்காக ஒரு ஊசியைப் போட்டு அவரை சென்னை அழைத்துச் சென்றார்கள். அங்கே மருத்துவமனையில் அட்மிட் செய்து ஸ்கேன் செய்து பார்த்தனர். அவருடைய மூளைக்குச் செல்லும் குருதிக் குழாய்கள் ஒன்றிரண்டில் வழக்கமான ஓட்ட்ம் தடைப்பட்டு இருந்தது. இதற்கு மருந்து என்று எதுவும் இல்லை. தானாக சரியானால் உண்டு என்றார்கள். எதற்கும் 10 நாட்கள் இங்கேயே இருக்கட்டும் என்று கூறிவிட்டார்கள். அடுத்த நாள் காலை விடிந்ததும் பல் துலக்க டூத் பிரஷ், பேஸ்ட் கொடுத்தார்கள். ‘’இவை யாவை?’’ என ஆங்கிலத்தில் கேட்டார். அதற்கு பதில் கூறப்பட்டதும் ‘’இதை ஏன் என்னிடம் தருகிறீர்கள்?’’ என்று கேட்டிருக்கிறார். ‘’பல் துலக்க’’ என்று சொன்னதும் ‘’பல் துலக்குதல் என்றால் என்ன?’’ என்று அடுத்த கேள்வி. பின்னர் அவரது மகன் தனது தந்தைக்கு பல் துலக்க சொல்லித் தந்திருக்கிறார். ஆங்கிலத்தில் பேசுகிறாரே தவிர அவரால் ஆங்கிலம் படிக்க முடியவில்லை. அட்சரங்கள் அனைத்தும் மறந்து போய் விட்டது. ஓரிரு நாட்கள் மெல்ல நகர்ந்தன. 

மேலும் சில மருத்துவர்கள் வந்து சோதித்தனர். அதில் சீனியரான ஒரு மருத்துவர் , ‘’மனித உடல்ல மூளை ரொம்ப நுட்பமான அமைப்பு. ரொம்ப மைனூட்டா ரத்த ஓட்ட்ம் தடைப்பட்டிருக்கு. தானா சரியாகும்னு நம்புவோம்’’ என்றார். 

பத்து நாட்கள் சென்றன. அதே நிலை. எந்த முன்னேற்றமும் இல்லை. ஒருநாள் மாலைப் பொழுதில் தனது மருத்துவமனை அறையில் இருந்த ஆங்கில செய்தித்தாளை வாசிக்கத் தொடங்கினார். மருத்துவர்களுக்குத் தகவல் சொல்ல அனைவரும் ஆர்வமாக வந்து பார்த்தனர். நியூஸ் பேப்பர் படிப்பது என்ன உலக அதிசயமா அதை என்ன இவ்வளவு ஆர்வத்துடன் பார்க்கிறார்கள் என வியந்து மருத்துவர்களை நோக்கியிருக்கிறார் நண்பர். ‘’சின்ன அளவுல ரத்த ஓட்ட்ம் கூடியிருக்கிறது’’ என அபிப்ராயப்பட்டார்கள் மருத்துவர்கள். 

எங்கள் ஊர்ப்பக்கம் வயலில் பாய்ச்சல்காலில் மடை முழுமையாகத் திறக்கவில்லை என்றால் தண்ணீர் தத்தி தத்தி பாயும். அவ்வாறு பாய்கிறது போல என குடும்பத்தினர் நினைத்தார்கள். மேலும் ஐந்து நாட்கள் போனது. ஒருநாள் காலை விழித்து எழுந்ததும் தனது மனைவியை பெயர் சொல்லி அழைத்திருக்கிறார். அனைவருக்கும் சந்தோஷம். இருந்தாலும் தமிழ் இன்னும் ஞாபகம் வரவில்லை. மேலும் ஐந்து நாள் போனது. தனது பேரக்குழந்தைகளின் பெய்ர்களைச் சொல்லி அவர்கள் எங்கே என்று கேட்டிருக்கிறார். பத்து நாள் கழித்து மெல்ல மெல்ல எல்லா ஞாபகங்களும் வந்து விட்டன. 

‘’ஒரு மாதிரி தெளிவில்லாம இருக்கு. எனக்கு என்ன ஆச்சு?’’ என்று கேட்டிருக்கிறார். இந்த கேள்வி கேட்டதும் அவரை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள். 

ஊருக்கு வந்ததும் அவருடைய உறவினர்களும் நண்பர்களும் அவரைச் சூழ்ந்து நலம் விசாரிக்க வந்திருந்தார்கள். அவர்களிடம் ‘’நான் யார்?’’ என்று கேட்டார். அந்த சுற்றத்தில் நானும் இருந்தேன். 

‘’நான் யார்?’’ என்று தெரிந்து கொள்ளத்தான் மானுட குலம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக முயல்கிறது என்று நினைத்துக் கொண்டேன். 

பின்குறிப்பு :

நண்பர் இப்போது நலமாக இருக்கிறார். எல்லா ஞாபகங்களும் வந்து விட்டன. தமிழில் பேசுகிறார். ஆனால் தமிழ் அட்சரங்கள் நினைவில் இல்லை என்பதால் தமிழில் எழுதப்பட்ட எதையும் படிக்க முடியாது.  

Tuesday, 26 April 2022

சொந்த வேலை

இப்போதெல்லாம் பொழுது விடிந்தால் செய்வதற்கென ஏகப்பட்ட வேலைகள் வரிசை கட்டி நிற்கின்றன. எது பொது வேலை எது சொந்த வேலை எனப் பிரிக்க இயலாதவாறு அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்த வண்ணம் உள்ளது. வேலை என்று வந்து விட்டால் பொது வேலை மற்றவர்கள் வேலை என் வேலை என்று பார்க்க மாட்டேன். அனைத்தையும் ஒன்றாகக் கருதியே செய்வேன். என்னுடைய தொழில் சார்ந்து நான் பணிகளை மேற்பார்வையிட்டால் போதும். ஆனால் பொது வேலைகளில் அனைத்தையும் நான் தான் செய்ய வேண்டும். எது செய்தாலும் துல்லியமாக சரியாக செய்ய வேண்டும் என்று எண்ணும் மனநிலையைக் கொண்டிருப்பதால் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்வேன். பொது வேலை செய்பவன் தான் இன்னும் கொஞ்சம் முயன்றால் மேலும் நிறைய மனிதர்களை சென்றடைய முடியும் என்று தான் நினைப்பான். நிறைய மனிதர்கள் உதவி தேவைப்படும் நிலையில் இருக்கிறார்கள் என அறிவான். மெய் வருத்தம் பாராது கண் துஞ்சாது பணிகளைச் செய்வதுதான் அவற்றைச் செய்வதற்கான ஆகச் சிறந்த வழி என்பது ஓர் உண்மை. 

ஒரு கிராமம். அதில் மூன்று குக்கிராமங்கள் உள்ளடங்கி உள்ளன. அந்த கிராமத்தின் ஒரு குக்கிராமத்தையும் இன்னொரு குக்கிராமத்தையும் பிராட்கேஜ் ரயில்வே லைன் பிரிக்கிறது. சாலை மட்டத்திலிருந்து ஏழு அடி உய்ரம் பிராட்கேஜ் ரயில் பாதை உயர்ந்து விட்டது. எனவே ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குக்கிராமங்களும் துண்டிக்கப்பட்டு விட்டன. பதினைந்து அடி தொலைவு உள்ள அந்த பாதையைக் கடந்து வர பத்து கிலோமீட்டர் சுற்றி வர வேண்டும் என்ற நிலைமை. முன்னர் மீட்டர்கேஜ் ரயில் பாதை இருந்த போது ஆளில்லா ரயில் கிராசிங் இருந்திருக்கிறது. பிராட்கேஜ் ஆனதும் இல்லாமல் போனது. ரயில்வே சப் வே அமைத்தால் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குக்கிராம மக்கள் 10 கி.மீ சுற்றி வருவது குறையும். இதனை ரயில்வேயின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். முதலில் அந்த ஊரின் மூத்த குடிமகன் ஒருவரை ரயில்வேக்கு மனு அனுப்ப சொல்லலாம் என எண்ணி அவரிடம் சொல்லி அனுமதி பெற்று அந்த மனுவை எழுதினேன். முயற்சி மேற்கொள்ள அந்த மனுவே போதும். என்றாலும் அந்த கிராம மக்கள் ஆயிரம் பேரின் கையெழுத்து பெற்று அந்த மனுவை அனுப்ப வேண்டும் என்று தோன்றியது. நல்ல யோசனைதான். ஆனால் ஆயிரம் பேரின் கையெழுத்து பெற குறைந்தது பத்து நாட்கள் ஆகி விடும். இதற்கு முன் மூன்று விஷயங்களுக்காக மூன்று முறை ஆயிரம் பேரின் கையெழுத்தைப் பெற்று அனுப்பி உள்ளேன். இந்த விஷயத்தை நான்காவதாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனதின் ஒரு பகுதி கூறுகிறது. மனதில் தோன்றி விட்டால் அதனைச் செய்து விட வேண்டும் . இல்லையென்றால் குறையாகவே இருக்கும். கட்டிடப் பொறியாளர்கள் கட்டிட வரைபடம் வரைய டிராயிங் ஷீட் இருக்கும். காகித அளவு ஏ1. பொதுப் பயன்பாட்டில் இருக்கும் ஏ4 காகித பரப்பை விட எட்டு மடங்கு பெரியது.  அந்த ஷீட்டை ஏ4ன் அளவுக்கு மடித்து விட முடியும். இன்ஜினியரிங் டிராயிங் வகுப்பின் முதல் பாடமே டிராயிங் ஷீட்டை ஏ4 அளவுக்கு மடிப்பதுதான். அதன் நுனியை மட்டும் பிடித்தோம் என்றால் முழு ஷீட்டும் விரிவாகும். குறிப்பிட்ட விதத்தில் மடித்தால் ஏ4 போல இருக்கும். ஆயிரம் பேரின் கையெழுத்தையும் அந்த டிராயிங் ஷீட்டில் பெற்று விடலாம் என்று யோசித்தேன். இதைப் போல இதற்கு முன் யாரும் முயன்றிருப்பார்களா என்று தெரியவில்லை. அதற்காகவேனும் செய்து பார்க்க வேண்டும். 

முதலில் ஒரு மனு எழுதினேன். பின்னர் அந்த கிராமத்துக்குச் சென்று அங்குள்ள ஒருவருடன் இடத்தை பார்வையிட்டு வந்தேன். என் நண்பர் ஒருவரின் நண்பர் ரயில்வே பொறியாளர். என் நண்பருக்கு ஃபோன் செய்து விபரம் சொன்னேன். அவர் தன் நண்பரிடம் விசாரித்து சொன்னார். முயன்றால்  இந்த விஷயம் சாத்தியமானது தான் என்றார். நிலுவைப் பட்டியலில் முதலிடத்துக்கு வந்து விட்டது இந்த விஷயம். 

எனக்குச் சொந்தமான ஒரு ஃபிளாட் உள்ளது. அதில் என்னுடைய நிறுவனத்தின் கட்டுமானப் பணிக்கு தேவைப்படும் பிளம்பிங், எலெக்ட்ரிக் பொருட்களை போட்டு வைத்திருப்பேன். அந்த ஃபிளாட்டில் தான் அன்னதானம் செய்ய சமையல் நடைபெற்றது. ஒரு நண்பர் அதனை வாடகைக்கு வேண்டும் என்று கேட்டார். அந்த பகுதியில் வழக்கமாக உள்ள வாடகையை விட கூடுதலான வாடகை தருவதாகக் கூறினார். நண்பர் விரும்பிக் கேட்கிறாரே என்று சம்மதித்தேன். அதற்கு ஒரு வாடகை ஒப்பந்தம் போட வேண்டும். மாதிரி படிவம் அனுப்பி வைத்தார். இரண்டு நாளாக ஒரே அலைச்சல். படிவத்தை நிரப்பவேயில்லை.  இன்று இரவு தான் அதனை நிரப்பினேன். என்னுடைய பெயரையும் முகவரியையும் எழுத வேண்டும். ஃபிளாட்டின் முகவரியை எழுத வேண்டும். இவை இரண்டையும் செய்த போது ஏதோ பெரிய வேலை ஒன்றைச் செய்ததைப் போல தோன்றியது எதனால் என்று யோசித்துப் பார்த்தேன். 

Sunday, 24 April 2022

மனிதர்க்குத் தோழன்

இந்திய மரபில், மகாபாரத காவியத்திலிருந்து நாயைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பஞ்ச பாண்டவர்கள் திரௌபதியுடன் வானுலகம் நோக்கிய பயணத்தை மேற்கொள்ள இமயத்தின் மலைகளில் சென்று கொண்டிருக்கும் போது அவர்கள் அறுவருடனும் ஒரு நாய் உடன் பயணிக்கிறது. யுதிர்ஷ்ட்ரன் உடன் தொடர்ந்து பயணிக்கும் அந்த நாய் தர்மதேவதையின் அம்சம் என பின்னர் உணரப்படுகிறது. நாய்களின் தெய்வமான சரமை அளித்த சாபம் ஜனமேஜய ராஜனை வாழ்நாளெல்லாம் துரத்திய கதையைக் கூறுகிறது மகாபாரதம். பகவான் ஸ்ரீ தத்தாத்ரேயரை நான்கு வேதங்களும் நான்கு நாய்களின் ரூபத்தில் சூழ்ந்திருக்கிறது என்கிறது இந்திய தொன்மம். காலபைரவரின் வாகனம் நாய்.  

பாரதியார் தனது பாப்பா பாட்டில் குழந்தைக்கு மிருகங்களையும் பறவைகளையும் உதாரணம் கூறி அறிவுரைகள் சொல்கிறார். ‘’சின்னஞ் சிறு பறவை போல நீ திரிந்து பறந்து வா பாப்பா’’. ’’வாலைக் குழைத்து வரும் நாய்தான் அது மனிதர்க்குத் தோழனடி பாப்பா’’.

மனித குல வரலாற்றில் மனிதனுடன் முதலில் நெருங்கிப் பழகிய உயிரினம் நாய்.

***

நேற்று காலை எங்கள் பகுதியில் உள்ள தெருநாய்களை நகராட்சியிலிருந்து ஆட்கள் வந்து பிடித்துச் சென்றார்கள். அவை எழுப்பிய தீனமான குரல் மனதை உலுக்குவதாக இருந்தது. நான் சென்று பார்த்தேன். யார் என்று கேட்டேன். நகராட்சியிலிருந்து வந்திருக்கிறோம் என்றார்கள். அந்த நாய்களை என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டேன். அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை  செய்ய உள்ளதாகக் கூறினார்கள். நாய்களைப் பிடிக்க வந்திருந்த வாகனத்தின் பதிவு எண்ணைக் குறித்துக் கொண்டேன். அது வெளியூர் நகராட்சி ஒன்றின் வாகனம். அதில் அந்த ஊரின் பெயர் எழுதப்பட்டிருந்தது.அந்த வாகனத்தின் பின்னால் பைக்கில் சென்றேன். நாய்களின் மீது அக்கறை கொண்ட மேலும் நான்கு பேரும் அவரவர் வாகனத்தில் அந்த வண்டியின் பின்னால் வந்தார்கள். ஊரின் குப்பைக்கிடங்குக்கு பக்கத்தில் ஒரு இடத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் நாய்களை ஒரு அறையில் விட்டு பூட்டி விட்டு சென்று விட்டார்கள். 

நான் வீட்டுக்கு வந்து இணையத்தில் உள்ளூர் நிர்வாகம் நாய்களைப் பிடித்தலிலும் நாய்களுக்கு கருத்தடை அறுவைசிகிச்சை செய்வதிலும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என சட்டம் என்ன சொல்கிறது என படித்தேன். 

Animal Birth Control (Dogs) 2001 எனும்  விதிகளின் கீழ் உள்ளூர் நிர்வாகம் எவ்வாறு நாய்களுக்கு தடுப்பூசி இடுதலையோ அல்லது கருத்தடை அறுவை சிகிச்சையோ செய்ய வேண்டும் என்பதற்கான குறிப்புகளை அளிக்கிறது. 

1. ஒவ்வொரு நகராட்சியிலும் கமிஷனரைத் தலைவராகக் கொண்டு எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். கால்நடை பராமரிப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், பொது சுகாதாரத் துறையையின் அலுவலர், ஒரு கால்நடை மருத்துவர், எஸ். பி.சி.ஏ பிரதிநிதிகள் இருவர், பிராணிகள் நல வாரிய உறுப்பினர், பிராணிகளின் நலனில் அக்கறை கொண்ட உள்ளூர் பிரமுகர் ஒருவர் என அந்த குழுவின் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இந்த குழுவுக்கு ‘’தெருநாய்கள் கண்காணிப்பு குழு ‘’ என்று பெயர். 

2. நாய்கள் குறித்து உள்ளூர் நிர்வாகத்துக்கு வரும் எழுத்துப்பூர்வமான புகார்கள் இந்த குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவர்களே இந்த விஷயத்தில் உரியதைச் செய்ய வேண்டியவர்கள். 

3. ஒரு பகுதியில் உள்ள தெருநாய்களை பிடித்துச் செல்லும் முன் உள்ளூர் நிர்வாகத்தால் குறிப்பிட்ட நோக்கத்துக்காக தெருநாய்கள் பிடித்துச் செல்லப்பட உள்ளன என முறையான தெளிவான அறிவிப்புகள் அந்த பகுதி முழுவதும் செய்யப்பட வேண்டும். 

4. தடுப்பூசி இடப்படுதலில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் கருத்தடை அறுவைசிகிச்சை செய்வதின் முறைகள் குறித்தும் விரிவாக இந்த சட்டத்தில் பேசப்படுகிறது. 

ஓர் அறிவிப்பு செய்து விட்டு நாய்கள் பிடிக்கப்படுவது என்பது என்ன நிகழ்கிறது என அங்கிருப்பவர்களுக்கு முன்னரே தெரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு உருவாகும். அந்த பகுதியின் மக்களுக்கு அது ஒரு விழிப்புணர்வை அளிக்கும். 

Animal Birth Control (Dogs) 2001 விதிகளின் நகலை இணைத்து மாவட்ட ஆட்சியருக்கு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்து இந்த நிகழ்வில் விதிகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளனவா என விசாரணை செய்யுமாறும் விதிமீறல் நிகழ்ந்திருந்தால் அதனை நிகழ்த்தியவர்கள் மீது உரிய மேல்நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டு ஒரு மனுவை அனுப்பினேன். அந்த மனுவின் நகலை உள்ளாட்சித் துறை செயலாளருக்கும் கால்நடைத் துறை செயலாளருக்கும் அனுப்பி வைத்தேன். உள்ளூர் நிர்வாகத்திடம் நடந்த சம்பவம் குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் விபரங்கள் கோரியிருக்கிறேன். 

மக்களாட்சியில் பொறுப்புகளும் கடமைகளும் அனைவருக்கும் உள்ளன. அந்த பொறுப்பும் கடமைகளுமே மக்களாட்சியின் உயிராக உள்ளன. 

நாய்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கட்டிடத்துக்கு மீண்டும் இரண்டு முறை சென்று அவை எவ்வாறு உள்ளன என்று பார்த்து விட்டு வந்தேன். 

Wednesday, 20 April 2022

உவகை

உவகை
-------------

இன்று 
நீங்கள் 
ஏதோ ஒரு விதத்தில்
நிறைவும்
உவகையும்
கொள்ளலாம்

ஒரு செம்பருத்தியைப் பார்க்கும் போது
செவ்வரளி மலர் காணும் போது
தாயைச் சுற்றிக் கொண்டிருக்கும்
குட்டிநாய்கள் குழுவைக்
கடந்து செல்லும் போது
வாசல்களுக்கு முன்னால்
முடிவிலி சாத்தியங்களுடன்
கலைந்து கிடக்கும் 
கால்அணிகளை வரிசையாக அடுக்கும் போது
வழி கேட்கும் பாதசாரிக்கு
நம்பிக்கையளிக்கும் விதத்தில் பதிலளிக்கும் போது
சிறு குழந்தை ஒன்றை 
அக்குழந்தை போதும் போதும் என சொல்லும் வரை
தூக்கிப் போட்டு பிடிக்கும் போது
உங்கள் மீது நம்பிக்கை வைத்து
உங்களிடம் பிச்சையெடுப்பவரிடம்
அகத்தடைகள் ஏதுமின்றி பிச்சையிடும் போது
ஒரு சொல்
ஒரு முழு வாழ்வென
மலர்வதை
உணரும் போது
கேட்கும்
ஓர் இசையால்
எல்லையில்லாப் பெருவெளி சஞ்சாரம்
நிகழ்த்தும் போது
கோடையின்
உச்சமான பொழுதில்
ஏதேதோ பணிகளுக்காக
ஏதேதோ பொறுப்புகளுக்காக
ஏதேதோ கடமைகளுக்காக
அலைந்து கொண்டிருப்பவர்களில்
யாரோ ஒருவருக்கு
அருந்த நீர் தரும் போது
யாரோ ஒருவரை
மன்னிக்கும் போது

இன்று
நீங்கள்
ஏதோ ஒரு விதத்தில்
நிறைவும்
உவகையும்
கொள்ளலாம் 

Monday, 18 April 2022

சங்கப் பலகை

எனக்கு ஹைதராபாத்தில் ஒரு நண்பர் இருக்கிறார். இங்கிருந்து முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஹைதராபாத் சென்று ஒரு வணிகத்தைத் தொடங்கி இப்போது ஒரு சிறு ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். தனது உழைப்பாலும் திறமையாலும் முன்னுக்கு வந்தவர். எதனையும் கலாபூர்வமாக நேர்த்தியாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர். தான் வசிக்கும் இடத்தை தனது சுற்றுப்புறத்தை அத்தனை தூய்மையாக வைத்திருப்பவர். தூய்மைக்கு தனது வாழ்வில் அவ்வளவு இடம் கொடுப்பவர்கள் அரிதினும் அரிதானவர்கள். என் மீது மிகுந்த பிரியம் கொண்டவர். எப்போதாவது ஊருக்கு வருவார். அப்போது என்னைப் பார்க்க வருவார். சில மாதங்களுக்கு முன்னால் வந்திருந்த போது ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து சொல்லிக் கொண்டிருந்தேன்.  

என்னைச் சந்திக்கும் - நான் சென்று சந்திக்கும் - எவரிடமும் நான் ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து கூறுவேன். அந்த பணிகள் சமூகத்தின் சூழலை சமூக நிலையை ஆடி போல் பிரதிபலிக்கின்றன. இந்த செயல்பாடுகள் குறித்து கேட்டறிவதன் மூலம் சமூகத்தின் நிலையை உணர முடியும். தமிழ்ச் சூழலில் , சமூகப் புரிதல் என்பது மிகவும் குறைவானது. குடிமைப் பண்புகளும் முழுமையான போதுமான அளவில் இல்லை. இன்று கூட ஒரு சம்பவம் நடந்தது. நான் வங்கியில் பணம் செலுத்த வரிசையில் நின்று கொண்டிருந்தேன். நேரம் அப்போது மாலை 3.25. ஒரு பெண்மணி நகையை மீட்க வேண்டும் என்று வங்கிக்கு வந்திருக்கிறார். வங்கி ஊழியர் அவரிடம் வங்கி நேரம் இன்னும் ஐந்து நிமிடத்தில் முடிந்து விடும். இப்போது நகையை மீட்கும் நடைமுறைகளை மேற்கொள்ள முடியாது. நாளை வாருங்கள் என்று கூறினார். நான் என்னுடைய வரிசையிலிருந்து வெளியே வந்து அந்த ஊழியரிடம் நகைக்கடன் வட்டியுடன் எவ்வளவு செலுத்த வேண்டுமோ அந்த தொகையில் ரூ. 2000 மட்டும் குறைவாக அந்த பெண்மணியின் நகைக்கணக்கில் கட்டச் சொல்லுங்கள். பணம் கட்ட வந்தவரை பணத்துடன் திரும்பிச் செல்லுங்கள் என்று கூறாதீர்கள் என்று சொன்னேன். சில வினாடிகள் யோசித்து விட்டு சரி அவ்வாறே செய்யுங்கள் என்று கூறினார். ரூ. 30,000 அவர் செலுத்த வேண்டும். இரண்டாயிரம் ரூபாய் பாக்கி வைத்து விட்டு ரூ. 28,000 பணம் செலுத்தி விட்டார். மீதியை நாளை காலை செலுத்தி விட்டு நகையை மீட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினேன். 

பணத்துடன் திருப்பி அனுப்பினால் இன்று மாலைக்கும் நாளை காலைக்கும் இடையில் அந்த பெண்ணின் சூழலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அந்த பெண் வைத்திருக்கும் பணத்தை அவளது கணவன் எடுத்துச் சென்று அரசு மதுக்கடையில் குடித்து அழிக்கலாம். அந்த பெண் தவணைக்கு கடன் வாங்கியிருந்தால் தவணைக்காரர்கள் நெருக்கி கடன் வட்டிக்காக 5000 அல்லது 10,000 வாங்கிச் சென்றிடக் கூடும். அந்த பெண்ணால் தவணைக் கடனையும் முழுமையாகத் தீர்க்க முடியாது ; வங்கியில் உள்ள நகையையும் மீட்க முடியாது. அந்த பெண்ணின் சிரமம் எனக்குத் தெரியும். யாரும் என்னிடம் வந்து சொல்வதில்லை. நான் ஒரு நாளைக்கு பெரும்பாலான பொழுது இந்த மனிதர்கள் மத்தியில் இருக்கிறேன். அவர்களுடைய சூழலைக் காண்கிறேன் என்பதால் என்னால் இந்த நிலையை உணர முடிகிறது. வங்கி ஊழியருக்கு இந்த சிரமங்கள் புரியாது. ‘’எருதின் வலி காகம் அறியாது’’ என்பார்கள். எருதின் முதுகில் திமிலில் அதற்கு சிறு காயம் ஏற்படும். காகம் அதன் முதுகில் ஏறி அமர்ந்து அந்த காயத்தைக் கொத்தி கொத்தி எருதின் ரத்தத்தையும் சதையையும் தின்னும். எருதால் அந்த காகத்தைத் துரத்த முடியாது. நான் எப்போதோ வங்கிக்குச் செல்பவன் என் கவனத்தில் வந்த ஒரு விஷயத்தில் என்னால் முடிந்ததைச் செய்தேன். வங்கி ஊழியருக்கு அந்த சமூகப் பிரக்ஞை இருக்குமானால் நூற்றுக்கணக்கானோருக்கு அவரால் உதவ முடியும். 

என் உரையாடல்கள் சமூக யதார்த்தங்கள் குறித்த முன்வைப்புகளாகவே இருக்கும். அதனை சமூகத்தின் முன் வைப்பது எனது பணிகளில் ஒன்று. 

ஹைதராபாத் நண்பர் என்னிடம் நேற்று ஃபோனில் பேசினார். ‘’காவிரி போற்றுதும்’’க்காக தன்னால் என்ன உதவி செய்ய முடியும் என்று கேட்டார். அவரிடம் நான் சில விஷயங்களைக் கூறினேன். 

1. நிதி இருந்தால் மட்டுமே பொதுப்பணி நடக்க முடியும் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. அது முழு உண்மை அல்ல. நிதி ஒரு காரணி. முக்கியமான காரணி. ஆனால் ஒரு செயல் நிகழ ஒரு குழு உருவாக நிதி தேவையில்லை. செயல் செய்ய வேண்டும் என்ற உணர்வே முதன்மையாக தேவை. உங்கள் உணர்வை ‘’காவிரி போற்றுதும்’’க்கு கொடுங்கள். உங்கள் மனதில் சிறு இடத்தை ‘’காவிரி போற்றுதும்’’க்கு கொடுங்கள். ’’காவிரி போற்றுதும்’’ மின் பணிகள் செயல்கள் அனைத்தையும் உங்களுடையதாகவே எண்ணுங்கள். அது நீங்கள் நிதி உதவி செய்த பணியாக இருந்தாலும். நிதி உதவி செய்யாததாக இருந்தாலும். 

2. பலருக்கு சேவைப் பணிகள் செய்ய ஆர்வம் உண்டு. என்னுடைய கணிப்பில் எல்லாருக்குமே ஏதோ விதத்தில் யாரோ ஒருவருக்கு உதவ வேண்டும் என்றே நினைக்கிறார்கள். எல்லாரும் யாரோ ஒருவருக்கு உதவி செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள். அது பிரக்ஞைபூர்வமாக உணர்வுபூர்வமாக நிகழ்ந்தால் மகத்தான பல விளைவுகளை உருவாக்கும். 

உங்களால் 365 நாட்கள் முழுமையாக சேவைப் பணிகள் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு நாள் செய்யுங்கள். வருடத்தில் ஒரு நாள். நம் குழுவில் 365 நண்பர்கள் இருப்பார்கள் என்றால் அவர்கள் ஒவ்வொருவராலும் வருடத்தில் ஒருநாள் ஒரு பொதுப்பணியைச் செய்ய முடியுமானால் ‘’காவிரி போற்றுதும்’’ 365 நாளும் பொதுப்பணி ஆற்ற முடியும் . அவ்வாறு நிகழ்ந்தால் 365 நண்பர்களும் 365 நாளும் பொதுப்பணி ஆற்றுகிறார்கள் என்பது தானே உண்மை! 

நாம் நம் உடல் உழைப்பைக் கொடுக்கும் செயல் மட்டும் நாம் செய்யும் செயல் அல்ல. நாம் உணர்வால் உணரும் மனதால் சிந்திக்கும் செயலும் நாம் செய்யும் செயலே. 

3. உங்களுக்கு மரம் நடுதலில் ஆர்வம் இருக்கலாம். கல்விப் பணியில் விருப்பம் கொள்ளலாம். உணவளித்தலை பேரறம் என நீங்கள் கருதலாம். தொழில் பயிற்சி அளிப்பதில் நம்பிக்கை இருக்கக் கூடும். பல்வேறு விதமான விழிப்புணர்வு பணிகளை முன்னெடுக்க உங்களிடம் திட்டங்கள் இருக்கக் கூடும். அனைவரையும் ‘’காவிரி போற்றுதும்’’ தனது தளத்திற்குக் கொண்டு வர விரும்புகிறது. உங்களை இணைத்துக் கொண்டு முன்னகர விரும்புகிறது. 

4. உங்கள் எண்ணங்களை ஆர்வங்களை விருப்பங்களை மனத் தடை ஏதுமின்றி கூறுங்கள். நாம் சேர்ந்து சிந்திப்போம். 

5. இறைவனின் படைப்பில் சிறு கூழாங்கல்லும் உள்ளது. பெருமலையும் உள்ளது. படைத்தவனின் கருணை பெருமலையின் மேலும் சிறு கூழாங்கல்லின் மேலும் ஒன்றாகவே உள்ளது. 

நண்பர் நான் கூறியவற்றை ஆழமாக உள்வாங்கிக் கொண்டார். 

தன்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்டார். எனது அனுபவத்திலிருந்து அவருக்கு உகந்த ஒன்றைப் பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

நான் சில கணங்கள் யோசித்துப் பார்த்து அவருக்கு ஒரு பரிந்துரையை வழங்கினேன். அவருடைய ஊரில் அவரது நண்பர்களில் பொதுப்பணி செய்ய வேண்டும் என்று எண்ணும் 10 நண்பர்களை ‘’காவிரி போற்றுதும்’’ உடன் தொடர்புக்குக் கொண்டு வர முடியுமா என்று கேட்டேன். சேவையில் ஆர்வம் உள்ள 10 நண்பர்கள் இருக்கிறார்கள் . அவர்களுடன் பேசி அவர்களை இணைக்க முடியும் என்று சொன்னார். எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். 

அந்த அணிக்கு ஒரு பணியைப் பரிந்துரையுங்கள். அதனை ஒரு துவக்கமாகக் கொண்டு ‘’காவிரி போற்றுதும்’’மில் இணைகிறோம் என்றார். 

அணியினரை சந்தித்தாலோ அல்லது உரையாடினாலோதான் அவர்கள் என்ன விதமான பணியை விரும்புகிறார்கள் என்பது தெரியும். சந்திக்காமல் உரையாடாமல் எப்படி பரிந்துரைப்பது என்றேன். தன்னை ஒத்த மனநிலை கொண்டவர்கள் அவர்கள் என்பதால் தான் ஏற்கும் ஒன்றை அனைவரும் ஏற்பார்கள் என்றார். 

பெருமாள் கோவில் உள்ள ஒரு கிராமத்தில் இராமாயண நவாஹம் ஒன்றைச் செய்து அங்கிருக்கும் விவசாயிகளுக்கு 1250 தென்னம்பிள்ளைகளும் 850 மாங்கன்றுகளும் வழங்க வேண்டும் என்று நண்பரிடம் விண்ணப்பித்துக் கொண்டேன். நண்பர் எவ்வளவு தொகை ஆகும் என்று கேட்டார். ஒரு தென்னம்பிள்ளையின் விலை ரூ. 50. ஒரு ஒட்டு மாங்கன்றின் விலை ரூ. 40. தென்னம்பிள்ளைக்கு ரூ. 62,500ம் மாங்கன்றுக்கு ரூ. 34,000 ம் என மொத்தம் ரூ. 96,500 ஆகும் என்று சொன்னேன். 

நண்பர் சில வினாடிகள் யோசித்து விட்டு ‘’தொகையை ஏற்பாடு செய்து விடலாம். நவாஹத்தைச் சிறப்பாக நடத்துங்கள்’’ என்றார். 

கேரளாவில் ஒரு வழக்கம் உண்டு. தென்னம்பிள்ளைகளின் முன்னிலையில் இராமாயணம் சொல்வார்கள். அவை இராமாயணத்தின் மகத்துவத்தை உள்வாங்கிக் கொள்கின்றன என்பது நம்பிக்கை. ஒன்பது நாட்கள் நவாஹம் முடிந்த பின் இராமாயணம் கேட்டவர்கள் அதனைத் தங்கள் வீடுகளின் தோட்டத்தில் நடுவார்கள். தென்னை மனிதர்களுடன் வாழ்வுடன் இணைந்திருப்பதைப் போல காப்பிய மாந்தர்களின் மேலான உணர்வுகளும் தங்கள் வாழ்வைச் சூழ்ந்திருக்கும் என்பது அந்த பிரதேசத்தின் நம்பிக்கை. 

சங்கப் பலகை என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். சங்கப் பலகை ஒருவர் அமரும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். அவர் அமர்ந்த பின் ஒத்த மனம் கொண்ட இன்னொருவர் வந்தால் அந்த பலகை பெரிதாகி இன்னொருவர் அமர இடமளிக்கும். ஒத்த மனம் கொண்டோர் வர வர பலகை பெரிதாகிக் கொண்டே செல்லும். ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு சங்கப் பலகை என அந்த தருணம் என்னை எண்ணச் செய்தது. 

Saturday, 16 April 2022

நினைவில் காடுள்ள மிருகம்

இன்று காலையிலிருந்து ஏகப்பட்ட அலைச்சல். சித்திரை மாதம் தொடங்கி சில நாட்கள் ஆகியிருந்தாலும் இன்னும் பங்குனி வெயிலின் தாக்கம் மாறாமல் இருக்கிறது. அக்னி நட்சத்திரம் இனிமேல் தான் என்பது இன்னொரு செய்தி. முழு நாளும் வெயிலில் அலைந்து கொண்டிருந்தேன். மாலை வீட்டுக்கு நண்பர் ஒருவர் வந்திருந்தார். புதிதாக வெளியாகியுள்ள ‘’தேவதேவன் கவிதைகள்’’ முழுத் தொகுப்பை எனக்கு வாசிப்பதற்காகக் கொடுக்க வந்திருந்தார். இரண்டு தொகுதிகளாகக் கொண்டு வந்திருக்கிறார்கள் தன்னறம் பதிப்பகத்தினர். மிக நேர்த்தியான பதிப்பாக வெளிவந்திருக்கிறது. புத்தகத்தை கையில் எடுத்துப் பார்த்தேன். ஒரு வாசகன் புத்தகம் கையில் இருக்கும் போது அடையும் மகிழ்ச்சிக்கு சமமாக உலகில் வேறொன்று இருக்குமா என்றே எண்ணுவான்.  

‘’நீங்க இன்னும் வாசிக்கலையா?’’ நண்பரிடம் நான் கேட்டேன். 

‘’என்னோட மைண்ட் செட்டுக்கு கவிதைகள் கொஞ்சம் தூரமா இருக்கு’’

‘’அதெல்லாம் நீங்களா நினைச்சுக்கறது. நாம சேந்து ஒரு கவிதையை வாசிப்போம். ‘’ என்று கூறி தொகுப்பின் முதல் கவிதையை வாசிக்கத் தந்தேன். 

இரண்டு மாபெரும் உண்மைகள்
------------------------------------------------------

நான்தான் அந்தக் கடவுள் 
என உணர்ந்த ஒரு தருணமும்

நான் முழுமையாய் அழிந்த போதே
இந்த உலகம் பேரமைதியில் ஜொலித்ததும்


***

‘’நான்தான் அந்தக் கடவுள் ... ‘’ என்று தொடங்கி வாசித்தார். 

புத்தகத்தை அவர் கையிலிருந்து வாங்கிக் கொண்டேன். ‘’இரண்டு மாபெரும் உண்மைகள்’’ என தலைப்பை வாசித்து விட்டு கவிதையை வாசித்தேன். 

‘’இந்த கவிதை தலைப்புலயே ஆரம்பிச்சிடுது. சிறுகதையும் அப்படித்தான். அதனால எந்த கவிதையை வாசிச்சாலும் அந்த கவிதையோட தலைப்பு அந்த கவிதைல முக்கியமான பங்கு வகிக்குதுன்னு நாம புரிஞ்சுக்கணும்.  சரி ! இந்த கவிதையை நீங்க எப்படி வாசிக்கறீங்க?’’

நண்பர் இந்த கவிதையில் ஒரு முரண் காட்டப்பட்டுள்ளது என்றார். 

‘’அது ஒரு வாசிப்பு. ஆனா இன்னொரு வாசிப்பு இருக்கு. அதை சொல்றன். உங்களுக்கு ஓப்பன் ஆகுதான்னு பாருங்க.’’

நான் பேசத் தொடங்கினேன். 

’’கவிஞர் அந்தக் கடவுள்னு சொல்றார். அப்ப யாரோ ஒருத்தன் அவன் தான் கவிதைல வர்ர ‘’நான்’’ அந்தக் கடவுளைப் பத்தி கேள்விப்படறான். யோசிக்கறான். எப்பவும் நினைச்சுக்கிட்டு இருக்கான்.  கடவுளோடயே சேர்ந்து பிராத்திக்கறான். அவருக்குப் பக்கத்துல போகணும்னு நினைக்கறான்.  ‘’நான்’’க்கு எப்பவுமே ஒரு குவெஸ்ட்டும் என்கொயரியும் டிராவலும் இருந்திட்டே இருக்கு. ஒன் ஃபைன் மொமண்ட்,  ‘’நான்’’க்கு ‘’ நான்தான் அந்தக் கடவுள்’’னு அனுபவம் ஆகுது. இதைத்தான் கவிஞன் 

நான்தான் அந்தக் கடவுள் 
என உணர்ந்த ஒரு தருணமும் 

அப்படீன்னு சொல்றான். 

அடுத்தது,

நான் முழுமையாய் அழிந்த போதே
இந்த உலகம் பேரமைதியில் ஜொலித்ததும்

னு சொல்லிடறான். 

இந்த ரெண்டு மொமண்ட்டும் பக்கத்துல பக்கத்துல இருக்கா? இல்ல தூரமா இருக்கா? பக்கம்னா எவ்வள்வு பக்கம் ? தூரம்னா எவ்வளவு தூரம்? இப்படி வச்சுப்போம். முதல் பாரா ஒரு மனுஷனோட வாழ்க்கைல இளமையில ஏற்படுதுன்னு வச்சுப்போம். அடுத்த பாரா அவனோட முதுமைல ஏற்படுமா? யாராவது சிலருக்கு முதல் பாரா அனுபவமும் ரெண்டாம் பாரா அனுபவமும் அடுத்தடுத்து நிகழுமா? அப்ப அவன் எப்படிப்பட்டவன்? முன்னாடி இருக்கறவன் எப்படிப்பட்டவன்?’’

நான் சிறிய இடைவெளி கொடுத்தேன். என் அகத்தில் சொற்கள் பொங்கிக் கொண்டிருந்தன. 

‘’நம்ம மரபுல மஹா வாக்கியங்கள் நாலு. ‘’பிரக்ஞானம் பிரம்மஹ’’, ‘’அஹம் பிரம்மாஸ்மி’’, ’’தத்வமஸி’’, ’’அயம் ஆத்மா பிரம்ம’’ . இந்த நாலு மகா வாக்கியங்களோட பாதைல இந்த கவிதையை அணுகிப் பாருங்க. இன்னும் குறிப்பா ‘’தத்வமஸி’’ ‘’அஹம் பிரம்மாஸ்மி’’ங்கற ரெண்டு மகா வாக்கியங்கள் இந்த கவிதைக்கு இன்னும் நெருக்கமா இருக்கு. 

ஒரு ஆத்ம சாதகன் தன்னோட சாதனைல தன்னோட அகங்காரத்தை முழுமையா அழிக்கறான். அப்ப அவனுக்கு ‘’நான்தான் அந்தக் கடவுள்’’ங்கற அனுபவம் ஏற்படுது. அந்த அனுபவம் ஏற்படும் போது இத்தனை நாள் பொங்கிக்கிட்டு இருந்த அவனோட அகம் அமைதியடையுது. அந்த அமைதி நிறையும் போது மொத்த உலகமும் அவனுக்கு அமைதியாயிடுது. 

இந்த ரெண்டு மொமண்ட்டும் ஒரே மொமண்ட்தான். ஆனா கவிதைல ரெண்டு மொமண்ட்டா எழுதப்படுது. 

கவிதையோட தலைப்பு ’’இரண்டு மாபெரும் உண்மைகள்’’. கவிஞன் ‘’இரண்டு உண்மைகள்’’னு தலைப்பு வச்சிருக்கலாம். ஏன் ‘’இரண்டு மாபெரும் உண்மைகள்’’னு தலைப்பு வச்சான்?

யோக மரபுல ‘’ஆக்ஞா’’ வும் ‘’சகஸ்ர ஹாரம்’’ மும் பக்கத்துல பக்கத்துல இருக்கு. ஆன்ம சாதகர்கள் லட்சம் பேருன்னா அதுல ஒருத்தர் தான் ஆக்ஞாவுக்கு வர்ராங்க. ஆக்ஞாவுக்கு வந்த சாதகர்கள்ல லட்சத்துல ஒருத்தர் தான் சகஸ்ரஹாரத்துக்குப் போறாங்க இந்த ‘’இரண்டு மாபெரும் உண்மைகள்’’ல ஒரு மாபெரும் உண்மை அனுபவமாகறதுக்கும் இன்னொன்னு அனுபவமாகறதுக்கும் இடையே நிறைய ஜென்மம் ஆகலாம். ஜீவன் முக்தர்களுக்கு இந்த ‘’இரண்டு மாபெரும் உண்மைகள்’’ ஒரே மொமண்ட்ல அனுபவம் ஆகலாம். ‘’

என்று பேசி முடித்தேன். 

என் சொற்கள் நிரம்பியிருந்த அறையில் அப்போது மௌனம் நிரம்பியிருந்தது. 

இன்று நாள் முழுக்க கடுமையான அலைச்சல் . சந்திப்புகள். ஏற்பாடுகள். சற்று சோர்வுடன் தான் இருந்தேன். பேசி முடித்ததும் வேறொருவன் ஆகி விட்டதாக உணர்ந்தேன். ‘’நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது ‘’ என்ற தேவதேவன் வரி நினைவில் வந்தது. 

Thursday, 14 April 2022

லௌகிகம்

லௌகிகம் பல்வேறு கூறுகளால் ஆனது. அவற்றில் கண்ணுக்குத் தெரியும் பிரத்யட்சமான விஷயங்களும் உண்டு ; கண்ணுக்குத் தெரியாத அம்சங்களும் உண்டு. தொழில் , வாசிப்பு மற்றும் பொதுப்பணிகள் சார்ந்து லௌகிகத்தை நான் எப்போதுமே கூர்ந்து கவனிப்பவன்.  அது கணந்தோறும் பெருகுவது ; விரிவாவது. இந்தியா பல்லாயிரம் ஆண்டுகளாக லௌகிகத்தின் உச்சத்தில் இருந்த நாடு. எனினும் லௌகிகத்துக்கு அப்பால் இருக்கும் ஆன்மீகமான நிலையையே பெரும் விழுமியமாக இந்தியா கொண்டிருந்தது. கொண்டிருக்கிறது. இந்தியாவின் பெருமை என்பது அதுவே.