Wednesday, 28 February 2024

மாசி செவ்வாய்

வைத்தீஸ்வரன் கோவில் இறைவன் பிணி நீக்கும் மருத்துவன். ஜீவன்களுக்கு ஏற்படும் உடற்பிணியையும் மனப்பிணியையும் தன் அருளால் கருணையால் அன்பால் நீக்கும் மருத்துவன். எளிய மானுட உயிர்கள் அவன் முன் தங்கள் பிணி கூறி நிற்கின்றனர். பிணியும் வலியும் துக்கமும் மானுடர் எளிதில் உணர்வது. அவை நீங்க வேண்டும் என்பது மானுடரின் விருப்பம். அந்த விருப்பத்தை வைத்தீஸ்வரனிடம் பிராத்தனையாக முன்வைக்கின்றனர். முத்துக்குமரன் வலிமைக்கான கடவுள். அம்மையப்பனான வைத்தீஸ்வரன் தையல்நாயகியை வணங்கி அவர்களின் குமாரனான குமரக்கடவுளிடம் ஆற்றலும் வலிமையும் கோரி தினமும் நூற்றுக்கணக்கில் மானுடர் குழுமிக் கொண்டேயிருக்கின்றனர் வைத்தீஸ்வரன் சன்னிதியில். நேற்று மாசி செவ்வாய். சிவனுக்கும் முருகனுக்கும் உகந்த நாள். ஆலயம் சென்று இறைவனை வணங்கினேன்.  

Monday, 26 February 2024

சகோதரன்

சென்னையிலிருந்து நண்பன் கதிரவன் அலைபேசியில் இன்று மாலை தொடர்பு கொண்டார். அலைபேசியில் பெயரையும் எண்ணையும் சேமிக்கும் போது ஊர்ப்பெயரை முன்னாலும் பெயரை பின்னாலும் எழுதி சேமிப்பேன். மாநகரங்களின் மக்கள்தொகை அதிகம் என்பதால் சென்னை என்பதை முன்னொட்டாகக் கொண்ட பலருடைய பெயர்கள் அலைபேசியில் சேமிப்பாகியிருக்கும். சென்னை கதிரவன் என்ற பெயரில் மூன்று பெயர்கள் பதிவாகியிருந்தது. எனவே அழைப்பது எந்த கதிரவன் என்று சிறு குழப்பம். 

கதிரவன் சில மாதங்களுக்கு முன்னால் அறிமுகமானவர். பிறருக்கு உதவும் குணத்தை தனது இயல்பிலேயே கொண்டவர். தீவிரமாக உழைக்கக் கூடியவர். அவருக்கு வாழ்க்கை குறித்து அதன் தன்மை இயல்புகள் குறித்து நிறைய கேள்விகள் மனத்தில் இருந்தன. இருக்கின்றன. ஐ ஏ எஸ் தேர்வுக்கான தயாரிப்பில் இருக்கிறார். அவ்வப்போது என்னிடம் வாழ்க்கை குறித்து ஏதேனும் கேள்விகளைக் கேட்பார். நான் அவ்வாறான கேள்விகளை ஊக்குவிப்பதில்லை. அவரிடம் சற்று கடுமையாகவே எதிர்வினையாற்றுவேன். அவரை எனது சகோதரனாக உணர்வதால் எடுத்துக் கொள்ளும் உரிமை அது. வேறு விஷயங்கள் எதிலும் மனதைச் செலுத்தாமல் ஐ ஏ எஸ் தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு சொல்வேன். 

என்னுடன் நெருக்கமாக இருப்பவர்கள் நான் சொல்வதைக் கேட்பார்கள். நான் சொல்வதை செயல்படுத்த முயல்வார்கள். எனது அக்கறையை அவர்கள் புரிந்து கொள்வது ஒரு காரணமாகவும் அவர்கள் நன்மைக்கு உகந்ததையே நான் பரிந்துரைப்பது இன்னொரு காரணமாகவும் இருக்கலாம். 

கதிரவன் என்னுடன் பேசி இரண்டு மாதம் ஆகியிருந்தது. இன்று அவருடன் பேசியது மகிழ்ச்சி அளித்தது. இந்த இரண்டு மாதங்களில் அவருடைய ஐ ஏ எஸ் தயாரிப்பு இரு மடங்கு ஆகியிருக்கிறது. அவருடைய மனப்பக்குவம் கூடியிருக்கிறது. 

இறைமையின் ஆசி எப்போதும் அவரைச் சூழ்ந்திருக்கட்டும். 

Thursday, 15 February 2024

Half Lion : நரசிம்ம ராவ் ( மறு பிரசுரம்)





சில நாட்களுக்கு முன், நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். இந்தியப் பிரதமர் சர்தார் படேலின் சிலையை திறந்து வைத்து ஓரிரு நாட்கள் ஆகியிருந்தது. ஏன் இத்தனை செலவில் ஒருவருக்கு சிலை வைக்க வேண்டும் என்று கொந்தளித்தார். இது அரசியல் என்றார். வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தார். ஒரு தேசத்தலைவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. உலகின் உயரமான சிலை இந்தியாவில் அமைவது மகிழக் கூடிய விஷயம் தானே என்றேன். படேல் ஒரு மதவாதி என்றார். வல்லபாய் படேலை ‘’சர்தார்’’ என அழைத்தவர் மகாத்மா காந்தி; வரலாற்று ஆசிரியரான ராமச்சந்திர குகா ‘’இந்தியா ஆஃப்டர் காந்தி’’ என்ற புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் இந்திய சமஸ்தானங்களை இந்திய அரசுடன் இணைத்த பணியை படேலும் அவரது செயலாளருமான வி.பி. மேனனும் எவ்விதம் திறம்பட ஆற்றினர் என்ற விபரத்தை பக்கம் பக்கமாக எழுதியுள்ளார். ஆர்வமிருந்தால் வாசித்துப் பாருங்கள் என்றேன். சற்று அமைதியானார். நான் சில விஷயங்களை அவரிடம் சொல்லி யோசித்துப் பார்க்குமாறு கூறினேன்.

நாடு என்பது மிகப் பெரியது. கோடானுகோடி மக்களின் லௌகிக வாழ்வுக்கான பொதுத்தளமாக இருப்பது. பற்பல மனிதர்களின் வெவ்வேறு விருப்பங்களும் தேர்வுகளும் ஒன்றோடொன்று குறுக்கிடுவது. மானுடம் பல போர்கள் வழியாக பல அரசு முறைகள் வழியாக இப்போது ஜனநாயக யுகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இந்த ஜனநாயக யுகத்தில் எந்த நாட்டின் குடிமக்களுக்கும் சில கடமைகள் உண்டு. அக்கடமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் போனால் வன்முறை பெருக்கெடுத்து இரத்தக் களரி ஆகும். இந்திய ஜனநாயகத்தில் இந்திய சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் தொகை இன்னும் தனது சமூகக் கடமைகளை உணரும் பிரக்ஞையுடன் செயலாற்றும் ஆர்வத்துடன் இருப்பதில்லை. அதற்கு பல காரணங்கள். கடந்த இருநூறு ஆண்டுகளில், பிரிட்டிஷ் ஆட்சியில்  ஏற்படுத்தப்பட்ட செயற்கை  பஞ்சங்கள் இந்திய சமூகங்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தின. ஆயிரமாயிரமாக செத்து மடிந்த மக்கள் திரள் இந்தியர்களிடம் ஏற்படுத்திய பீதி தலைமுறைகளாகத் தொடர்கிறது. மகாத்மா இந்திய மக்களை ஒருங்கிணைத்தார். அவர்களுக்கு கடமைகளையும் பொறுப்புகளையும் அளிக்கும் கல்வியையும் அரசியலையும் முன்னெடுக்க வேண்டும் என்று விரும்பினார். சமூகப் பொறுப்பு என்றால் அஞ்சி ஓடும் ஒரு நாட்டிற்கு அவர் எது நியாயம் என்பதை எடுத்துச் சொன்னார். எளிய உண்மைகளைப் புரிய வைத்து எளிய கடமைகளை ஆற்ற வைத்து அவர்களை அரசியலுக்குள் கொண்டு வந்தார்.

காந்திக்குப் பின், இந்தியா ஜனநாயகப் பாதையில் நடக்கத் துவங்கியது. இன்று எவராலும் எளிதில் யூகித்து விட முடியும்; அன்று ஜனநாயக அரசை நிலைக்க வைப்பது எத்தகைய சவாலாக இருந்திருக்கும் என்பதை. பிரிட்டிஷார் விட்டு விட்டுச் சென்ற அதிகார வர்க்கம், ஊழலை இயங்குமுறையாய்க் கொண்ட அதிகார வர்க்க மனோபாவம், பழமைவாதிகளான அரசியல்வாதிகள், மதப்பூசல்கள் மற்றும் உணவுப் பற்றாக்குறை என ஒவ்வொரு திசையிலும் இழுக்கப்படும் சகடமென இந்திய அரசு செயல்படத் துவங்கியது. இன்று வரை இந்திய ஜனநாயகத்துக்குப் பல சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றை அரசும் இந்திய சமூகமும் எதிர்கொண்டு முன்னகர்கிறது. இந்தியா ஜனநாயகமாகத் தொடர்வதில் பலருடைய பங்களிப்பு இருக்கிறது. அரசியல் செயல்பாட்டாளர்கள், படைப்பாளிகள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள் என எத்தனையோ பேர் இந்தியாவிற்காக உழைத்துள்ளார்கள். அவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்; வெவ்வேறு சித்தாந்தங்களில் நம்பிக்கை உள்ளவர்கள்; ஆயினும் தாம் நம்பும் ஒன்றுக்காக ஏற்றுக்கொண்ட விஷயத்துக்காக கடைசி வரை போராடியவர்கள்; அகமகிழும் வெற்றியைக் காணாமலே மடிந்து போனவர்கள்; மக்களின் மறதி என்னும் முடிவற்ற இருள் பிலத்தில் மூழ்கிப் போனவர்கள். உலகின் எந்த நாடும், நாட்டுக்காக செயல்பட்டவர்களைப் பற்றி திருப்திகரமான விதத்தில் தன் கல்வி நிலையங்கள் மூலம் இளைய சமுதாயத்துக்குக் கற்றுக் கொடுக்கும். இந்தியாவில் அதற்கு வாய்ப்பு அனேகமாக இல்லை. இங்கே கல்லூரி படித்து முடித்த மாணவனால்  ‘’உப்பு சத்யாக்கிரகம்’’ குறித்து இரண்டு நிமிடம் கூட பேசத் தெரியாது. இதுவே யதார்த்தம். கல்வித்துறையும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் அரசியல் குழுக்களால் நிரம்பி பயனற்றிருக்கிறது.

உலகின் எந்த அரசாங்கமும் தன் நாட்டின் தியாகிகளை சாதனையாளர்களை போற்றியே ஆக வேண்டும். நடைமுறையில் அது சார்ந்த புரிதலை உருவாக்க ஒரு கருத்தியல் பரப்புரையை வெவ்வேறு விதங்களில் உலகின் ஒவ்வொரு அரசும் முன்னெடுக்கவே செய்கிறது. எந்தச் செயலையும் வசை பாடுவது ஆரோக்கியமானதல்ல என்றேன். நண்பர் அமைதியானார்.

இந்த உரையாடல் முடிந்ததற்கு அடுத்த நாள் என் கைக்கு ஒரு புத்தகம் வந்தது. ‘’நரசிம்ம ராவ்: இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி” (ஆர்: வினய் சீதாபதி தமிழாக்கம்: ஜெ. ராம்கி). சில வாரங்களுக்கு முன்னால் ஜெயமோகன் தன் தளத்தில் இந்நூலைப் பற்றி எழுதியிருந்தார். ஒரே மூச்சில் நானூறு பக்கத்தையும் வாசித்து முடித்தேன்..

ஓர் அரசியல் செயல்பாட்டாளனின் வாழ்வு சவாலானது; கடுமையானது; அதிலும் அதிகாரத்துக்கு வந்து விட்ட செயல்பாட்டாளன் எதிர்கொள்ளும் இக்கட்டுகள் மிகப் பெரியவை; நுட்பமானவை. காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் நேரு குடும்பத்திடமிருந்து அதிகாரத்தை தள்ளி வைத்து கட்சியையும் ஆட்சியையும் தன் கையில் ஐந்து ஆண்டுகள் வைத்திருந்தது என்பதே மிகப் பெரிய சாதனை. காங்கிரஸின் வரலாற்றில் அக்காலகட்டம் ஒரு குறியீடும் கூட. இந்நூலை வாசித்த போது காங்கிரஸ் எவ்வாறு ஒரு சிறு குழுவின் உள்ளரசியலாலும் விருப்பு வெறுப்புகளாலும் இயங்குகிறது என்பதைப் பற்றி அவதானிக்க முடிந்தது. நரசிம்ம ராவ் என்ற இளம் தெலங்கானா விவசாயி அரசியல்வாதியாகப் பரிணமித்து மாநில அரசியலிலும் தேசிய அரசியலிலும் அதிகாரத்திலும் பல பொறுப்புகள் வகித்து ஓய்வு பெற்று வெளியேற இருந்த காலகட்டத்தில் ஊழ் அவருக்கு ஒரு களம் அமைத்துக் கொடுக்கிறது. ராவ் களத்திற்கு வருகிறார். இந்தியா அதுநாள் வரை பயணித்த பாதையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறார். எதிர்க்கட்சிகளுக்கு கொள்கை மாற்றத்தைப் புரிய வைக்கிறார். சொந்தக் கட்சியினருக்கு விளக்கம் அளித்துக் கொண்டேயிருக்கிறார். தனக்கான ஒரு செயல் அணியை உருவாக்கி அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறார். அவர்களை முன்னிருத்தி சாமர்த்தியமாக வேலை வாங்கிக் கொள்கிறார். நேரு குடும்பம் அதிகாரத்தில் குறுக்கிடாமல் ஐந்து ஆண்டுகள் பார்த்துக் கொள்கிறார். யானை வடிவில் இருந்த லைசன்ஸ் – பர்மிட்- கோட்டா ராஜ் இன்று குதிரை வடிவுக்கு வந்திருப்பதற்கு காரணமானவர்களில் நரசிம்ம ராவ் முக்கியமானவர்.

அவர் மரணமடைந்த போது, அவருடைய உடல் தில்லியில் தகனம் செய்யப்படக் கூடாது என்பதில் சோனியா உறுதியாக இருக்கிறார். ஹைதரபாத்துக்கு எடுத்துச் செல்லப்படும் போது, விமான நிலையம் செல்லும் வழியில் காங்கிரஸ் தலைமையகத்தில் நுழையக் கூடாது என நுழைவாயில் கதவு அடைக்கப்படுகிறது. தன் வாழ்நாள் முழுதும் அமைப்புக்கும் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கும் விசுவாசமாக இருந்த மனிதனுக்கு புறக்கணிப்பைப் பரிசாகத் தந்தார்கள் சொந்த கட்சிக்காரர்கள். உண்மையில் அப்போதைய காங்கிரஸ் தலைமை அச்செயல் மூலம் இந்திய ஜனநாயகத்தையே அவமதித்தது.

எனக்கு இச்சம்பவம் ஜெயமோகனின் ‘’காற்றுமானியின் நடுநிலை’’ என்ற கட்டுரையை நினைவுபடுத்தியது. 1948ல் ருஷ்யப் படைகள் செக்கோஸ்லாகிவியாவைக் கைப்பற்றுகின்றன. அப்போது ருஷ்ய கம்யூனிஸ்டு தலைவரான கிளமெண்ட் கோட்வால்ட் ஒரு மாளிகையின் பால்கனியிலிருந்து தன் எதிரில் திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் முன் உரையாற்றுகிறார். அப்போது பனி பெய்து கொண்டிருக்கிறது. அவர் அருகில் இருக்கும் அவரது தோழரான விளாடிமிர் கிளமெண்டிஸ் தன் பனிக்குல்லாயை கோட்வால்டுக்கு அணிவிக்கிறார். அப்புகைப்படம் உலகெங்கும் பரவுகிறது. சில ஆண்டுகளில், கட்சியால் விளாடிமிர் கிளமெண்டிஸ் ‘’துரோகி’’ என குற்றம்சாட்டப்பட்டு கம்யூனிஸ ‘’வழக்கப்படி’’ தூக்கலிடப்படுகிறார். அவர் கோட்வால்ட்டுடன் இருக்கும் புகைப்படத்தின் பிரதிகள் திருத்தப்படுகின்றன. கிளமெண்டிஸ் இருந்த இடத்தில் ஒரு சுவர் இருக்கிறது. ஆனால் கிளமெண்டிஸ் கோட்வால்ட்டுக்கு அணிவித்த தொப்பி அப்புகைப்படத்தில் அப்படியே இருக்கிறது. மறைக்கப்பட்ட மொத்த வரலாறையும் சொல்லிக் கொண்டு.

வினய் சீதாபதியின் நூல் திறக்கப்படாத கதவு சொல்லும் கதை.


பின்குறிப்பு:
1950ல் மறைந்த சர்தார் வல்லபாய் படேலுக்கு 1991ல் தான் பதவிக்கு வந்ததும் ‘’பாரத் ரத்னா’’ விருது வழங்கியவர் நரசிம்ம ராவ்.  
 

திறனும் தொலைநோக்கும் ( மறு பிரசுரம்)

  

இன்று முன்னாள் பாரதப் பிரதமர் திரு. பமுளபர்த்தி வெங்கட நரசிம்ம ராவ் அவர்களின் பிறந்த தினம். 

அவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இன்று நினைவுகூர்கிறேன். 

ஆந்திர மாநிலத்தின் நிதி அமைச்சராக இருக்கிறார் ராவ். அவருடைய குடும்பம் பல தலைமுறைகளாக மிகப்பெரிய ஜமீன் குடும்பம். அவர் குடும்பத்துக்குச் சொந்தமாக பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. ஆந்திராவில் நிலச் சீர்திருத்த சட்டங்கள் கொண்டு வரப் பட வேண்டும் என எண்ணுகிறார் ராவ். அவ்வாறு அவர் செய்ய வேண்டும் என எவ்விதமான புற அழுத்தமும் கட்சியிலிருந்தோ ஆட்சியிலிருந்தோ அவருக்கு அளிக்கப்படவில்லை. மக்கள் நலனுக்கு நிலச் சீர்திருத்தம் தேவை என ராவ் எண்ணுகிறார். சொல்லப் போனால் கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் நிலச் சீர்திருத்தங்களை முடிந்த அளவு தள்ளி வைக்கச் சொல்லியே அவரிடம் கூறப்படுகிறது. 

மக்கள் நலன் கருதி ராவ் நிலச்சீர்திருத்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தி அதனை சட்டமாக்கினார். அதனால் அவருடைய குடும்பத்துக்கு சொந்தமான பத்து கிராமங்கள் முழுமையும் அவர்கள் இழக்க நேரிட்டது. 

ஓர் அரசியல்வாதி இவ்வாறு செயல்பட்டதைப் புரிந்து கொள்ளவே குறிப்பிட்ட நுண்ணுணர்வு தேவை. 

ராவ் நாட்டு மக்களை நேசித்த ஒரு தலைவர். அவர் நாட்டுக்கு ஆற்றிய பணிகள் மேலும் பல ஆண்டுகளுக்கு நினைவுகூரப்படும். 

Saturday, 10 February 2024

நச்சுப் பரவல்

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளும் கம்யூனிஸ்டுகளும் இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்துக்கு முன்பிருந்தே மக்கள் மனத்தில் நச்சைப் பரப்பியவர்கள் என்ற வலுவான எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. தமிழகத்தில் வாழும் மக்களுக்கு சக குடிகள் மேல் நம்பிக்கையின்மையும் ஐயமும் அச்சமும் உண்டாக திராவிட இயக்கமே காரணம் என்பது எனது அவதானம். இந்தியாவில் இந்திரா காந்தி காங்கிரஸின் கொள்கைகளை வடிவமைக்கும் பொறுப்புகளில் மார்க்சிய சிந்தனை கொண்டவர்களை நியமித்தார். இந்தியா போன்ற நீண்ட பண்பாடு கொண்ட ஒரு நாட்டின் முக்கியக் கட்சியின் கொள்கைகளை மார்க்சிய சிந்தனை கொண்டவர்கள் நிர்ணயம் செய்ததே இன்றும் காங்கிரஸ் சந்திக்கும் அழிவுக்கான காரணம். இந்திரா அவ்விதமான நியமனங்களைச் செய்த பத்து ஆண்டுகளில் உலகில் சோவியத் யூனியன் என்ற நாடே சுக்கு நூறாக உடைந்து பொடிப் பொடி ஆனது. சோவியத் யூனியன் இல்லாமல் போன பின்னும் இன்னும் கம்யூனிச பொய்ப் பரப்புரை ஏதேனும் ஒரு விதத்தில் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்த நச்சுப் பரவலுக்கான முறிமருந்து இப்போதைய தேவை.   

நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்

அடிப்படையில் நான் ஜனநாயக வழிமுறைகளின் மீதும் அரசு அமைப்பின் மீதும் நம்பிக்கை கொண்டவன். மத்திய மாநில அரசுகள் இந்திய அரசியல் சாசனம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் வழிமுறைகளின் படியே இயங்க முடியும் என்பதை அறிந்தவன். இந்திய ஜனநாயகம் என்பது அளவில் மிகப் பெரியது; எனவே ஆயிரக்கணக்கானோர் இயங்கும் போது முரண்கள் உருவாவது இயல்பு. அவை இந்திய அரசியல் சட்டத்தின் படி தீர்வு காணப்பட வேண்டும் என்ற புரிதலும் எனக்கு உண்டு. 

அரசியலில் ஆட்சி அதிகாரத்தில் நூற்றுக்கணக்கான கொள்கைகளும் எண்ண மாறுபாடுகளும் இருக்கும். அது இயல்பு. எனினும் எந்த அரசும் பொது மக்களின் பொது அமைதிக்கு இடையூறு செய்யும் நிகழ்வுகளை எவ்விதம் கையாள்கின்றன என்பதை ஒரு சாமானியக் குடிமகனாக நான் கவனிப்பேன். அரசு குறைந்தபட்சம் உறுதி செய்ய வேண்டிய விஷயம் பொது அமைதி. இன்றைய தேதிக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை என்பது ஒரு யதார்த்த நிலை.  

Friday, 9 February 2024

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு

இன்று என் கண் எதிரில் ஒரு சம்பவம் நடந்தது. 

பத்திரப்பதிவு அலுவலகத்தில் ‘’சான்றிட்ட நகல் மனு’’ விண்ணப்பிக்க சென்றிருந்தேன். ஊரில் மக்கள் அதிகமாக புழங்கும் பகுதியில் பதிவு அலுவலகம் அமைந்துள்ளது. நீதிமன்றத்தை ஒட்டிய கட்டிடம் அந்த அலுவலகம். அதற்கு அடுத்த கட்டிடம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம். மேலும் பல அரசு அலுவலகங்கள் அந்த பகுதியில் அமைந்திருக்கின்றன. 

காலை 10 மணிக்கு பொதுமக்கள் பல்வேறு விதமான பத்திரப்பதிவு பணிகள் தொடர்பாக அலுவலகத்தில் குழுமியிருந்தனர். 

அப்போது 10 பேர் கொண்ட ஒரு கும்பல் அந்த அலுவலகத்துக்குள் நுழைந்தது. அங்கிருந்த அரசு ஊழியர்களை அச்சுறுத்தியது. கடுமையான சத்தம் போடப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அலுவலக வாசலில் அந்த கும்பல் குழுமி நின்று அந்த அலுவலகத்தையே ஆக்கிரமித்திருந்தது. 

ஒரு அரசு அலுவலகத்தின் முன் இவ்வாறு ஒரு கும்பல் குழுமி பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கையில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் கவனத்துக்கு இந்த விஷயம் அந்த அலுவலகத்தால் கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் நிகழவில்லை. 

ஒரு மாவட்டத் தலைநகரில் மையப் பகுதியில் மாவட்ட அலுவலகம் ஒன்றில் ஒரு வன்முறைக் கும்பல் இவ்விதம் நடந்து கொள்வது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு எந்த நிலைமையில் இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.   

Tuesday, 6 February 2024

தண்ணீர் வசதி ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் கட்டிக் கொண்டிருக்கும் வணிக வளாகக் கட்டிடம் நிறைவுத் தருவாயில் இருக்கிறது. வண்ணம் பூசியாகி விட்டது. தரைக்கு டைல்ஸ் போட்டாகி விட்டது. பணிகள் பூர்த்தியாகி இருப்பதால் கடைத்தெருவில் இருக்கும் அந்த வணிக வளாகக் கட்டிடத்துக்கு வாடகைக்கு வர பலர் விரும்புகின்றனர். அந்த கடைகளுக்கு அட்வான்ஸ் எவ்வளவு வாடகை எவ்வளவு என்ற கேள்விகளுடன் பலர் வருவார்கள். 

இன்று ஒருவர் விசாரிக்க வந்தார். தன்னை பால் வியாபாரி என அறிமுகம் செய்து கொண்டார். கறந்த பால் வியாபாரம் செய்ய கடை வேண்டும் என்று சொன்னார்.

அமைப்பாளர் அவரை கடைகளின் உள்ளே அழைத்துச் சென்று அகல நீளம் பரப்பளவு ஆகியவற்றை விளக்கினார். 

பால் வியாபாரி தண்ணீர் வசதி எப்படி என்று கேட்டார். 

அமைப்பாளர் ஒரு ஹேண்ட் பம்ப் இருக்கிறது என்று சொன்னார். 

அந்த பதிலால் பால் வியாபாரி திருப்தி அடைந்தார். 

அவர் ஏன் அந்த கேள்வியைக் கேட்டார் என்று யோசித்தார் அமைப்பாளர்.  

Sunday, 4 February 2024

ஜன் ஔஷதி

எனது வாழிடத்தின் அருகே எனது வீட்டுக்கு சில வீடுகள் தள்ளி ஒரு முதியவர் வசிக்கிறார். உயரமான தோற்றம் கொண்டவர். சிரித்த முகத்துடன் இருப்பவர். அவர் வயது 80 இருக்கும். மாலை அந்தியில் தோராயமாக 4.30 அளவில் அருகில் இருக்கும் கணபதி ஆலயத்துக்குச் செல்வார். நான் அவரைத் தாண்டிச் சென்றால் ‘’என்னுடன் பைக்கில் வருகிறீர்களா?’’ என்று எப்போதும் கேட்பேன். ஆலயத்துக்குச் சென்றால் ‘’இது ஈவ்னிங் வாக்கிங் தம்பி’’ என்பார். கடைத்தெரு செல்வதாக இருந்தால் என்னுடன் வருவார். 

பொதுவாக ஏதாவது சொல்வார். எதிர்மறையாக எப்போதும் பேச மாட்டார். அவரது அந்த குணம் எனக்கு மிகவும் பிடிக்கும். 

நேற்று என்னிடம் , ‘’தம்பி ! ஜன் ஔஷதி க்கு போறேன் தம்பி’’ என்றார். 

நான் ‘’அப்படியா சார்!’’ என்றேன்.

‘’எனக்கு பேஸ் மேக்கர் வச்சிருக்கு தம்பி. மாசம் என்னோட மெடிக்கல் பில் 5000 ரூபாய் வரும். ஜன் ஔஷதி ஷாப் வந்ததும் அதே மெடிசன் இப்போ 500 ரூபாய்க்கு கிடைக்குது. எனக்கு மாசம் 4500 மிச்சம் தம்பி. பத்து வருஷமா அங்க தான் மருந்து வாங்கறன்’’ என்றார்.  

Saturday, 3 February 2024

இரு சம்பவங்கள் ( நகைச்சுவைக் கட்டுரை)

சம்பவம் 1 :

இது நடந்து 15 ஆண்டு காலம் இருக்கும். 

அப்போது சென்னை புத்தகக் கண்காட்சி பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் நடைபெறும். புத்தகக் கண்காட்சிக்கு அந்த இடம் மிகவும் உகந்த வசதியான இடம். வேறெந்த இடத்தை விடவும். 

அமைப்பாளரின் நண்பர் ஒரு பதிப்பக உரிமையாளர். நண்பருக்கு உதவி செய்ய அமைப்பாளர் சென்னை புத்தகக் கண்காட்சி செல்வார். புத்தகங்கள் அடுக்கும் ’’ரேக்’’ ஐ வாடகைக்கு எடுத்துக் கொண்டு புத்தகக் கண்காட்சிக்கு முதல் நாள் செல்வதிலிருந்து புத்தகக் கண்காட்சி முடியும் கடைசி நாள் வரை அமைப்பாளர் நண்பருடன் உடனிருந்து உதவுவார். 

கண்காட்சி நடக்கும் 10 நாட்களும் லட்சக்கணக்கான மக்கள் அங்கு வந்து புத்தகம் வாங்கி செய்திப்பத்திரிக்கைகள்  அதனை செய்தியாகப் போட்டு புதிய நூல்கள் வெளியாகி விற்பனை செய்யப்பட்டு என ஏகப்பட்ட விஷயங்கள் நடந்தேறும். 

கண்காட்சி நிறைவு பெற்றதற்கு மறுநாள் புத்தகங்களை அட்டைப்பெட்டிகளில் அடுக்கி ‘’ரேக்’’அனைத்தையும் பிரித்து வைத்து விட்டு டாடா ஏசில் ஏற்றி அனுப்பி விட்டு பார்க்கிங் பகுதியில் உள்ள டூ வீலரை எடுத்துக் கொண்டு வரும் நண்பருக்காக அமைப்பாளர் காத்துக் கொண்டிருந்தார். 

அப்போது ஒரு இளைஞர் மிகுந்த ஆர்வத்துடன் சாலையிலிருந்து டூ வீலரில் வந்தார்.   பள்ளி வாயிலில் நின்று கொண்டிருந்த அமைப்பாளரிடம் , ‘’சார் ! புக் ஃபேர் இங்க தானே நடக்குது?’’ என்றார். 

அமைப்பாளர் ‘’நடந்தது’’ என்றார். 

இளைஞர் ‘’ அப்ப முடிஞ்சுடுச்சா?’’ என்றார் நம்ப முடியாமல். 

அமைப்பாளர் ‘’ஆமாம்’’ என்றார்.

’’இனிமே எப்ப?’’ என்றார் இளைஞர். 

‘’அடுத்த வருஷம் ஜனவரியில்’’ என்றார் அமைப்பாளர். 

இளைஞர் சோர்வுடன் சென்று விட்டார். 

அமைப்பாளர் கல்லூரியில் படித்த போது ஒரு பேராசிரியர் மாணவர்கள் எவரும் தாமதமாக வந்தால் ‘’You are too early to the next class'' என்று கூறுவார். அமைப்பாளருக்கு அந்த ஞாபகம் வந்தது. 

***

சம்பவம் 2 :

இந்த சம்பவம் சில தினங்களுக்கு முன்னால் நடந்தது. 

அமைப்பாளர் வங்கிச் சாளரத்தின் முன் இருந்த ‘’கியூ’’வில் நின்று கொண்டிருந்தார். அமைப்பாளருக்கு முன் ஒரு இளைஞர் நின்றார். வயது 30 இருக்கும். காசோலை ஒன்றை பணமாக்க வந்திருந்தார். அதற்கான டோக்கன் அவரிடம் இருந்தது. 

இளைஞர் டோக்கனை சாளரத்தினுள் கொடுத்து காசாளரிடம் ‘’அமௌண்ட்டை ஹையர் டினாமிஷேன் நோட்டா கொடுங்க’’ என்றார். 

காசாளர் ஒரு 500 ரூபாய் கட்டைக் கொடுத்தார். 

இளைஞர் காசாளரிடம் ‘’ஹையர் டினாமினேஷன்’’ என்றார். 

காசாளர் இளைஞரிடம் ‘’அப்படித்தானே கொடுத்திருக்கன்’’ என்றார். 

இளைஞர் ‘’சார் ! ரெண்டாயிரம் நோட்டா கொடுங்க’’ என்றார். 

காசாளர் அமைதியாக ‘’ இப்ப இந்தியால ரெண்டாயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்துல இல்ல’’ என்றார். 

***