Sunday, 29 March 2026

பிதாமகரின் ஆசி

 
இலக்கியப் படைப்பாளியான திரு.சிவப்பிரகாஷ் அவர்களின் ஆளுமை எப்போதும் ஒரு சிம்மத்தை நம் நினைவுகளுக்குக் கொண்டு வரும். கர்ஜிக்கும் சிம்மம். பராக்கிரமத்தை தன் இருப்பாய் வெளிப்படுத்தும் சிம்மம். இப்போது அவர் முற்றிலும் கனிந்திருக்கிறார். அவரின் ஒவ்வொரு சொல் செயல் சிறு அசைவிலும் அவர் அகம் கொண்டிருக்கும் கனிவு வெளிப்படுகிறது. இன்று அவர் ஒரு பிதாமகராக தன் அன்பையும் ஆசிகளையும் யாவர்க்கும் அளித்துக் கொண்டிருக்கிறார். 

கனிவு கொண்ட அம்மனிதருடன் இரண்டு மணி நேரம் உரையாடும் வாய்ப்பு கிடைத்த 29.03.2026ம் தேதியின் மாலைப்பொழுது அந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத மாலையாயிருக்கும் என்பதில் ஐயமில்லை. 

பாரதம் உலகில் தனித்துவம் கொண்ட மண். உலகியலிலும் ஆன்மீகத்திலும் மானுடம் தொட்ட உச்சங்கள் அனைத்தையும் பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் பாரத மண் பலமுறை பார்த்திருக்கிறது. மானுட அகம் ஒரு புறம் அதிகார விழைவு கொண்டிருக்க இன்னொரு புறம் பொருள் எல்லைகளுக்கு அப்பால் செல்லவும் உளம் கொள்கிறது. உலகியலின் இனிமைகளுக்கு ஒரு வாழ்க்கை மட்டும் போதுமா என எண்ணிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு பொருளும் அதன் ஸ்தூல வடிவமான உடலும் அழியக் கூடியது என்னும் உணர்வு ஏற்படும் போது வாழ்நாளின் கணிசமான பகுதி பூர்த்தியாகியிருக்கிறது. பொருள் உலகமும் பொருளுக்கு அப்பாற்பட்ட உலகமும் தங்கள் நிலையில் நின்றிருக்க மானுடம் அலைக்கழிப்புகளுக்கு ஆளாகிறான். கோடானுகோடி மானுடரில் ஒரு சிலரே வாழ்வின் சாரத்தை அனுபவபூர்வமாக சென்றடைகிறார்கள். 

கன்னட இலக்கியப் படைப்பாளியான சிவப்பிரகாஷின் வாழ்க்கை அவருக்குள் ஓர் ஆன்மத் தேடலை உண்டாக்குகிறது. வீர சைவம், சைவ சித்தாந்தம், காஷ்மீர சைவம், பௌத்த விபாசனா, கிரியா யோகம் ஆகியவை அவர் வாழ்க்கையின் நீண்ட பரப்பில் அவர் அகத்தை எட்டுகின்றன. பல ஆண்டுகள் ஆன்மீக சாதனையில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கிறது. அவரது ஆன்ம சாதனை அவருக்கு இனிதானதாக மட்டும் இருக்கவில்லை. மிகக் கடுமையானதாகவும் மிக உக்கிரமானதாகவும் இருந்திருக்கிறது. அவை அனைத்தையும் குரு அருளால் குருவின் இருப்பை உணர்ந்ததால் கடந்து வந்திருப்பதாகக் கூறுகிறார் சிவப்பிரகாஷ். இறைவனை விடவும் குரு கருணை கொண்டவர் என்னும் உணர்வுநிலையை அடையப் பெறுகிறார். ஆன்ம சாதகன் தன் ‘’குரு’’வை சிக்கெனப் பற்றிக் கொள்வான் எனில் குருவின் கருணையால் அவன் உணர வேண்டியவை அவனுக்கு உணர்த்தப்படும் என்கிறார். 

படைப்புச் செயல்பாடு என்பது கணந்தோறும் புதியது. உயிர்த்துடிப்பு மிக்கது. படைப்பூக்க மனம் கொண்ட படைப்பாளியும் இலக்கிய வாசகனும் எவ்விதம் யோகப் பயிற்சியில் ஈடுபடுவது என்னும் வினாவுக்கு தன் வாழ்வில் இருந்து நிறைய அனுபவங்களை முன்வைத்தார். தனது ஆன்ம சாதனை என்பது தனக்கு வாய்த்த குரு அருள் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி இருக்கிறார். தனக்கான குருவை எவ்விதம் கண்டடைவது என்னும் வினாவுக்கு கன்றுக்குட்டியின் நினைவு எப்போதும் தாய்ப்பசுவுக்கு இருந்து கொண்டேயிருப்பது போல சீடனை குரு எப்போதும் தன் உணர்வில் கொண்டிருப்பார் என பதில் அளித்தார். 

நிகழ்வில் கலந்து கொண்ட இலக்கிய வாசகர்கனின் மனதில் சுழன்று கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நேற்றைய நிகழ்வு சொற்கள் மூலமும் சொற்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுநிலை மூலமும் தீவிரமான பதிலை அளித்தது. பங்கேற்பாளர்கள் அனைவரும் பிதாமகரின் அன்பையும் ஆசிகளையும் பரிபூரணமாகப் பெற்றார்கள்.