சென்ற பத்து நாட்களில் அடுத்தடுத்து மூன்று வெளியூர் பயணங்கள். இன்னும் ஊரின் வழமை திரும்பவில்லை. லௌகிகப் பணிகள் சில மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் வேகம் தேவைப்படுகிறது. அதற்கான ஆயத்தங்களைச் செய்கிறேன். பால், காஃபி, தேனீரைத் தவிர்த்தல் என்பதை அக்டோபரிலேயே துவங்கி விட்டதால் இந்த ஆண்டு புத்தாண்டுத் தீர்மானம் என்பதை எளிதில் பின்பற்ற முடிந்தது. நிறைய பணிகள் இன்னும் இருக்கின்றன. முன்னரெல்லாம் கால அட்டவணை போட்டு பணிகளைச் செய்வேன். அவை என் தொடர்பானவை. இப்போது மனிதர்களை இணைக்கும் பணியை மேற்கொள்ளத் துவங்கியிருப்பதால் கால அட்டவணை போட்டு பணி செய்ய முடியாது. இன்னதென்று வகுக்க முடியாத பல பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. உண்மையில் மக்களை இணைக்கும் பணியில் போதாமையை உணர்வது மேலும் மேலும் என்ற உற்சாகத்தின் காரணமாகவே. அது நல்ல விஷயம் தான். ஓயாது செயலாற்றுவதன் மூலமே உண்மையான ஓய்வை உணர முடியும். ஓய்வெடுக்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்வதன் அவசியத்தை உணர்கிறேன். இந்த ஆண்டில் மிக அதிக விஷயங்களை முன்னெடுக்க வேண்டும்.