Wednesday, 6 May 2026

நவோதயம்

1986ம் ஆண்டு நாட்டின் பிரதமராயிருந்த ராஜிவ் காந்தி மற்றும் அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராயிருந்த பி.வி. நரசிம்ம ராவ் இருவரும் இணைந்து சிந்தித்து ஆலோசித்து விவாதித்து உருவாக்கிய முறை நவோதயா பள்ளிகள்.  

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரைக்குமான பள்ளிகளாகும் இவை. நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பள்ளி உருவாக்கப்படும். மாணவர்கள் நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பள்ளியுடன் ஹாஸ்டல் இணைக்கப்பட்டிருக்கும். அனைத்து மாணவர்களும் ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டும். மாணவர்களுக்கான சீருடைகள், ஹாஸ்டல் கட்டணம், ஆண்டுக் கட்டணம், தேர்வுக் கட்டணம் அனைத்தும் அரசால் செலுத்தப்பட்டு விடும். மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டு மற்றும் இதர துறைகளிலும் பயிற்சி அளிக்கப்படும். 

நாட்டின் எல்லா மாநிலங்களிலும் மொத்தமாக 660 நவோதயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில் 3,00,000 மாணவர்கள் பயில்கிறார்கள். 

நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் இந்த 40 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் ஆட்சி செய்த தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் ; நவோதயா பள்ளிகள் தமிழகத்துக்குத் தேவையில்லை என அறிவித்தன. 

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 15,000 மாணவர்கள் பயன்பெறுவார்கள். கிராமப்புற மாணவர்களுக்கும் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கும் கணிசமான இடங்கள் நவோதயா பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. 

60 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் மீண்டும் அதிகாரத்தில் பங்கு வகிக்கப் போகும் காங்கிரஸ் தனது  கட்சியின் இரு முன்னாள் பிரதமர்களான ராஜிவ்காந்தியும் நரசிம்ம ராவும் இணைந்து சிந்தித்து உருவாக்கி செயல்படுத்திய நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்பட முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.