நண்பர் ஒருவர் என்ஃபீல்டு வாகனம் புதிதாக வாங்கியிருக்கிறார். ‘’எரிநட்சத்திரம்’’ என்ற மாடல். அதன் விரைவுக்கும் வேகத்துக்குமான பெயராகச் சூட்டியுள்ளனர். நான் பைக்கில் இந்தியா முழுதும் சுற்றுபவன் என்பதால் பலரும் நான் என்ஃபீல்டு வாகனம் வைத்திருப்பவன் என்று அவர்களாகவே கருதிக் கொள்வார்கள். உண்மையில், நண்பர் வாங்கிய இந்த என்ஃபீல்டு வாகனத்தைத் தான் நான் முதல் முறையாக இயக்குகிறேன். அதாவது நேற்று ஒருநாள் மட்டும் தான் கணிசமான நேரம் என்ஃபீல்டை ஓட்டினேன்.
என்ஃபீல்டின் பெட்ரோல் மைலேஜ் எனக்கு கட்டுபடி ஆகாது. மேலும், இந்திய பைக் பயணம் போன்ற துடிப்பு மிக்க செயல்களைச் செய்ய சிறப்பாக உருவாக்கப்பட்ட தன்மை கொண்ட வாகனம் தேவை என்ற பொதுப்புத்தியில் மாற்றம் ஏற்படுத்தவே 100 சி.சி ஹீரோ ஹோண்டா வாகனத்தைக் ‘’குறியீட்டு ரீதியில்’’ பயன்படுத்துகிறேன்.
எனது பைக் எனக்கு பைக் மட்டும் கிடையாது. என் உற்ற தோழன். என் மீது பிரியமும் நம்பிக்கையும் கொண்டவன். என்னைப் புரிந்து கொள்பவன். எனக்கு ஆறுதல் அளிப்பவன். எனது 22 நாள் பயணத்தில் ( 6166 கி.மீ) ஒருமுறை கூட ‘’பஞ்சர்’’ ஆகாதவன். எனது பயணத்தின் கடைசி நாள் சிதம்பரம் வந்தடைந்த போது அதனை வாட்டர் சர்வீஸ் செய்தேன். சோப்பு நுரையால் வாகனத்தை மூழ்கடித்தார் வாட்டர் சர்வீஸ் காரர். ஈரமும் தண்ணீரும் வாகனம் முழுதையும் சூழ்ந்திருந்தது. வாட்டர் சர்வீஸ் முடிந்ததும் இக்னிஷன் சாவியை இயக்கி ‘’கிக்’’ செய்தார். ஒரே கிக். வாகனம் சட்டெனக் கிளம்பி என்ஜின் சீரான ஒலியை வெளிப்படுத்தியது. அப்போது தான் அவர் என்னிடம் கேட்டார் : ‘’சார் நீங்க எந்த ஊர்? எங்கேயிருந்து வரீங்க?’’ . அன்று நான் ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூரிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டிருந்தேன். கிட்டத்தட்ட சிதம்பரம் வரை 350 கி.மீ பயணம். ‘’நெல்லூர்ல இருந்தா?’’ வியப்புடன் கேட்டார். நான் எனது 22 நாள் பயணம் பற்றி சொன்னேன். எனது வாகனம் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஆக்சிலேட்டர் கொடுக்கப்படாமலேயே மெல்ல இயங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது அவர் சொன்னார் ; ‘’சார்! இந்த பயணம் செய்யணும்னு உங்க வண்டி முடிவு செஞ்சிருக்கு. உங்க மனசு உங்களோட வண்டிக்கு முழுக்க புரிஞ்சு உங்க கூடவே இருந்திருக்கு.’’
நண்பர் என்ஃபீல்டு வாகனம் ‘’எரிநட்சத்திரத்தை’’ நான் இயக்க வேண்டும் என்று விரும்பினார். நேற்று திருச்சிராப்பள்ளி வரை சென்றோம். சென்று மீள கிட்டத்தட்ட 300 கி.மீ தூரம் கொண்ட பயணம். நான் 100 கி.மீ தூரம் வாகனத்தை ஓட்டினேன். 100 சி. சி வாகனதைப் போல 3.5 மடங்கு திறன் கொண்டது. எவ்வளவு வேகம் சென்றாலும் சில வினாடிகளில் வேகத்தைக் குறைத்து விட முடிகிறது. பிரேக் மிகத் துல்லியமாக இயங்குகிறது. வாகனம் ஒரு குழந்தையைப் போல் உள்ளது. நண்பருக்கு இந்த வாகனத்தில் லடாக் வரை பயணிக்க வேண்டும் என்று விருப்பம். நாம் சேர்ந்து செல்வோம் என்றார். ஈஸ்வர ஹிதம் என்று பதிலளித்தேன்.
பல விஷயங்களைப் பேசிக் கொண்டு சென்றோம். தமிழ்ச் சமூகம் குறித்து எனது அவதானம் ஒன்றை நண்பரிடம் சொன்னேன்.
‘’அதாவது, ஒற்றுமையா இருக்கக்கூடிய சமூகங்கள் தான் முன்னேறும். எல்லாருக்குமான வளர்ச்சிங்கறது சமூக ஒற்றுமை மூலமா மட்டுமே சாத்தியம். அதுல கவனிச்சுப் பாத்தோம்னா ஒரு சமூகம் ஒற்றுமையா இருக்கணும்னா அதுக்காக வெவ்வேறு மட்டங்கள்ல வேலை செய்ரவங்க இருக்கணும். சுவாமி சித்பவானந்தா ‘கல்வி’ ன்னு ஒரு புக் எழுதியிருக்கார். அதப் படிச்சுப் பாருங்க. அதுல ஒரு இடத்துல அவர் சொல்றார் : ஒரு ஊர்ல இருக்கற பள்ளிக்கூடத்துல இருக்கற எல்லா குழந்தைகளுக்கும் ஒருவேளை உணவு அந்த பள்ளியில கொடுக்கப்படணும். வசதி உள்ளவங்க, வசதி இல்லாதவங்கன்னு எல்லா வீட்டுக் குழந்தைகளும் அந்த உணவைத் தான் சாப்பிடணும். அவங்க ஒன்னா சேந்து சாப்பிடறதும் அவங்க கல்வியோட ஒரு பகுதி. இது அவங்களுக்குள்ள ஒற்றுமையை ஏற்படுத்தும். நாளைக்கு அவங்க தான் அந்த ஊரோட எதிர்காலம். அவங்களுக்குள்ள ஏற்படற இணக்கம் ஊரை ஒற்றுமைப்படுத்தும்.’’
பல விஷயங்களைப் பேசிக் கொண்டு சென்றோம்.
சமீபத்தில் நீண்ட பயணங்கள் செல்வது சற்று குறைந்திருக்கிறது. நானாவித அலுவல்கள். நேற்று மேற்கொண்ட பயணம் மீண்டும் ஒரு இந்தியப் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கியிருக்கிறது. ’’ஈஸ்வர ஹிதம்’’.