அன்புள்ள நண்பருக்கு,
நேற்று தங்களுடைய 80 ஏக்கர் பண்ணைக்கு தங்களுடன் தற்செயலாக சேர்ந்து செல்ல ஒரு வாய்ப்பு அமைந்தது. தங்கள் பண்ணையில் என்ன விதமான விவசாயம் நடக்கிறது என்பதை நேரில் காண இயன்றது. அந்த பண்ணையின் மேம்பாடு குறித்து எனது சில அபிப்ராயங்களைத் தெரிவிக்கிறேன். தங்களுக்கு உகந்தது எனத் தோன்றினால் செயல்படுத்திப் பார்க்கவும். நம் இருவருக்கும் தொழில் மனை வணிகம் என்பதால் நாம் அறிமுகமானோம். லௌகிகத்துக்கு அப்பால் எனக்கு வேறு சில ஆர்வங்களும் உள்ளன. அதன் ஒரு பகுதியாக ‘’காவிரி போற்றுதும்’’ என்னும் நுண் அமைப்பு ஒன்றை ஒருங்கிணைக்கிறேன். சிறு அளவில் ‘’காவிரி போற்றுதும்’’ சில செயல்களை வெற்றிகரமாக செய்திருக்கிறது. அந்த நிகழ்வுகளை அடிப்படையாய்க் கொண்டே தங்கள் பண்ணைக்கு சில பரிந்துரைகளை அளிக்கிறேன். விவசாயத்தின் மூலம் விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு அதற்கு அவர்கள் எப்பயிரை விளைவிக்க வேண்டும் என்பதை முன்வைப்பதே ‘’காவிரி போற்றுதும்’’மின் அடிப்படையான பணி என்று சொல்லலாம்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு நண்பர் - அவர் விவசாயி அல்ல ; ஐ டி நிறுவன ஊழியர் - எனது ஆர்வத்தையும் நம்பிக்கையையும் கண்டு அதன் மேல் முழு நம்பிக்கை வைத்து அவரது 3 ஏக்கர் நிலத்தில் நான் நினைப்பதை செயல்படுத்த எனக்கு முழு உரிமை அளித்தார். அவருடைய நன்செய் வயல் மேட்டுப்பாத்தி அமைக்கப்பட்டு அதில் 950 தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. முறையாக பராமரிக்கப்படுகின்றன. அவை இந்த 4 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில் அந்த தேக்கு மரங்களின் பொருள் மதிப்பு ரூ. 10 கோடி அளவில் இருக்கக் கூடும்.
நெல் விவசாயத்தில் சிறப்பான லாபம் இருப்பதில்லை. ஏனெனில் நெல் உற்பத்தி மிகை அளவில் இருப்பதால் நெல்லுக்கு லாபகரமான விலை கிடைப்பதில்லை. சந்தையில் மிகை உற்பத்தி செய்யப்படும் எந்த பண்டத்தின் விலையும் வீழ்ச்சி காணும் என்பதை ஒரு வணிகராக நீங்கள் அறிவீர்கள்.
தேக்கு மரம் பயிரிடுவதன் ஒரு ஏக்கர் கணக்கீட்டை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். ஒரு ஏக்கரிலிருந்து 80 ஏக்கருக்கான கணக்கீட்டை எளிதில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
ஒரு ஏக்கர் என்பது 43,560 சதுர அடி என்பதை நாம் அறிவோம். தோராயமாக 204 அடி அகலமும் 204 அடி நீளமும் கொண்ட பரப்பு எனக் கருதுவோம். அதில் 12 அடிக்கு ஒரு தேக்கு கன்று என மேட்டுப்பாத்தி அமைத்து நட வேண்டும். ( 10 அடிக்கு ஒரு மரக்கன்று நடலாம். எனினும் பணியாளர்கள் கவனமின்றி ஒரு கன்றுக்கும் இன்னொரு கன்றுக்குமான இடைவெளியில் பிழை செய்வதைத் தவிர்க்க 12 அடி என ‘’காவிரி போற்றுதும்’’ பரிந்துரைக்கிறது. அவ்வாறெனில் அகல வாக்கில் 17 மரக்கன்றுகளும் நீளவாக்கில் 17 மரக்கன்றுகளும் நட முடியும். ஒரு ஏக்கர் பரப்பில் 289 மரக்கன்றுகள் நடலாம். 15 ஆண்டுகளில் ஒரு மரம் ஒரு லட்ச ரூபாய்க்கு விலை போகும். அவ்வாறெனில் ஒரு ஏக்கரில் நடப்படும் தேக்கு மரங்கள் ரூ. 2 கோடியே 89 லட்சத்துக்கு விலை போகும்.
80 ஏக்கர் முழுமைக்கும் தேக்கு பயிரிட்டால் அந்தப் பரப்பில் 23,120 மரக்கன்றுகள் நட முடியும். 15 ஆண்டுகளில் அதன் மதிப்பு ரூ. 231 கோடியே 20 லட்சம் என்னும் அளவில் இருக்கும். நம் நாட்டில் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வருமான வரி கிடையாது என்பதை ஒரு வணிகராக நீங்கள் அறிவீர்கள். எனவே உத்தேசிக்கும் முழுப் பணமும் தங்களிடம் இருக்கும்.
பெரும் பரப்பில் தேக்கு பயிரிடுவது பல விவசாயிகள் தங்கள் முயற்சி மூலம் ஊக்கம் பெற்று அவர்களும் தேக்கு பயிரிட உத்வேகம் அளிக்கும்.
நெல் விவசாயத்தில் ஒரு ஏக்கருக்கு ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். 80 ஏக்கருக்கு ஓராண்டுக்கு 80 லட்சம் லாபம். 15 ஆண்டுகளில் 12 கோடி லாபம். தேக்கின் மூலம் 231 கோடியே 20 லட்சம் லாபம். ஒரு வணிகராக மேற்படி இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்.
அன்புடன்,
பிரபு
அமைப்பாளர்
காவிரி போற்றுதும்