நகைக்கடைக்குச் சென்று தங்க நகை வாங்கிய அனுபவம் எனக்கு இல்லை. எந்த நகைக்கடைக்கும் நகை வாங்க நான் சென்றதில்லை. ஒருமுறை எனது நண்பர் ஒருவர் - வெளியூர்க்காரர் - ஒரு நகைக்கடையில் இருந்து அலைபேசியில் பேசினார். உறவினர்களுடன் நகை வாங்க வந்திருப்பதாகவும் கடைக்கு வர முடியுமா என்று கேட்டார். அங்கே சென்றேன். என்னைப் பார்த்ததும் கடைக்கு வெளியே வந்து விட்டார். பத்து நிமிடம் அவரிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு நான் புறப்பட்டேன். அவர் கடைக்குள் மீண்டும் சென்றார். அந்த ஒருமுறை மட்டுமே நான் நுழைந்தது. அதுவே முதல் முறை நான் நகைக்கடைக்கு சென்றது. இதுவரை அதுவே கடைசி தடவையும் கூட!
வங்கியில் அடகு வைக்க நகைகளை ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ எடுத்துச் செல்வது உண்டு. நகை எத்தனை கிராம் என கேட்டுக் கொள்வேன். வீட்டில் சொன்ன எடையும் வங்கியில் மின்னணு தராசில் அவர்கள் நிறுத்துச் சொல்லும் எடையும் ஒத்துப் போகிறதா என சரிபார்த்துக் கொள்வேன். வங்கி அளிக்கும் நகைக்கடன் அட்டையை வீட்டில் கொண்டு வந்து கொடுத்து விடுவேன். கடன் வங்கிக் கணக்கில் வரவாகி விடும். அடுத்த நாள் அதனை எடுத்துக் கொள்வேன். நகையை மீட்க முதல் நாள் சென்று எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் எனக் கேட்டு வந்து அடுத்த நாள் வங்கிக் கணக்கில் செலுத்தி மீட்பேன். தங்கத்துடனான எனது பரிச்சயம் அவ்வளவே.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தங்கம் குறித்த செய்திகள் அதிகம் வரத் துவங்கின. தங்கம் குறித்த எனது அறிதல் பூஜ்யம் என்னும் நிலையில் இருந்ததால் இதில் அறிவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றனவே என அறியத் தொடங்கினேன்.
இந்தியாவில் ‘’எக்ஸ்’’ கிராம் தங்கம் விலை ரூ.100 எனில் துயாபில் ‘’எக்ஸ்’’ கிராம் தங்கம் விலை ரூ.85, ஸ்விட்சர்லாந்தில் ‘’எக்ஸ்’’ கிராம் தங்கம் விலை ரூ. 75 என்பதை இணையம் மூலம் அறிந்தேன். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் ஒருவர் அரசால் வரையறுக்கப்பட்ட அளவு தங்கத்தைக் கொண்டு வர் முடியும். அதற்கு தீர்வை ஏதும் கிடையாது. அதற்கு மேல் கொண்டு வர 9 சதவீதம் இறக்குமதி வரி செலுத்த வேண்டும். அரசிடம் அனுமதி பெற வேண்டும். முன்னர் இந்த வரி 15 சதவீதமாக இருந்திருக்கிறது. இப்போது 9 சதவீதமாக உள்ளது.
இத்தனை நாள் அறியாமல் இருந்து புதிதாக அறிந்ததால் இந்த விபரங்களை உற்சாகமாக வீட்டில் பகிர்ந்து கொண்டிருந்தேன். அப்போது வீட்டில் ஒரு விபரம் சொன்னார்கள். ‘’நீ இந்தியாவில் 8 கிராம் தங்கம் வாங்க வேண்டும் எனில் 9 கிராமுக்கான விலையை கொடுக்க வேண்டும். நீ 8 கிராம் தங்கத்தை விற்று பணமாக்கிக் கொள்ள வேண்டும் என்றால் 7 கிராமுக்கான விலையை மட்டுமே தருவார்கள்.’’
’’இது என்ன நடைமுறை ?’’ என்றேன் அதிர்ச்சியுடன்.
‘’இதற்கு கூலி சேதாரம் என்று பெயர்’’
‘’செய்கூலி இல்லை. சேதாரம் 6 சதவீதம்னு விளம்பரத்துல சொல்றாங்களே?’’
‘’விளம்பரத்துல மட்டும் தான் அப்படி இருக்கும். நேரா போனா அது இதுன்னு 12 பர்செண்ட் வந்துடும். அப்புறம் கடையில தங்க நகையைக் கொடுத்தா இன்னொரு தங்க நகை தான் தருவாங்க. பணமா தர மாட்டாங்க.’’
‘’ஆ’’ என்றேன் மீண்டும் அதிர்ச்சியுடன்.
‘’இப்ப ஒரு ஆள் 8 கிராம் தங்க நகையை விற்கப் போனா 7 கிராம் விலைக்கு வாங்கறாங்க. 8 கிராம் தங்கம் வாங்க வர இன்னொரு ஆள்ட்ட 9 கிராம் விலைக்கு விக்கறாங்க. அப்ப 7 கிராம்க்கு 2 கிராம் லாபம். அதாவது 28.6 சதவீத லாபமா?’’
‘’ஆமாம்’’
‘’ஸ்விட்சர்லாந்து துபாய்ல தங்கம் வாங்கி இங்க வித்தா கிடைக்கற லாபத்தை விட நகை வியாபாரிகளுக்கு கூலி சேதாரத்துல லாபம் கிடைக்கும் போல இருக்கே’’ என்றேன்.