Sunday, 3 December 2023

சித்திரம் - கவிதை - கடிதம்

லலிதம்
-------------

மென்குளிர் சிறு தடாகம்
மலர்ந்திருக்கிறது முழுமை கொண்ட பத்மம்
தடாகத்தின் கரையில் வான் நோக்கி விரிந்திருக்கிறான்
மரங்களின் கொற்றவன்
மரத்தின் உகிரில்
மலரமர்வில் அமர்ந்து
மோனித்திருக்கிறான்
புத்தன்
மென்மை
மெல்லிய புன்னகை
அவன் மௌனமும் மென்மை 
அன்றொரு நாள்
அவனுக்கு அன்னமிட்டவள்
இன்று 
காட்டு மலர்கள் சேகரித்து
புத்தனுக்கு சூடுகிறாள்
மகவை அலங்கரிக்கும் அன்னையென

***

அன்புள்ள கவிஞர் பிரபு அவர்களுக்கு,

வணக்கம்!  

மிகவும் அருமையான, மனதை தொடும் வரிகள் ஒவ்வொன்றும். முதலில் அதை பார்த்த பொழுது சிறு குழந்தை போல் ஒரு சிறிய வெட்கம் கொண்ட புன்னகை தான் என்னுள் தோன்றியது. ஒவ்வொரு வரிகளும் ஓவியத்திற்கும், புத்தருக்கும் மிக சிறந்த அணிகள் என்றே அமைந்தன. என்னுடைய அன்பு நன்றிகள்!

அன்புடன்,
ல ரா

***

 

Saturday, 2 December 2023

இராமாயண நவாஹமும் தென்னம்பிள்ளைகளும்

நமது மரபில் சப்தாகம் நவாஹம் என இரு விஷயங்கள் உள்ளன. அதாவது, சப்தாகம் என்பது ஏழு நாட்களில் பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் பால லீலைகளைக் குறிக்கும் பாகவதத்தை  பாராயணம் செய்வது ; நவாஹம் என்பது பகவான் ஸ்ரீராமனின் வாழ்க்கைக் கதையான ஸ்ரீராமாயணத்தை ஒன்பது நாட்களில் பாராயணம் செய்வது.  நமது நாட்டினருக்கு ஸ்ரீராமனும் ஸ்ரீகிருஷ்ணனும் எப்போதும் குழந்தைகள். எனவே தங்கள் குழந்தைகளின் கதையாகவே ராமாயணத்தையும் கிருஷ்ண சரிதத்தையும் காண்கின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக நமது தேசம் தன் தலைமுறைகளுக்கு அந்த கதையைக் கூறிக் கொண்டேயிருக்கிறது. 

கேரளாவில் ஒரு வழக்கம் உண்டு. ஸ்ரீராமாயணப் பாராயணத்தைத் தொடங்கும் போது தென்னம்பிள்ளைகளை அங்கே வைத்திருப்பார்கள். தினமும் கொஞ்சம் நீர் வார்ப்பார்கள். ஸ்ரீராமாயணப் பாராயணம் பட்டாபிஷேக வைபவத்துடன் நிறைவு பெறும் போது தென்னம்பிள்ளைகளை அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு வினியோகிப்பார்கள். தென்னை உயிர்த்தன்மையும் உணர்வுத்தன்மையும் மிக்க தாவரம் என்பதால் அது ராமன் கதையை ராமன் புகழை தன் நினைவில் வைத்திருந்து நடப்படும் வீட்டுக்கு நன்மங்களங்களை அளிக்கும் என்பது மலையாளிகளின் நம்பிக்கை. 

’’காவிரி போற்றுதும்’’ தற்போது செயல் புரியும் கிராமம் ஊருக்கு அருகில் உள்ள கிராமமாகும். ‘’காவிரி போற்றுதும்’’ தனது முதற் பணியைத் துவக்கிய கிராமம் ஊரிலிருந்து 45 நிமிட பயண தூரத்தில் உள்ள கிராமம் ஆகும். எனது மோட்டார்சைக்கிள் பயணத்தில் பல இந்திய கிராமங்களை பல இந்திய கிராம மக்களை பல இந்திய கிராம மக்களின் முகங்களை நேரடியாகக் கண்டவன் என்ற அடிப்படையிலான புரிதலில் கிராம மக்கள் மீது கிராம மக்கள் நிலை கொண்டிருக்கும் பண்பாட்டு அடிப்படையின் மீது நம்பிக்கை கொண்டு கிராம மக்களுக்கான பணியைத் துவக்கினேன். ஒரு கிராமத்தில் இருக்கும் எல்லா வீடுகளுக்கும் அவர்களுக்குத் தேவையான மரக்கன்றுகளை முழுமையாக வழங்குவது என்னும் எண்ணத்துடன் அந்த கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டையும் தொடர்பு கொண்டு கணக்கெடுப்பைத் துவக்கினேன். அந்த கிராமத்திற்குச் செல்வது அதுவே முதல் முறை. அந்த கிராமத்தின் பெயரை பேருந்து பெயர்ப்பலகையில் கண்டது அன்றி அந்த ஊர் பற்றி வேறு ஏதும் அறியேன். இருப்பினும் கிராம மக்கள் நல்லெண்ணத்தையும் நன்முயற்சிகளையும் மிகச் சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்னும் நம்பிக்கையுடன் அவர்களை அணுகினேன். என்னை வரவேற்றார்கள். என் முயற்சியைப் பாராட்டினார்கள். என்னை அவர்களில் ஒருவனாக ஏற்றார்கள். ஐந்நூறு வீடுகள் கொண்ட அந்த கிராமத்தில் ஒரு நாளைக்கு 50 வீடுகளில் மட்டுமே கணக்கெடுக்க முடியும். ஒரு வீட்டுக்கு 10 நிமிடம் ஒதுக்கினால் கூட 50 வீடுகளை நிறைவு செய்ய 8 மணி நேரம் ஆகி விடும். பதினைந்து நாட்களில் எல்லா வீடுகளையும் அணுகினேன். அதில் ஒரு ஆச்சர்யம் இருந்தது. இரண்டு நாட்களில் 100 வீடுகளைக் கணக்கெடுத்த போது இவ்வாறு ஒரு முயற்சி நடப்பதும் இவ்விதம் ஒரு கணக்கெடுப்பு நிகழ்வதும் கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் வாய்மொழிப் பரவலாக பரவி இருந்தது. அது என் பணியை மேலும் லகுவாக்கியது. இன்னும் கணக்கெடுப்புக்குச் செல்லாத ஒரு வீட்டின் விவசாயி தன் கொல்லையை மரம் நடுவதற்காக சீர் படுத்திக் கொண்டிருப்பதைக் கண்ட போது என் உளம் நெகிழ்ந்தது. கணக்கெடுத்த போது என்னிடம் எண்ணியதை எப்படியாவது செய்து விடலாம் என்ற எண்ணம் இருந்ததே தவிர என் கையில் ஒரு மரக்கன்று கூட இல்லை. அந்த 500 வீடுகளில் ஒரு வீட்டில் கூட நீங்கள் மரக்கன்று வழங்குவீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்ற கேள்வியை எழுப்பவில்லை. அது அவர்களின் பெருந்தன்மை. நம் பண்பாடு அவர்களுக்கு அளித்த தன்மை அது. 

நெல்லி, கொய்யா, பலா, தேக்கு , மகாகனி என 20,000 மரக்கன்றுகள் அக்கிராம மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த எண்ணிக்கை மிகப் பெரும் சாதனை என்பதை விவசாயத்துறை , தோட்டக்கலைத்துறையை சார்ந்தவர்கள் அறிவார்கள்.  காவிரி வடிநில கிராமத்தில் இந்த எண்ணிக்கை எட்டப்பட்டிருப்பது குறித்த வியப்பை வேளாண்மைத் துறையில் ஆய்வு விஞ்ஞானிகளாக இருக்கும் எனது நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்கள். பூனாவில் உள்ள வேளாண் விஞ்ஞானியான எனது நண்பர் ‘’ நீ கல்லில் நார் உரிக்கும் ஆள்’’ என்றார். 

கிராம மக்கள் கோரியிருந்த தென்னை , மா மரக்கன்றுகளைத் தவிர மற்ற மரக்கன்றுகள் அனைத்தும் அவர்களுக்கு ஏற்பாடு செய்து வழங்கப்பட்டன. கிராம மக்கள் அனைவரும் தங்கள் கொல்லைகளிலும் வயல்களிலும் மரக்கன்றுகளை நட்டார்கள். அத்தனை மரக்கன்றுகளையும் 500 குடும்பங்களும் நட்டு பராமரித்து வளர்த்ததன் மூலம் அந்த கிராம மக்கள் தங்களுக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் உலகத்துக்கும் உயிர் வாயுவை உற்பத்தி செய்ய உதவி பேருதவி புரிந்திருக்கிறார்கள். அவர்கள் ஆற்றியிருக்கும் பொதுப்பணியே மிகப் பெரியது. அதனுடன் ஒப்பிட்டால் அவர்களுக்கு மரக்கன்று வழங்கியது என்னும் பொதுப்பணி மிகச் சிறியதே. பொதுப்பணியாளனாக நான் இதனை நன்றாக உணர்ந்திருக்கிறேன். 

என் பணி அங்கே பெரும்பகுதி நிறைவுற்ற போது நான் அந்த கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் ஒரு கோரிக்கை வைத்தேன். கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டிருந்தாலும் கிராமம் முழுவதும் மரக்கன்றுகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன. அந்த இணைப்பு நம் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் குறிக்கிறது. எனவே நம் ஒற்றுமையையும் கூட்டுச் செயல்பாட்டையும் குறிக்கும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட தினத்தில் மாலை 6 மணிக்கு வீட்டு வாசலில் 7 தீபங்கள் ஏற்றுமாறு கேட்டுக் கொண்டேன். இந்த எளிய பொதுப்பணியாளனின் கோரிக்கையை ஏற்று அந்த கிராமத்தின் அத்தனை குடும்பங்களும் குறிப்பிட்ட நேரத்தில் அவரவர் வீட்டு வாசலில் ஏழு தீபங்கள் ஏற்றி அந்த ஊரை ஒளி வெள்ளத்தால் நிறையச் செய்தனர். 

ஊரிலிருந்து 45 நிமிட பயண தூரத்தில் இருந்த கிராமத்திலிருந்து ஊரிலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் இருக்கும் கிராமத்துக்கு ‘’காவிரி போற்றுதும்’’ தனது செயற்களத்தை மாற்றிக் கொண்டது. அங்கும் பல பல பணிகளை ஆற்றினோம். முதல் கிராமத்தில் பெற்ற அனுபவம் இரண்டாம் கிராமத்தில் பல பணிகளை சுலபமாக்கியது. நாம் தொடர்ந்து முன்னேறிச் செல்கிறோம். 

முதல் கிராமத்தின் மக்களை நகரில் அவ்வப்போது காண்பேன். அங்கே இருக்கும் மக்களைக் குறித்து விசாரிப்பேன். எனது நண்பரின் நிறுவனம் ஒன்றில் அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பணி புரிகிறார். இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை எனது நண்பரைக் காண அங்கு செல்லும் போதெல்லாம் அந்த இளைஞரிடம் அக்கிராமம் குறித்து கேட்டறிவேன். எனினும் நேரடியாகச் சென்று பல மாதங்கள் ஆகி விட்டன. 

இன்று காலை அங்கே சென்றிருந்தேன். பார்த்த அனைவரும் ஆர்வத்துடன் என்னை வரவேற்றனர். வீடுகளுக்கு வருமாறு அழைத்தனர். ‘’சார் ! நீங்க கொடுத்த மரமெல்லாம் கொல்லையில 15 அடி வளந்திருக்கு சார். வந்து பாருங்க சார்’’ என்றனர். எல்லாரும் பார்வையிட அழைக்கின்றனர். அந்த கிராமத்துக்கு கணக்கெடுக்க சென்ற போது ஒரு வீட்டுக்கு 10 நிமிடம் என ஒதுக்கிய போது எல்லா வீடுகளிலும் கணக்கெடுத்து முடிக்க 15 நாட்கள் ஆனது. இப்போது ஒவ்வொரு வீட்டு கொல்லையிலும் வளர்ந்திருக்கும் மரங்களைக் காண வேண்டுமானால் ஒரு வீட்டுக்கு 20 நிமிடம் ஒதுக்க வேண்டும் ; அவ்வாறெனில் எல்லா வீடுகளிலும் பார்வையிட்டு முடிக்க 30 நாட்கள் ஆகும். 

அக்கிராமத்தில் இருக்கும் மரக்கன்றுகள் பணிக்கு உதவும் தன்னார்வலர்களிடம் கிராமத்தில் ஒரு இராமாயண நவாஹம் நடத்தி ஒன்பதாம் நாள் பட்டாபிஷேகத்தன்று 2000 தென்னம்பிள்ளைகளை கிராம மக்களுக்கு வினியோகிக்கத் திட்டமிடுவதைக் கூறினேன்.  மிகவும் மகிழ்ந்தார்கள். ஒரு தன்னார்வலரின் வீட்டில் முன்னர் ஒரு வன்னி மரக்கன்றை அளித்திருந்தேன். அவர் தன் குலதெய்வம் ஆலயத்தில் நட்டிருக்கிறார். இப்போது அது பெருவிருட்சமாகி உள்ளது என்பதைக் கூறினார் ; ஊரில் இருக்கும் தனது நண்பர்கள் 50 பேர் வன்னி மரக்கன்றுகளை தங்கள் வீட்டில் வளர்க்க ஆர்வமாக இருப்பதாகக் கூறினார். நவாஹத்தின் நிறைவில் வழங்குவதாகக் கூறினேன். இன்று காலை கிராம மக்களிடம் நவாஹம் நிறைவடையும் வரை இங்கு தான் இருப்பேன் எனக் கூறி பிரியாவிடை பெற்று ஊர் திரும்பினேன். 

ஊருக்கு வந்ததும் எப்போதும் மரக்கன்றுகளை வாங்கும்  பண்ணைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 2000 தென்னம்பிள்ளைகள் கையிருப்பு உள்ளதா என வினவினேன். சிறிதும் பெரிதுமாக கேட்கும் எண்ணிக்கை இருக்கும் என கையிருப்பை சோதித்து பதிலளித்தனர். ஒரு தென்னம்பிள்ளையின் விலை ரூ.60. அதிக எண்ணிக்கையில் எடுப்பதால் ரூ. 55க்கு அளிக்க இயலும் என்று கூறினர். அந்த ஊரில் பொது இடங்களில் ஆடு மாடு மேயாத நந்தியாவட்டை , அரளி ஆகிய மரக்கன்றுகளை நட்டு ஆறு மாதம் தண்ணீர் ஊற்ற ஒரு பணியாளரை ஏற்பாடு செய்தால் தமிழகத்தில் மிக அதிகமான மரக்கன்றுகள் பொது இடத்தில் இருக்கும் கிராமமாக அந்த கிராமம் மாறக் கூடும். அவ்வாறு நிகழ்ந்தால் மற்ற கிராமங்களுக்கு அது முன்மாதிரியாக அமையக் கூடும். கடமை மட்டுமே நாம் ஆற்ற வேண்டியது என்கிறது பகவத்கீதை. 

‘’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பு. அதன் ஆதரவாளர்களான நண்பர்கள் நடுத்தர பொருளியல் பின்னணியைக் கொண்டவர்கள். எனினும் நம் மீது கொண்ட பிரியத்தின் காரணமாகவும் நம் செயல்கள் மேல் கொண்ட நம்பிக்கை காரணமாகவும் நமக்குக் கொடையளிக்கிறார்கள். அவர்களுக்கு அதிக சிரமம் கொடுக்கக்கூடாது என ‘’காவிரி போற்றுதும்’’ அமைப்பாளராக நான் எண்ணுவேன். நமது திட்டமிடல்கள் அனைத்தும் மிகச் சிறு பொருளியல் தேவை கொண்டதாக அமைத்துக் கொள்வதற்கான காரணங்களில் அதுவும் ஒன்று. இருப்பினும் நண்பர்கள் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளை அதிகமாக நிகழ்த்துமாறும் தயக்கமின்றி தேவைகளைக் கூறுமாறும் கேட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் அளிக்கும் ஊக்கத்துக்கும் அவர்கள் அளிக்கும் நம்பிக்கைக்கும் அமைப்பாளராக நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். 

எனது நண்பன் ஒருவனிடம் விஷயத்தைக் கூறிக் கொண்டிருந்தேன். ‘’அண்ணன் ! ஒரு ரூபாய் பட்ஜெட் . செஞ்சுடலாம் அண்ணன் ! நீங்க வேலையை ஸ்டார்ட் பண்ணுங்க’’ என்றான். ‘’காவிரி போற்றுதும்’’ ஆலோசனையில் தேக்கு பயிரிட்டிருக்கும் தஞ்சை விவசாயி ‘’ அண்ணா ! நான் உங்க கிட்ட பல தடவை சொல்லிட்டன். உங்க முயற்சிக்கு சப்போர்ட் பண்ண எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்கன்னு. இந்த தடவை எனக்கு வாய்ப்பு தாங்க’’ என்றார். ஒரு வணிகர் ‘’ஒன் ஃபோர்த் எக்ஸ்பெண்டிச்சர் நான் ஏத்துக்கறேன்’’ என்றார். செட்டிநாட்டைச் சேர்ந்த ஒரு நண்பர் ‘’எதுன்னாலும் தயங்காம சொல்லுங்க ‘’ என்றார். 

நவாஹம் நிகழும் ஒன்பது நாட்களும் கிராமத்தில் இருக்க நேரிடும். முதல் எட்டு நாட்களும் கிராமத்தின் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் கொல்லைகளில் தென்னம்பிள்ளைகள் நட குழி எடுத்து அதில் மக்கிய சாண எரு இட்டு வைக்குமாறு ஒருங்கிணைத்துக் கொண்டால் ஒன்பதாம் நாள் பட்டாபிஷேக வைபவம் நிறைவு பெற்றதும் அனைவருக்கும் தென்னம்பிள்ளைகளை அளித்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து தென்னம்பிள்ளைகளையும் அவரவர் வீடுகளில் நடுமாறு செய்யலாம். அச்செயல் மூலம் ஒட்டுமொத்த கிராமமும் உணர்வுபூர்வமாக இணையும். அச்செயல் மூலம் ஸ்ரீராமாயணத்தின் இருப்பு எல்லா கிராம வீடுகளையும் சென்றடையும்.  

Friday, 1 December 2023

தஞ்சாவூர் (நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் அவரது நண்பர் ஒருவரைச் சந்தித்தார். நண்பருக்கும் அமைப்பாளருக்கும் பல மாதங்களாகப் பழக்கம். எனினும் நேரில் சந்தித்தது இல்லை. முதல் முறையாகச் சந்தித்தார்கள். 

இருவரும் 15 நிமிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். இருப்பினும் அந்த 15 நிமிட உரையாடலில் புதிதாக அறிமுகமாகி முதல் முறையாக உரையாடிக் கொள்ளும் இரு நபர்களின்  மனநிலையே இருந்தது. சட்டென அமைப்பாளர் நண்பரிடம் கேட்டார் : ‘’அண்ணன் ! உங்க சொந்த ஊர் என்ன அண்ணன்?’’ 

நண்பர் சொன்னார்: ‘’மன்னார்குடி’’

அமைப்பாளருக்கு முகமெல்லாம் புன்னகை. உற்சாகத்தால் உடல் ததும்பத் தொடங்கியது.

 ‘’என்னது மன்னார்குடியா?’’

’’ஆமாம்’’

‘’அப்ப நீங்க தஞ்சாவூர்காரரா?’’

நண்பர் பெருமிதத்துடன் ‘’ஆமாம் ஆமாம்’’ என ஆமோதித்தார். 

அமைப்பாளர் அமர்ந்திருந்த நாற்காலியின் நுனிக்கு வந்தார். எதிரில் இருந்த மேஜை மீது இரு கைகளையும் வைத்தார். இருக்கையில் மேலும் மேலும் லகுவானார். அமைப்பாளர் நண்பர் இருவரின் சிரிப்பொலியால் அந்த அறையே நிரம்பியது. 

நண்பர் என்ன நினைத்து எதைப் புரிந்து கொண்டு சிரித்தார் என்பதும் அமைப்பாளர் என்ன நினைத்து எதைப் புரிந்து கொண்டு சிரித்தார் என்பதும் அவர்களுக்கும் கடவுளுக்கும்தான் வெளிச்சம். 

நண்பர் அமைப்பாளரிடம் சமீபத்தில் ‘’துவாரகா’’ சென்று வந்ததைக் கூறினார். நண்பர் விஷ்ணு பக்தர் என்பதை அமைப்பாளர் புரிந்து கொண்டார். 

‘’அண்ணன் ! நாங்கூர் 14 திவ்ய தேசத்துக்கு வாங்க அண்ணன். ரெண்டு நாள்ல 14 பெருமாளை சேவிக்கலாம். இதுக்கு முன்னாடி நாங்கூர் சேவிச்சிருக்கீங்களா?’’ 

நண்பர் ‘’இல்ல . சேவிச்சதில்லையே’’ என்றார்.

‘’என்ன அண்ணன்! இப்படி சொல்லீட்டீங்க. திருமங்கை ஆழ்வார் பிறந்த ஊர் திருவாலி திருநகரி நாங்கூர் திவ்ய தேசத்துல இருக்கு. தை மாசம் நடக்கற நாங்கூர் கருடசேவை ரொம்ப விசேஷம்’’ 

நண்பர் ’’கூடிய சீக்கிரம் சேவிச்சுடலாம்’’ என்றார். 

பின்குறிப்பு : நண்பரின் சொந்த ஊர் மன்னார்குடி இப்போது திருவாரூர் மாவட்டத்தில் இருக்கிறது. அமைப்பாளரின் சொந்த ஊர் மயிலாடுதுறையும் தனி மாவட்டமாகி விட்டது. இருந்தாலும் அவர்கள் தங்களை தஞ்சாவூர் என்றே சொல்லிக் கொள்வதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. எல்லா பழைய தஞ்சாவூர்காரர்களைப் போல!

Thursday, 30 November 2023

பயண உரையாடல் ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் நேற்று ஒரு நீண்ட தூரப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். மொத்த பயண தூரத்தில் மூன்றில் ஒரு பங்கு ரயில் பயணம் ; மூன்றில் இரு பங்கு பேருந்து பயணம். அதிகாலையிலேயே கிளம்ப வேண்டும்.  அலாரம் வைத்திருந்தார். இருப்பினும் அலாரம் அடிப்பதற்கு அரைமணி முன்னரே விழிப்பு வந்து விட்டது. இரவே வென்னீருக்காக ஹீட்டர் போட்டிருந்தார். எனவே கொதிநீர் தயாராக இருந்தது. குளித்துத் தயாரானார். நேரமிருந்ததால் பைக்கை எடுக்காமல் நடக்கத் தொடங்கினார். 

வெளியூர் சென்றால் தனது இரு சக்கர வாகனத்தை டூ-வீலர் ஸ்டேண்டில் விட்டு விட்டு செல்ல மாட்டார். வீட்டிலேயே விட்டு விடுவார். அவர் ஊரில் இல்லையென்றாலும் வீட்டிலிருப்பவர்கள் அடிக்கடி அவரது டூ-வீலரைப் பார்க்க நேர்வது அவர் இருப்பது போன்ற எண்ணத்தை உருவாக்கும் என்பதால் இந்த நடவடிக்கை. 

மழைக்காலத்தின் காலை நேரம். காற்று நீர்மை கொண்டு நீராவியாலும் மென்சிறு பனியாலும் நிறைந்திருந்தது. பேருந்து சீராக நகர்ந்து கொண்டிருக்கிறது. அமைப்பாளர் கையில் ஒரு வார பத்திரிக்கை இருந்தது. அதனை முன்னட்டை தொடங்கி பின்னட்டை வரை வாசித்து முடித்தார். அவர் வாசித்து முடித்ததும் பின்சீட்டில் அமர்ந்திருந்தவர் அதனை வாசிக்கக் கேட்டார். அவரிடம் அளித்து விட்டு தன் பக்கத்தில் அமர்ந்திருப்பது யார் என்று கவனித்தார். ஒரு நடுவயது மனிதர் அமர்ந்திருந்தார். ஜன்னல் ஓர இருக்கையில் அமைப்பாளர். அவருக்கு அருகில் நடுவயது மனிதர். அவர் கையில் வித்யாசமான கயிறு ஒன்றைக் கட்டியிருதார். 

அமைப்பாளர் அவரிடம் ‘’ அண்ணன் ! இந்த கயிறு எந்த கோவிலுக்கு கட்டியிருக்கு ?’’ என்று உரையாடலைத் தொடங்கினார். 

‘’எங்க குலதெய்வத்துக்கு’’

‘’உங்க குலதெய்வம் எந்த சாமி அண்ணன்?’’

‘’முனீஸ்வரன்’’ என்றார் நடுவயது ஆசாமி. 

அமைப்பாளர் ‘’ராம் கிருஷ்ண ஹரி’’ என்று சொன்னார். 

நடுவயது ஆசாமியின் மகள் பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். அவரை அழைத்து வர ஆசாமி செல்கிறார். கல்லூரியில் அழைத்துக் கொண்டு உடனே பஸ் பிடித்து ஊர் திரும்ப வேண்டும். செல்லவும் திரும்பி வரவும் நாள் பொழுது முழுதும் ஆகி விடும். 

சாலையின் இரு பக்கங்களிலும் விவசாயம் செய்யப்படாத நிலப்பரப்பு விரிந்து கிடந்தது. அதனை இருவரும் பார்த்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்கள். 

அமைப்பாளர் ஆரம்பித்தார். ‘’அண்ணன் ! இஸ்ரேல் ஒரு பாலைவன தேசம் . ஆனா உலகத்துல உள்ள எல்லா விவசாயமும் எல்லா தொழிலும் அங்க நடக்குது.’’

ஆசாமி ’’எல்லா விவசாயமுமா?’’ என்றார். 

’’இஸ்ரேலைச் சுத்தி இருக்கற எட்டு நாடும் அவங்களுக்கு பகை நாடு. இருந்தாலும் அவங்களால கனவுல கூட நினைச்சு பாக்க முடியாத காரியங்களை இஸ்ரேல் சாதிச்சிருக்கு. உணவாப் பயன்படற பல காய்கறிகளை பழங்களை இஸ்ரேல் ஏற்றுமதி செய்யறாங்க’’

ஆசாமி ‘’என்ன ஏற்றுமதியா?’’ என்றார். 

’’ஆமாம் அண்ணன் . இஸ்ரேல பத்தி எப்ப எந்த பேச்சு எழுந்தாலும் அந்த பேச்சுல இஸ்ரேலைப் பத்தி ஒரு ஆச்சர்யம் இல்லாம இருக்காது. விவசாயம் மட்டும் இல்லை. தொழில்லயும் அவங்க ஜெயிண்ட்ஸ். அந்த நாடு பிரஜைகளை டிரெயின் பண்ணுது. எட்டு நாடு பகை நாடுன்னா அவங்க எத்தனை மிலிட்டரி சோல்ஜர்ஸ் ராணுவத்துல வச்சிருக்கணும். ஆனா குறைவான சோல்ஜர்ஸ்தான். அங்க எல்லா ஸ்கூல்லயும் ஸ்டூடண்ட்ஸ்க்கு ராணுவ பயிற்சி உண்டு. ஸ்கூல் படிப்பு முடிச்சவங்க கொஞ்ச நாள் கட்டாயமா ராணுவத்துல வேலை செய்யணும். எட்டு எதிரி நாடுகள்ட்ட இருந்தும் எப்ப வேணாலும் தாக்குதல் அச்சுறுத்தல் இருக்கும்ங்கறதால ராணுவ பயிற்சி கொடுக்கப்பட்ட பொதுமக்கள் போர்க்களத்துக்கு போக வேண்டியிருக்கும். இப்ப பயங்கரவாதிகளை எதிர்த்து நடக்கற யுத்தத்துல இஸ்ரேல் பிரதமரோட மகன் தரைப்படை வீரனா யுத்த களத்துல சண்டை போட போயிருக்கான் ‘’

ஆசாமி ‘’இஸ்ரேல் பிரதமர் மகனா?’’ என்று ஆச்சர்யப்பட்டார். 

‘’அவங்களோட திங்கிங் செயல்பாடுகள் எல்லாமே ரொம்ப வித்யாசமானது. உலகத்துல எங்கங்க என்னென்ன தேவை இருக்கோ அந்த தேவையை உற்பத்திப் பொருளா சர்வீஸா செஞ்சு அவங்க எகானமியை ரைஸ் பண்ணுவாங்க. இஸ்ரேல்ட்ட கத்துக்க எல்லா நாடுகளுக்கும் விஷயம் இருக்கு அண்ணன்’’ என்றார் அமைப்பாளர். மேலும் மேலும் என அந்த நாட்டைப் பற்றி பல விஷயங்கள் சொல்லிக் கொண்டேயிருந்தார் அமைப்பாளர்.

‘’இஸ்ரேல் பத்திய இந்த விஷயமெல்லாம் நீங்க சொல்லித்தான் கேள்விப்படறன் ‘’என்றார் ஆசாமி. 

ஆசாமி அமைப்பாளர் குறித்து விசாரித்தார். 

‘’சொந்தமா ஒரு கன்ஸ்ட்ரக்‌ஷன் வச்சிருக்கண்ணன். ஒரு இடத்தை வாங்கி அதுல கட்டிடம் கட்டி சேல் பண்ணிடுவன். அதான் என்னோட பேடர்ண். இது இல்லாம ரியல் எஸ்டேட்டும் உண்டு.’’ 

ஆசாமிக்கு அமைப்பாளர் மீது பெரும் பிரியம் உருவாகி விட்டது. ஆசாமியிடம் அமைப்பாளர் ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் குறித்து விரிவாகச் சொன்னார். 

‘’நம்ம மக்களுக்கு நாம நிறைய வாய்ப்புகளை உருவாக்கித் தரணும் அண்ணன். நான் கிராம மக்களை நேரடியா சந்திச்சு அவங்க வாழ்க்கையை புரிஞ்சுக்கறவன். அவங்க உழைக்கத் தயங்கறவங்க இல்லை. அவங்களால கடுமையா உழைக்க முடியும். நம்ம நாட்டுல அப்படி கடுமையான உழைப்பாளிகளா இருந்து பெரும் செல்வந்தர்கள் ஆன சமூகங்கள் இருக்கு. இந்த உலகம் ரொம்ப பெருசு அண்ணன். சில நாடுகள்கிட்ட செல்வம் இருக்கும் .ஆனா அவங்களோட கிளைமேட் அவங்களுக்கு தேவைப்படுற பொருளை உற்பத்தி செஞ்சுக்க முடியாது. உலகத்தோட தேவையை நாம பூர்த்தி செய்யணும் அண்ணன். அப்படி செய்யணும்னு நினைச்சா அதுக்கான முயற்சிகளைப் பண்ணா நம்ம நாட்டுல இருக்கற வறுமையை முழுக்க நீக்கிடலாம் அண்ணன்.’’

ஆசாமி அமைப்பாளரிடம் ‘’ வறுமையை நீக்க முடியுமா?’’ என்றார். 

‘’நம்ம நாட்ல இருந்து மட்டும் இல்ல உலக அளவில கூட வறுமையை நீக்கிட முடியும். நாம நம்பணும். வறுமை சிலரோட சுயநலத்துக்காக செயற்கையா உருவாக்கப்பட்ட ஒன்னு அது இயற்கையானது இல்ல’’ என்றார் அமைப்பாளர். 

அமைப்பாளர் ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக ஒரு சில விவசாயிகளின் வயல்களில் முழுமையாக தேக்கு நடப்பட்டு அவை நன்றாக வளர்ந்திருப்பதை சொன்னார். 

‘’என்னோட அண்ணன் ஊர்ல எங்க வயல்ல 2000 தேக்கு கன்னு பத்து வருஷம் முன்னாடி நட்டார். இப்ப அந்த மரமெல்லாம் நல்லா வளர்ந்திருக்கு. பத்து ஏக்கர்ல ஏழு ஏக்கர் தேக்கு. 3 ஏக்கர்ல நெல் விவசாயம். இப்பவே தேக்கு நல்லா பருத்து இருக்கு. இன்னும் 5 வருஷம் போனதும் கட் பண்ணலாம்னு அண்ணன் பிளான் பண்ணியிருக்கார். குறைஞ்சது இருபது கோடி ரூபாய்க்கு அந்த மரங்கள் விலை போகும். அண்ணன் ஃபீல்டோட ஃபோட்டோ , அண்ணணோட பேட்டி எல்லாம் தினத்தந்தி, தினமலர்ல வந்திருக்கு.’’ என்றார் ஆசாமி. 

அமைப்பாளருக்கு பெரும் சந்தோஷம். தனது சந்தோஷத்தை ஆசாமியிடம் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். 

ஆசாமி அமைப்பாளரிடம் ‘’ உங்க கிட்ட பேசுனதுல நிறைய விஷயம் தெரிஞ்சுகிட்டன். உங்க முயற்சிக்கு விவசாயிகள் நிச்சயம் சப்போர்ட் பண்ணுவாங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்’’ என்றார். 

பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் ஆசாமியும் அமைப்பாளரும் பல வருட நண்பர்கள் என்றே எண்ணியிருப்பார்கள். பேருந்து புறப்பட்டதிலிருந்து சேருமிடம் அடைந்தது வரை இருவரும் உற்சாகமாக பேசிக் கொண்டு வந்ததைப் பார்த்தால் அந்த பேருந்து பயணத்தில் சந்தித்துக் கொண்டவர்கள் என எவராலும் சொல்லி விட முடியாது.   

தஞ்சை தேக்கு வயல் - ஒரு கடிதம்

 
அன்புள்ள அண்ணா,

இத்துடன் நமது தேக்கு வயலில் இன்று எடுத்த 16 புகைப்படங்களை இணைத்துள்ளேன். இப்போது மரங்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. மழைக்காலம் என்பது போதுமான தண்ணீர் கிடைப்பது காரணமாக இருக்கலாம். செவ்வாய் வெள்ளி என வாரத்துக்கு இரு தினங்கள் வீதம் ஆண்டு முழுதும் தேக்குக்கு நீர் ஊற்ற வேண்டும் என திரும்பத் திரும்ப நீங்கள் வலியுறுத்தி கூறுவீர்கள் என்பதை இப்போது நினைத்துக் கொள்கிறேன். 

நம் வயலில் தேக்கு இப்போது நன்றாக இருக்கிறது. மஹாகனியும் நன்றாக இருக்கிறது. 

அன்புடன்,

பெரியண்ணன்

கோயில் காக்கப்பட்டது - கடிதம்

 அன்பு பிரபு


வினைத்திட்பம் கொண்டொருவன் மக்கள் நலனுக்காக அரசு இயந்திரத்தின் முன் நின்றால் நிச்சயம் அது வழிவகை செய்தே தீரும்.  அறமென நம்பும் ஒன்றிற்காக நீங்கள் செயலில் காட்டும் உறுதியும் அதற்குண்டான தொடர் ஈடுபாடும் மிகுந்த நிறைவளிக்கிறது.  எண்ணியவற்றை எண்ணியபடியே அடைவீர்கள்.  நீங்கள் மேற்கொள்ளும் மக்கள் நலப்பணி யாவிலும் தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறுவதாகுக. 

அன்புடன்,

மணிமாறன் 
புதுச்சேரி

Monday, 27 November 2023

பனைத்தீ

திருஇந்தளூர் பரிமள ரங்கநாத சுவாமி ஆலய சன்னிதித் தெருவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒரு அம்சமாக பனைத்தீ எழுப்பினார்கள். பனையோலைகள் அடுக்கப்பட்டிருந்தது. சிறுவர்கள் உற்சாகமாகக் குழுமியிருந்தனர். நேரம் நெருங்க நெருங்க பெண்களும் குழந்தைகளும் திரண்டனர். அக்கினிக் குஞ்சொன்று அடுக்கப்பட்ட  பனந்தாள்களின் அடியில் வைக்கப்பட்டது. சில கணங்களில் எழுந்தது செந்தீ. மண்ணில் எழுந்து விண்ணைத் தொடும் வல்லமை தன் பேருருவில் சுடர் விட்டது. தீ ஒரு வசீகரம். அந்த வசீகரத்தை நோக்கிக் கொண்டிருந்தது திரள். உருவாகி நிலைபெற்று திருநீறானது தீ. 

 

Sunday, 26 November 2023

நம்பிக்கை விண்மீன்

இங்கே மாவட்ட நிர்வாகத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் ஒருவரைப் பற்றி கேள்விப்பட்டேன். அவர் ஒரு பொறியியல் பட்டதாரி. மின்னணுத் தகவல் தொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்ற பின் உலகின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றனுக்கு கல்லூரியின் இறுதி ஆண்டு படிக்கையிலேயே பணி நியமனம் பெற்றிருக்கிறார். உச்சபட்சமான ஊதியம். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் என ஏழு ஆண்டுகள் அந்நிறுவனத்தில் பணி புரிந்திருக்கிறார். ஏழு ஆண்டுகள் ஊதியமாகக் கிடைத்த பெருஞ்செல்வம் கையில் இருக்கிறது ; மேலும் மேலும் நிறுவனத்தில் பதவி உயர்வு அளிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்னும் நிலையில் இத்தனை இருந்தும் மனம் உணரும் ஒரு போதாமை அவரை மாற்றுப்பணி குறித்து சிந்திக்கச் செய்திருக்கிறது. தனது தகவல் தொழில்நுட்ப பணியை ராஜினாமா செய்து விட்டு குரூப் -1 தேர்வுக்கு தயார் செய்ய முனைந்திருக்கிறார். புத்தகம் தேர்வு பரீட்சை ஆகியவை கல்லூரி இறுதி ஆண்டு இறுதி செமஸ்டருக்குப் பின் கிரமமாகக் கையில் எடுக்கக்கூட இல்லை என்னும் நிலையில் துவ்க்க நிலைத் தேர்வு , பிரதானத் தேர்வு ஆகியவற்றுக்குத் தயார் செய்யத் துவங்குகிறார். தான் எடுத்த முடிவு சரிதானா என்ற ஐயமும் குழப்பமும் அவ்வப்போது ஏற்பட்டது எனக் கூறும் அவர் தன் மன உறுதியால் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு பரீட்சைக்கான தயாரிப்பில் மட்டும் முழுமையாக ஈடுபட்டிருக்கிறார். துவக்க நிலைத் தேர்வில் வெற்றி பெறுகிறார். பிரதானத் தேர்விலும் வெற்றி. நேர்காணலிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்கிறார். தேர்வு முடிவுகள் வருகின்றன. குரூப் - 1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று தமிழக அரசில் பணி நியமனம் ஆகிறார்.   

தொழில்நுட்ப நிறுவனப் பணியில் சக ஊழியர்கள் அனைவரும் பெருந்திறன் கொண்டவர்கள். தனக்கு உகந்த மிக உகந்த நபர்களே தேவை என்பதனால் நிறுவனத்தின் பல கட்ட தேர்வுகளுக்குப் பின்னால் வந்து சேர்ந்தவர்கள். வளர்ந்து கொண்டேயிருக்கும் துறை குறித்த அறிவை ஒவ்வொரு நாளும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பு கொண்டவர்கள். இப்படியான பணிச்சூழலில் இருந்து விட்டு மாநில சர்க்கார் பணிக்கு வருவது என்பது மலைக்கும் மடுவுக்குமான தூரம் கொண்டது. மாநில சர்க்கார் பணிகள் என்றால் ஒரு நாளில் நடக்க வேண்டிய பணி என்பது தொண்ணூறு நாள் ஆனாலும் நடக்காது என்னும் தன்மை கொண்டது. பொதுமக்களுக்கு மாநில சர்க்கார் அலுவலகத்துக்கு வருவது என்றாலே தயக்கமும் அச்சமும் மட்டுமே இருக்கிறது. 

தொழில்நுட்ப நிறுவனப் பணியை ராஜினாமா செய்து விட்டு மாநில சர்க்கார் பணிக்கு வருவதற்கு பெரும் மனத்தெளிவும் மனத்திடனும் மன உறுதியும் தேவை. அந்த தெளிவுடன் திடனுடன் உறுதியுடன் செயலாற்றிக் கொண்டிருக்கும் அதிகாரி இளைஞர்களுக்கு ‘’ நம்பிக்கை விண்மீன்’’ எனத் திகழ்பவர். 

நான் எப்போதுமே சர்க்கார் மீது நம்பிக்கை வைப்பவன். சர்க்கார் எந்திரம் சீராக இயங்கினால் பொதுமக்கள் பயன் அடைவார்கள் என்பது நிதர்சனம். ஜனநாயக அமைப்பில் சாமானியர்களே மிகப் பெரும்பான்மையான பொதுமக்கள். ‘’சட்டத்தின் ஆட்சி’’ என்பதே ஜனநாயகத்தின் உயர்ந்த தன்மை. 

பல விஷயங்களுக்காக அரசு ஊழியர்கள் மீது பல்வேறு விதமான புகார்களைப் பதிவு செய்திருக்கிறேன். நிகழும் தவறுகளை உயர் அதிகாரிகளின் கவனத்துக்குத் தொடர்ச்சியாகக் கொண்டு சென்றிருக்கிறேன். ஒரு குடிமகனாக அது என் கடமை. என் கடமையையே நான் செய்கிறேன். அதை எப்போதும் செய்வேன். 

மாநில சர்க்கார் பணியை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்கிறார் என்பதைக் காண முடிகிறது. இத்தகைய மனிதர்கள் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறார்கள். நல்விஷயமாகும் அது.  

மூர்க்கர்களும் எளிய மக்களும்

 தமிழில் ஒரு பழமொழி  உண்டு. ‘’மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’’ என்று. 

மூர்க்கத்தனம் என்பது மனிதர்கள் உருவான காலத்தில் அவர்களிடம் இருந்த குணம். பின்னர் பல்லாயிரம் ஆண்டுகளில் அந்த குணத்தை மட்டுப்படுத்தி மட்டுப்படுத்தி வந்திருக்கின்றனர். எனினும் மனித உடலில் மனித மூளையில் இன்னும் மிகச் சிறு அளவில் அது இருக்கவே செய்கிறது. முன்னர் அது சக மனிதனைத் தாக்கி கொன்று அதில் மகிழ்ச்சி கொள்வதாக இருந்தது. பின்னர் தன்னைக் கண்டு தன் மூர்க்கத்தனம் கண்டு பிற மனிதர்கள் கொள்ளும் அச்சத்தால் மகிழ்ச்சி கொள்வதாக இருந்தது. இவ்வாறான தன்மை கொண்ட மனிதர்கள் சமூகங்கள் உருவாகி வந்த போது தண்டனைகளால் கட்டுப்படுத்தப்பட்டார்கள். மூர்க்கத்தனத்தின் வரையறையும் காலத்துக்குத் தகுந்தாற் போல மாறிக் கொண்டிருக்கிறது.  

ஆதிமனிதனிடம் சக மனிதனைத் தாக்கி மகிழும் இயல்பே மூர்க்கம் என இருந்தது. இப்போது உள்ள மூர்க்கர்கள் பிறரை எந்தெந்த விதத்தில் எல்லாம் துன்புறுத்த இயலுமோ அந்தந்த விதத்தில் எல்லாம் துன்புறுத்துகிறார்கள். அவ்வாறான செயலில் ஈடுபடும் போது அவர்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறார்கள். பொதுவாக மூர்க்கர்களுக்கு சிந்திக்கும் திறன் மட்டு என நாம் நினைப்போம். அப்படி அல்ல ; மூர்க்கத்தில் முழுமையாக திளைப்பவர்கள் நுட்பமாக சிந்திக்கும் திறன் கொண்டிருப்பவர்களை விடவும் அதிநுட்பமாக சிந்திப்பார்கள். புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கும் ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர் மூர்க்கத்தனம் என்னும் இயல்புக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. 

அவர் மனம் எவ்விதம் செயல்பட்டது என்பதை படிப்படியாகக் காண்போம். 

(1) புராதானமான விஷ்ணு ஆலயம் இருக்கும் சன்னிதித் தெருவில் பத்து ஆண்டு அகவை கொண்ட வேம்பு, மலைவேம்பு, புங்கன் ஆகிய பெருமரங்கள் 14 இருந்தன. ஊராட்சி மன்றத் தலைவர் செங்கல் காலவாய் வைத்திருக்கிறார். அதற்கு எரிபொருள் தேவைப்பட்டது. அவரிடம் ஜே.சி.பி வாகனம் சொந்தமாக இருந்தது. டிராக்டர் மற்றும் டிப்பர் இருந்தது. ஊராட்சி மன்ற வாகனத்தையும் பயன்படுத்திக் கொண்டார். ஊராட்சி பணியாளர்களைகளையும் மரம் வெட்டுவதில் பயன்படுத்தினார். வெட்டிய மரங்களை தனது செங்கல் காலவாய்க்கு கொண்டு சென்றார்.

(2) அந்த மரங்களை வெட்ட அவர் தேர்ந்தெடுத்த நாளும் நேரமும் நுட்பமானது. அந்த வீதியின் ஆண்கள் அனைவரும் பணிக்குச் சென்றிருந்த நேரம். மரம் வெட்டுவதை பெண்கள் எதிர்ப்பதை அவர் அகங்காரம் ஏற்கவில்லை. ‘’என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது ; பெண்கள் என்னிடம் கேள்வி கேட்கக் கூடாது ; அவர்கள் அடுப்பங்கரையில் இருக்க வேண்டியவர்கள் ‘’ என்று அவர்களிடம் சத்தம் போட்டிருக்கிறார். 

(3) இந்த விஷயம் புகாராக மாவட்ட நிர்வாகத்துக்குப் போனது. அதனை ஒன்றும் இல்லாமல் செய்ய பலவிதங்களில் பெருந்தொகை செலவு செய்யப்பட்டது. குறைந்த தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. எனினும் குறைந்த தொகை அபராதமாக விதிக்கப்பட்டதால் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் என அனைவரும் குற்றச் செயல் புரிந்தவருக்கு குற்றத்தை மறைக்க உதவியிருக்கிறார்கள் என்பதால் அவர்கள் மேலும் நடவடிக்கை தேவை என்ற புகார் மனு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த புகார் மனு நிலுவையில் இருக்கிறது. 

(4) இப்போது இந்த விஷயம் குற்றம் இழைத்த ஒருவர் தொடர்பான விஷயமாக மட்டும் இல்லாமல் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் என பலர் சம்பந்தப்பட்டதாக மாறியதால் அவர்கள் இந்த விஷயத்தை வீதிவாசிகளிடம் பேசி சுமுகமாகப் பேசி தீர்க்குமாறு அழுத்தம் தந்தார்கள். பலரது அழுத்தம் இருந்ததால் சந்நிதித் தெரு விஷயத்தை ஆறப் போட்டார் ஊராட்சி மன்றத் தலைவர். இந்த விஷயம் குறித்து புகார் எழுப்பப்பட்ட பலர் பணிமாறுதல் பெற்று சென்று விட்டனர். புதியவர்கள் அந்த இடங்களுக்கு வந்திருக்கின்றனர். புதிதாக வந்தவர்கள் கோப்பினைப் பார்க்கும் போது முன்னர் இருந்தவர்கள் என்னென்ன முறைகேடு செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து இந்த விஷயம் சிக்கலானது என்பதாலும் நீதிமன்றம் செல்ல உள்ளது என்பதாலும் குற்றம் இழைத்தவருக்கோ குற்றம் இழைத்தவருக்கு துணை நின்றவர்களுக்கோ எவ்விதத்திலாவது உதவுவது தங்களுக்கு தீராத சிக்கலை உண்டாக்கி விடும் என்பதால் இந்த விஷயத்திலிருந்து பெருந்தூரம் விலகி இருக்கிறார்கள். 

(5) 14 மரங்கள் வெட்டப்பட்ட விஷயம் தொடர்பான கோப்பை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரியிருந்தோம். முழுக் கோப்பு அளிக்கப்படவில்லை. மாநில தகவல் ஆணையம் வழக்கு பதிவு செய்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் விசாரணை நிகழும். 

(6) சன்னிதித் தெருவில் வசிக்கும் மக்கள் சாமானிய பொருளியல் பின்னணி கொண்ட சாமானியர்கள். அவர்களால் தான் இத்தகைய அழுத்தத்துக்கு ஆளாகியிருப்பதை ஊராட்சி மன்றத் தலைவரால் ஏற்க முடியவில்லை. 

(7) இந்த 14 மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்துக்குப் பின்னும் அந்த ஊரில் அவர் பல மரங்களை வெட்டியிருக்கிறார். அவர் மரம் வெட்டுவதை குறைத்துக் கொள்ளவோ நிறுத்தவோ இல்லை. 

(8) பத்து மாதம் முன்பு அதே தெருவில் ஒரு மரத்தை வெட்ட முயற்சி செய்தார். மாவட்ட நிர்வாகம் கவனத்துக்கு விஷயம் கொண்டு செல்லப்பட்டு முயற்சி தடுக்கப்பட்டது. 

(9) விஷ்ணு ஆலயம் அருகே இருக்கும் ஆலயத்தை இடிப்பது அந்த வீதியில் வசிப்பவர்களுக்கு துன்பம் ஏற்படுத்தும் என்பதால் அரசு கட்டிடம் ஒன்றுக்கு இடம் தேவைப்படுகிறது என்ற தபால் வந்த போது ஸ்ரீமுனீஸ்வரன் ஆலயம் அமைந்திருக்கும் இடத்தை பொருத்தமான இடங்களுக்கான தேர்வு பட்டியலில் வைத்தார். அது தான் ஆலயத்தை இடிக்கும் முயற்சிக்கு துவக்கப்புள்ளி. அந்த இடம் தேர்வாகி விட்டால் அரசு எந்திரத்தைக் கொண்டே ஆலயத்தை இடித்து அங்கிருக்கும் வேப்ப மரங்களை வெட்டி மக்களைத் துன்புறுத்தி மகிழலாம் என்பதாக அவரது எண்ணம் இருந்தது. இருப்பினும் பலரது ஆதரவால் ஆலயமும் வேப்ப மரங்களும் காக்கப்பட்டன. 

(10) விஷ்ணு ஆலயத்தின் சன்னிதித் தெருவில் வசிப்பவர்கள் எளிய குடிகள். அவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இச்செயல்கள் நிகழும் ஊர் என்ன என்பதை குறிப்பிடாமல் இருக்கிறேன். அவர்களுக்கு பலவிதத்திலும் தீவிரமான அச்சுறுத்தல் இருக்கிறது. அவற்றை முழுமையாக வெளியிட இது உகந்த காலம் அல்ல என்பதால் அந்த கிராமம் எது என்பதைக் கூறாமல் இருக்கிறேன்.       

ஆலயம் காக்கப்பட்டது - ஒரு கடிதம்

 அன்புள்ள பிரபு அண்ணா,

ஸ்ரீமுனீஸ்வரன் ஆலயம் காக்கப்பட்ட செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அத்தனை பேரின் பிரார்த்தனைக்கும் கிடைத்த வெற்றி. இது போன்ற அறம் சார்ந்த முன்னெடுப்புக்கள தான் ஜனநாயகத்தின் விழுமியத்தையும் சத்தியத்தையும் பறைசாற்று கிறது.

 உண்மையான நோக்கத்தோடு , உள் உணர்வால் மேற்கொள்ள படும் எச்செயலும் தோல்வி அடையாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இதற்காக உழைத்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்


 நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை

அன்புடன்,
கதிரவன்