Wednesday, 6 May 2026

அணுகுமுறையில் மாற்றம் தேவை

தி.மு.க என்னும் கட்சி ஈ.வெ.ரா துவங்கிய ’’திராவிடர் கழகம்’’ என்னும் அமைப்பிலிருந்து வெளியேறி உருவான அரசியல் கட்சி. அமைப்பிலிருந்து வெளியேறி வந்திருந்தாலும்  ’’திராவிடர் கழகம்’’ கொள்கைகளே தி.மு.க வின் கொள்கைகளும். ‘’பிராமணர் எதிர்ப்பு’’ என்பது திராவிடர் கழகம், தி.மு.க ஆகிய இரண்டின் அடிப்படையான கொள்கை ஆகும். தேசியத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் எதிர்ப்பதையும் இரு அமைப்புகளும் கொள்கையாக வைத்திருந்தன. தி.மு.க தேர்தல் அரசியலுக்கு வந்த பின்னும் தேசியத்தை எதிர்ப்பதையும் தேசிய ஒருமைப்பாட்டை எதிர்ப்பதையும் கைவிடாமல் இருக்கிறது. இப்போதும் அவ்வப்போது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான விஷயங்களைப் பேசுவதுண்டு. நாடு சுதந்திரம் அடைந்த போது கம்யூனிஸ்டுகளும் தேசியத்துக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் எதிராக இருந்தனர். அடிப்படையில் மார்க்ஸியம் தேசியத்துக்கு எதிரானது. நம் நாட்டை சீனா ஆக்கிரமித்த போது சீனா கம்யூனிச நாடு என்பதால் சீனா நம் நாட்டை ஆக்கிரமித்ததை வரவேற்றனர் கம்யூனிஸ்டுகள். நம் நாட்டை சீனா ஆக்கிரமிப்பதை எதிர்க்க வேண்டும் என்று கூறிய கம்யூனிஸ்டுகள் மிகச் சிறிதாய் இருந்தனர். கம்யூனிஸ்டு கட்சி இரண்டாகப் பிரிந்தது. சீனா இந்தியாவை ஆக்கிரமித்து இந்தியாவை சீனாவின் காலனியாக ஆக்க வேண்டும் எனக் கூறியவர்கள் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுகள் என்றும் சீனா இந்தியாவை ஆக்கிரமித்து இந்தியாவை சீனாவின் காலனியாக ஆக்க வேண்டும் என்பதை எதிர்த்தவர்கள் இந்திய கம்யூனிஸ்டுகள் என்றும் அழைக்கப்பட்டனர். சீன ஆக்கிரமிப்பை எதிர்த்தார்களை தவிர இந்திய கம்யூனிஸ்டுகளும் தேசியம் என்பதற்கு எதிரானவர்களே. நக்சலைட்டுகள் எனப்படும் மாவோயிஸ்டுகள் சீனாவிடம் பணமும் ஆயுதமும் பெற்றுக் கொண்டு இந்தியாவில் நாசவேலையில் ஈடுபடுபவர்கள். ராணுவம், காவல் துறை, அரசு அதிகாரிகள், அப்பாவி பொதுமக்களை வன்முறை மூலம் கொன்று அமைதியின்மையையும் பதட்டத்தையும் நாடெங்கும் உருவாக்குவதே அவர்கள் வழிமுறை.

தமிழகத்தில் திராவிட இயக்கம் எனப்படும் திராவிடர் கழகம், தி.மு.க ஆகிய திராவிட அமைப்புகளும் இந்திய கம்யூனிஸ்டுகள், மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுகள் எனப்படும் கம்யூனிச அமைப்புகளும் தொடர்ச்சியாக தங்கள் கருத்தியலை பொதுமக்களிடம் பரப்புரை செய்து கொண்டிருந்தனர். பரப்புரையே அவர்கள் பிரதான வழிமுறை. திராவிட இயக்கம் பிராமணர்கள் அழிக்கப்பட வேண்டும் ; தாக்கப்பட வேண்டும் என பரப்புரை செய்தது. கம்யூனிஸ்டுகள் நம் நாடு சோவியத் யூனியனின் காலனியாகவே ஆகி விட வேண்டும் என்பதை முன்வைத்தது.   நக்சலைட்டுகளின் சீனாவின் விருப்பத்தின் படி இந்தியாவைத் துண்டாட வேலை செய்தனர். 

கடந்த 60 ஆண்டுகளாக திராவிட இயக்கத்தினர், கம்யூனிஸ்டுகள், நக்சலைட்டுகள் ஆகியோரே ஊடகங்களில் மிக அதிக அளவில் பரவியிருக்கின்றனர். பத்திரிக்கைத் துறை பெருமளவில் அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகங்கள் அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு ஊடகங்கள் அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்திய ஜன்நாயகம் மட்டுமே நாடு படையெடுப்புக்குள்ளான போது சீனாவை ஆதரித்திருந்தாலும் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்யாமல் நாட்டின் மூன்று மாநிலங்களில் ஆட்சி புரிய அக்கட்சியை அனுமதித்தது. கம்யூனிச கொள்கை கொண்ட எந்த தேசத்திலும் ஜனநாயகமே இல்லை. அடிப்படையில் சர்வாதிகாரத்தன்மை கொண்ட கம்யூனிஸ்டுகள் ஒரு ஜனநாயக நாட்டின் ஊடகங்களில் கணிசமான தாக்கம் செலுத்துகின்றனர் என்பது ஒரு நகைமுரண். 

இந்திய ஜனநாயகத்தில் மத்திய அரசு, குடியரசுத் தலைவர், ஆளுநர், மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் என ஜனநாயகத்தின் பல வடிவங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடமையை நிறைவேற்றுபவை. இவை அனைத்தின் மேலும் நம்பிக்கையும் மதிப்பும் இருக்குமாறு ஜனநாயகத்தை இயங்க வைக்க வேண்டியது குடிமக்கள் அனைவரின் கடமை. 

தமிழகத்தில் மின்னணு ஊடகங்கள் உருவான பின்னர் திராவிட இயக்கத்தினரும் கம்யூனிஸ்டுகளும் நக்சலைட்டுகளும் அதனை வெறுப்பும் பொய்யின் விஷமும் தனிப்பட்ட விரோதத்தை வெளிக்காட்டும் இடமாகவும் ஆக்கியுள்ளனர். ஜனநாயக அரசில் கருத்து சுதந்திரத்துக்கு முழு உரிமை உண்டு. நாடு ஆக்கிரமிக்கப்பட்ட போது ஆக்கிரமித்த நாடான சீனாவை ஆதரித்தும் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை தடை செய்யாதது இந்திய ஜன்நாயகம் ; இந்தியாவைத் துண்டாடி ‘’திராவிட நாடு’’ பெறுவோம் எனக் கூறியிருந்த தி.மு.க வை தடை செய்யாதது இந்திய ஜனநாயகம். 

நம் நாடு சுதந்திரம் அடைந்த போது இருந்த பசி, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சிக்கல்கள் பெருமளவு இன்றைய நிலையில் தீர்ந்திருக்கின்றன. தமிழகத்தில் மக்கள் வரி செலுத்துகின்றனர். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும். மாநில அரசு வரி வருவாயைக் கொண்டு மத்திய அரசு தரும் வருவாயையும் சேர்த்துக் கொண்டு மக்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு விஷயங்களை சிறந்த முறையில் செய்து தர வேண்டும். 

தமிழகத்தின் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்க மத்திய அரசுடனும் பொதுத்துறை வங்கிகளுடனும் சேர்ந்து திட்டமிட்டு அதன் பயன் லட்சக்கணக்கானவர்களை சென்றடைய உதவ வேண்டும். பல விதமான விவசாய உற்பத்தி நிகழ புதிய அரசு ஊக்கம் தர வேண்டும். இந்த விஷயங்கள் மின்னணு ஆளுகை நிகழத் தொடங்கிய கடந்த 20 ஆண்டுகளில் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் இவை மாநில அரசாங்கத்தில் நிகழவேயில்லை. ரூ. 100 மாநில அரசுக்கு வருவாயாகக் கிடைக்கிறது என்றால் அதில் ரூ.90 மாநில அரசு ஊழியர்களின் ஊதியமாக வழங்கப்பட்டு விடுகிறது.  இதே நிலை நீடித்தால் தமிழக சட்டசபை என ஒன்று இருப்பதே மாநிலத்தில் இருக்கும் பத்து லட்சம் அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம் கொடுக்க மட்டுமே என்றாகி விடும். தமிழகத்தின் சாமானிய பொதுமக்களான 7 கோடி பேருக்கு தமிழக சட்டசபையால் என்ன பயன் என்னும் கேள்வி எழுந்து விடும். 

இந்திய ஜனநாயகம் என்பது ஒரு அமைப்புமுறை. தேர்தல் சமயத்தில் மட்டும் பரப்புரை நிகழட்டும். மற்ற நேரங்களில் பொதுமக்களுக்கான சேவையை மாநில அரசும் மத்திய அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் வழங்கட்டும்.  

மாநிலத்தில் புதிதாக ஆட்சியைப் பிடித்திருக்கும் கட்சி இந்திய ஜனநாயகத்திற்கு அழகு சேர்த்திருப்பவர்கள். கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த இரு பெரிய திராவிடக் கட்சிகளை அகற்றி மாநில அரசைக் கைப்பற்றியிருக்கின்றனர். பல லட்சக் கணக்கான இளைஞர்கள் அக்கட்சியின் ஆதரவாளர்கள். அவர்களுக்கு இந்திய ஜனநாயகத்தைப் பயிற்றுவிக்கும் பொறுப்பு ஆட்சிப் பொறுப்பேற்க இருக்கும் கட்சிக்கும் புதிய ஆட்சிக்கும் இருக்கிறது.