Wednesday, 4 February 2026

நிலமும் பொன்னும்

எனது தொழில் கட்டிடக் கட்டுமானம். இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொழிலில் இருக்கிறேன். கட்டுமானம் தாண்டி நில வணிகத்திலும் ஈடுபடுகிறேன். நான் தொழிலுக்கு வந்த போது கட்டுமானம் மிகப் பெரிய தொழிலாக பார்க்கப்பட்டது. கட்டுமானத் தொழிலில் 10 சதவீத அளவில் லாபம் இருக்கும். ஒரு கட்டிடத்தை கட்டிக் கொடுக்க இருபது இலட்சம் ரூபாய் என ஒப்பந்தம் பேசி கட்டிக் கொடுத்தால் அதில் இரண்டு இலட்சம் ரூபாய் லாபம் கிடைக்கலாம். ஒரு கட்டுமானப் பணி என்பது குறைந்தது ஆறிலிருந்து எட்டு மாதம் நடக்கும். அவ்வாறெனில் மாதம் இருபத்தைந்தாயிரம் ஊதியமாகக் கிடைத்ததாக அர்த்தம். ஒரே நேரத்தில் மூன்று கட்டிடப் பணிகள் வரை மேற்கொள்ளலாம். அவ்விதமான சூழ்நிலை எப்போதாவது மட்டுமே இருக்கும். வாடிக்கையாக இருக்காது. கட்டுமானத் தொழிலில் கிடைக்கும் வருவாய் ஊதியம் எனக் கணக்கிட்டால் அதில் லாபம் என எதுவும் கிடையாது. கட்டிடப் பணியில் 30 நாளும் பணி புரியும் தொழிலாளருக்கு மாதம் இருபத்து ஏழாயிரம் ரூபாய் கிடைக்கும். அவ்வாறெனில் தொழிலாளரை விடக் குறைவான ஊதியம் என்னும் நிலை வந்துவிடும். கட்டுமானப் பணி புரிபவர் அதனை லாபம் எனக் கருதிக் கொள்வதால் பெரிய புகார் இன்றி தொழில் நடக்கிறது.  நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட குழுவை வழிநடத்துவது, புவியைத் தோண்டி அடிக்கல் நாட்டுவதிலிருந்து பத்து அடிக்கும் மேலே உயர்ந்திருக்கும் கட்டிடத்துக்கு வண்ணப்பூச்சு பூசுவது வரை பலவிதமான பணிகளை கட்டுமானப் பணி தன்னகத்தே கொண்டிருப்பதால் செயல்கள் பல புரிந்த மனநிறைவு இருக்கும். லாபம் பெரிதாக இல்லை என்னும் விஷயத்தை அந்த மனநிறைவு மறக்கச் செய்து விடும். இதுதான் கட்டுமானத் தொழில் புரிபவர்களின் வாழ்க்கை. 

90 சதவீதம் கட்டுமானப் பணி புரிபவர்கள் ரியல் எஸ்டேட் என்னும் நில வணிகத்தில் ஈடுபட மாட்டார்கள். இரண்டும் மிக நெருக்கமான துறைகள் என்றாலும் 10 சதவீதம் பேர் மட்டுமே நில வணிகத்துக்குள் வருவார்கள். நான் கட்டுமானத் தொழிலுக்கு வந்ததிலிருந்தே நில வணிகத்திலும் ஈடுபட்டிருக்கிறேன். எனக்கு நில வணிகம் சார்ந்த அவதானம் உண்டு. 

10,000 சதுர அடி இடத்தை ஒருவருக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றால் குறைந்தது 120 நாட்களுக்கு வாங்குபவர் , விற்பவர், மனைத் தரகர்கள், சாட்சிகள், ஆவண எழுத்தர், பதிவுத்துறை ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், அளவர்கள் என பலர் அந்த வணிகம் முழுமை பெற பங்களிப்பாற்ற வேண்டும். இத்தனை பேருடனும் அந்த 120 நாட்களில் தொடர்பில் இருக்க வேண்டும். முதலில் ஒரு கிரய ஒப்பந்தம் போடுவார்கள். அதற்கு ஒரு அட்வான்ஸ் தருவார்கள். மீதித் தொகையை 3 மாதத்தில் தர வேண்டும். கூடுதல் அவகாசம் கேட்டால் இரு தரப்புக்கும் உரசல் ஆகி விடும். அனைத்தையும் சுபமாக முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இத்தனை பணிகளையும் செய்தால் 1 சதவீதம் கமிஷன் கிடைக்கும். 

நில வணிகம் பெருந்தொழில்களில் இரண்டாம் இடத்தில் இருப்பது. முதலிடம் பெற்றிருக்கும் பெருந்தொழில் தனவணிகம். பெருந்தொழில்களில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நில வணிகத்தில் ஈடுபட்டிருந்தாலும் முதலிடம் பெற்றிருக்கும் தனவணிகம் குறித்து சமீபத்தில் தான் கூர்ந்து நோக்கி அறிய முடிந்தது. 

இந்திய வங்கிகளில் முதலிடத்தில் இருப்பது பாரத ஸ்டேட் வங்கி. பாரத ஸ்டேட் வங்கியின் மூலதனத்தில் 10 சதவீதம் கொண்டிருக்கும் பாங்க ஆஃப் பரோடா இந்திய வங்கிகளில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. முதலிடத்துக்கும் இரண்டாம் இடத்துக்கும் 90 சதவீதம் வித்தியாசம். தனவணிகமும் மனை வணிகமும் அவ்வாறே உள்ளன. 

கையிலிருக்கும் பணத்தை தங்கமாக மாற்றிக் கொள்வதும் தங்கத்தை அடகு வைத்து பணமாக மாற்றிக் கொள்வதும் ஒரு சில மணி நேரங்களில் நடந்து விடுகிறது. கொடுக்கல் வாங்கலை முழுமையடையச் செய்ய நாள்கணக்கில் மாதக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. தங்கத்தின் விலை சீராக உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதால் கணிசமான லாபம் உறுதி செய்யப்படுகிறது.